ஜெயமோகன்,
மே 1, 2011ல் வெளியான அண்ணா ஹசாரே குறித்த உங்கள் தளத்தின் கேள்வி-பதில் சம்பந்தமாக (http://www.jeyamohan.in/?p=14738):
அண்ணா ஹசாரே குறித்த வசைகள் பற்றி பதிலளிக்கும் போது தமிழ் ஹிந்துவில் வெளியான ஒரு கட்டுரையைச் சுட்டுகிறீர்கள்.
அந்தக் கருத்தைப் படிக்கும் உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் கட்டுரை மட்டுமே தமிழ் ஹிந்துவின் நோக்கமாக, அதன் முகமாகத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்பு இருக்கிறது. உங்கள் நோக்கம் அதுவல்ல என்றாலும்.
ஏனெனில், அறிவீன ஜீவிகளின் பொய்மையை, அவர்கள் காந்தி குறித்து மெல்லும் உமியைப் பற்றி நீங்கள் பேசும் போது, பொதுத் தளத்தில் பேசப் படும் இந்தக் கட்டுரையையும் குறிப்பிடுகிறீர்கள்.
அந்தக் கட்டுரை தமிழ் ஹிந்துவில் இருக்கிறது என்பது உண்மையே. அதே சமயம், அந்தக் கட்டுரையை மறுதலிக்கும் கட்டுரைகளும், மறு மொழிகளும் அங்கு இருக்கின்றன.
உதாரணமாக, ஜன்லோக்பால் மசோதாவின் நோக்கம் மற்றும் செயல் பாடுகள் பற்றிய ஒரு கட்டுரையும் அதே தளத்தில் தான் காணக் கிடைக்கிறது. சுட்டி இதோ: http://www.tamilhindu.com/2011/04/lokpal_and_the_mute_jaya_dumb_karuna/
நன்றி.
இப்படிக்கு,
ஜெயமோகன் மற்றும் தமிழ் இந்து தள வாசகன்,
களிமிகு கணபதி
அண்ணா ஹஸாரெ, இடதுசாரி சந்தேகம்
********
அன்புள்ள ஜெயமோகன்
அண்ணா ஹசாரே இடதுசாரி சந்தேகம் தலைப்பில் நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. அதிலும் பிரகாஷ் கரத் பற்றிய குறிப்பு எனக்கு வியப்பளிக்கத் தக்கதாக இருந்தது. அப்பப்ப இடதுசாரிகளுக்கு இது போல் யாராவது விளக்கமளித்துக் கொண்டேயிருக்க வேண்டும். புத்தர்கள் புனிதர்கள் போல் பேசிக்கொண்டே மக்களின் புத்தியை மழுங்கடிக்கச் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை. பத்தொன்பது வயதில் பட்டாளத்தில் சேர்ந்து ராணுவச் சேவை செய்து விட்டு இன்று பொதுமக்கள் பிரதிநிதியாக போராடும் அண்ணா ஹசாரே அவர்களை விமர்சிக்கும் இவர்கள் பிரகாஷ் கரத் கடந்து வந்த குறுக்கு வழி குறித்து விமர்சிக்க வெட்கப் படுவார்கள்.
காலம் காலமாக இன்குலாப் விளித்து ஜிந்தாபாத் போட்டு தினம் தினம் நிர்வாகத்திடம் முட்டி மோதி சஸ்பென்ஷனும் வேலை நீக்கமும் கண்டு கட்சியை வளர்க்கும் அடிமட்ட காம்ரேட்களை கண்டு கொள்ள மாட்டார்கள், அம்போவென்று விட்டு விடுவார்கள்.
ஒவ்வொரு மேதின விழாவிலும் சிக்காகோவின் வீதியிலே இரத்தம் சிந்திய வீரர்களே என தவறாமல் கோஷம் போட்டு சென்னையில் மேதின ஊர்வலம் நடத்திய தோழர்.உ.ரா.வரதராஜனையும் அவர் தற்கொலை செய்து கொள்ளும் வரை கண்டு கொள்ளவில்லை.
ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்தாலும் முரட்டு காதியைத் தவிர வேறொன்றும் அணியாமல், மிகவும் எளிமையாக ஒரு நல்ல தொழிற் சங்கவாதியாக திகழ்ந்து கட்சிப் பணிக்காக தன் வேலையையும் ராஜிநாமா செய்து ஒரு உண்மையான கம்யூனிஸ்டாக வாழ்ந்து காட்டிய உ.ரா. வரதராஜனை மானசீக ரீதியில் சித்ரவதை செய்து தற்கொலை செய்ய வைத்து இன்று வசதியாக மறந்தது போல் நடிக்கும் இடதுசாரிகளுக்கு அண்ணா ஹஸாரெ குறித்து விமர்சிக்க எந்த ஒரு தகுதியும் கிடையாது.
உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் எனக் கூக்குரல் எழுப்பும் இடதுசாரிகள் அதிக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள், வங்கி, இன்சுரன்ஸ் ஊழியர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு தொழிற் சங்கம் தொடங்குவர். ஆனால் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் பணி புரிவோர், கட்டடத் தொழிலாளர், வீட்டு வேலை செய்வோர் போன்ற குறைந்த ஊதியம் பெறுவோருக்காக சங்கம் அமைக்க முன் வர மாட்டார்கள். காரணம் ஊதியம் குறைவாயிற்றே! ஆனால் வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் லட்டு போல் சந்தா பணம் வசூலாகுமே! ஒரு சில வருடங்களில் யூனியன் கணக்கில் கோடிரூபாய் சேர்ந்திடும்!
அது மட்டுமின்றி இந்த இடதுசாரிகள் ஒரு தொழிற் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் அமர்ந்து விட்டால் பிறகு அதிலிருந்து இறங்குவதென்பதே கிடையாது. சாகும் வரை விடாப்பிடியாக பதவியை கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது தான் கொள்கை. சென்னையில் இன்றும் ஐம்பது வருடங்களாக பதவியை விட்டுக் கொடுக்காத எண்பத்தைந்து வயதைக் கடந்த வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களை கண்கூடாகக் காணலாம். எல்லாம் பணம், புகழை அனுபவிக்கும் ஆசை. ஊழலை எதிர்த்து குரல் எழுப்பாமல் பொது நலவாதியான அண்ணா ஹசாரேவை நோக்கி அஸ்திரம் தொடுப்பது இடதுசாரிகளுக்கு ஒரு பொழுது போக்கு அவ்வளவு தான்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பார்கள். ஆயின் இன்றைக்கு இடதுசாரி ஐக்கியம் பேசும் பெரும்பாலானோரின் மக்கள் அமெரிக்காவில் தான் படிக்கிறார்கள் அல்லது வேலை பார்க்கிறார்கள். அமெரிக்க டாலர் இனிக்கும். ஆனால் அண்ணா ஹசாரே கசக்கும். இவர்களை திருத்தவே முடியாது திருந்தவும் மாட்டார்கள். இன்குலாப் ஜிந்தாபாத் !!!
லால் சலாம் !!!!
கெ.குப்பன்
சிங்கப்பூர்.