ஈழம்,கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

ஈழத் தமிழர்கள் குறித்த கவலை (ஈழப் படுகொலைகள், காலச்சுவடு)  இந்தியத் தமிழர்களுக்கு இல்லாமல் போனதற்கு நீங்கள் யூகித்துள்ள காரணம் சரியே. தனித் தமிழ்நாடு கோரும் பிரிவினைவாதிகளும், போலிப் பகுத்தறிவு பேசும் நாத்திகவாதிகளும், இந்தியா ஒரே நாடு என்பதை மறுத்துக் கொண்டே இருக்கும் குறுகிய கண்ணோட்டமுள்ள கும்பல்களும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கத் துவங்கிய போதே ஈழத் தமிழர் பிரச்னையிலிருந்து வெகுவான இந்தியத் தமிழர்கள் விலக ஆரம்பித்தார்கள்.

ஈழத் தமிழருக்காக வீராவேசமாக முழங்கிய பெருஞ்சித்திரனார், பழ.நெடுமாறன், கு.ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி (கவனிக்கவும்: இப்பட்டியலில் வீரமணியாரை சேர்க்கவில்லை) போன்றவர்கள் மட்டுமல்லாது ‘காலச்சுவடு’ போன்ற பத்திரிகைகளும் இதே தவறைச் செய்தன. இவர்களது இந்திய எதிர்ப்பு உணர்வு, பிராமண எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து மாறி இந்து எதிர்ப்பு உணர்வாகவும் வடிவம் பெற்றது. அதன் விளைவாக, இந்து என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து கிடைத்திருக்க வேண்டிய பிற மாநிலத்தவர்களின் ஆதரவையும் ஈழத் தமிழர்கள் இழந்தார்கள்.

ஈழத் தமிழருக்காக முழங்கிய கருணாநிதி, வைகோ, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் நாடக நடிகர்கள் என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் கண்டு கொண்டு விட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட அதிருப்தியும் இலங்கை வாழ் ஈழத் தமிழரையே பாதித்தது. போதாக்குறைக்கு ராஜீவ் படு கொலை (1991) தமிழக மக்களை முற்றிலும் ஈழத் தமிழர்களிடமிருந்து அந்நியப் படுத்தியது. அப்போதும் ராஜீவ் படு கொலையை சில ஆசாமிகள் நியாயப் படுத்திப் பேசி, ஈழத் தமிழரின் வேரில் வெந்நீர் ஊற்றினார்கள்.

நான் தனிப் பட்ட முறையில் இது குறித்து பழ.நெடுமாறன், மா.நன்னன் போன்றோரிடம் விவாதித்திருக்கிறேன். அப்போது ஈழத் தமிழரின் வாழ்க்கை மேம்பாட்டை விட அவர்கள் முக்கியமானதாகக் கருதியது, இந்திய ஒற்றுமை, இந்து மத உணர்வுக்கு எதிரான நிலைப்பாடு தான். நெடுமாறன் அவர்களிடம், ”ஈழத் தமிழர்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த இந்தியாவிலும் நீங்கள் ஆதரவை திரட்டலாமே?” என்று நான் (2000) கூறினேன். அப்போது, ‘’இந்து மதம் என்ற ஒன்றே இல்லாத போது அந்த கேள்வியே எழவில்லை’’ என்றார். நிதர்சனத்தை கண் மூடித்தனமாக எதிர்க்கும் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெற்ற பிரபாகரன் தவறான முடிவு எடுத்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

இலங்கை இனப் பிரச்னையில் மொழிப் பாகுபாடு மட்டுமல்லாது மதப் பாகுபாடும் பெரும் பங்கு (புத்தமத ஆதிக்கம்- இந்து மத பாதிப்பு) வகித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஈழத் தமிழருக்கு ஆதரவான அமைப்புகள் அனைத்தும் பகுத்தறிவு, நாத்திகவாதம், இந்து எதிர்ப்பு சிந்தனைகளில் ஊறியவையாக இருந்ததால், இந்து என்ற அடிப்படையிலான ஆதரவு இலங்கை வாழ் தமிழருக்கு தடுக்கப் பட்டு விட்டது. பெரும் தமிழறிஞர்கள் பலர் இந்த விவாதக் களத்திலிருந்து ஒதுங்கவும் இதுவே காரணமானது. ஈழத்திலும், தமிழகத்திலும் கலாச்சார வேர்களை மத அடிப்படையில் ஒன்றாகவே கொண்டிருந்தும், வாரியார், அ.ச.ஞானசம்பந்தம், தெ.ஞானசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமைதி காக்கவும் இதுவே காரணம்.

1984 ல் மதுரையில் நடந்த ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டில் பாஜக தலைவர் வாஜ்பாய் பேசி இருக்கிறார். ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழருக்கு நலம் விளையும் செயல்கள் மேற்கொள்ளப் படவில்லை; அதற்கான தூண்டுதலை அளிக்க தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு அமைப்புகளால் இயலவில்லை. இதற்கும் காரணம், இரு தரப்பிலும் நிலவிய சந்தேக மனப்பான்மை தான். எனினும் காங்கிரஸ் கட்சியை விட பாஜக மீது இலங்கை அரசுக்கு சிறிது பயம் இருந்தது;  2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக போரின் இறுதிக் கட்டத்தை இலங்கை ராணுவம் நிறுத்தி வைத்ததற்கு காரணம் இருந்தது.

