அன்புள்ள ஜெயமோகன்,
காலச் சுவடு ஏற்பாடு செய்திருந்த அந்த கூட்டம் நடக்காமல் போனது வருத்தத்திற்குரியது. V. சூரியநாராயன் ஈழம் தொடர்பாக பல காலமாக ஒரு சமமான நிலையோடு எழுதி வருபவர். www.SouthAsiaAnalysis.Org வலைத்தளத்தில் அவரது பலக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். இலங்கைத் தொடர்பான UN Human Rights Report வெளிவந்ததில் இருந்து இந்த வலைத்தளம் தொடர்ச்சியாக ஈழப்படுகொலை மற்றும் தமிழர் நிலை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. இதற்கும் கூட சிலர் அந்த வலைத்தளத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டிருக்கிறார்கள் போல.
V.சூரியநாராயன் 2007இல் எழுதியதை இங்கு கொடுத்திருக்கிறேன்.
” While the Tigers, maddened with arrogance, have set themselves on the path of destruction, the government seems determined to follow the military option, which, even if successful, can lead only to the peace of the graveyard. The question is whether anyone can display the courage, vision, and strategic and tactical skills to navigate a just and sustainable political way out of this vicious cycle. ”
— The Hindu dated 21st December 2007
நன்றி,
சண்முகம்
அன்புள்ள சண்முகம்,
இந்த விஷயம் எப்படி இவர்களால் கையாளப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக உள்ள சுட்டி ஒன்றை எனக்கு ஒருவர் அனுப்பியிருந்தார்
இக்கூட்டத்திற்கு வருமாறு தொடர்ந்து கெஞ்சி வரும் தெலுங்கரும், எழுத்தாளருமான ஜெய பிரகாசம் என்கிற சூரிய தீபனும், மலையாளியான பிரியா தம்பி (இவர் கீற்று என்ற தமிழின விரோதப் போக்குடைய இணையத்தை நடத்தி வருபவர் – இவரின் கணவர் நந்தன் என்ற இரமேஷ் தான் ஆசிரியர் என பெயர் இருந்தாலும், நடத்துபவர் இந்த பிரியா தம்பி தான்) என்பவர்கள் தான் இக்கூட்டத்தின் சிறப்பு பேச்சாளர்கள். இன்னும் சில ஜால்ரா தமிழர்களின் பெயர்களும் உள்ளன. ஐ.நா.வின் அறிக்கைப் பற்றி ஒன்றும் தெரியாத இந்த ….. தான் பேரா. சூரிய நாராயணனோடு சேர்ந்து கொண்டு பார்ப்பனனின் காலச் சுவடு நிழலின் கீழ் உரையாற்றப் போகிறார்களாம். அதைத் தமிழர்கள் எல்லாம் கேட்க வேண்டுமாம்.
இன்னொமொரு செய்தி என்னவெனில், கொங்கு நாடு பக்கமுள்ள, தாராபுரத்திலிருந்து வந்துள்ள காலச் சுவடின் ஆசிரியரான தேவி பாரதியும் ஒரு தெலுங்கர் என்பது பெரும்பாலான தமிழர்களுக்கே தெரியாத செய்தி.
ஈழமே இந்த தெலுங்கர்களாலும், மலையாளிகளாலும் தான் ஒழிக்கப் பட்டது. இன்னும் இவனுகளாலே, தமிழ் நாடும் ஒழிந்து போகணும் போல….
இந்த வெறுப்புக் கக்கும் குறுகிய மனங்கள் தங்கள் செயல்பாடுகளின் விளைவுகளை ஈழத்தமிழர் தலைகளில் ஏற்றுகிறார்கள்.
