முதற்கனலும் தத்துவமும் – விவேக்

முதற்கனல் தத்துவ விவாத நூல் அல்ல, எந்த தரிசனத்தையும் முன்னிலைப்படுத்துவதில்லை. ஆனால் தத்துவத்தில் அறிமுகம் உள்ள ஒருவர், அதில் நடக்கும் உரையாடலை, தரிசனத்தை மிக அருகில் சென்று உணர முடியும்.

நீங்கள் வெண்முரசு வாசகர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல, ‘அறிவு என்பது ஞானம் என்பது தன்னை விலகி, ஒட்டுமொத்த உண்மையை அறிவது’.

சரி முதற்கனல் வாசிக்க தத்துவ அறிமுகம் அவசியமா என்று நண்பர்கள் கேட்டார்கள், முதலில் இல்லை என்பேன், அப்புறம் ஆம் என்பேன். இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் புத்தகத்தில் ‘அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒருவகை இருப்பே. இச்சிந்தனை வெறும் தருக்கம்தான். நடைமுறைக்குப் பயன்படாது. ஆனால் இது குறியீட்டு ரீதியாக விஞ்ஞானி சந்திரசேகருக்குக் கருந்துளைகள் (Black holes) குறித்த ஆய்வுக்கு உதவியது’. இதையே மகாவாக்கியமாக கூறுவேன், ஏன் அறிமுகம் வேண்டும் என்பதுக்கு இதுவே பதில். இத்தருக்க நிலைகளை அந்தந்தத் துறைகளைச் சார்ந்த நிதரிசனங்களுடன் பொருந்திப் பார்த்து விரித்தெடுத்துக்கொள்ளும் போது படைப்பிற்கு மிக அருகில் செல்லலாம். தத்துவார்த்த ரீதியாக ‘படைப்பும், நாமும் வேறல்ல என்று உணரும் தருணத்துக்கு நாம் செல்லலாம்.’

முதற்கனலில் வரும் பாரதவர்ஷத்தில் கல்வி கற்ற அனைவரும் ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர்கள், கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர்கள். முதற்கனலில், ஆறு தத்துவங்களில் சாங்கியமும், வேதாந்தமும் பலமுறை விவாதங்களில் வருவதை நாம் காணலாம்.

“வேதாந்தம் பிரம்மத்தை மையமாக்கி பிரபஞ்ச இயக்கத்தை அளப்பது. வேதாந்தத்தின் முக்கிய தேடல் பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சாராம்சமாக உள்ள பிரம்மத்தைப் பற்றியதாகும். வேதாந்தம் பிரம்மத்தை மையமாக்கி பிரபஞ்ச இயக்கத்தை இயக்கத்தை விளக்க முயலும் ஒரு தரிசனம்.”

வியாசரும், ஆஸ்திகன், ஜனமேஜயன், விசித்திரவீரியன், பீஷ்மர், சத்தியவதி, சுகதேவன், வைசம்பாயனர் பிரம்மத்தை குறித்த தங்கள் விளக்கங்களில் வெளிப்படுத்துவார்கள். அவர்கள் யாவரும் தத்துவத்தை போதிக்கவில்லை. சூழ்ச்சி, கவர்தல், நாடு பிடித்தல், க்ஷத்ரிய நெறி, அறம், போர் பயிற்சி, குரு மரபு என்று பலதளங்களில் அவர்கள் பிரம்மத்தை குறிப்பிட்டு கொண்டே இருப்பார்கள்.

வியாசரின் தந்தை கூறுவது போல் “மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக”. அதை நாம் முதற்கனலை வாசித்தவுடன் உணரலாம்.