இப்போதும் கூட, சீமான் மட்டுமே ஈழத் தமிழருக்காக பல அடக்கு முறைகளை மீறி பேசி வருகிறார். அவரும் இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு முலாமுடன் தான் இயங்குகிறார். இவ்வாறாக, தவறான நபர்களிடம் சிக்கிக் கொண்ட மேடையாக ஈழத் தமிழரின் வாழ்க்கைக்கான போராட்டங்கள் மாறி விட்டன. ஈழத் தமிழர் நல வாழ்வு என்பது தனி ஈழமாகவும் அதன் தொடர்ச்சி தனித் தமிழ்நாடு என்றும், எந்த விவேகமும் இன்றி பிதற்றிய அமைப்புகளே ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு வித்திட்டனர். இன்று புலம்பும் ‘காலச்சுவடு’ இதழும் இந்த திசையில் ஈழத் தமிழருக்கு துரோகம் இழைத்ததே. இதைச் சொன்னால், மதவாத முத்திரையுடன் பிற்போக்குவாதி பட்டமும் கிடைக்கும் என்பதால் பலரும் சொல்லத் தயங்குகின்றனர்.

மொத்தத்தில் ஈழத் தமிழருக்கான பாதுகாப்புக் கேடயமாக இருந்திருக்க வேண்டிய வாய்ப்பை தமிழகம் உதறிவிட்டது. இந்திய எதிர்ப்பாளர்கள் வசமிருந்த களத்தை தனதாக்கும் விவேகமும், வேகமும் இல்லாமல் வேடிக்கை பார்த்த தேசிய உணர்வுள்ள தமிழர்களுக்கும் இதில் பங்குண்டு. இப்போதும் நம்மை நம்பிக் காத்திருக்கும் அப்பாவி ஈழத் தமிழருக்காக சுய அகந்தையை விட்டுக் கொடுக்க யாரும் தயாரில்லை என்பதையே ‘காலச்சுவடு’ கருத்தரங்கிலிருந்து கழன்று கொண்ட அறிவுஜீவிகள் காட்டி இருக்கின்றனர்.

தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் எதிரான போரில் வேடிக்கை பார்ப்பவர்களும் அதர்மத்திற்கு துணை போவதாகவே பொருள் என்பது நமது நாட்டின் தத்துவம். இலங்கை வாழ் தமிழர்கள் தொடர்பான போரில் மட்டுமல்லாது விவாதத்திலும் கூட தமிழகம் நீதியுடன் செயல் படாமலே உள்ளது. தமிழன் என்று சொல்லவே அவமானப்பட வேண்டிய தருணம் இது.

வ.மு.முரளி

08.05.2011

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

ஈழ படுகொலைகளில் விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் மேல் இருந்த நம்பிக்கை போர் காலங்களிலேயே

அடியோடு அழிந்து விட்ட நிலையில், ஈழ தமிழர்களின் பெயரை வைத்தே இத்தனை ஆண்டுகள் அரசியல் நடத்திவரும்

சில அரசியல்வாதிகள் ஒட்டு மொத்தமாக அம்மக்கள் அழிந்த பிறகும்  இன்றும்  இறந்தவர்களின் சாம்பல் மேல் நின்று கொண்டு ஆடும் கீழ்தரமான அரசியல் எனக்கு மிகுந்த மனவேதனையை அழித்துள்ளது.  வெற்று  கூச்சலிடும் இவர்களைப் போன்றவர்களின் நிஜ முகத்தை அடையாளம் காட்டியமைக்கு நன்றி.

 

ஒரு தொழில் மீதுள்ள காப்புரிமைபோலவே இதை அவர்கள் காண்கிறார்கள்,”

‘ஈழமக்கள் அழிவதை எதற்காக பார்ப்பன இதழ் கண்டிக்கவேண்டும்?’”

ஈழத் தமிழர்களின் துரதிருஷ்டம் அவர்கள் கடந்த காலத்தில் இந்த மண் பொம்மைகளை பெரும் துணைகளாக நம்பியது. அவர்கள் அதற்கான விலையையும் கொடுத்துவிட்டார்கள்.

இப்போதே காலம் கடந்துவிட்டது. இன்றுவரை தமிழகத்தில் ஒன்றும் நிகழவில்லை. இனி இந்த விஷயம் இப்படியே மறக்கப் பட்டு விடும். தமிழ்ச் சமூகத்தின் எதையும் கவனிக்காத லௌகீக ஓட்டத்தில் இது ஒரு நினைவாகக் கூட எஞ்சப்போவதில்லை.

