பூன், இர்வைன் – அருண்

அன்புள்ள ஜெயமோகன்,

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் அம்மாவிடம் இரு கரங்களை நீட்டி உள்ளங்கையிலும் விரல் ஓரங்களிலும் ஆங்காங்கே காய்ந்து போன fevicol உரிந்து வருவது போல தோல்  உரிந்துவருவதை காண்பித்தேன். அம்மா நீ வளரப்போகிறாய் அதனால் தான் புதிய தோல் வருகிறது என்றார். அதன்பின் பலமுறை உள்ளங்கையில் தோல் உரிந்து வந்திருக்கிறது. எவ்வளவுதான் பழைய தோல் உரிந்து புதிய தோல் தோன்றினும் கைரேகை மாற்றமடைவதேயில்லை. பாம்புகள் புதிய சட்டையை அணிந்தபின் பழைய சட்டையை மெல்ல மெல்ல கைவிடுகின்றன. அதன்பின் திரை மூடிய மங்கிய பார்வை மறைந்து தெளிவு உண்டாகிறது. தன்னைத்தானே உரித்தெடுத்து புதியதாய், தூயதாய், மேலும் பொலிவுடன், புதுப்பாய்ச்சலுடன், முன்பைக்காட்டிலும் தீவிரமாய் மாறுகிறது. பூன் முகாமும் அப்படி ஒரு தருணம் தான்.

முகாமின் நிகழ்வுகளை அனைத்தையும் தொகுத்து எழுத முயலவில்லை, மனதில் தோன்றிய சில விஷயங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு இமயம் என்பது அறிந்த ஒன்றே. ஆனால் நேரில் சந்தித்தபோது தான் இமயத்தின் பிரம்மாண்டத்தை உணர முடிந்தது அதேவேளையில் நான் எந்த அளவு சிறியவன் என்றும் உணர்ந்தேன், நினைத்ததை காட்டிலும் சிறியவனாக.

பூன் முகாமில் களித்த ஒவ்வொரு காலத்துளியும் சிதறி வடிந்து மறைந்துவிடாமல் நினைவில் ஏற்றி தங்கு… தங்கு… வடிந்துவிடாதே என்று மூளை நரம்புகளை ஆணையிட்ட தருணம் பிறிதொன்றில்லை. கோடை காலங்களில் மாதம் ஒருமுறை வீட்டுக்குழாயில் வரும் பஞ்சாயத்து குடிநீரை அண்டா, குண்டா,  தொட்டி, தவலை, குடங்கள் என  பெரிய பாத்திரங்களில் நிரப்பிய பின்னரும் மனமடங்காமால் போதாது போதாது என்ற பதற்றத்துடன் வீட்டிலுள்ள ஜாடி, குவளைகள், டம்ளர், இட்லி பாத்திரம், போசி, டிபன் பாக்ஸ், என அடுமனையில் நிரப்பயேதுவான அனைத்திலும் நீரை நிரப்பி வைப்பதில் ஒரு மனநிம்மதி இருக்கத்தான் செய்கிறது.

ஒத்த ரசனையுள்ள நண்பர்கள் இவ்வளவு  பேரை ஒரேவேளையில் இதற்குமுன் சந்தித்ததில்லை. அமெரிக்கா முழுக்க எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது  கனவுபோல தோன்றுகிறது.

முகாமில் ராஜன் சோமசுந்தரம் காலை அமர்வின் தொடக்கத்தில் பாடிய கம்ப ராமாயணம் பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் அப்பாடல்  எனக்கு புரிந்தது தான். இதுவரை நான் கேட்டிராத ஒன்று. ராஜன் அப்பாடலை தெளிவாக விளக்கிய பின்னர் பாடலை பாடினார்.

வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்;
திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்;
உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்;
வெண்மை இல்லை, பல கேள்வி மேவலால்

ஏற்கனவே பலமுறை சில கம்பராமாயண வரிகள் கேட்டிருந்தாலும் கம்பராமாயணத்தை முழுவதும் வாசிக்க உந்துதல் ஏற்பட்டதில்லை. இப்பாடலில் உள்ள முரண், குறு நகை, கம்பரின் குறும்புத்தனம் என்னை ஈர்த்திருக்கலாம். அடுத்தடுத்து நடந்த பாலாஜிராஜுவின் கவிதையரங்கு, விசு மற்றும் செந்திலின் கம்பராமாயணம் அமர்வு கவிதையின் மேலும் கம்பராமாயணத்தின் மேலும் ஒளிபாய்ச்சி உந்தியது என்றே கூறுவேன்.