ஜனமேஜயன் தன்னறத்தின் பொருட்டு “குருஷேத்ர மண்ணில் செத்து விழுந்த ஐந்துலட்சம் மனிதர்களிடம் நான் சொல்லவிரும்புகிறேன் குருநாதரே, எங்கள் மூதாதையர்களே நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள். இனிமேல் நாங்கள் போர் செய்ய மாட்டோம். இனிமேல் நாங்கள் சகமனிதனை வெறுக்க மாட்டோம். நீங்கள் உங்கள் உயிரைக்கொடுத்து கற்றுத்தந்த பாடத்தை நாங்கள் கற்றுக்கொண்டோம்… அப்படியொரு சொல்லை என்னால் சொல்லமுடிந்தால் நான் குருகுலத்தின் வாழ்க்கையை நிறைவுசெய்தவன் ஆவேன். களத்தில்பட்ட அத்தனை குருவம்சத்தினருக்கும் என் கடனைச் செய்தவனாவேன்”

ஆஸ்திகனை மறுக்கும் போது தர்மத்தை மீறிய அறத்தை பேசாதீர்கள் என்று தான் கூறுவார். ஜனமேஜயன் நான் பிரம்மத்தின் இயல்பான சாத்வ குணத்தை இங்கே நிலைநிறுத்துகிறேன் என்று வேதாந்தத்தை எடுத்து கூறி ஆஸ்திகரிடம் விவாதிப்பான். அன்பும் அறமும் நன்மையும் நலமும் மட்டுமே மனுக்குலத்தில் வாழவேண்டுமென விழைகிறேன் என்பார்.

ஆஸ்திகன் கபில முனியின் மாணவரான சமரமுனிவரிடம் ஆதியிலிருந்தது ஒன்றே. முதல்முடிவற்ற, இதுஅதுவற்ற, முதலியற்கை. அது பிளவற்ற காலத்தில் இருந்தது. அதில் முதல் எண்ணமெனும் மஹத் உருவானது. அது இருப்பு எனும் அகங்காரமாகியது. அகங்காரம் முக்குணங்களாக மாறி அவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டன. பிரபஞ்சப்பேரியக்கம் தொடங்கியது என்பார்.

ஆஸ்திகன் ஜனமேஜயரிடம் “மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்” என்று சாங்கியத்தின் தத்துவத்தை விளக்கி சர்ப்பவேள்வியை நிறுத்தவேண்டும் என்று கூறுவான்.

ஜனமேஜயனோ அவருடைய முதுதந்தையை, அறத்தை முற்றிலுமறிவதற்காக ஏழு தலைமுறைக்காலமாக தவமியற்றிக் கொண்டிருப்பவரை அழைத்து நியாயம் கேட்பான். ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லை… ஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை… தீமையை” என்றார்.

ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுசக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்” என்பான்.

சித்ரகன் என்ற பருந்தும், சிபி மன்னன் உரையாடும் போது தன்னறத்தை இப்படி விளக்கும் ‘தன்னறம் என்பது புடவியின் பேரியக்கத்தில் தன் இடமென்ன என்றுணர்வது மட்டுமே. தன்னைச்சுற்றி இப்புடவி நிகழ்கிறது என்று எண்ணிக்கொள்வது தன்னகங்காரம் என்றே பொருள்படும். தன்னறம் முக்தியையும் தன்னகங்காரம் அழிவையும் அளிக்கும்’

சுயம்வரத்துக்கு செல்லும் முன் பீஷ்மரிடம் வியாசர் தன்னறத்தை விளக்கும் போது ‘சுதனே. பசுவைக்கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம். ஆகவே சிங்கத்துக்கு பசுவதையின் பாவம் கிடையாது’, அதை புரிந்து கொண்டு எந்த சொல்லும் சொல்லாமல் காசிக்கு படையெடுப்பார் பீஷ்மர்.

சுயம்வரப்பந்தலில் நிமித்திகர் அம்பை அம்பிகை, அம்பாலிகை மூவரையும் அறிமுகம் செய்யும் போது இப்படி ரஜோ குணம், தமோ குணம், சாத்வ குணங்களாக சாங்கியத்தின் தத்துவங்களிலிருந்து அறிமுகம் செய்வதை காணலாம்.

“முதல் இளவரசியின் பெயர் அம்பை. ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர். கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர்.

“இரண்டாவது இளவரசியின் பெயர் அம்பிகை. சித்திரை மாதத்தின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். பதினெட்டு வயதாகிறது. தமோகுணவாஹினியான கங்கையின் அம்சம் கொண்ட இளவரசி ஓர் இசையரசி.”