போன்ற வரிகள்  சில தினங்களுக்கு முன் படித்து தூக்கம் தொலைத்த

எங்கே இருக்கிறீர்கள்? போன்ற நினைவுகளையே எனக்குள் ஏற்படுத்தி இருக்கிறது

கார்த்திகேயன் .க

அன்புள்ள ஜெயமோகன்,

“தமிழீழம்” என்பது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டும் உரித்தான ஒரு சொல்லாகத்தான் நான் நினைக்கிறேன்.

80000 தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட போது கூட எங்கள் கார்பரேட் உலகத்தில் நாங்கள் பெரிதாக வருத்தப் படவோ, விவாதிக்கவோ இல்லை. ஐ.நா போர்க் குற்ற அறிக்கை வந்த போதும் விவாதிக்கவில்லை. காரணம் இந்திய அரசும் தமிழக அரசும் விடுத்த அறிக்கைகள் எந்த உணர்வையும் துண்டவில்லை.

இந்தியாவால் சிறீலங்காவின் சர்வாதிகாரிகளின் ஒரு தலை முடியை கூட பிடுங்க முடியாது என்பது உலகம் அறிந்த உண்மை. இந்தியாவில் தமிழகம் தவிர்த்து வேறு மாநிலங்களில் தமிழீழம் பற்றி யாராவது அறிவார்களா? காரணம் இந்திய அரசு.

இந்தியாவில் தனி மனித வாழ்க்கை முக்கியமானது அதை விடுத்து யாரும் தெருவில் இறங்கி போராட விரும்ப மாட்டார்கள். நீங்கள் அண்ணா ஹசாரேவின் “லோக் பால்” வெற்றியைய் இதோடு ஓப்பிட முடியாது. என்ன சட்டம் போட்டாலும் இந்தியாவில் ஊழலை அழிக்க முடியாது. லஞ்சம், ஊழல் எல்லாம் தனி மனித விருப்பம். இந்த செய்தியைப் படிக்கவும் (http://thatstamil.oneindia.in/news/2011/05/04/53-pc-youth-ready-paying-bribes-mtv-survey-aid0090.html) (“லோக் பால்” இந்திய அரசு சட்டமாக கொண்டுவர இன்னும் எத்தனை வருடம் ஆகும் என்று தெரியாது.) அண்ணா வை போல ஈழ பிரச்சினை சார்பாக யாராவது போராடினால் நான் வர மாட்டேன். வேறு மாநிலத்தில் இருந்தும் கூட யாரும் வர மாட்டார்கள் என்பது என் கணிப்பு.

இருபத்தைந்து வருடமாக ஈழ தமிழர்கள் சாவதை பார்த்தாகி விட்டது இன்னும் கொஞ்சம் மக்கள்தான் இருக்கிறார்கள் அவர்களும் சாவதை தவிர்க்க முடியாது.

இந்தியாவின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் எனில் ஈழ மக்களைப் பற்றி யாரும் பேச கூடாது. எல்லா தலைவர்களும்!? ஒரே மேடையில் கூடுவார்கள் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறாது. ஓட்டுக்கு காசு வாங்கும் தமிழக மக்களால் தமிழீழத்தை மீட்க முடியாது. அதனால் இதில் நேரம் செலவிடுவதை எல்லோரும் தவிர்க்கலாம்.எஞ்சிய ஈழ மக்கள் மனதை தவிக்க விடவேண்டாம், தனி ஈழம் ஆசைக்காட்டி!

என்றும் அன்புடன்,

சி.கார்த்திக்

அன்புள்ள ஜெயமோகன்

காலச்சுவடு நடத்த இருந்த விவாத அரங்கு ரத்து செய்யப் பட்டுள்ளது குறித்த உங்கள் கருத்து வாசித்து மிகவும் கவலை அடைந்தேன். நீங்கள் கூறுவது மிகவும் சரி. வைகோ நெடுமாறன் போன்றோரின் தவறான கணிப்புகளால் தான் விடுதலை புலிகள் அழிக்கப் பட்டார்கள். இதை  KP உம் உருத்திரகுமாரனும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறி விட்டார்கள். எமது உரிமை போரில் பங்காற்றிய ஒரு ஈழ தமிழனாக நான் வைகோவையும் நெடுமாறனையும் மன்றாடி கேட்பது, தயவு செய்து நீங்கள் எங்களுக்கு செய்தது காணும். இனியாவது பேசாமல் இருங்கள் . ஜெயமோகன் குறிபிட்டது போல் நீங்கள் வெறும் மண் பொம்மைகள் தான். தலைவர் வீர மரணம் அடைந்து விட்டார் என்று தெரிந்தும் தொடர்ந்து பொய் சொல்லும் பகட்டர்கள் நீங்கள். போதும் ஐயா போதும். ஜெயலலிதா வைகோவை புறம் தள்ளிய போது மிக மகிழ்ச்சி அடைந்தேன். ஓரங்கட்ட படட்டும் இந்த பகட்டு மனிதர்கள். காலச்சுவடு இந்த அரங்கைக் கட்டாயம் நடத்தியே ஆக வேண்டும். அது வரலாற்றுக் கடமை!

அன்புடன்

பிரகாஷ்

மெல்பேர்ன்

 

முந்தைய கட்டுரைமார்க்ஸியம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமே தினம் – கடிதங்கள்