கரசூர் பத்மபாரதி -கடிதங்கள்

கரசூர் பத்மபாரதி பற்றி….

அன்புள்ள ஜெ

கரசூர் பத்மபாரதிக்கு தமிழ் விக்கி- தூரன் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி. அவருடைய இரண்டு ஆய்வேடுகளையும் படித்துள்ளேன். முக்கியமான நூல்கள். மானுடவியலாளர் என்றுதான் அவரை அறிந்திருக்கிறேன். அவர் கசடதபற இதழ் பற்றியும் ஆய்வு செய்துள்ளார் என அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய தமிழ்விக்கி பக்கம் சிறப்பானது.

’நலம்’ சந்திரசேகர்

***

அன்புள்ள ஜெமோ

கரசூர் பத்மபாரதிக்கு அளிக்கப்பட்டுள்ள தமிழ்விக்கி தூரன் விருது சிறப்பானது. அவர் தமிழில் மிகத்தகுதி வாய்ந்த ஆய்வேடுகளை எழுதியவர். களஆய்வு புரிந்து ஆய்வேடு எழுதுவதொன்றும் எளிய செயல் அல்ல. கரசூர் பத்மபாரதியின் இரண்டு ஆய்வேடுகளையும் ஒட்டி தமிழில் பல நல்லநாவல்கள் எழுதப்படலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன.

கரசூர் பத்மபாரதிக்கு உரிய கல்வித்துறை பதவி இல்லை என எழுதியிருந்தீர்கள். இன்று மிகமிக ஊழல்மயமாகியிருப்பது உயர்கல்வித்துறைதான். இதைப்பற்றி பலரும் எழுதிவிட்டனர். பள்ளிக்கல்வியில்கூட ஆசிரியர்கள்தேர்வில் கொஞ்சம் தகுதி அடிப்படை உண்டு. கல்லூரி ஆசிரியர் வேலை என்பது ஏலம்போட்டு விற்கப்படுகிறது.  கல்லூரிகள் பெரும்பாலும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை. அவற்றுக்கு அரசு நிதியளிக்கிறது, ஆனால் கட்டுப்பாடு இல்லை.

கல்லூரி ஆசிரியர் தேர்வில் கையூட்டு ஒரு ஏற்கப்பட்ட வழக்கமாக ஆனபின்னர் நம் கல்லூரிப்படிப்பின் தரம் அதலபாதாளம் நோக்கிச் சென்றுவிட்டது. இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. நீண்டகால அளவில் நம் சமூகத்தின் அறிவுத்தகுதியையே பாதிக்கும் பிரச்சினை. இதை இங்கே எந்தக் கல்வியாளர்களும் எழுதுவதில்லை. எந்த அறிவுஜீவிகளும் பேசுவதுமில்லை.

எஸ்.கே

முந்தைய கட்டுரைசுஜாதா, கடிதம்
அடுத்த கட்டுரைஉலகின் மிகச்சிறந்த காதல்கதை – டெய்ஸி