“மூன்றாவது இளவரசியின் பெயர் அம்பாலிகை. ஐப்பசி மாதத்து மகநட்சத்திரத்தில் பிறந்தார். வயது பதினாறாகிறது. சத்வகுணவதியான இளவரசி ஓவியத்திலே திறமை கொண்டவர்”

அமைச்சர் ஸ்தானகருக்கும், விசித்திரவீரியனுக்கும் நடக்கும் உரையாடலில், ஒருவொருக்கொருவர் குருவாகவும், சிஷ்யராகவும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கும். விசித்திரவீரியன் “ஸ்தானகரே, இனி என் உடலை நான் வழிபட முடியாது. பொய்த்தெய்வங்களை வழிபடுபவன் நரகத்துக்குச் செல்கிறான் என்று அறிந்திருக்கிறேன். புகழும், செல்வமும், உடலும்தான் மூன்று பொய்த்தெய்வங்கள் என்பார்கள். நான் உடலையே வழிபட்டு இதுநாள் வரை வாழ்ந்துவிட்டேன். இனி அதை செய்யப்போவதில்லை. இந்த உடல் இருந்தாலும் அழிந்தாலும் எனக்கு ஒன்றுதான்”

“அரசே, உடல் ஆன்மாவின் ஆலயம்” என்றார் ஸ்தானகர். “இல்லை ஆன்மாவின் சிதையா?”

“அரசியல் விவாதத்துக்கு வேதாந்தத்தை பயன்படுத்துவதற்கு வேதவியாசரின் அனுமதி உண்டா என்று தெரியவில்லை” என்றார் ஸ்தானகர்.

“அந்த ஆராய்ச்சி எதிரிநாட்டுக்கு தீவைக்கும்போது ஓதவேண்டிய வேத மந்திரம் என்ன என்ற இடத்திற்குத்தான் சென்று நிற்கும். ஸ்தானகரே புனுகை அள்ளும் குறுதோண்டியால் கடலை அள்ளுவது போன்றது இப்பிரபஞ்சத்தை புலன்களால் அறிய முயல்வது. ஒருநாளில் ஒருநாழிகையில் நம்மைச்சுற்றி வந்து நிறையும் உலகை அள்ள நமக்கு கோடி புலன்கள் தேவை.”

மேலும் சத்யவதியின் ‘நீ இருக்கிறாய்’ என்ற சொல்லே அவனை இத்தனை காலம் இழுத்து செல்கிறது, அதுவே அவனுக்கு ஆப்தவாக்கியமானது. “நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான். நான் இருக்கிறேன். அதை பலகோடிமுறை எனக்குள் சொல்லிக்கொண்டேன். இங்கே இதோ நானிருக்கிறேன். அவ்வரியிலிருந்து ஒவ்வொருகணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்…” என்கிறான் விசித்திரவீரியன்.

விசித்திரவீரியன் சத்தியவதியை பற்றி கூறும் போது “அவர் கடலாமை போல. முட்டைகளைப் போட்டுவிட்டு திரும்பிப்பார்ப்பதேயில்லை. அவை தானே விரிந்து தன்வழியை கண்டுகொள்ளவேண்டும்…” என்றான்.

ஸ்தானகர் “திரும்பிப் பார்ப்பவர்களால் ஆணையிடமுடியாது அரசே” என்றார்.

விசித்திரவீரியன் திருவிடநாட்டில் இருந்து வந்து சித்தர் அகத்தியரை சந்தித்த முதல் சந்திப்பில் வைத்தியம் பார்க்கும் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டான். மூலாதார சக்கரம் வலுவிழந்திருக்கிறது என்று சொல்லும் அகத்தியர் “உங்கள் உயிர் சிலந்திவலையில் ஒளிரும் நீர்த்துளி” என்கிறார்.

“வணங்குகிறேன் சித்தரே, தாங்கள் இங்கேயே இருந்து என்னை இதமாக வழியனுப்பிவிட்டுச் செல்லவேண்டும் என்று கோருகிறேன்” என்றான்.

அகத்தியர் “ஆம், அதுவே மனம் முதிரும் நிலை. ஒரு துளி உதிர்வதற்கு அப்பால் இதில் ஏதும் இல்லை. இத்துளி இங்கே இவ்வடிவில் இந்த ஒளியுடன் இருப்பதென்பது நிகழ்வுகளின் தகவெனும் முடிவின்மையில் ஒரு கணம். துளியென வந்தாலும் அது முடிவிலா நீர்க்கடலேயாகும். அக்கடலை உணர்ந்தவன் துளியுதிர்வதையும் கடலெழுச்சியையும் ஒன்றாகவே பார்ப்பான்” என்கிறார்.

