ஓர் ஈழ எழுத்தாளருக்கு…

ஜெ,

உங்கள் எதிரி டி.செ.தமிழன் எழுதியதை வாசித்தீர்களா?

‘ஆம் ந‌ண்ப‌ர்க‌ளே…! ஜெய‌மோக‌னுட‌னான‌ என‌து ப‌த்தாண்டுப் ‘ப‌கை’யை முடித்து வைக்க‌லாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்ல‌து 2002ல் ‘டிசே த‌மிழ‌னுக்கு’ என‌ ஜெய‌மோக‌ன் ப‌திவுக‌ள் விவாத‌க் க‌ள‌த்தில் எழுதிய‌தை ந‌ன்றியுட‌ன் நினைவு கூர்ந்து ஒரு ப‌கை ம‌ற‌ப்புக் க‌டித‌ம் கூட‌அவ‌ருக்கு எழுத‌லாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன்’. http://djthamilan.blogspot.com/2011/01/blog-post.html

பகைமறப்பு ஒப்பந்தம் எப்போது? ஏதாவது பார்ட்டி உண்டா?

கணேஷ் பிரபு

அன்புள்ள கணேஷ்,

திண்ணையில் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்து சு.வெங்கடேசன் எழுதியக் கட்டுரை வெளி வந்த நாட்களில் ஒருநாள் மதுரை புத்தகக் கண்காட்சியில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன் தினம் அவருடன் அவரது வண்டியில் கீழக்குயில்குடி பக்கமாகச் சுற்றி அவரது வீட்டுக்கும் சென்றிருந்தேன். புத்தகக் கண்காட்சியில் எங்களைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார், அப்படியென்றால் நீங்கள் இருவரும் பகைவர்கள் இல்லையா என.

உண்மையிலேயே எனக்கு எவரிடமும் பகை இல்லை என்பதை எப்போதும் சொல்லி வருகிறேன். மிகையே இல்லாமல் சொல்கிறேனே, பகை என்றால் அது என்னுடைய சில இயல்புகள் தான். நான் தான்.

டி.செ.தமிழனுக்கும், எனக்கும் பத்து வருடங்கள் முன்னால் சில இணைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அதை ஒட்டி அவரது புனைவு ஆக்கங்களை நான் வாசித்துப் பார்த்தேன். படைப்பூக்கம் மிக, மிகக் குறைவு என்பதுடன் அந்த மனஎழுச்சிக்கு எதிரான அம்சங்களே அவரிடம் மிகுந்திருப்பதையும் கண்டேன். ஒரு ஆக்கப் பூர்வமான விவாதத்தை நிகழ்த்துவதற்கான மன நிலையிலும் அவர் இருக்கவில்லை. அதன்பின் நான் அவரை கவனிக்கவில்லை. நெடுநாள் கழித்து நீங்கள் சொன்ன பின் சுட்டியைப் படித்தேன், அவரை நினைவு கூர்ந்தேன்.

எனக்கும், அவருக்குமான பிரச்சினை அவர் நினைத்துக் கொள்வது போல தனிப்பட்ட முறையிலானது அல்ல. இலக்கியம் பற்றிய என் மன உருவகத்திற்கும், அவரது மன உருவகத்திற்கும் இடையே உள்ள ஆழமான வேறுபாடு தான். அவர் நினைத்துக் கொண்டிருப்பதை நிறுவ, அவற்றின் அடிப்படையில் தன் ஆக்கங்களை காத்துக் கொள்ள என்னை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான கருத்தியல் முத்திரைகள் தேவைப் படுகின்றன. அதற்கான மிகையுணர்ச்சிகளும் தேவையாகின்றன.

அந்த உணர்ச்சிகள் பல்வேறு நுட்பமான மாறுவேடங்களுடன் வருகின்றன. கருத்தியல் பேசுகின்றன. அரசியல் பேசுகின்றன. அவற்றை எதிர் கொள்வது நிழல் சண்டை. அவற்றில் எனக்கு ஈடுபாடில்லை. நேர விரயம்.

அவர் இப்படி எழுதியிருப்பதனால் நான் என்ன நினைக்கிறேன் என்று அவரிடம் சொல்ல முயல்கிறேன். அவரது பொதுவான மனநிலையில் இதை அவரால் கேட்க முடியாதென்றே நினைக்கிறேன். ஒருவேளை உதவலாம். அல்லது வேறு வாசகர்களுக்கு, வேறு எழுத்தாளர்களுக்காவது உதவலாம்.

