ஈழம்-இருகடிதங்கள்

வணக்கம் ஜெயமோகன்,

எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அதிகம் அலட்டிக் கொள்ளாமல் விடயத்திற்கு வருகிறேன். தங்களது “பிறந்த நாள்கட்டுரையைப் படித்து விட்டு, ஒரு சில மணி நேரங்கள் அது பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறை படித்து விட்டு, இதை எழுதுகிறேன்.

இந்த வரலாற்று வடு தாய்த் தமிழகத்திலும் தங்களைப் போலப் பலரை இந்த அளவிற்கு ஆளமாகப் பாதித்துப் பதிந்துள்ளதைப் பார்க்கும் போது, நாம் இன்னும் தனித்தவர்களல்லர் என்ற ஓர் மனத் திருப்தி!

ஐயா, ஒட்டு மொத்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் பொய்யாய் பழங்கதையாய் மாறி விட்டிருப்பதாக குறிப்பிட்டூள்ளீர்கள்! இல்லவே இல்லை! எமது மக்கள் பித்துப் பிடித்தது போலல்லவா திரிகிறார்கள்! ஈழத்திலும் சரி, புலம்பெயர் நாடுகளிலும் சரி, பல்லாயிரக் கணக்கான மக்கள் நடை பிணங்களாகத் திரிவது எப்படியோ தங்களுக்குத் தெரியாமல் போய் விட்டது போலும்

தற்பொழுதும் வெளி வந்து கொண்டிருக்கும் புகைப்பட, வீடியோ ஆதரங்களெலாம் இதயத்தைப் பிழிகின்றன. ஐ. நா வினது, பிந்திய அறிக்கையைப் படிக்கும் போது ஏதேதோவெல்லாம் செய்கின்றது! எனது நண்பனொருவன் மே 19 ற்குப் பிறகு ஒரு மாதிரியாகஅலைகின்றான். அவனது குடும்பம் அவனை எண்ணி வடிக்கும் கண்ணீர் சொல்லிலடங்காது!

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், வீட்டில் ஆளில்லாத போது, எனது அறையை மூடி விட்டு எமது சரித்திரப் பாடல்களையோ அல்லது வரலாற்று கொடிய வீடியோக்களையோ ஓட விட்டு கதறி அழுது எனது மனத்தை சமனிலைப் படுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றேன் நான்!

கடவுள், கோயிலெலாம் மே 19டன் முடிந்து விட்டது எங்களுக்கு!

ஒரு சிறு சாரார் தாங்கள் கூறுவது போல வேறு வழியில் தங்கள் பயணத்தைத் துவங்கி விட்டார்கள் என்பதுவும் மறுக்க முடியாத கசப்பான உண்மையே!

தயவு செய்து நேரம் கிடைப்பின் tamilcanadian.com என்ற இணையத் தளத்தைப் பாருங்கள். இன்றைய செய்திகளையும் பல ஆவணங்களையும் அவர்கள் எடுத்து வருகிறார்கள்! எல்லாத் தமிழர்களும் எமது இன அழிவை மறந்து, அதிலிருந்து மீண்டு விடவில்லை!

நன்றி,
சுதா பாலசுப்ரமணியம்

 

அன்புள்ள சுதா,

நன்றி

எனக்கும் பலரைத்தெரியும்.

ஆனால் ஈழத் தமிழர்கள் போர் முடிந்ததுமே உலகமெங்கும் சட்டென்று அடங்கி விட்டது. அதன் பிறகு சர்வதேச அளவில் செய்ய வேண்டிய எதையுமே செய்யாமல் நின்று விட்டது ஆழமான ஏமாற்றத்தை அளித்தது. அதை முன்னரே  விரிவாக எழுதியிருக்கிறேன்.

ஜெ

 

திருவாளர் ஜெ

உங்கள் உலோகம் நாவலை இணையத்திலே ஒரு புலி எதிர்ப்பு நாவல் என்று நிறைய எழுதியிருந்தனர். ஆதலால் அந்நாவலை தருவித்து வாசித்தேன். வாசித்தப் பின்பு அந்த இணைய தளங்களிலே போய் அதிலே எழுதியிருந்தவற்றை மீண்டும் வாசித்தேன். அந்த கட்டுரையை எழுதியவர் ஒரு பெண்மணி. அந்த அம்மையாருக்கு இலக்கிய அறிமுகம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு சாதாரண குடும்பத் தலைவி. வழக்கமாகக் கதைகளை வாசிப்பது போல வாசித்து மனதிலே பட்டதை எழுதியிருக்கிறார்கள். கீழே பதில் போட்டவர்கள் அதை வாசிக்கவில்லை. உங்களைப் பற்றி ஏதாவது வசை வந்தால் ஓடிப் போய் திட்டி பதிவு போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

உலோகம் மிகவும் தந்திரமாக எழுதப் பட்ட நாவல். நான் நீங்கள் எழுதிய கன்னியாகுமரி என்ற நாவலை வாசித்திருகிறேன். அது பூடகமாக எழுதப் பட்டது. உங்களுடைய சொந்த வாசகர்களுக்காக இம்மாதிரி பூடகமாக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். உலோகத்திலே நீங்கள் எந்த இயக்கத்தையும் சொல்லவில்லை. ஆனால் இயக்கத்தினரை ஊகிக்க வைக்கிறீர்கள். அதிலே புலிகள் எல்லாம் நுட்பமானவர்கள் என்றும் படித்தவர்கள் என்றும் தலைமைக்கு கட்டுப் பட்ட கொள்கை வீரர்கள் என்றும் சொல்கிறீர்கள். மற்றவர்கள் கூலிக்கு வேலை செய்கிறார்கள் என்றும் இந்திய அரசின் சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் சொல்கிறீர்கள்.