முன்பு தளத்தில் கவிதை பற்றிய கட்டுரைகள் வந்தால்  தவிர்த்துவிடுவேன், இப்போது வாசிக்கிறேன். கம்பராமாயணம் பாடலை எப்படி உச்சரித்து வாசிக்க வேண்டும் என்றும் கூட்டு வாசிப்பின் பயனையும் எடுத்துக்கூறி வலியுறுத்தினீர்கள். கவிதை அரங்கில் பாலாஜி ராஜு திரும்ப திரும்ப கவிதை வரிகளை வாசிக்க நேரும் போது மங்கலான உருவங்கள் கூட வடிவங்கள் எடுப்பதை உணர்தேன். கூட்டுக் கவிதை வாசிப்பு கவிதையின் நுண்மையும், ஆழத்தையும் அறியச் செய்யும், ஒவ்வொரு திரையை விலக்கி  உள் நுழையும் அனுபவம் தருமென்றே நினைக்கிறேன். நிலத்தை நீரால் ஊறவைத்து துளையிடுவது போல.

குழந்தை வளர்ப்பு பற்றி வெவ்வேறு வடிவங்களில் கேள்விகள் எழுந்தபோது. இறுதியாக இந்த பந்து இனிமேல் கண்ணில் படவே கூடாது என்று எண்ணியவராய் ஆடுகளத்திலிருந்து இறங்கி வந்து சுழன்று அடித்த அடியில் பந்து வீர் என்று மைதானத்தை விட்டு வெகுதொலைவில் சென்று மறைந்து. நீங்கள் ஆற்றிய அச்சிறு உரை,  பல முறை எழுதியிருந்தாலும் உரையை அங்கமர்ந்து கேட்ட அனைவரின் காதுகளில் என்றுமே எதிரொலிக்கும். சில வினாடிகளில் தத்துவத்தின் சாரத்தை பஞ்சுமிட்டாய் வைத்து புரியவைத்தீர்கள். தத்துவம் பற்றி பல கட்டுரைகள் வாசித்தாலும் எப்போதுமே ஒரு குழம்பிய நிலையில் தான் இருப்பேன். தத்துவ அமர்வுக்கு கிழக்கு மேற்கு தத்துவம்  பற்றிய ஆழமான எளிய ஆரம்பகட்ட புரிதலை உண்டுபண்ணியது, பெரிய திறப்பாக அமைந்திருந்தது. மேலும் தத்துவத்தை பயில, அதில் பயணிக்க வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இலக்கியம், ஈகோ, suspension of consciousness, life after death, ஊட்டி கதைகள், நான் உரையாற்றும்போது ஜெயின் இங்க இருக்கக் கூடாது என்று புன்னகையுடன் கூறிய அருண்மொழி நங்கை, செயலில் தீவிரத்தன்மை, படகு குழி புறம் கொண்ட யக்ஷி, இத்தியாதி என பூன் முகாமின் ஏதாவது ஒரு நினைவுத்துளிகளை சிறிதளவேனும் பருகுவது அன்றாடத்தின் ஒரு நிகழ்வாகவே அமைந்துவிட்டது.

***

இர்வைன் சந்திப்பு மனதிற்கு மிகவும் அணுக்கமான ஒன்று. ஸ்ரீராம் இச்சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தார். சந்திப்பிற்கு சான் டியாகோ’வில் இருந்து அப்பா, மனைவி, ஐந்து வயது மகனை உடன் அழைத்து வந்திருந்தேன். சில மாதங்கள் எங்களுடன் செலவிட அம்மா அப்பா இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்பா உங்கள் வாசகர் அதனால் தவறாமல் அழைத்து வந்திட்டேன். மனைவி புதிய வாசகி அறம் கதைகளை வாசித்து வருகிறார்.

ஜெ, ஒரு உரையில் கூறியிருப்பீர்கள் ‘சருகுகளால் சூழப்பட்ட விதை’ என்று. இவ்வாக்கியம் என் தந்தைக்கு பொருந்தும் என்றே நினைக்கிறேன். பொருளியல் வெற்றியடையாத எந்தவொரு வாசகனும் ஏளனத்திற்குரியவனாகிறான். வண்ணங்களற்ற நாட்களான அன்றாடத்தின் உலோகச்  சுவரை சிறு துளையிட்டு அத்துளையின் வாயிலாக வேற்றுலகை கண்டு தன் அகத்தில் நிரப்பி அதில் விடுதலை கண்டு திளைப்பவரை சருகுகளால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

“ஏன் பெரும்பாலான ஊர் பெயர் எல்லாம் பாளையம் என்று முடியும்படி வைத்திருக்கிறார்கள்?” என்று பேச்சை ஆரம்பித்தால் எந்த  உறவினர் தான் காது கொடுத்து கேட்பார்கள். எப்படி கடன் அடைப்பதென்றே தெரியல, பிள்ளைகளுக்கு வரன் அமையவே மாட்டிங்குது என்று சுவாரஸ்யமாகவும் பேசத் தெரியாது. அதனால் அப்பா தனிமையே விரும்புவார். பெரும்பாலான உரையாடல்கள் சிறுவர்களுடன் தான்.