மிக இளம் வயதிலேயே அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த உலகுக்குள் நுழைய நேரிடுபவர்களுக்கு ஒரு இழப்பு உருவாகிறது. அவர்களால் வாழ்க்கையை அரசியல் கோட்பாடுகளாக மட்டுமே அணுக முடிகிறது. அவர்களின் கலைசார்ந்த நுண்ணுணர்வு அழிந்து விடுகிறது. தமிழகத்தில் முற்போக்கு இலக்கிய முகாம்களில் மாட்டிக் கொண்டவர்கள் பலர் அப்படி ஆகியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்த தரப்பில் வலுவான ஆளுமைகள் இருந்ததில்லை. ஆகவே இங்கே ஓங்கியிருக்கும் தரப்பு என்பது எந்நிலையிலும் கலையை மட்டுமே முன்னிறுத்தும் தரப்பே.

ஆனால் ஈழத்தில் அந்நிலை இல்லை. அங்கே இயல்பாகவே அரசியல் சார்ந்த தளத்திலேயே இளைஞர்கள் சென்று சேர்கிறார்கள். கைலாசபதி காலம் தொட்டே அந்தத் தரப்புக்குத் தான் அழுத்தம் அதிகம். மேலும் அவர்களின் அரசியல் குறைவான மக்கள்தொகை காரணமாகவோ என்னவோ எப்போதுமே கொந்தளிப்பு மிக்கதாக,உக்கிரமான உணர்ச்சிகள் கொண்டதாக, எளிமையானதாகவே இருந்துள்ளது. அங்கே செல்லும் இளைஞர்களின் ஆளுமை அதிலேயே வார்க்கப் பட்டு விடுகிறது. அதிலிருந்து தப்பவே முடிவதில்லை.வாழ்க்கையை அரசியல் கோட்பாடுகள் சார்ந்தும், அரசியல் நிலைபாடுகள் சார்ந்தும் மட்டுமே அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

வாழ்க்கை என்பது இந்த எளிமையான சூத்திரங்களுக்குள் நிற்பதல்ல என்றும், கலை இத்தகைய எளிமைப்பாடுகளுக்கு நேர் எதிரானது என்றும் இவர்கள் அறிவதே இல்லை. கலையின் பரப்பு எப்போதுமே கிரே ஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்க வைக்கும் ஒரு மொழிக் களம் மட்டுமே.

கருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப் படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதன் விளைவு.

இந்தப் புரிதல் இல்லாதக் காரணத்தினால் தான் ஈழ இலக்கியம் இத்தனை ஆழமற்று இருக்கிறது. இத்தனை மகத்தான மானுட சோகம் நிகழ்ந்தும் கூட மிக ஒற்றைப் படையானக் கூக்குரல்களுக்கு அப்பால் மனித ஆன்மாவிடம் உரையாடும் படைப்புகளை ஆக்க அவர்களால் இயலவில்லை. மிகப் பெரும்பாலானவர்களிடம் புனைவு மொழியே இல்லை. இத்தனை வருடங்களாக டி.செ.தமிழன் எழுதி வருகிறார். பத்து வருடம் கழித்து அவரை வாசிக்கையில் மிக ஏமாற்றமாக இருக்கிறது. எவ்வளவு முதிரா மொழி. எவ்வளவு பிரயத்தனம் தெரியும் வெளிப்பாடு!

மீண்டும், மீண்டும் தமிழக இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் ஈழ இலக்கியம் இதைச் சொல்லி வருகிறார்கள். சொல்லிக் கேட்கையில் அவர்களுக்கு கோபமும், வருத்தமும் வருகிறது.  அதை ஈழ அறிவுக் களம் மீதான நிராகரிப்பாகவே எடுத்துக் கொள்கிறார்கள். டி. செ. தமிழன் கூட அப்படிக் கொந்தளிப்பதை வாசித்தேன். ஈழ அறிவுக் களம் பற்றி மதிப்புடன் பேசாத தமிழ் எழுத்தாளரே இல்லை என்பதை மறந்து விடுகிறார்கள். கஷ்டம்தான். ஆனால் விமர்சனம் என்றால் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஒன்றும் சொல்லாமல் இருந்தால் அதை புறக்கணிப்பு என்பார்கள். சொன்னால் நிராகரிப்பு என்பார்கள். ஆகவே தான் தமிழில் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கு ஏதாவது சொல்லித் தப்புகிறார்கள். அதைக் கேட்க அவர்களுக்குப் பிடித்திருக்கிறது [2000த்தில் ஈழப்புலம் பெயர்ந்த இலக்கியத்தில்தான் தமிழின் தலை சிறந்த ஆக்கங்கள் வெளிவரும் என பலர் இங்கே இருந்து சென்று அங்கே சொன்னார்கள். சொன்னவர்களுக்குக் கைத்தட்டல் கிடைத்தது. அதற்கான தடையமே இல்லை என்று சொன்ன என்னைப் போன்றவர்களுக்கு வசைகள். இன்று அச்சொற்களை நினைவு கூர்கையில் வருத்தமே எஞ்சுகிறது] ஆனால் ஈழத்தவர்களில் கணிசமானவர்கள் நல்ல வாசகர்கள். ஆகவே அவர்களுக்கு உண்மையும் தெரியும். தனிப் பேச்சுகளில் அதைச் சொல்லாதவர்கள் இல்லை.

