ஜெ..
மிகப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
http://durgamanoharan.posterous.com/
8000 ரூபாய் சம்பளத்தில், கூடலூர் ஆதிவாசிகளுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு உன்னத ஆத்மா. கூடலூர் ஆதிவாசிகளது மருத்துவமனை, அரசு மருத்துவமனையை விடச் சிறந்தது.
உண்மையை ஒத்துக் கொள்ள மறுக்கும் ஒரு விதி சமைப்பவன்.
அன்புடன்
பாலா
அன்புள்ள ஜெமோ,
தேர்வு செய்யப் பட்டவர்கள் கட்டுரையில்…
// மானுட இனத்தில் ஏதேனும் ஒரு வகையில் அதன் பண்பாட்டுக்காக, அதன் மேன்மைக்காக ஒரு துளியேனும் பங்களிப்புக் கொடுக்கக் கூடிய குறைந்த பட்ச அறிவுத் திறனும், நுண்ணுணர்வும் கொண்டவர்கள் அரை சதவீதத்துக்கும் கீழேதான். அவர்கள் தான் நாம் காணும் இந்த ஒட்டுமொத்த மானுடப் பண்பாட்டையே உருவாக்கியவர்கள். //
விதி சமைப்பவர்கள் கட்டுரையில்…
// உயிர்களாக மனிதர்கள் அனைவரும் சமமே. உரிமைகளில் மனிதர்கள் அனைவரும் சமமே. மனிதர்கள் எவருக்கும் பிறர் மேல் அதிகாரமும் இல்லை. அதிகாரம் என்றுமே மக்களின் கூட்டுச் செயல்பாடாகவே இருந்தாக வேண்டும். ஆனால் திறனில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. ஆகவே மானுட குலத்துக்கான பங்களிப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் அல்ல. சிலர் அதிக தகுதியும், ஆகவே அதிக பங்களிப்பாற்றும் பொறுப்பும் அதன் பொருட்டு அதிகத் தியாகம் செய்ய வேண்டிய கடமையும் கொண்டவர்கள்.//
தெளிவான கருத்துச்சாரம் நிறைந்த வரிகள்.
மனித மனம் உலகை உள் வாங்க துவங்கியவுடனே சிறிது மேலோட்டமாகவேனும் இந்தப் புரிதல் சராசரி மனங்களில் தானாக உட்கார்ந்து விடும். சராசரியான எனக்கும் இந்தப் புரிதல் உண்டு. தனித் திறன் இருந்தால் போதாது. அது சமுதாயத்துக்கு பயன்பட வேண்டும் என்று தெளிவாக சொல்லியுள்ளீர்கள். தேர்வு செய்யப் பட்டவர்கள் கட்டுரையில் எலும்பை எதிர்பார்த்த அதிமேதாவிகள் ஏன் எதையோ தூக்கிக் கொண்டு ஒடுகிறார்கள் என்று புரியவில்லை.
உலகின் அனைத்து நூல்களையும் கரைத்துகுடித்துவிட்ட ஒரு நபர், சமுதாயத்தை சிந்திக்க வைக்கச் செய்யும் இலக்கியவாதி ஆகமுடியுமா? இல்லை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கெல்லாம் நோபல் பரிசு கிடைத்து விடுமா? அதீத ஞாபக சக்தியும் ஆயிரமாயிரம் கற்பனைகளின், தகவல்களின் சாரத்தை ஒருநொடியில் புதுக் கருவாக்கும் மூளைத் திறன், ஒரு சிலருக்குத் தான் பிறவியிலே வாய்க்கும். பயிற்சி எடுத்தால் அல்லது வெண்டைக்காய் சாப்பிட்டால் வந்து விடுமா? இதெல்லாம் புரிந்தும் காழ்ப்பும், பிழைப்பு வாதமும் உருக் கொண்ட அரசியலால், போலி இலக்கியவாதிகளையும், போலி ஞானிகளையும் தூக்கிப் பிடிப்பது யார்? இந்த பிறவித் திறனாளியும் அல்லாத சராசரியுமல்லாத ரெண்டுங்கெட்டான் மனநிலை தான். இந்த விளம்பர யுகமும், பிரச்சார யுகமும் பொய்யர்களை புனிதர்களாக்குகிறது. குப்பைகளை வீட்டினுள்ளும், அகத்தினுள்ளும் நிறைக்கிறது. அற்புதங்களையும், மாயாஜாலங்களையும் நம்பும் மனிதனுக்கு இதெல்லாம் புரியப் போவதில்லை.
ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். வள்ளுவனோ, கம்பனோ புத்தனோ, இயேசுவோ, காந்தியோ, விவேகானந்தரோ, அன்னை தெரசாவோ அல்லது கொடைக் குணம் கொண்ட பில்கேட்சோ நம்மெதிரில் வந்தால் கையெடுத்துக் கும்பிட மாட்டோமா? அந்த உணர்வு அனைத்து சராசரிகளுக்கும் உண்டு. மனிதக் குலத்தை மேன்மைப் படுத்தும் எந்தப் பிறவித் தனித் திறனாளியையும், சராசரி மனம் மதிக்கும் போற்றும் பாதுகாக்கும். இது தான் எதார்த்தம். கம்ப்யூட்டர்ஜியின், கூகுள்ஜியின், விக்கிஜியின் துணையிருப்பதால் எல்லோரும் அதிமேதாவி என்று நினைக்கிறது இன்றைய பொது புத்தி. அது வயிற்றுவலிக்கெல்லாம் கூகுள்ஜியிடம் கேட்க வைத்து விடும்.
கதிரேசன், ஒமன்.