கஸ்தூரிரங்கன் – கடிதங்கள்

அஞ்சலி,கி.கஸ்தூரி ரங்கன்

 

இவர் தான் ஆசிரியர் என வெகுநாள் தெரியாமல், கணையாழியை படித்து ரசித்தது உண்டு.

வளர்ந்து வரும் காலத்தில் ஆதவன் கதைகளை மிகவும் ரசித்தது உண்டு.
நாங்கள் பங்கேற்கும் ‘தியாக பாரதி’ என்கிற திவ்ய பிரபந்த பாடசாலையின் அமைப்பில் மிக முக்கியமான திருமதி. இந்து ரங்கனை வெகு நாளாகத் தெரியும். இவரது கணவர் தான் கஸ்தூரி ரங்கன் என்பதை வெகு சமீபமாகவே தெரிந்து கொண்டேன். ரஞ்சனி தான் கண்டு பிடித்தாள்.
அமைதியாக பணி புரிந்து, மிக மரியாதைக்கு உரியவராவர்.
அன்புடன்
முரளி
=====================================================
கஸ்தூரி ரங்கன் சாரின் மறைவு செய்தியுடன் இன்றைய பொழுது எனக்குத் தொடங்குகிறது. பெரிய துயரமாக இருக்கிறது.

தனிப்பட்ட முறையிலும் அவரை அறிந்தவள். இவர் தகப்பனாகவும், குருவாகவும் எவருக்கும் இருக்கலாம் என்ற எண்ணத்தை என்னில் ஏற்படுத்திய ஓர் அபூர்வ மனிதர். அடுத்தவரை சக மனிதராக எப்போதும் நடத்தியவர். கீதையில் வரும் ஸ்திதப் ப்ரஞ்னைப் படித்த போது நம்ம கஸ்தூரி ரங்கன் சார் என்று நினைவூட்டியவர்.

ரப்பரை திரு.என்.எஸ்.ஜெ என்னிடம் சிபாரிசு செய்து கொடுத்த போது (கணையாழிக்கு மதிப்பீடுக்கு 2 புத்தகங்கள் வரும்) ஒன்றும் சொல்லாதே……..முதலில் let her read and form her own opinion என்று கூறியது முதற் கொண்டு நினைவுகள் அலை அலையாக மோதுகிறது. டார்த்தீனியத்தைக் குறித்த விவாதம் கூட…………
கடந்த வருடம் இந்தியா வந்த போது சந்திக்க முடியாமல் போனது மேலும் துயரமாக உள்ளது.
இந்தக் கணமும் மாறும்……….எந்தக் கணத்தையும் போல!
உஷா.
-=============================
தற்செயலோ என்னமோ சாயங்காலம் நீயு புக் லாண்ட்ஸ், தி நகர்,  சென்றிருந்தேன். அங்கு ’கணையாழியை’ பார்த்தேன். பலரும் இவ்விதழைப் பற்றி உயர்வாய் பேசியிருப்பதைக் கேட்டுள்ளேனே தவிர படித்ததில்லை. இவ்விதழ் இப்பொழுது வருவதில்லை எனவும் கேள்விப் பட்டேன். திடீரெனப் பார்த்தவுடன் ஒரு குழப்பம். பிறகு அருகே சென்றவுடன் தான் தெரிந்தது, இது அந்த கணையாழிதான் என்று. நிறுவனர் கஸ்தூரி ரங்கன் என்று இருந்தது. மகிழ்ந்தேன். 

முதல் பக்கமே ஒரு கவிதை, உள்ளடக்கத்திர்கும் முன்னாக, ‘கை கொடுங்கள்’ என்ற தலைப்புடன். படித்தவுடன் கொஞ்சம் வருத்தம். இதே தொனியில் சில கவிதைகள் மற்றும் கோரிக்கைகளைக் கண்டுள்ளேன். கோரிக்கைகளில் எனக்கு ஒரு குறையும் தெரியவில்லை. ஆனால் இதில் ஒரு வித பயமும், பதட்டமும் தெரிகிறது. அதில் தான் ஒரு பெரிய வருத்தம். இது தமிழ் வாசகர்களின் தரத்தையும், போக்கையும் பிரதிபலிக்கிறது என்றே தோன்றுகிறது. ஏன் அறிவுசார் துறைகளிலுள்ளோருக்கு இந்த கதி? உயர்தர இதழை மற்றும் ஒரு முன்னோடி என்றெல்லாம் பலரும் எழுதியிருப்பதைப் படித்துள்ளேன். இதில் மாற்றுக் கருத்து இருக்குமா என்றே தெரியவில்லை. அப்படி இருந்தும் ஏன் இவ்விதழை மறுபடியும் துவங்கும் போதும் அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி மற்றும் எஸ்.ரா போன்றோர் இதில் எழுதும் பொழுதும் இந்த நிலை?

நேரடி தொடர்பு இல்லையென்றலும் ‘அறம்’ சிறுகதை நினைவுக்கு வந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் சிற்றிதழ்கள் என்ற ஒரு இனம் இருப்பதையும் அவற்றுள் சிலவற்றயும் எனக்கு அறிமுகப் படுத்திய நண்பனுடன் இதனைப் பகிர்ந்து கொண்டேன். பேசி முடித்து கம்ப்யூடரில் அமர்ந்தவுடன் இந்த செய்தி. மேலும் வருத்தமடைந்தேன்.

ஏப்ரல் மாதம் முதல் வெளிவர ஆரம்பித்துள்ளது கணையாழி. திரு மருது அவர்களுடைய ஓவியம் அட்டைப் படத்தில் வந்துள்ளது. இந்திரா பார்த்தசாரதி ‘கடைசிப்பக்கம்’ எழுதியுள்ளார். சா. க, எஸ். ரா உள்ளிட்டோர் சிறுகதைகளும், அசோகமித்ரன், அ அ மணவாளன், ஞானக் கூத்தன் உள்ளிட்டோர் கட்டுரைகளும் எழுதியுள்ளார்கள்.

விஜயராகவன்
=================================

 

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

என் நினைவாற்றல் பழுதில்லை என்றால், அசோகமித்திரனுக்கு முன்னராக, தி.ஜானகிராமன் ஆசிரியராக இருந்தார். அவர் பணி ஓய்வு பெற்ற பின்னர், தில்லியிலிருந்து திரும்பி வந்ததும், கணையாழியின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அச்சமயத்தில்தான் நளபாகம் தொடரையும் அதில் எழுதினார். (80-82 ஆகிய வருடங்களில் நானும் கொஞ்சம் எழுதியதுண்டு).
1982ஆம் ஆண்டும் நவம்பர் தீபாவளிக்குச் சற்று முன்னால், அவர் காலமான பிறகே, அசோகமித்திரன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார் என்று நினைக்கிறேன்.  மேலும், எனக்குத் தெரிந்தவரை, தி.ஜானகிராமன் ஆசிரியப் பொறுப்பில் இருந்த போதே அது இலக்கியப் பத்திரிகையாகத் தான் அறியப் பட்டிருந்தது.

நன்றி

எஸ்.சார்வபௌமன்
முந்தைய கட்டுரைமே தினம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைநமது சிற்றிதழ்கள் -கடிதங்கள்