டி.செ.தமிழன் இந்த வகையான ஒரு அரசியல் சூழலில் சிக்கி மறைந்து போன இளைஞர் என்றே எனக்குப் படுகிறது. அவரது விமர்சனங்கள் எல்லாம் ஆழமற்ற அக்கப் போர்களாகவே எஞ்சி விடுவதன் காரணம் இதுவே. ஓர் உதாரணமாக ‘சோற்றுக் கணக்கு’ பற்றிய அவரது விமர்சனத்தை சுட்டுகிறேன்.  http://djthamilan.blogspot.com/2011/02/blog-post.html

அவரது விமர்சனங்களை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். 1. என்னுடைய கதைகளில் சாதியடையாளம் எப்போதும் துருத்திக் கொண்டிருக்கிறது. 2. சோற்றுக் கணக்கு கதையில் கதை நாயகன் வேளாளன் என்பது சுட்டிக் காட்டப் படுவதன் மூலம் சாதி மேன்மை சுட்டப் படுகிறது 3. கெத்தேல்  சாகிப் சாதி பார்ப்பதன் மூலம் சாகிப் சாதி பற்றாளர் என்று சொல்லப் படுகிறது. இது அவரை நான் மட்டம் தட்ட எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதுவே அக்கதையின் நோக்கம்.

கவனத்திற்குரிய முதல் விஷயம், சோற்றுக் கணக்கு என்ற கதை நிற்கும் தளம். அந்த அறம் சார் மன எழுச்சியை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது அவரது கதையே அல்ல. அந்த மன எழுச்சியில் நின்று அதை எழுதிய ஒருவர் அப்படி கடைசியாகச் சொல்லிய சில்லறைச் சதியை செய்வாரா என்ற எளிமையான எண்ணம்கூட அவர் மனதில் வரவில்லை. அப்படி ஒரு சில்லறைச் சதியைச் செய்வதற்காக மெனக்கெட்டு உட்கார்ந்து இந்த கதையை இத்தனை விரிவாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதவேண்டுமா என்று கூட யோசிப்பதில்லை அவர்.

காரணம் இதுதான், எழுதப் படுவது எதுவும் ஓர் அரசியல் சதி நடவடிக்கை தான் என்ற மனப்பயிற்சி. ஆகவே வாசிக்கும் எதிலும் அரசியல் சதியை மட்டுமே காணும் பழக்கம். அதற்காக கதையை பிரித்து, பிய்த்துப் போட்டு தேடுவது. இந்தக் கதை என் பேரில் வெளி வராமலிருந்தால் இந்த வாசிப்பே இவருக்கு கிடைத்திருக்காது. ஆக, எஞ்சுவது எழுதும் ஆள் நம்மவரா, இல்லையா என்ற ஆராய்ச்சி மட்டுமே.

இந்த வகை ஆராய்ச்சிக்கு பதில் சொல்வதே வீண். ஆனாலும் இதை மட்டும் பார்ப்போம். இலக்கிய ஆக்கம் அதன் ஆசிரியன் அவனுடைய நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் சொல்வதற்கான ஒரு களம் அல்ல. அவன் சொல்வது அவன் கண்ட சமூக உண்மையை. அவன் ஓர் ஊடகம். தமிழ்ச் சமூகம் சாதிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கையில் எழுத்தாளன் சாதியை விட்டு, விட்டு எழுத வேண்டுமென்று சொல்வது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத நிலை மட்டுமே!

இங்கே வணிக எழுத்தில் ஓர் இடக்கரடக்கல் உள்ளது. சாதி சொல்லக் கூடாது என்று. ஆனால் இலக்கிய ஆக்கம் அத்தகைய நாசுக்குகளுக்குள் நிற்பதல்ல. அது வாழ்க்கையை நோக்கி வைக்கப் பட்டிருக்கிறது. ஜி நாகராஜன் அதற்கு பதில் சொன்னார் ‘ஏன் அப்படி எழுதினாய் என்று கேட்காதீர்கள். இருக்கிறது ஆகவே எழுதினேன்’.