நியோகத்திற்கு முன்பு குஹ்யஜாதை என்ற கழுதைபுலிக்கும் வியாசருக்கும் நடக்கும் விவாதம் குறிப்பிடத்தக்கது. “நான் என் அன்னையையே அறியாமல் வளர்ந்தவன்.” குஹ்யஜாதை “அன்னையை அறியும் கணம் வாய்க்காத மைந்தர் எவரும் மண்ணில் இல்லை” என்றது.

வியாசர் புன்னகைசெய்து “ஆம் தாய்மையை அறியும் கணமொன்று எனக்கும் வாய்த்திருக்கிறது.”

குஹ்யஜாதை முன்னால் வந்து முகத்தை நீட்டி “அதனால் நீ ஞானம் அடைந்தவனானாய்” என்கிறது.

சத்யவதி மீது சினம் கொண்டு தந்தை பராசர முனியுடன் வியாசர் முறையிடும் போது பராசர இப்படி போதிப்பார். “மைந்தா, நீ ஞானத்தின் முடிவில்லா வல்லமையை அறியாமல் பேசுகிறாய். மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாக்கப்பட்டுள்ளது. புள்ளும் புழுவும் பூச்சியும் கிருமியும்கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன என்று அறிக. ஞானத்தால் முழுமைபெற்ற ரிஷிகளின் பிறப்புகள் அறியப்படாதவையே. ரிஷ்யசிருங்கர் மானின் மைந்தர் எனப்படுகிறார். கண்வர் மயிலுக்கும் சோமஸ்ரவஸ் நாகத்துக்கும் பிறந்தவர் என்கிறார்கள் சூதர்கள். வசிட்டரும் அகத்தியரும் ஊர்வசியின் மைந்தர்கள். ஞானமே அவர்களை முனிவர்களாக்கியது. பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே. உன் பிறப்புக்கு என்ன காரணமென்று நீ என்றோ ஒருநாள் அறிவாய். அன்று உன்னை கருவிலேற்றிய அன்னைக்குள் வாழும் பெருநெறியை வணங்குவாய். அதுவே உன் ஞானம் தொடங்கும் கணமாகவும் அமையும்”.

ரிஷிகள் சூழ்ந்த ஞான சபையில், வியாசரின் தந்தை “ வானிலிருந்து மழைபொழிகின்றது விண்ணகத்தின் மையத்திலிருந்து பொழிபவை எந்த நீர்கள்? நீருக்குள் வாழும் நெருப்பு எது?”

அதற்கு வியாசர் “யமுனையின் அடித்தட்டில் நூறுநூறாயிரம் முட்டைகள் பரவியிருப்பதைக் கண்டிருக்கிறேன். மீனின் முட்டைகள். புழுக்களின் முட்டைகள். நத்தைகள் சங்குகள் சிப்பிகளின் முட்டைகள். அவற்றையெல்லாம் விரியவைக்கும் வெம்மை எது? அந்த உயிர்நெருப்பின் பெயர் வைஸ்வாநரன் என்று அறிக! வானக மையத்தில் விண்மீன்களை விரியவைக்கும் அக்கினியும் அவனே. அங்கிருந்து வருகின்றன அன்னைநீர்கள்”.

“இது முதலுண்மை முனிவர்களே. இனி உய்த்துண்மை. நீரென்பது நீர்மையேயாகும். நீராகித் திகழும் விதிகளே நீரென்று அறிக! வைஸ்வாநரனால் முடிவிலா விண்மீன்கள் விரியச்செய்யப்படும் பெருவெளி விரிவைத் தழுவியும் ஓடுகின்றன அலகிலா நீர்மைகள்.”

வைஷ்வாநரன் – ஆத்ம தத்துவத்தை குறித்த மிகச்சிறந்த விளக்கத்தை அளிக்கிறார் வியாசர். ‘நாம் ஏடுகளில் இருந்தது கற்றுக்கொண்டதை இவன் கங்கையில் கற்றுக்கொண்டான்’ என்று வியாசரிடம் வேதங்களை தொகுக்கும் பனி அளிக்கப்படுகிறது.