இதில் எவ்வளவு நகைச்சுவை! தேவிபாரதி தெலுங்கர் அல்ல. [ஈ. வே. ராவும் வை. கோ வும் தெலுங்கர்கள் என்பதை இவர்கள் வசதியாக மறப்பார்கள்] கீற்று இணையத் தளம் தமிழின விரோதப் போக்கு உள்ளதாம். இந்திய விரோதப் பிரிவினைவாதப் போக்குள்ள இணையத் தளம் அது என்பது நான் அறிந்தது. போச்சுடா …
ஜெ
****
ஜெ,
இலங்கை (இன்னுமா ஈழம்?) ஒரு தரப்பின் காப்புரிமை போல் ஸ்வீகரிக்கப் பட்டது உண்மை தான் என்றாலும் அதற்கு மாற்றாக இந்துத் தரப்பாக திரள்வது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதா? உள் நாட்டில் நடைபெறும் ஏதாவது ஒரு விசயத்திலாவது இந்து என்ற வகையின் கீழ் திரட்டப் படுவது நடந்துள்ளதா? அப்படி ஓரளவிற்குத் திரட்டப் பட்ட ஒரே விசயம் ராம் ஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சனை தான். அப்பிரச்சனையே இன்று மீண்டும் பழைய உருக்கொள்ளாது. நிலைமை இவ்வாறிருக்க வெளி நாட்டுப் பிரச்சனை ஒட்டு மொத்த இந்தியாவைத் திரள வைப்பது என்பதும் அதுவும் போர் நடைபெற்ற குறுகிய காலத்தில் எப்படிச் சாத்தியம்? இந்த விசயத்தில் இலங்கை அரசு மதக் கண்ணோட்டதில் நடக்கவில்லை. ராஜபட்சே திருப்பதி வந்து சாமி கும்பிட்டு விட்டு சாய்பாபா பக்தராக இருக்கும் போதும் இந்துக்களை எப்படி அவருக்கு எதிராகத் திரட்டி இருக்க முடியும். சிவசேனா அப்படி முயன்றதே அதன் பலன் என்ன? ஒரு நாள் கடையடைப்பு .
இந்த விசயத்தில் இந்தியா ஒரு போதும் அடிப்படை நேர்மையுடனும், அறவுணர்வுடனும் கையாண்டதில்லை. அது ஈழத்திற்கு ஆதரவாக இருந்த போது குதுகலிப்பதும், எதிராக இருந்த போது கொந்தளிப்பதும் தான் தமிழீழ ஆதரவுக் காட்சிகள்/கட்சிகள். நமக்குக் கிடைத்தப் பதிலும் அவ்வாறே. நடந்த கொடூரங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப் படட்டும் போர் முடிந்தவுடன் இங்கிருந்து வேளாண்மை, தொழில் நுட்பம் குறித்துப் பயிற்றுவிக்க குழு போவதற்கு எதிர்ப்பு ? எதைச் சாதிக்க ? ராஜபட்சே இறந்தால் தான் இந்தத் தீட்டு மாறுமா ? இன்னொருவரும் அப்படி இருந்தால் அதுவரை தமிழ் மக்கள் புண்ணுக்கு மருந்து கூடப் போடக்கூடாதா? பாதுகாப்பு வேலிக்குள் இருந்த போது மனம் பதைத்தது உண்மை தான். ஆனால் உலகிலேயே அதிக கண்ணிவெடி புதைக்கப் பட்ட நிலத்தில் ஒரு கண்ணி வெடியும் வெடிக்காமல் மக்கள் மீள் குடியேற்றப் பட்டிருக்கின்றனர் என்ற உண்மையை நாம் மறந்து விட முடியாது. ராஜ பட்சேயும், அரசும் அதன் குற்றங்களுக்குத் தண்டிக்கப் படட்டும். மக்கள் மறு வாழ்வே தேவையான தீர்வு. அது மெல்ல உருவாகிக் கொண்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
மற்ற யாரையும் ஏற்றுக் கொள்ளாமல் தான் புலிகள் இழந்தனர். அவர்களை ஆதரிப்பவர்களும் அப்படியே யாரையும் உள்ளே விடுவதில்லை. அவர்களாலும் முடிவதில்லை.
பூபதி