எப்போதும் இலக்கிய ஆக்கம் ஒரு கனவு நிலையில் இருந்தே எழுதப் படுகிறது. முதல் சில வரிகளுக்குப் பின்னர் அதை எழுதுபவனின் பிரக்ஞை இல்லாமலாகிறது. அவனுடைய இருப்பே இல்லாமலாகிறது. அதன்பின் அந்த கதையின் யதார்த்ததிற்குள் அவனும் சென்று விடுகிறான். கெத்தேல் சாகிப் கண் முன் நிற்கிறார், பேசுகிறார். அவர் எப்படியோ, அப்படி நிகழ்கிறார். ஆசிரியனுக்கே அவர் யார் என அப்போது தான் தெரிகிறது.

கதையுலகமும், கதை மாந்தரும் அந்த ஆசிரியன் உட்கார்ந்து யோசித்து உருவாக்குபவை அல்ல. அப்படி உருவாக்கப் படும் கதையையும், பாத்திரங்களையும் எந்த நல்ல வாசகனும் எளிதில் கண்டு பிடித்து விட முடியும்.  கலையம்சம் கொண்ட எழுத்தில் கதை அதுவாகவே அவனுள், அவன் வழியாக, நிகழும்.  ஒரு மனிதனுக்குள் கனவு நிகழ்ந்தாலும், அந்த கனவு அவனால் உருவாக்கப்படுவதோ அவன் கட்டுப்பாடு கொண்டதோ அல்ல.

கனவைப் போலவே நல்ல கதையும் முழுக்க, முழுக்க பிரக்ஞை சாராதது. முற்றிலும் ஆழ் மனம் சார்ந்தது.  மொழியை அளைந்து, அளைந்து அக்கனவை தன்னுள் நிகழ்த்தவே எழுத்தாளன் முயல்கிறான். அந்தக் கனவை மொழியில் நிகழ்த்துவதற்கே அவன் மொழியையும், வடிவத்தையும் பயிற்சி செய்கிறான். அந்த ஆழ்மன வெளிப்பாட்டை பொருத்துவதற்கான சில புறக் கட்டுமானங்கள், தர்க்க அமைப்புகள் மட்டுமே அவனால் உருவாக்கப் படும்.

ஒரு கதாபாத்திரத்தையோ, கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம் கூட மாற்ற முடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாகப் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன். அந்த யதார்த்தம் யாருடையது? ஆம், அது அந்த எழுத்தாளனின் ஆழ் மனம்தான். ஆனால் அந்த ஆழ் மனம் சமூக ஆழ மனமும் கூட. ஆகவே தான் வாசிப்பவனும் அதற்குள் வர முடிகிறது.

ஆகவே கெத்தேல் சாகிப் ஏன் அப்படி இருக்கிறார் என்றால் அவர் அப்படித் தான் என்பதே பதிலாக இருக்கும். எழுத்தாளனின் சதி வேலையாக அல்லாமல் படைப்பைப் பார்க்கும் மன நிலை கொண்ட ஒருவர் கெத்தேல் சாகிப்பை உண்மையான ஒரு மனிதராகவே அணுகுவார். அவரது எல்லா குணங்களுடனும், சிக்கல்களுடனும். கதையை ஒரு வாழ்க்கைத் துண்டாகவே பார்ப்பார்.

தமிழில் இந்த கருத்துக்கள் ஏறத்தாழ இலக்கியச் சூழலில் நிறுவப்பட்டு விட்டவை. அ.மார்க்ஸ் போன்ற இலக்கியம் என்றால் பசுவா, கொக்கா என்று கேட்கும் ஆசாமிகளைத் தவிர இலக்கிய வாசிப்புள்ள எவருக்குமே இதில் ஐயமிருப்பதில்லை. எழுபதுகளில் இங்கிருந்த  இடதுசாரிகளுக்கு எதிராக ஆக்ரோஷமாக வாதிட்டு  இவ்விஷயங்களை இங்கே நிறுவிய வெங்கட் சாமிநாதனைப் போன்றவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு மாற்று இயக்கம், கலையிலக்கியத்தின் அடிப்படைகளை கற்பிப்பதற்கான இயக்கம், இன்று வரை உருவாகவில்லை. அங்கே கைலாசபதி சிவதம்பிகளின் செல்வாக்கிலேயே இன்னமும் இலக்கிய சிந்தனைகள் உள்ளன. அதன் அத்தனை சிக்கல்களும் அங்கு உருவாகி வரும் இளம் எழுத்தாளர்களுக்கு உள்ளன. அவர்கள் எழுத வரும் போதே  அவர்கள் நம்பும் அல்லது நம்புவதாக காட்டிக் கொள்ளும் கருத்தியலை முன் வைத்து அதற்கான உணர்ச்சிகளைச் சமைத்துப் பரிமாறவே முயல்கிறார்கள்.