என் தந்தை கோவையில் உள்ள  மில் தொழிற்சாலையில் சுமார் 30 ஆண்டுகாலகம் கடைநிலை ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். உடல் வேலை, வாரம் ஒருநாள் விடுப்பு, மாறி  மாறி வரும் பகல் இரவு ஷிப்ட். இளமையிலிருந்தே வாசிக்கும் பழக்கம் உடையவர் ஆரம்பத்தில் கல்கி, சாண்டில்யன், அகிலன் ஆகியோரின் படைப்புக்களை வாசித்திருக்கிறார். அதன்பின் வேறெந்த புனைவும் வாசிக்கவில்லை. எதையும் வாசிப்பார். காகித பொட்டலங்களை கூட வாசிக்காமல் கசக்கி எரிய மாட்டார். வரலாறு, யோகாசனம், சித்த மருத்துவம் சார்ந்த நூல்களை வாசிப்பார். ‘ஏம்பா கத புக்கு எல்லாம்  படிக்கமாட்டயா?’ என்றால் அதெல்லாம் சகிக்க முடியாது என்று கூறிவிட்டு அப்பால் சென்று விடுவார். இலக்கிய அறிமுகம் வாய்க்கப்பெறாத நல்ல வாசகர். பக்தியில் நாட்டம் இல்லை இருப்பினும் எந்த புராதன கோயில் சென்றாலும் கோவில் வரலாற்றை அறிந்துகொள்வதில் பெருமுனைப்பு உடையவர். இயல்பிலேயே வரலாற்று கோணத்தில் வைத்து எதையும் பார்ப்பார். கோவில் ஸ்தலபுராணம் நூலை வாங்கிவிட்டுத்தான் வீடு திரும்புவார். நாடார் தெய்வம், குலதெய்வ வழிபாடு, பெருந்தெய்வம் பற்றி நான் சிறுவனாக இருந்தபோது அப்பா விலக்கி கூறியது இன்றும் நிவிருக்கிறது.

உலகியல் சிக்கல்களால் வாசிப்பு குறைந்து வந்தது, ஒருகட்டத்தில் நின்றே விட்டது. எப்போவாவது நாளிதழ் மற்றும் சோ. இருக்கும் வரை துக்ளக். யோகாசனத்தில் தீவிரமான அர்ப்பணிப்பு கொண்டவர். சர்வாங்காசனம் முதல் மயிலாசனம் வரை அசால்டாக செய்து காட்டுவார். எனக்கு நினைவு தெரிந்தது முதல் அப்பாவால் கண்ணாடி அணியாமல்  வாசிக்க முடியாது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக கண்ணாடியே  அணிவதில்லை ஏன் என்று கேட்டால் யோகாசனம் செய்கிறேன் தானாக சரியாகிவிட்டது என்கிறார் (நிஜமாகவே கண்ணாடி அணிவதில்லை)

சரியாக சொல்லப்போனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் நான் உங்கள் படைப்புக்களை என் தந்தைக்கு அறிமுகப்படுத்தினேன். முதலில் விஷ்ணுபுரம் வாசிக்கும்  முன்  ஒரு தயக்கம், கதைகளே அவருக்கு பிடிப்பதில்லை. நான் கூறியதால் மட்டுமே வாசிக்கலானார்.  தங்குதடை இல்லாமல் வாசிதேவிட்டார். இதுதான் நாவல் என்றார். அடுத்து கொற்றவை, முதற்கனல், வண்ணக்கடல், மழைப்பாடல், 6 தரிசனம் இது போக இன்றைய காந்தி, இந்திய ஞானம், அருகர்களின் பாதை, காந்திக்கு பின் இந்தியா  1&2, இந்தியாவின் இருண்ட காலம், அ.கா.பெருமாளின் நாட்டாரியல் நூல்கள் இவையனைத்தும் வாசித்துவிட்டார். பின்தொடரும் நிழலின் குரல் வசித்து வருகிறார். அப்பா இப்போது தீவிரமான இலக்கிய வாசகர்.  தன் 62’வது வயதில் உங்களை கண்டடைந்திருக்கறார். இத்தனை ஆண்டுகாலம் ஜெயமோகன் என்ற ஆளுமையை அறியாமல் போனோமே என்ற ஏமாற்றம் உண்டு. தற்சமயம் கைபேசியில் இணையம் பயன்படுத்த கற்றுக்கொண்ட பின் உங்கள் தளத்தை தினமும்  வாசித்து வருகிறார். தளத்தில் உள்ள பல கட்டுரைகளை தேடித்தேடி வாசித்து வருகிறார்.