நியோக ஏற்பாடுகளின் போது காவிய ரிஷியான வியாசருக்குக்கும், சூதப்பெண்ணான சிவைக்கும் நடக்கும் உரையாடலில் “இனி வேதங்களைத் தீண்டும் தகுதி எனக்கில்லை. என் ஞானத்தில் விஷ அம்பு ஊடுருவிவிட்டது”.

சிவை “துளைவிழுந்த மூங்கில்தான் பாடும் என்பார்கள் சூதர்கள்” என்றாள்.

“ஆம் பெண்ணே, இந்நாட்களில் என் ஆன்மாவில் துளை விழுந்துவிட்டது. இந்த பூமியின் அத்தனை காற்றையும் இசையாக்கினாலும் அந்தத் துளை மூடப்போவதில்லை. மூன்று தளங்கள் கொண்டது காவியம் என்பார்கள் ரிஷிகள். வம்சகதை, விவேகம், கண்ணீர். கண்ணீரை இப்போதுதான் அடைகிறேன். இது எனக்குள் சிந்தாமல் தேங்கிக்கிடக்கும். காமகுரோதமோகங்களை அறிந்தவனே கவிஞன் என்பார்கள்” என்று சொல்கிறார்.

சிவை “உண்மை… நான் அனைத்தையும் இந்த மூன்றுநாட்களில் கற்றுக்கொள்வேன் என்று நினைக்கிறேன்”

சுகதேவனை சந்திக்க செல்லும் வியாசர், பெருஞ்சாத்தனாரை சந்திக்கிறார். சுகதேவனின் ஞானத்தை குறித்து வியாசர் இவ்வாறு கூறுகிறார். ‘ரகுகுல ராமனின் துணைவி சீதையன்னையின் தந்தை ஜனகர். அந்த ஜனகரின் வழிவந்தவர் இவர். கற்றறிந்தும் உற்றறிந்தும் துறந்தறிந்தும் அனைத்துமறிந்த அரசர். அவரது அவையில் சென்று இவன் அமர்ந்தான். ஒவ்வொருநாளும் அங்கே நிகழும் நூலாய்வையும் நெறியாய்வையும் கற்றான். ஒருநாள் ஜனகமன்னர் தன் அவையில் ஓர் அறவுரை நிகழ்த்துகையில் அறம் பொருள் இன்பம் மூன்றையும் அறிபவனுக்கே வீடு திறக்கும் என்றார். அவ்விதி எந்நூலில் உள்ளது என்று சுகன் கேட்டான். அது நூலில் உள்ள நெறியல்ல கண்முன் இயற்கையில் உள்ள நெறி என்றார் ஜனகர். மலர் பிஞ்சாகி காயாகித்தான் கனிய முடியும் என விளக்கினார்’.

உத்தாலகர், ஸ்வேதகேதுக்கு நடக்கும் நெறி குறித்த உரையாடலில், சுகதேவன் “மிருகங்கள் நடந்தும், பறவைகள் பறந்தும், புழுக்கள் நெளிந்தும் அறத்தை அறிந்துகொள்கின்றன. அவையறியும் அறம் ஒன்றே, பிறப்பை அளித்தலே உடலின் முதற்கடமை. மண்ணில் தன் குலத்தையும் அக்குலத்தில் தன் ஞானத்தையும் விட்டுச்செல்வது மட்டுமே மனித வாழ்வின் இறுதியுண்மை என மனிதர்களும் கருதிய காலத்தின் அறத்தையே உத்தாலகரும் அந்தப்பிராமணரும் சொன்னார்கள். அவர் மனைவியும் அதை ஏற்றுக்கொண்டாள்” என்று சுகன் ஜனகருக்குச் சொன்னான்.

‘அந்த அறத்தில் அனைத்தும் பிறக்கும் குழந்தைகளால் நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் அக்குழந்தைகள் திரும்பிநின்று அது பிழையெனச் சொல்லும்போது அந்தக்காலம் முடிவுக்கு வந்துவிடுகிறது. தாய்தந்தையரின் கற்பொழுக்கம் பிள்ளைகளால் கட்டுப்படுத்தப்படும் புதியகாலம் பிறந்துவிட்டது. இனி அதுவே உலகநெறியாகும் அதை உணர்ந்தே உத்தாலகர் ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் சென்றார்’ என்று சுகன் அவ்வரங்கில் சொல்கிறான்.

