ஜெ
வெகு நாட்களாய் ஒரு சந்தேகம் – புரட்சி இலக்கியங்கள் மற்றும் போர் இலக்கியங்கள் குறித்து.
இது போன்ற படைப்புக்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு காலக் கட்டத்தை, அவர்களது பாதிப்பினை, அதன் நிகழ்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்கும் விதமாகவே இருக்கும். The creations are an expression of their angst & pain. It is created at an inflection point of a time period.
என் சந்தேகம் – ஒரு வலியின், மனவெழுச்சியின், உந்துதலில் உருவாக்கப்பட்டப் படைப்பு அந்தப் புரட்சி முடிந்த சில காலங்களுக்குப் பிறகு அல்லது அந்த movement பொருளிழந்துப் போனப் பிறகு அதன் படைப்பூக்கம் இருக்குமா? ஒரு வாசகனை அதே உச்சநிலைக்குக் கொண்டு செல்லுமா? உதாரணத்திற்கு – ஈழ இலக்கியம். சில நல்ல படைப்புகள் உண்டு – சோபா சக்தி, சேரன், தேவகாந்தன் போன்றோர். (சில அபாரமான படைப்புகள் – ”கொரில்லா”, “ம்”). மீண்டும் தெளிவுப் படுத்துகிறேன் – will a reader be able to reach the same feeling when the context has changed. Will they become in congruent? முதல் முறைப் படிக்கும் போது ஈழம் என்ற ஒரு மன உருவகம் இருந்தது. அதனால், என்னால் அந்தப் படைப்புகளை முழுவதும் உணர முடிந்தது.
என் கேள்வி – ஒரு வாசகன் இதை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும்? ஒரு படைப்பாளியாய் உங்கள் கருத்து என்ன? ஒரு படைப்பின் time scale ஐ மீறி எப்படி உணர்வது?
(simple answer – மீண்டும் படிக்காமலிருப்பது!!!???)
பதில் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..
இதை திரியாக்கினாலும் மகிழ்ச்சியே
சதீஷ் (மும்பை)
அன்புள்ள சதீஷ்
எந்த இலக்கியமும் சமகால முக்கியத்துவம் கொண்டதே. சமகாலத்து அரசியல், சமூகவியல் யதார்த்தங்களில் இருந்தே இலக்கியம் உருவாகிறது. போரும் அமைதியும் நாவலில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு சமகால யதார்த்ததில் இருந்து தான். அவர் அன்றைய பிரபுகுல வாழ்க்கையை நோக்கித் தன் கசப்பை முன்வைக்க விரும்பினார். ஒரு ஒட்டு மொத்த ருஷ்ய தேசியவாதத்தை உருவாக்க ஆசைப்பட்டார். அன்றைய ருஷ்ய சமூக யதார்த்தத்தை விவரிக்க விரும்பினார். ஆனால் அதன் வழியாக அவர் எப்போதைக்குமான மானுடநிலை நோக்கி தன் பார்வையை விரித்துக் கொண்டு சென்றார். ஆகவே தான் அவர் எதைப் பற்றி, எவரைப் பற்றி எழுதினாரோ அவையெல்லாமே வெறும் வரலாற்றுத் தகவலாக ஆனபின்னரும் அவரது ஆக்கம் இன்றைய யதார்த்தமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
புரட்சியும் அதேபோல ஒரு சமகால யதார்த்தம்தான். அந்த சமகால யதார்த்ததில் இருந்து எழுத்தாளன் என்றுமிருக்கும் மானுட அறச் சீற்றங்களை, அறத் துன்பங்களை, உலகியல் விவேகங்களை, மெய்ஞானத்தை நோக்கிச் சென்றானென்றால் அவன் உருவாக்கும் ஆக்கம் காலத்தில் நிலைத்திருக்கும். அப்புரட்சியின் அன்றாட அரசியலை மட்டுமே கண்டு, அதன் கட்சிக் கட்டுதல்களுக்குள் சிக்கிக் கொண்டு, அதன் மேலோட்டமான கூச்சல்களையும், கோஷங்களையும் மட்டுமே எழுதுவானென்றால் புரட்சி மறைந்ததும் நூலும் மறைந்து விடும்.
