ஜக்கி

வணக்கம் ஜெ!

இன்று தற்செயலாக ஜக்கி வாசுதேவ் அவர்கள் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். அவரின் பேச்சிலிருந்து நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர் வேறு என்று தான் தோன்றுகிறது. அந்தப் பக்குவம் கவர்கிறது. அவர் சாவதானமாக உட்கார்ந்துகொண்டு மிகவும் எளிமையாகப் பேசும் போது, ஏற்றத் தாழ்வில்லாத ஒரு ஸ்தானத்திலிருந்து ஒத்த கருத்துள்ள ஒரு நண்பரிடம் விடயங்களைப் பகிர்ந்து கொள்வது போல் தோன்றுகிறது. எந்த ஜால வித்தையுமில்லாது, நடைமுறையை வைத்துப் பேசுவதும் குறிப்பிடத் தக்கது.

இந்தக் கட்டுரையை நீங்கள் 2008-இல் எழுதியிருக்கிறீர்கள். அங்கு பின்னூட்டத்தில் ஒருவர் உங்களிடம் கேட்ட அதே கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. நீங்கள் ஜக்கி வாசுதேவ் அவர்களைச் சந்தித்தீர்களா? இப்பொழுது உங்கள் நிலைப்பாடு என்ன?

எனக்குத் தெளிவு ஏற்பட வேண்டுமென்பதற்காக அல்ல, ஒரு கருத்துப் பரிமாற்றமாகவே இதை அறிய விரும்புகிறேன்.

ப்ரியா

அன்புள்ள ப்ரியா,

ஜக்கி வாசுதேவ் அவர்களை நான் சந்திக்கவில்லை. சந்திக்கும் எண்ணமும் இல்லை.

பொதுவாக அமைப்புகள் மேல் ஆழமான அவநம்பிக்கையுடன் இருக்கிறேன். அமைப்புகள் இல்லாமல் பெரிய அளவிலான செயல்களைச் செய்ய முடியாதென்பது ஓர் உண்மை. அமைப்புகள் அச்செயல்களை மெல்ல, மெல்ல நீர்க்கச் செய்கின்றன என்பது இன்னொரு உண்மை.

பொதுவாக இம்மாதிரி அமைப்பு சார் குருநாதர்கள், தனிப்பட்ட வாசிப்பும், தேடலும் கொண்டவர்களுக்கு பெரிதாக உதவுவதில்லை என்பது என் எண்ணம்

ஜக்கியை எனக்கு தெரியாது. ஆனால் அவரைப் பற்றி என்ன சொல்லப் படுகிறதோ அந்த நிலைகளில் இயல்பாக சர்வசாதாரணமாக இருக்கும் பலரை நான் அறிவேன்

ஜெ

முந்தைய கட்டுரைஈழம்-இருகடிதங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி,கி.கஸ்தூரி ரங்கன்