ஆக என்னிடம் கேட்டால் சோற்றுக் கணக்கு கெத்தேல் சாகிப்பைப் பற்றி இப்படித் தான் சொல்வேன். அவருக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அவர் உங்களைப் போலவே எனக்கும் ஒரு கதாபாத்திரம்தான். அந்தக் கதைச் சூழலில் உங்களைப் போலவே நானும் ஒரு வாசகன் மட்டுமே. அது என் ஆக்கம் அல்ல, என் வழியாக நிகழ்ந்த ஆக்கம்.

ஒரு விமர்சகனாக அந்தக் கதையை முன் வைத்து இக்கேள்விகளை கேட்டால் என்ன பதில் சொல்வேன்? ஒன்று தமிழ்ச் சமூகம் இன்றும் சாதிகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை தமிழ் கதாபாத்திரங்கள் சாதி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அபத்தமான கூற்று மட்டுமே. அதிலும் கெத்தேல் சாகிப் வாழ்ந்தது அரை நூற்றாண்டுக்கு முன்பு. அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த சூழல் சாதியாலேயே மனிதர்களை அடையாளம் காண்பது. அவர் அப்படித் தான் பேசமுடியும்.

ஆனால் அது சாதி வெறி அல்ல. சாதிப் பாகுபாடும் அல்ல. அக்கால மனநிலையை இன்றைய ஒன்றைரையணா கோட்பாடுகள் கொண்டுப் புரிந்துக் கொள்ள முடியாது. மனிதர்களின் அடையாளமாக சாதியைப் பார்க்கும் அந்தக் கால மனிதர்களில் கணிசமானவர்கள் அதை மனித இழிவுக்கான முகாந்தரமாக பார்ப்பதில்லை. ஒருவேளை பார்த்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை

உதாரணம், வைக்கம் முகமது பஷீர். அவரது நாட்குறிப்புகளிலும், கதைகளிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களும்  எப்போதுமே சாதியாலேயே சுட்டப் படுகிறார்கள். ‘இன்றைக்கு இரு நாயர்கள் என் வீட்டுக்கு சாப்பிடுவதற்கென்றே கிளம்பி வந்தார்கள்’ என அவர் குறிப்பிடுவது தகழியையும், எம்.டியையும். வீட்டுக்குக் கூடை விற்க வரும் தலித்ப் பெண்ணையும் கூட சாதியைச் சொல்லித்தான் பஷீர் சொல்கிறார். சாதி அவருக்கு மனிதர்களின் பின்னணி அடையாளமாக இருக்கிறது. வேடிக்கையாகவும். அதற்காக கேரள எழுத்தாளர்களில் மகத்தான மனிதாபிமானியை சாதி வெறியன் என்றா சொல்வீர்கள்?

தமிழில் புதுமைப் பித்தனின், கு.அழகிரிசாமியின் கதைகள் பெரும்பாலானவற்றில் சாதி சுட்டப் பட்டிருக்கிறது. கி.ராஜநாராயணன் தெளிவாகவே சாதி சொல்லித் தான் தன் கதை மாந்தரை எழுதியிருக்கிறார்.

இன்னொரு விஷயம். கேரள திரைப்படங்களில் கூட கண்டிருக்கலாம். முஸ்லீம் கதாபாத்திரங்கள் எப்போதுமே இந்துக்களை சாதி சொல்லியே குறிப்பிடுகின்றன. எம் டி வாசுதேவன் நாயரின் கதைகளில், உறூபின் கதைகளில் இதைக் காணலாம். இந்த பண்பாட்டுக்கூறுக்கு என்ன காரணம் என எனக்கும் தெரியவில்லை.  நாளை ஒரு ஆய்வாளன் அந்த சமூக உளவியலை கண்டு பிடிக்கலாம். நானே இப்போதுதான் இதைக் கவனிக்கிறேன்.

ஆனால் இத்தகைய நுண்ணிய கலாச்சாரக் கூறுகளையே நான் இலக்கியத்தின்  அடையாளமாக நினைக்கிறேன். இதே போல ஒரு நல்ல படைப்பில் ஆசிரியனுக்குத் தெரிந்ததும், தெரியாததுமான பலநூறு பல்லாயிரம் பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. உயர்ந்தவையும், தாழ்ந்தவையும். அழகும், அசிங்கமும். அவையனைத்தும் இலக்கிய ஆக்கத்தில் தன்னிச்சையாக இடம் பெற்றால் தான் அது நல்ல படைப்பு.