பெரிய கலை எலியின் துயரையும், பூனையின் பசியையும் சேர்த்தே சொல்லும் என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அதை நாம் ஷோலக்கோவில் காணலாம். அதில் எதிர்ப் புரட்சியாளர்களின் ஐயங்களும், கொந்தளிப்புகளும் புரட்சியாளர்களின் இலட்சியவேகம் அளவுக்கே உக்கிரமாகச் சொல்லப் பட்டுள்ளன. அப்படி அல்லாமல் ஒருகை ஓசையாக அமைந்தால் அது பிரச்சாரம். அப்படி பிரச்சாரமாக அமைந்த நாவல் என்றால் மக்ஸீம் கோர்க்கியின் தாய் நாவலைச் சொல்லலாம். அதில் புரட்சியாளர்கள் உன்னதமாக்கப் பட்டு எதிர்த் தரப்பு முழுக் கருமையாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது
இப்படிச் சொல்கிறேனே. ஈழப்போர் பற்றி ஒரு நல்லத் தமிழ் நாவல் எழுதப் படுமென்றால் அதில் சிங்களர்களின் தரப்புக்கும் முழுமையான இடம் அளிக்கப் பட்டிருக்கும். புலிகளால் கொல்லப் பட்ட சிங்களச் சிப்பாய்க்காகவும் அப்படைப்பு கண்ணீர் சிந்தும். கலைஞனுக்கு தம்மவர், அயலவர் என்ற பேதம் இருக்க முடியாது. அந்தப் படைப்பு எந்த உண்மையையும் அசௌகரியமானது என்று மூடி வைக்காது. எதையும் தேவைக்கு மேல் விதந்துரைக்காது. அதில் ஒற்றைப் படையான உணர்ச்சிகர கோஷங்களுக்கு இடமில்லை. எது யதார்த்தமோ அதை அஞ்சாமல் முன் வைக்கும். எல்லா உண்மைகளையும், தனக்குள் அடுக்கியபடி என்றுமுள்ள மானுட உண்மை நோக்கிச் செல்லும்.
அந்நிலையில் அது கண்டடையும் உண்மை முழுமையானதாக இருக்கும். அது தமிழர்களின் அரசியல் உண்மை அல்ல. அந்த காலகட்டத்தில் சொல்லப் பட்ட உண்மை அல்ல. அது இனம், காலம் கடந்ததாக இருக்கும். ஒரு சிங்கள இலக்கிய வாசகன் அதை வாசித்தால் தமிழ் வாசகன் அடைந்த அதே மன எழுச்சியை அவனும் அடைவான். தனக்கும் உரிய ஒரு பேருண்மையின் சன்னிதியில் அவன் சென்று நிற்பான். அத்தகைய ஆக்கம் எந்த மொழியில் எழுதப் பட்டிருந்தாலும் அது மானுட ஆக்கமேயாகும்.
ருஷ்யப் புரட்சி பற்றி நிறைய எழுதப் பட்டுள்ளன. ஆனால் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ [மிகயீல் ஷோலக்கோவ்] என்ற நாவல் நிலைத்திருக்கும். அது வெறும் புரட்சியின் விவரணை அல்ல. புரட்சியின் கருத்தியலும், உணர்ச்சிகளும் மட்டும் கொண்டது அல்ல. அது மனிதர்களின் கதை. தான் வாழும் காலம் ஒட்டு மொத்தமாக புரட்டிப் போடப் படுகையில் மனிதர்கள் எப்படியெல்லாம் அதை எதிர் கொள்கிறார்கள், எப்படி மாறிக் கொள்கிறார்கள், எப்படி உடைந்து அழிகிறார்கள் என்பதைக் காட்டும் மகத்தான மானுட ஆவணம் அது. ஆகவே அது என்றும் இருக்கும். ருஷ்யப் புரட்சி வெறும் வரலாறாக ஆனப் பின்னரும் வாழும்.