இங்கு சுகதேவன் வியாசருக்கு ஞானத் தந்தையாக இருப்பதை காணலாம். வியாசர் சுகதேவரிடம் “என் நெஞ்சு காலத்துக்கு அப்பால் நோக்கித் திகைக்கிறது…” என்று கூறும்போது, “தந்தையே, மண்ணில் ஒழுக்கமென ஏதுள்ளது? அன்றிலின் ஒழுக்கம் காக்கைக்கு இல்லை. தட்சிணத்தின் ஒழுக்கம் அஸ்தினபுரியிலும் இல்லை. கருணைகொண்ட செயல்கள் அனைத்தும் ஒழுக்கமே” என்றான் சுகன்.

“நான் கருணையோடிருந்தேன் என்றால் ஏன் என் மனம் தவிக்கிறது? தவறு செய்துவிட்டேனா என்று ஒவ்வொரு புல்புழுவிடமும் ஏன் கேட்கிறேன். தீர்ப்பு சொல்லவேண்டியவர்கள் என்னில் தொடங்கிய தலைமுறையினர்… அவர்கள் சொல்லப்போவதென்ன என்று நான் எப்படி அறிவேன்?” என்றார். “…உன் மனம் ஒரு படிகவெளி… காலங்களை எல்லாம் உன்னால் காணமுடியும்… நீ சொல்!”

“தந்தையே, அவற்றை நான் ஒரு சொல்லில் சொல்லமுடியாது. கோடி சொற்களால் சொல்லவேண்டியவர் நீங்கள்” என்றான் சுகன். “நீங்கள் சிரஞ்சீவியாக இருந்து உங்கள் உயிர்முளைத்த வனத்தின் வாழ்வனைத்தையும் காணுங்கள். ஆம், உன் சொல் காலத்தின் சொல்… அது நிகழும்”

சிகண்டிக்கும் அக்னிவேசருக்கும் நடக்கும் குரு-சிஷ்ய உரையாடல் தத்துவத்தின் உச்சம் என்றே கூறலாம். “ரஜோகுணத்தை ஆள்பவன் ஷத்ரியன். நீ ஒவ்வொரு அணுவிலும் ஷத்ரியன். என் வித்தையெல்லாம் உன்னுடையது” என்று சிகண்டி தலையில் அக்னிவேசர் கைவைத்தார். “மானுடனுக்கு பிரம்மம் இட்ட தளைகள் அனைத்தையும் கடந்தவன் நீ. கர்மத்தை யோகமாகக் கொண்ட ஞானியை தெய்வங்கள் அறியும். எளியவனாகிய இந்த ஆசிரியன் யுகபுருஷனாகிய உன் முன் பணிந்து உன்னை வாழ்த்துகிறேன் மகனே, நீ வெல்க!” என்றார்.

அக்னிவேசர் தனுர்வேதங்களை போதிக்கும் போது மாணவர்களுக்கு போதிக்கும் கல்வி நாம் எதிலும் பொருத்திப் பார்க்கமுடியும்.

  1. சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும்.
  2. சினத்தை வெல்லவே அனைத்து போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்
  3. செயல்மூலம் தன்னை வென்றவன் யோகி. அவன் உலகையும் வெல்வான். யோகியின் கையில் இருப்பது எதுவோ அதுவே இறுதியான ஆயுதம். அதுவே அவன் மந்திரம், அதை ஆள்வதே அவன் சாதகம்.
  4. புறத்தை கட்டுப்படுத்தியவன் அதன் அகப்பிம்பமான அகத்தையும் கட்டுப்படுத்தியவனாவான். இருபுடை வல்லமைகொண்ட அவனையே ஸவ்யசாச்சி என்று தனுர்வேதம் போற்றுகிறது” என்றார் அக்னிவேசர். “ஒருகையால் உள்ளத்தையும் மறுகையால் உடலையும் கையாள்பவன் அவன். ஒருமுனையில் அம்பும் மறுமுனையில் இலக்கும் கொண்டவன். அவன் ஒருமுனையில் பிரபஞ்சமும் மறுமுனையில் பிரம்மமும் நிற்கக்காண்பான்.