அதை தடுப்பது எழுத்தாளனின் தன்னுணர்வே. இதை எழுதினால் என்ன சொல்வார்கள், என்னுடைய கருத்தியலுக்கு இது ஏற்றதா, இது ஒழுக்கமானதா, இதை எழுதினால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் எங்கே எழுகிறதோ அங்கே இலக்கிய படைப்பாக்கம் வெறும் பிரசங்கமாக ஆகி விடுகிறது. ஆகவேதான் அரசியல் சரிகளை எவர் இலக்கியம் மீது போட்டாலும் அதை இலக்கிய அழிப்பு முயற்சி என்று நான் நினைக்கிறேன். சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல இலக்கியம். அது உண்மைகளால் ஆனது.

பலசமயம் ஒரு படைப்பில் உள்ள விஷயங்களை இலக்கியவாதியாலேயே விளக்க முடியாமல் இருக்கலாம். எங்கோ எவரோ சொன்ன ஒரு சொல் தன்னிச்சையாக இலக்கியத்தில் பதிவாகலாம். சில சமயம் அது அப்பட்டமான மானுட விரோதமாகக்கூட இருக்கலாம். ஆனால் இலக்கியம் அப்படித்தான் செயல் படும். அதில் தற்செயல்களே முக்கியமான விசை. ஒரு கதையை ஒரு குறிப்பிட்ட சாதிச் சூழலில், ஒரு குறிப்பிட்ட இடச் சூழலில், ஒரு குறிப்பிட்டக் காலத்தில் அமைக்க என்ன காரணம் என்பது எழுத்தாளனின் அக மனம் மட்டுமே அறிந்த விஷயம். அதற்கான காரணங்களை விமர்சகன் யோசிக்கலாம், விவாதிக்கலாம். அதை எழுத்தாளனை முத்திரை குத்த பயன்படுத்துவது முதிர்ச்சியின்மையும், காழ்ப்பும் மட்டுமே.

இனி, இந்தக் கதையில் சாதி வருவதற்கு ஏதேனும் காரணம் அப்புனைவுக்குள் உள்ளதா? முக்கியமான காரணம் ஒன்று எவருக்கும் புரியும். வேளாளர்கள் வேளாண்மைச்சாதி. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்பது பழமொழி. ஐம்பதுகள் வரை ஊர்ச் சாவடிக்குச் சென்று ‘யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ என்று கேட்டு வந்து தான் வேளாளன் சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது. அந்த பின்னணியில் இக்கதை முழுக்க நிகழும் சோற்றுக் கணக்குபார்த்தலுக்கு உபரியான சமூக அர்த்தங்கள் உருவாகி வருகின்றன. அந்த கதாபாத்திரம் எவரோ ஒருவராக இருப்பதற்கும் மேலாக அந்த அடையாளம் கதைக்கு உதவுகிறது.

இந்தக் கதையில் கெத்தேல் சாகிப் சாதி பேதம் பார்க்கிறார் என்பதற்கான எந்த சான்றும் இல்லை. வேளாளப் பெருமை அல்ல இதில் பேசப்படுவதும். இதெல்லாமே மிக அப்பட்டமாகவே உள்ளன. அப்படியும் இப்படி ஒரு வாசிப்பு ஏன் நிகழ்கிறது. வெறும் சில்லறைக் கருத்தியல் சண்டைகளால் இளமையிலேயே திருகிக் கொண்ட ஒரு மனம். எதையும் அந்த சண்டையாக, சண்டைக்கான முகாந்திரமாக மட்டுமே காணும் மனம். அதன் காழ்ப்புகள்.

அந்தக் காழ்ப்புதான் டி.செ.தமிழனை தேங்கச் செய்திருக்கிறது. பெரும்பாலான ஈழத்து இளைஞர்கள் படைப்புலகுக்குள் சாதிப்பதற்கு தடையாக இருப்பதும் இதுவே. இந்த தடையை நான் சுட்டிக் காட்டுவது தான் எனக்கும் டி.செ.தமிழனுக்கும் இருந்த பிரச்சினை. அதை அவர் மறு பரிசீலனை செய்தாரென்றால் நல்லது.