அப்படி நோக்கினால் புரட்சி என்பது அந்நாவலுக்கு தேவையே இல்லை. அது அந்நாவலின் புனைவின் பின்னணி மட்டுமே. அந்த வாழ்க்கை நாடகம் நிகழும் அரங்கு மட்டுமே. அந்த படிமங்களை உருவாக்கும் வயல் மட்டுமே. அந்தப் பின்னணியை நாம் எப்படியும் கற்பனை செய்துக் கொள்ளலாம். இருநூறு முந்நூறு வருடங்கள் கழித்து உலகு தழுவிய ஒரு தொழில் நுட்பச் சிக்கலால் மானுட சமூகம் அதன் அடிப்படைகள் புரட்டப் பட்டு சவால்களைச் சந்திக்கும் என்றால் அந்தச் சித்திரத்தை நாம் டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலில் பொருத்தி வாசிக்க முடியும்
இப்படி சமகால யதார்த்தத்தில் இருந்து காலாதீத மானினுட யதார்த்தத்தை எழுதுவதற்கு எழுத்தாளனின் நேர்மையும், கலைத் திறனும் முக்கியமான காரணங்களாக அமைகின்றன. அவன் தன் சமகால யதார்த்தத்தை தன் கோப தாபங்களைக் கொண்டு, தன்னுடைய சொந்த லாபநஷ்ட கணக்குகளைக் கொண்டு புரிந்து கொண்டானென்றால் அவனால் அன்றாட யதார்த்தத்திற்குள் மட்டுமே நிற்க முடியும். அவன் தன் கற்பனையால் தன்னை, அந்தச் சமகால யதார்த்தத்தில் வாழும் எல்லா மனிதர்களாகவும் ஆக்கிக் கொண்டு, எல்லாருடைய வாழ்க்கையையும் வாழ்ந்து ஓர் ஒட்டு மொத்த நோக்கை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே அவனுடைய கலை காலாதீதமாகும்
அப்படி நிகழாமல் போனமைக்கும் ஷோலக்கோவே உதாரணம். அவரது ’உழுது புரட்டப் பட்ட கன்னி நிலம்’ [தமிழில் கன்னிநிலம்] நாவல் அப்படிப் பட்டது. புரட்சிக்குப் பின்னர் சோவியத் அரசால் உயர்ந்த பதவியில் அமர்த்தப் பட்ட ஷோலக்கோவ் சுய லாபத்துக்காகத் தான் கண்டவற்றை திரித்தும், மறைத்தும் எழுதிய பிரச்சார நாவல் அது. அதில் அந்த மகத்தான கலைஞனின் எல்லா கலைத் திறனும் உள்ளது, ஆனால் காலாதீதமாகச்செல்லும் இலக்கிய விவேகம் இல்லை.
தமிழில் புரட்சிகர இலக்கியம் என்பதும் வழக்கம்போல புதுமைப்பித்தனில் இருந்தே தொடங்குகிறது – பொன்னகரம். ஆனால் அதன் முதல்சரியான வடிவம் தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பஞ்சும்பசியும். போராட்ட இலக்கியம் என அதைச் சொல்லலாம். அதன்பின் அவ்வகையான எழுத்துக்களுக்கு ஒரு நீண்ட மரபு இங்கே உள்ளது. கெ.முத்தையா, ,கெ.டானியல், டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி
தவிர்க்கமுடியாதபடி வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை இவை. அதேசமயம் ஒற்றைப்படையான வாழ்க்கைநோக்கி காரணமாக கலைக்குறைபாடு கொண்டவை. சமீபத்திய உதாரணம் என்றால் இரா பாரதிநாதனின் தறியுடன்.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 15, 2011