கடைசிக்கு முந்தைய வரி வரை வாசித்தால் மேலே சொன்னதை கவனிக்காமல் இந்த நாவலை ஒரு உளவியல் நாவல் என்று வாசித்து போகலாம். வன்முறை அமைப்பு எப்படி ஒரு மனிதனை வெறும் ஆயுதமாக ஆக்குகிறது என்று சொல்கிறீர்கள் என்று வாதிடலாம். வரலாற்றைப் பற்றிய பிரசங்கமெல்லாம் கூட இருக்கிறது. ஆனால் கடைசி வரி எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போடுகிறது. உங்கள் வாசகர்கள் தவிர வேறு பேர் அதை வாசிக்கப் போவது கிடையாது.

கதைநாயகன் ஒரு ஆயுதம், அவன் வெறும் உலோகம் என்று சொல்லிக் கொண்டே வருகிறீர்கள். அவன் கொலை செய்வதற்காக இயக்கத்தால் அனுப்பப் பட்டவன். அவனுக்கு அந்தத் திசை தவிர ஒன்றுமே தெரியாது. உத்தரவு கிடைத்தால் கொல்வான். அன்பு, பாசம், நன்றி எதுவுமே கிடையாது. இந்த அவலத்தைப் பற்றித் தான் நாவலிலே பேசுகிறீர்கள் என்று பாவனை செய்கிறீர்கள். ஆனால் அவனுக்குள் எவ்வளவு வெறுப்பும், கோபமும் இருக்கிறது என்று கடைசி வரி காட்டுகிறது. தனக்கு அடைக்கலம் கொடுத்து அன்பு காட்டியவரை சுட்டுக் கொன்று பிணத்தின் தலையை எட்டி உதைக்கிறான்.

அந்த அளவுக்கு வெறுப்புடன் வந்தவன் வெறும் உலோகம் கிடையாது என்று தான் கடைசி வரி காட்டுகிறது. அதை வைத்து மொத்த கதையையும் வாசித்தால் புரிகிறது. அவன் வெறுப்போடு தான் வந்திருக்கிறான். அவன் செய்யக் கூடிய கொலைகளும், பிற விஷயங்களும் எல்லாமே பெரிய வெறுப்புடன் செய்யப்படும் செயல்கள் தான். அந்த வெறுப்பு தான் அவனுடைய தனித்தன்மை. அவனுக்கு உதவி செய்பவர்களையும், அவனை நேசிப்பவர்களையும் எல்லாம் அவன் மனதுக்குள் கடுமையாக வெறுத்துக் கொண்டே இருக்கிறான்.

அந்த அளவுக்கு வெறுப்பு ஏன் வருகிறது? இவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒன்றுமே இல்லை. இவர்கள் வேறு இயக்கத்தை நம்புகிறார்கள். ஆகவே துரோகிகள். ஆகவே அவர்களை கொலை செய்ய வேண்டும். இந்த வெறுப்பு தான் புலிகளால் உருவாக்கப் பட்டது. அதன் மூலம் தான் சகோதரப் படுகொலைகள் நடந்தன. மாற்றுக் கருத்து கொண்டவர்களை எல்லாம் துரோகி என்று சொல்லி கொன்றார்கள். நீங்கள் அந்த மனநிலையை glorify செய்கிறீர்கள்.

நீங்கள் இந்த நாவலில் அப்படி துரோகி முத்திரை குத்தப் பட்டவர்களை நீங்களும் இழிவு செய்கிறீர்கள். அவர்கள் கோழைகள் என்றும் சதிகாரர்கள் என்றும் சொல்கிறீர்கள். அதன்பிறகு அவர்களை கொல்வதை நியாயப் படுத்தி நாவலை முடிக்கிறீர்கள். இந்த மனநிலைகளை இன்னும் கூட நம் மக்கள் சுமந்து கொண்டு அலைய வேண்டும் என்று சொல்கிறீர்கள் இல்லையா?

நீங்கள் பூடகமாக இழிவு செய்து எழுதியிருக்கும் அந்த தலைவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவரைப் பற்றி அப்படி துணிந்து எழுதக் கூடிய நீங்கள் ரத்தக் கண்ணீர் கவிதைகள் எழுதிய உங்கள் தலைவரைப் பற்றி ஒருவரி விமரிசனம் எழுதுவீர்களா? எழுதினால் நடமாட முடியுமா? அப்படியானால் ஜனநாயகத்தை மதித்தால் அவன் துரோகி, கொல்லப் பட வேண்டியவன், எட்டி மிதிக்கப் பட வேண்டியவன் இல்லையா?

எம்

 

அன்புள்ள எம்,

எனக்கு உங்கள் மன நிலையையும், உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த சகோதரச் சண்டை காலகட்டத்து கொந்தளிப்பில் இருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. உலோகம் உங்கள் இரு தரப்புக்கும் புரியாத இன்னொரு மனநிலையை ஆராய்கிற நாவல். நான் அறிந்த ஒரு மனிதரின் மனநிலையை.

ஜெ

 

முந்தைய கட்டுரைகதைகள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜக்கி