*

இந்த விவாதத்தின் பகுதியாக நான் சொல்ல விரும்பும் ஒன்றுண்டு. வசைகள் பதிலாக கிடைத்தாலும் அதை சொல்லி இவ்விவாதத்தை இதிலேயே  முடித்து விடலாமென நினைக்கிறேன். இந்த வாசிப்பில் தெரியும் டி.செ.தமிழனின் ஒருமனநிலை மிக தவறானது. அவரால் ஒரு வேளாளக் கதாபாத்திரத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகவே அக்கதைக்குள் நுழைய அந்த சாதிக் குறிப்பு தடையாக இருக்கிறது. அதனைத்தான் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

யாழ்ப்பாணச் சூழலில் அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் இலக்கிய வாசகனுக்கு ஒருபோதும் உகக்காத மனநிலை அது. எந்த மனிதருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் மனவிரிவு அல்லது களங்கமின்மையையே இலக்கிய வாசகனின் முதல் தகுதியாகச் சொல்வேன். இலக்கியப் படைப்பாளிக்கு அதை முதல் நிபந்தனையாக முன் வைப்பேன்.

அந்த களங்கமின்மை இளவயதில் எந்த வாசகனுக்குமுண்டு. அரசியல் ஈடுபாடு வழியாக டி.செ.தமிழன் இழந்தது அதையே. அதை மீட்டுக் கொள்ளாத வரை ஒருவரால் எதையும் பொருட்படுத்தும்படியாக எழுதி விட முடியாது. ஒருபோதும் வெறுப்பில், காழ்ப்பில், ஒரு பக்கத்தை மட்டும் நோக்கும் நிலையில் நின்று இலக்கியத்தை எழுத முடியாது. இப்படிச் சொல்கிறேனே, சிங்கள மக்களை அனுதாபத்துடன் பார்க்க டி செ தமிழனால் முடியும் என்றால் மட்டுமே அவர் தமிழர்களின் வாழ்க்கையை எழுத முடியும்.

கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வாழ்க்கையை வகுக்க முடியாது. இலக்கியத்தை உருவாக்கவும் முடியாது. கண்ணெதிரே உள்ள ஒரு புள்ளியுடன் அந்த படைப்பெழுச்சியின் கணத்தில் முற்றிலும் நம்மை இழந்து, நாம் நம்மைப் பொருத்திக் கொண்டு உள்ளே நுழைந்து அந்த வாழ்க்கைக்குள் நாமும் வாழும் போதே இலக்கியம் உருவாகின்றது. அரசியல் கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகளை கட்டிக் கொண்டிருக்கும் வரை நம் பிரக்ஞையே மேலும், மேலும் செறிவாகிறது. குழந்தைத்தனமான கற்பனை, உணர்ச்சிகரமான கற்பனை, சார்பில்லாத விவேகம் கைநழுவுகிறது. அவையே இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகின்றன.

டி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது.

ஆனால் அவற்றில் இருந்து வெளியே வந்தாரென்றால் ஓர் ஈழத்தவராக அவர் எழுதுவதற்கு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கை வெளி விரிந்து கிடக்கிறது. ஒன்று, அது எழுத்தாளன் என்ற முறையில் அவருக்கு ஒரு பெரும் வாய்ப்பு. மனிதனின் சிறுமையை, உன்னதத்தை, வரலாற்றின் உள் ஒழுங்கை அதனூடாக ஓடும் மாபெரும் அபத்தத்தை கண்ணெதிரே கண்டுணர அவருக்கு விதி வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்னொரு நோக்கில் அது ஒரு பெரும் கடமை. ஒரு எழுத்தாளனாக தன் சுற்றத்திற்கு அவர் செய்தாக வேண்டிய பொறுப்பு அது.

அவரது இணையத் தளத்தைப் பார்க்கையில் எனக்குச் சொல்லத் தோன்றும் சில விஷயங்கள் உள்ளன. ஒன்று அவர் சினிமாவில் செயலாற்ற விரும்புகிறார் என்றால் தவிர இத்தனை சினிமாக்களை பார்ப்பதும் அவற்றைப் பற்றி எழுதுவதும், முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவை. அவர் எழுதுவது வெறும் சினிமாக் கதைச் சுருக்கமாக மட்டுமே இருக்கிறது. அந்த சினிமாவில் இருந்து அவர் மேலே சென்ற ஒரு அடிகூட பதிவாகவில்லை.

சினிமா முழுக்க, முழுக்க வேறு ஊடகம். சினிமாவில் ஈடுபட, ஈடுபட இலக்கியம் சார்ந்த பல நுண்ணுணர்வுகள் இழக்கப் படும். சினிமா காட்சிகளை முன்னிறுத்துவது. உணர்ச்சிகளும், எண்ணங்களும் கூட காட்சிகளே. இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள், எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும் கூட இங்கே மொழி தான்.

மொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டு வருவதற்கான சவாலென்பது இரவு பகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக் கொண்டிருப்பதனால் தான் கைக்கூடும். ஒரு சிந்தனை அல்லது உணர்வு எழுந்தாலே அது மொழி வடிவமாக மனதில் எழுவதற்குப் பெயர் தான் இலக்கியத் தேர்ச்சி. சினிமா அதைக் காட்சியாகவே உருவாக்கி அளிக்கிறது.

இரண்டு, எந்த எழுத்தாளனுக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை அழிவுச் சக்திகள். அங்கே வெறும் சராசரிகளுடன் மோதிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு தங்கள் கருத்துக்கள் மேல் பொறுப்பு இல்லை. அவ்வப்போது தோன்றுவதைச் சொல்லிக் கொண்டு போவார்கள். அக்கருத்துக்களுக்கு எதிர் வினையாற்றுவது வீண். அவற்றை ஒதுக்கினாலும் கூட அக்கருத்துக்கள் மெல்ல, மெல்ல நம்மை எதிர் மறையாகக் கட்டமைப்பதை நாம் தவிர்க்க முடியாது.

அவரது இணையத் தளத்தின் பின்னூட்டங்களில் கூட வெறும் பூசல் தன்மையை மட்டுமே காண முடிகிறது. வளரும் எழுத்தாளனுக்கு பூசல் போல தீங்களிப்பது எதுவுமே இல்லை. அவன் உளச்சக்தி முற்றாகவே வீணாகும்.

இவையனைத்திலும் இருந்து ஒரே தாவலில் தப்பி விடலாம். அதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பிரம்மாண்ட முயற்சியை, நம்மால் என்ன முடியும் என நாம் நினைக்கிறோமோ அதை விடப் பெரிய ஒரு முயற்சியை, துணிந்து எடுத்துக் கொள்வது தான்.  அதில் முழுமூச்சாக இறங்கி மூழ்கிச் செல்வது. எழுதுவது முடியாவிட்டால் அழிவது. அதன் ஆரம்பக் கட்டங்களில் கோட்பாடுகளும், கொள்கைகளும் நம்மிடம் இருக்கும். அது நம்மை உள்ளே இழுத்துக் கொண்டால் நாம் அழிந்து அது மட்டுமே எஞ்சும். அதுவே கலையின் வெற்றி.

அதற்காகவே நான் எப்போதும் நண்பர்களுக்கு பெரிய நாவல் வடிவங்களை சிபாரிசு செய்கிறேன். நம்முள் உள்ள அத்தனை கலைத் திறனையும், உழைப்பையும் மிச்சமில்லாமல் கோரக் கூடிய வடிவம் அது. அன்று புத்தகக் கண்காட்சியில் நான் சு.வெங்கடேசனிடம் சொன்னதும் இதுவே. இப்போது அவரிடமும் அதையே சொல்கிறேன். வரலாறு ஒரு வாய்ப்பை, கடமையை, ஒரு சவாலை அளித்துள்ளது. அதை அவர் எதிர் கொள்ளட்டும்.

அதை நோக்கிச் செல்லும் போது கலை என்றால் என்ன என்று புரியும். ஒரு பெரிய நாவல் அதை எழுதுபவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று சொல்லி விடும். அவனுடைய எளிய பதற்றங்களையும், கோபங்களயும் மீறி வரலாற்றையும், வாழ்க்கையையும் அவன் பார்க்க வழி செய்யும்.

அப்படி ஒன்றுக்காக முயன்றால், அதில் பாதிப் பங்கு வென்றால் கூட, முழுமை செய்ய உதவும் மிகச் சிறந்த தொகுப்பாளர்கள் இங்குள்ளனர். ஜோ.டி.குரூஸ் போலவோ சு.வெங்கடேசன் போலவோ தீவிரமாக வெளிப் படலாம்.

கெத்தேல் சாகிபை நான் கண்டு கொண்டத் தருணத்தை நினைவுக் கூர்கிறேன். யாரோ ஒருவன், யாரோ அளித்த சோற்றை உண்ணும் போது என் கைகள் தட்டச்சுப்பொறியில் கண்ணீரால் வழுக்கின. நெஞ்சு விம்மி கணித்திரை மறைந்தது. அந்த சுயமழிதலை, அந்த லயத்தை எழுத்தில் உணர முடிந்தால் இந்தக் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் எதையுமே நான் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருக்க மாட்டார்.

ஜெ

முந்தைய கட்டுரைவிதிசமைப்பவர்கள்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅண்ணா -கடிதங்கள்