சிகண்டிக்கு போர் பற்றிய நுணுக்கங்களை கற்று தரும்போது, அக்னிவேசர் இவ்வாறு கூறுகிறார். “கருவுறுதல் என்றால் என்ன? காமத்தால்தான் கருவுறவேண்டுமா, கடும் சினத்தால் கருவுறலாகாதா? உடலால்தான் கருவுறவேண்டுமா, உள்ளத்தால் கருவுறலாகாதா?”

மேலும் சாந்தோக்கிய உபநிடத்தில் வரும் இந்த கதையை கூறுகிறார். “உத்தாலகர் மைந்தன் ஸ்வேதகேது, தந்தையிடமிருந்து நூல்களைக் கற்றபின் ஏழு குருகுலங்களுக்குச் சென்று வேதவேதாங்கங்களையும் ஆறுதரிசனங்களையும் ஆறுமதங்களையும் மூன்று தத்துவங்களையும் கற்றபின் திரும்பிவந்தான். தந்தையைக் கண்டு தந்தையே உங்களுக்கு மெய்ஞானத்தில் எந்த ஐயமிருப்பினும் என்னிடம் கேட்டு தெளிவுகொள்ளுங்கள் என்று சொன்னான்.”

“மைந்தனின் ஆணவத்தைக் கண்டு உத்தாலகர் வருந்தினார். அவன் ஆணவத்தை அடக்கினாலன்றி அவனால் ஞானத்தைக் கடந்து விவேகத்தை அடையமுடியாதென்பதை உணர்ந்து பிரம்மஞானத்தைக் கொண்டு மட்டுமே விளக்கிவிடக்கூடிய வினாவைக் கேட்டார். எவற்றை அறியமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்துவிட்டாய். எதை அறியமுடியாதோ அதை அறிந்துவிட்டாயா? ஸ்வேதகேது பதிலின்றி திகைத்துவிட்டான். தந்தையின் காலடியைப் பணிந்து தன் ஆணவத்தைப் பொறுத்தருள வேண்டினான். அவர் அந்த மெய்ஞானத்தை ஒரு அகச்சொற்றொடராக அவனுக்கு அளித்தார்.”

அக்னிவேசர் மிகமெல்ல அந்த மந்திரத்தை சொன்னார் “அது நீயே.” அக்னிவேசர் புன்னகையுடன் “சிகண்டியே, அந்தப் பதிலை ஆருணியாகிய உத்தாலகர் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் வைத்து முன்பொருமுறை சொன்னதுண்டு. அது நீயே என. அன்று மைந்தன் என்ன கேட்டிருப்பான்? அவன் சுட்டிக்காட்டி வினவிய முதல்வினா தந்தையை நோக்கி நீ யாரென்பதாகத்தானே இருக்கமுடியும்? அதற்கான பதில் ‘மைந்தா நானே நீ’ என்பதன்றி வேறெப்படி இருக்கமுடியும்”

சிகண்டியின் இந்த பார்வை மிகமுக்கியமானது, போர் வெறி கொண்ட குரோதத்தில் இருக்கும் சிகண்டி “தந்தையர் அதை உணர்வதற்கு ஞானம் கனியும் ஒரு புள்ளி தேவையாகிறது. நான் நான் என்றெழுந்த மனமும் எனது எனது என விரிந்த கைகளும் குறுகிச்சுருங்கும் ஒரு பருவம்… குருதிகுளிர்ந்தபின் தன் வற்றிய கைகளால் மைந்தனைப்பற்றும்போது அந்த மாபெரும் திரை அறுந்துவிழக் காண்கிறான் மனிதன். மகனே நானே நீ என்கிறான்…”

நிறைந்த வாசிப்பனுவத்தை தந்த உங்களுக்கு நன்றியும், அன்பும்.

விவேக்

ராலே

***

முந்தைய கட்டுரைநம் அமெரிக்கக் குழந்தைகள்
அடுத்த கட்டுரைகரசூர் பத்மபாரதி – கடிதம்