கோவையில் நீங்கள் ஆற்றிய  ஓஷோவின் உரையை மூன்று நாளும் தவறாமல் வந்து அமர்ந்து கேட்டிருக்கிறார். சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விழாவிற்கும் பார்வையாளராக வந்து அமர்ந்திருக்கிறார். பெரும்பாலும் அறுபதை கடந்தோர்  உடல் உபாதைகள், குடும்பம், கவலை, பக்தி என்று அவர்கள் சிறு வட்டத்திற்குள்  சுருங்கி ஒடிந்து உறைந்துவிடக்கூடும். என் தந்தை உறையாமல் இருப்பது உங்கள் எழுத்துக்களால் தான். அக உலகத்தை விரித்து எடுத்து அதில்  உரையாடல் நிகழ்த்தவும்  சிந்திக்கவும்,  கற்பனை செய்யவும்  கோருகிறது, அதற்கான கருவிகளையும் சமைத்துக்கொள்ள வழிவகுக்கிறது  உங்கள்  எழுத்து. அவர் உள்ளத்தில் புது பாய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்கூடு.

இப்படியிருக்க  அப்பா உங்களை இர்வைனில்  சந்தித்தது எனக்கு நெகிழ்வை தந்தது. அப்பாவுக்கோ குதூகலம், பரவசத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். எந்தப் புத்தகமானாலும் நேர்த்தியாக அட்டை போட்டு பாதுகாத்து வைப்பார், புக் மரக்குக்காக தாள்களை மடக்குவது அறவே பிடிக்காது. இர்வைன்  சந்திப்பின்போது தன்னுடைய ஒளிபுகும் அட்டைபோட்ட இரண்டு புத்தகங்களை உங்களிடம் கையெழுத்து வாங்க எடுத்துவந்தார். அட்டை கழன்று  வராதவாறு துண்டு பழுப்பு டேப் போட்டு ஒட்டி இருந்தது. நீங்கள் அப்புத்தகத்தை சில வினாடி புரட்டி அவருடைய பெயரை கேட்டு ‘அன்புள்ள அருணாசலத்திற்கு…’ என்று கையெழுத்து போட்டபோது அப்பாவின் உள்ளம்  சிறுவனைப்போல துள்ளிக் குதித்ததை அருகில் இருந்த  நான் உணர்ந்தேன்.

மகன் திகழ்வன், வயது ஐந்து. கிண்டர் கார்டன் செல்கிறான். அவனுக்கு உங்களை நன்றாகவே தெரியும். ஜெயமோகனை பார்க்க போகலாம் என்று சொன்னதும் மின்னல் வேகத்தில் புறப்பட்டுவிட்டான். சந்திப்பின்போது திகழ்வனை நீங்கள் மடியில் உட்க்காரவைத்தது, தூக்கி முத்தமிடும் போது எடுத்த புகைப்படம் குடும்ப பொக்கிஷமாக ஆகிவிட்டது. காரில் வீடு திரும்பும்போது ‘அப்பா, நானும் ஜெயமோகன் மாதிரி ரைட்டர் ஆகணும்’ என்றான் (தமிழ் நன்றாக பேசுவான்). சென்ற வாரம் மருத்துவமனை காத்திருப்பிருக்கையில்  அமர்ந்திருந்தபோது சட்டென்று ‘அப்பா ஜெயமோகன் எந்த வயசுல இருந்து எழுத ஆரம்பிச்சார்?’ என்றான். இன்னொருநாள் வீட்டிற்கு வந்த என் நண்பனிடம் தனிச்சையாக நான் ஜெயமோகன் மாதிரி ரைட்டர்  ஆகா போறேன், ஒன் பேஜ் ஸ்டோரி எல்லாம் எழுதிட்டு இருக்கேன்’ என்றான். நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

அன்புடன்,

அருண்

முந்தைய கட்டுரைகாடு, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி தூரன் விருது -கடிதங்கள்