கணையாழி சிற்றிதழை நிறுவி நடத்தி வந்த கி.கஸ்தூரி ரங்கன் இன்று காலை ஆறு மணி அளவில் காலமானார். 1933 ல் பிறந்தவர். புதுடில்லியில் 1961 முதல் இருபதாண்டுக் காலம் நியூயார்க் டைம்ஸின் நிருபராகப் பணியாற்றினார். சிறிது காலம் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். அவருக்கு என் அஞ்சலி.
டில்லியில் அறுபதுகளில் கஸ்தூரி ரங்கனை மையமாகக் கொண்டு ஒரு அறிவுஜீவிக் குழு உருவானது. க.நா.சுப்ரமணியம், ஆதவன், தி.ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, என்.எஸ்.ஜெகன்னாதன் போன்றவர்கள். இவர்களின் முயற்சியால் சென்னையில் இருந்து கணையாழி தொடங்கப் பட்டது. முதலில் அதை ஓர் அரசியல் விமர்சன இதழாகவே நடத்தி வந்தார்கள். ஆரம்பத்தில் தி.ஜானகிராமன் ஆசிரியராக இருந்தார். பின்பு அசோகமித்திரன் அதன் பொறுப்பாசிரியராக ஆனார். மெல்ல, மெல்ல கணையாழி இலக்கிய இதழாக பரிணாமம் கொண்டது.
ஆனந்த விகடன், கல்கி சலித்துப் போய் இன்னும் தீவிரமான இலக்கியத்தை தேடும் வாசகர்களுக்குரிய பாதையாக இருந்தது கணையாழி. தொடர்ச்சியாக பல வருடங்கள் வெளி வந்த சிற்றிதழ் இதுவே. ஆதவனின் என் பெயர் ராமசேஷன், காகித மலர்கள், ஜானகிராமனின் நளபாகம் போன்ற குறிப்பிடத் தக்க பல ஆக்கங்கள் அதில் வெளியாகின.
தமிழின் அனேகமாக எல்லா முக்கியமான எழுத்தாளர்களும் கணையாழி வழியாகவே அறியப் பட்டார்கள். ஸ்ரீரங்கம் எஸ். ஆர் என்ற பேரில் சுஜாதா எழுத ஆரம்பித்தது கணையாழியில் தான். நான் கணையாழியில் பல கதைகளை எழுதியிருக்கிறேன். கணையாழி நடத்திய தி. ஜானகிராமன் நினைவு குறுநாவல்போட்டியில் வெளியானவை தான் டார்த்தீனியம், கிளிக் காலம், அம்மன் மரம், பூமியின் முத்திரைகள் போன்ற கதைகள். எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, பாவண்ணன், சுப்ரபாரதிமணியன் போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் கணையாழியில் எழுதி அறியப் பட்டவர்கள்.
கணையாழி ஒரு இலக்கிய இயக்கம் என்றால் மிகையல்ல. அடிப்படையில் காந்திய நோக்குள்ளவரான கஸ்தூரி ரங்கனின் பொது நல விருப்பும், தீவிரமும் அர்ப்பணிப்புமே கணையாழியை எதிர்மறைச் சூழல்களில் அத்தனை பொருளிழப்புகள் இருந்தும் பிடிவாதமாக இவ்வளவு நாள் நீடிக்கச் செய்தது. தமிழுக்கு கணையாழி மூலம் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது . பின்னர் ஸ்வச்சித் என்ற காந்திய அமைப்பை தொடங்கி சமூக சேவை ஆற்றினார்.
கஸ்தூரி ரங்கன் கவிஞரும் கூட. சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் கவிதைகள் எழுதியிருக்கிறார். செல்லப்பா தொகுத்து வெளி வந்த புதுக் குரல்கள் என்ற தொகுதி தமிழ்ப் புதுக் கவிதையின் முதல் தொகுப்பு என்று சொல்லப் படுகிறது. அதில் கஸ்தூரி ரங்கனின் கவிதைகள் உள்ளன. மென்மையான அங்கதம் கொண்ட கவிதைகள் அவை.
நான் அடிக்கடி நினைவுகூரும், மேற்கோள் காட்டும் அவரது கவிதை
கடவுளும் கவர்மெண்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழி சேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்: காதுகள்.
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளும்; பதினாயிரம்
கேட்கும், பிடுங்கும்.
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மெண்ட் பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்ன்மெட்தான்.
[ஆகஸ்ட் 1965 ]