தமிழ் விக்கி தூரன் விருது , கடிதங்கள்

தமிழ் விக்கி தூரன் விருது

 

தமிழ் விக்கி சார்பில் முதல் தூரன் விருது கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிடவியல் போன்ற இன்னும் தமிழில் வலுவாக நிலைகெள்ளாத அறிவுத் துறையில் மிக முக்கியமான பங்களிப்பாளர் பத்ம பாரதி.

நாம் சமூக அடுக்கில் அலட்சியமாக கடந்து செல்லும் பிரிவினரான நரிக்குறவர் மக்களின் வாழ்க்கை முறை என்பது நமது திரைப்படங்களின் அபத்த நகைச்சுவைத் துணுக்குகள் வழியே கண்ட திராபைக்காட்சிகள் மூலம் நம் மனதில் பதிந்ததே.. ஆனால் உண்மையில் மூடுண்ட கூட்டிற்குள் கடும் ஒழுங்குமுறைகள் பேணும் சமூகம் அது.. அவர்களுக்குள் கலந்து பழகி அவர்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு நெறிகளுக்குட்பட்டு அதே நேரம் வாசிப்பு ஆர்வத்தை குலைக்காமல் அவர் எழுதிய “நரிக்குறவர் இனவரைவியல்” இந்த வகைமையில் ஒரு முன்னோடியான ஆவணம். அதனை படித்த காலத்தில் தமிழின் அறிவுச்சாளரம் ஒரு போதும் மூடுண்டு போகாது என்கிற நம்பிக்கையை அளித்த நூல் அது. அவரின் இன்னொரு நூலான “திருநங்கைகள் சமூகவரைவியல்” நூலும் முக்கியமான ஒன்று. நான் இன்னும் வாசிக்கவில்லை.

கல்விப் புலம் சார்ந்த அத்தனை தகுதிகளும் இருந்தும் மிகசொற்பமான காலம் இலயோலா கல்லூரியில் தொகுப்பூதிய பேராசிரியராக இருந்ததைத்தவிர குறிப்பிடத்தக்க பணியில் அவர் இல்லை என்பது உண்மையில் நமது உயர்கல்வி அமைப்புகள் வெட்கிக்குனிய வேண்டிய ஒரு அவமானம்.. ஆனால்  அதிலெல்லாம் அதற்கு சுரணை வந்து விடப் போவதில்லை.  அரிய இரு வரைவியல் ஆவணங்களை தந்த அவர் கடந்த 7 ஆண்டுகள் எதுவும் எழுதாமல் இருக்கிறார் என்பதன் இழப்பு எத்தனை கனமான ஒன்று..

இந்த விருது அவரை மீண்டும் எழுத உந்துமானால் தமிழின் அரிய பொக்கிஷம் ஒன்று மீண்டும் ஒளிர காரணமான வகையில் அது மகத்தான ஒன்றாக நிலைபேறு கொள்ளும்..

விருது பெறுபவருக்கு எனது வணக்கம்..!

விருது தேர்வுக்கு எனது நன்றி..!

 

முருகானந்தம் ராமசாமி

(முகநூலில்)

***

 

அன்புள்ள ஜெ

கரசூர் பத்மபாரதியின் எழுத்துக்கள் பற்றி ஆய்வுத்துறையில் ஒரு கவனம் உருவாக இந்த விருது வழிவகுக்கட்டும். இன்றைக்கு தமிழில் ஆய்வுசெய்வதற்கு நேர் எதிரான ஒரு சூழல் நிலவுகிறது. இன்று ஆய்வாளர் என அறியப்படவேண்டும் என்றால் பொதுவெளிக்கு வந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கவேண்டும். முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக தென்படவேண்டும். சர்ச்சைகளில் ஈடுபடவேண்டும். அரசியல்நிலைபாடுகள் எடுக்கவேண்டும். இதெல்லாம் செய்தால்தான் ஆய்வாளரை கவனிப்பார்கள்.

ஆனால் ஆய்வு என்பது இதற்கு நேர் எதிரானது. ஒரு நல்ல ஆய்வைச் செய்ய நாலைந்து ஆண்டுகள் ஆகும். அதுவரை வேறெதுவும் செய்யாமல் அதில் மூழ்கவேண்டும். அந்த ஆய்வு முடிவடையும் வரை எதையும் பொதுவெளியில் சொல்லவும் முடியாது. முடிவுகளை அடையவே ஆய்வில் பல ஆண்டுகளாகும். ஆய்வு செய்யுந்தோறும் பேசுவது ஆய்வுக்கே எதிரானது. ஆகவே ஆய்வாளர்கள் ஆண்டுக்கணக்கில் வெளியேதெரியாமல்தான் இருப்பார்கள். அவர்களின் ஆய்வுகளின் பெறுமதிதான் அவர்களின் அடையாளம்

ஆனால் நாம் நம் முன் வந்து பேசிக்கொண்டும் பூசலிட்டுக்கொடும் இருப்பவர்களை ஆய்வாளர்கள் என்கிறோம். இதனால் நல்ல ஆய்வாளர்கள் கவனிக்கப்படாமலாகிறார்கள். இந்தவகை விருதுகள் வழியாக அவர்கள் அடையாளம் காட்டப்படுவது அவசியம்

கரசூர் பத்மபாரதி ஆய்வாளர் என்னும் முழுத்தகுதி கொண்டவர். வெளியே தெரியாத ஆய்வாளர். அவருக்கு விருது மிக உகந்த ஒரு செயல்

 

ரா.முருகசாமி

தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைஎண்ணும்பொழுது – கடிதம்
அடுத்த கட்டுரைகோ.புண்ணியவான், அழிவின் கதை