ஆலந்தூர் மள்ளன் என்பவர் தமிழ் ஹிந்து இணையதளத்தில் கதைகள் எழுதி வருகிறார். இந்துத்துவ பிரச்சாரக் கதைகளாக இருந்தாலும் எல்லா கதைகளுக்கும் ஒரு உண்மையான தொன்மமோ, வரலாற்று அம்சமோ இருப்பதற்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். சரளமான மொழி இன்னும் கைகூடவில்லை. ஆனாலும் கதைகளுக்கு இயல்பான வாசிப்புத் தன்மையும் காட்சிப் படுத்தும் அழகும் கைகூடி வந்திருக்கிறது.
இந்தக் கதைகளில் ஒன்றுக்கு க்ருஷ்ண குமார் என்பவர் எழுதிய பின்னூட்டம்
ஸ்ரீ மள்ளன், தங்களது மற்றைய கதைகளை நான் வாசித்துள்ளேன். ஆனால் இக்கதையை திரும்பத் திரும்ப பல முறை வாசித்தேன். கிட்டத்தட்ட அந்த கால கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் தங்கள் பாணி சுவை ததும்ப இருந்தது.
இந்த சரித்திரமல்லாது திருப்பாணாழ்வார், கனகதாஸர் மற்றும் பலரது சரித்ரங்களில் மனுஷ்யன் ஸஹ மனுஷ்யனை சாரீர மற்றும் மானசீக ஹிம்ஸைக்கு உட்படுத்தியதை படிக்க நேருகிறது. அதே சமயம் நூலிழை போல் மற்றொரு பொதுவான மற்றும் முக்யமான அம்சமாக இந்த க்ரூர ஸ்வபாவம் தெய்வ சம்மதமில்லாதது மற்றும் அசுர ஸ்வபாவமானது என்றும் இப்படி ஹிம்சைக்குள்ளான குணசீலர்களான மனுஷ்யர்களை தெய்வமே தடுத்தாட் கொண்டு குணத்தைப் போற்றி குற்றங்களைக் களைந்து மனுஷ்ய குலத்தையே விழிப்புறச் செய்கிறது என்பதும் தெரிகிறது. ஆனால் விழிப்பிற்கு பிறகு தூக்கம் தொடர்கிறது. தங்களைப் போன்றோரின் எழுத்து அத்தூக்கத்தைக் கலைத்து விழிப்பை மீட்கும்.
திருமலையாழ்வாரையும், பிரானாழ்வாரையும் ஆட்கொண்ட பெருமாள் தங்களுக்கு நீண்ட ஆயுராரோக்யமளிக்க இறைஞ்சுகிறேன். லோகத்தை உத்தாரணம் செய்யத் தகுந்த குணசீலர்களான மனுஷ்யர்களின் வாழ்க்கையில் மிளிரும் ஆத்ம குணங்களான தயை, பரோபகாரம், சௌலப்யம், ஸஹிஷ்ணுதை போன்ற பரிணாமங்களை விவரிக்கும் வண்ணமாகவும் தங்கள் எழுத்து விஸ்தரிக்க வேண்டும் என விக்ஞாபித்துக்கொள்கிறேன்
இந்த க்ருஷ்ணகுமாரை மக்கள் தொலைக்காட்சியில் புளி தின்றது போல முகத்தை வைத்துக்கொண்டு பேசும் ‘முறைப்புத் தமிழர்’ மா.நன்னன் அவர்களுடன் உரையாட வைத்து ஒரு நல்ல நிகழ்ச்சியை தயாரிக்கலாமே? முன்பு யாகவா முனிவர், சிவசங்கர் பாபாவை சந்தித்தது போல குஜாலாக இருக்கும். சன் டிவிக்கு என் பரிந்துரை