பொருளியல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

வாரன் பப்பெட் இந்தியா வந்த போது இரு முக்கியமான விஷயங்களைக் குறிப்பிட்டார். முதல் விஷயம், நீங்கள் சொன்னது – அமெரிக்கா என்பது கார்ப்பொரேட் ஊழல்களாலேயே உருவானது, ஆகவே ஊழலை அதன் ஒட்டுமொத்த சூழலைக் கொண்டே கணக்கிட வேண்டும்.
இரண்டாவது – முதலாளித்துவ சமூக சேவை (capitalist philanthropy), இது அவரே முன்னுதாரணமாகச் செய்து கொண்டிருப்பது.

பரம்பரைப் பெருமையும், வருங்காலம் பற்றிய கவலையும் குறையக் குறைய, இந்த சேவை மனப்பான்மை இன்னும் விரிவடையும் என்று தோன்றுகிறது. முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சியாக அடுத்த நூற்றாண்டில் இந்தக் கருத்து அமையும் என்று தோன்றுகிறது. (நம் ஊரில் வரி ஏய்ப்புக்காக செய்யும் தான தர்மங்கள் அல்ல; சொத்தில் பாதியை அல்லது முழுவதையும் அர்ப்பணிப்பது)

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு வேறு எந்த உருப்படியான சிந்தனையும் தெரியவில்லை (காந்தியம், கம்யூனிசம் போல). உங்கள் கருத்தை அறிய ஆவல்.

நன்றி
ரத்தன்

ரத்தன்,

ஒரு கட்டத்தில் பணம் தியாகம் மூலம், கொடைமூலம் மட்டுமே பொருள்பெற முடியும் என்றும் ஆகவே பணத்தை அடைந்தவர்கள் அதற்கான தர்மகர்த்தாவாகச் செயல்பட வேண்டும் என்று காந்தி சொன்னார்

ஆம் ராக்பெலல்ர் போல வாரன் பப்பெட்டும் அதற்கான முன்னுதாரணமே. ஆனால் அது சரியான வழியா, மனிதனின் பேராசை அதற்கு இடம் கொடுக்குமா என்று எனக்கு ஐயமாகவே இருக்கிறது

ஜெ

=======================

ஜெ..

economics is defined as a science which describes human behavior as a relationship between (given) ends and scarce means which have alternative uses.

Whereas Gandhian economics differs from the conventional definition. It says that there is enough resources (means) to meet the basic needs(ends). The scarcity mind creates all the choices and conflict whereas the abundance mindset gives comfort

Gandhian economics is prescriptive whereas the conventional economics is derivative. But that makes a great difference to human lives..

இத ஏன் எழுதறேன்னு எனக்குத் தெரியல. உங்களுக்கு எழுதனும்னு தோணுச்சு.

அன்புடன்

பாலா

 

அன்புள்ள ஜெ

இந்தியப் பொருளாதாரம் அதன் அனைத்துச்சிக்கல்களுடனும் சீராக விரிவடைந்துவருகிறது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். வறுமை ஒழிந்து வருவதைக் கண்கூடாகவே காணமுடிகிறது. நடுத்தர வர்க்கம் பெருமளவில் உருவாகி வருகிறது. இந்த ஒரு ஆதாரமே நாம் முதலாளித்துவப்பாதையைத் தேர்வுசெய்வது சரி என்பதற்கான காரணம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சபாபதி சண்முகம்

 

அன்புள்ள சபாபதி

உண்மையில் நான் அதிகமாகப் பொருளியல் அலசல்களை வாசிப்பதில்லை. அவை சிந்தனைக்கான பல வாசல்களை மூடிவிடுகின்றன. எளிமையான விஷயங்களை நோக்கி நாம் செல்லமுடியாமலாக்கிவிடுகின்றன.

நேற்று அஜிதனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவன் ஃப்ரிஜோ காப்ராவின் வெப் ஆஃப் லைஃப் நூலில் வாசித்த ஒரு விஷயத்தை சொன்னான். ஒரு பொருள் குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தரையில் விழுவதற்கான நேரத்தைத் துல்லியமாகக் கணிக்கமுடியுமா என்று ஒரு இயற்பியலாளரிடம் காப்ரா கேட்கிறார். முடியும் என அவர் சொல்லி புவியீர்ப்புவிசையின் அடிப்படையில் கணக்கிட்டுக் கொடுக்கிறார். ஆனால் நுட்பமான வேறுபாடு உள்ளது. உடனே காற்று அளிக்கும் தடையை சேர்க்கிறார். இன்னும் நுட்பமான வேறுபாடு எஞ்சுகிறது. அறைக்குள் உள்ள தட்பவெப்பத்தையும்வெளியே உள்ள தட்ப வெப்பத்தையும் கணக்கிட்டுக் காற்று அறைக்குள் வீசும் வேகத்தை சேர்த்துக்கொள்கிறார். ஆனால் மேலும் நுட்பமான வேறுபாடு உள்ளது. அன்றைய ஒட்டுமொத்த வெப்பத்தைக் கணக்கிட்டுக் காற்றின் அழுத்தத்தைக் கணக்கில் சேர்க்கிறார்…இப்படி சென்றுகொண்டே இருக்கிறது சோதனை. காப்ரா சொல்கிறார். ஒட்டுமொத்த பூமியின் அத்தனை இயற்பியல், உயிரியல் நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டாலொழிய அந்தக் கணக்கைத் துல்லியமாகப் போடமுடியாது என்று. அப்படிப்  போடவேண்டுமென்றால் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் எல்லா  நிகழ்வுகளையும் துல்லியமாகக் கணிக்கவேண்டும் !

பொருளியல் என்பது கணிப்புகளின் அறிவுத்துறை.ஆனால் அது ஓர் அறிவியல் அல்ல. அதற்கு புறவயத்தன்மை உண்டா என்பதே எனக்கு ஐயமாக இருக்கிறது. நான் பொருளியலை படித்த காலத்திலேயே இந்த ஐயம் இருந்தது. ஒரு சிறிய பொருளியல் கணிப்பை நிகழ்த்த ஒட்டுமொத்த பூமியின் பொருளியலைக் கணிக்கவேண்டும். அதற்கு இப்பூமியின் எல்லா நிகழ்வுகளையும் கணிக்கவேண்டும்

இந்தியாவில் வறுமை குறைகிறது என்பது உண்மை. நடுத்தரவர்க்கம் உருவாவதும் உண்மை. ஆனால் இது நம்மைச்சுற்றி உள்ள பெரிய நாடுகள் பலவும் பொருளியல்ரீதியாக சரிவில் உள்ளன என்பதனால், நமக்கு பெரும் போட்டிகள் இல்லை என்பதனால் கூட இருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.
அடுத்த கட்டுரைவடகிழக்கு நோக்கி 2 – நெடும் பயணம்