சார் நலமா?
கிழக்கில் ஆர்டர் செய்திருந்த உங்களுடைய புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை. கண்ணீரைப் பின் தொடர்தலும், அனுபவங்கள் அறிதல்கள் மட்டும் வந்தன. வந்தவுடனேயே அனுபவங்கள் அறிதல்களைப் படிக்கத் தொடங்கி விட்டேன். கேள்வி பதில்கள், கட்டுரை வடிவில் அமைந்துள்ளதால் படிக்க எளிதாக இருக்கிறது.
இலக்கியத்தைப் பற்றிய நித்யாவின் கருத்துக்கள் ஆச்சரியம் தருகின்றன (இலக்கியம் என்பது சொற்களையே அலகுகளாகக் கொண்டது. ஒலிக் குறிப்பான்களே சொற்கள். அவற்றின் மீது படிமங்கள் ஆடும் நிழல்வெளி). அது போலவே கவிதை குறித்த கருத்துக்களும். கவிதை என்பது ஒலியை அடிப்படையாகக் கொண்டது, நாம் அதிலிருந்து விலகி வந்து விட்டோம் என்று அவர் சொல்வதைப் பற்றிப் பொறுமையாக யோசித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு துறவி உலகத்தை விட்டு முழுவதும் விலகியிராமல், உலகைக் கூர்ந்து கவனிக்கும் போது, மற்றவர்களுக்கும் அவர் மூலம் பல புதிய தரிசனங்கள் கிடைக்கின்றன என்று நினைக்கிறேன். கண் தெரியாதவர்கள் உலகை அறிந்து கொள்ளும் விதம் பற்றி அவர் சொல்லியிருந்ததை உதாரணமாகச் சொல்லலாம்.
அவர் சொல்வதை முழுமையாகப் புரிந்து கொள்ளுமளவுக்கு எனக்கு அனுபவமோ, அறிவோ கிடையாது என்ற போதும், மீண்டும் பல முறை படிக்க வேண்டிய புத்தகம் இதுவென்று புரிகிறது.
– ஆனந்த் உன்னத்
அன்புள்ள ஆனந்த்,
நித்யா எப்போதுமே ஒரு திரைப்படம் பார்ப்பது போல வாழ்க்கையைப் பார்த்தவர். உள்ளே நுழைந்தவரல்ல. அந்தத் தெளிவு எப்போதும் அவரிடமுண்டு. அதை இலக்கியவாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் வணக்கம்!
மனிதன் அவமதிக்கப் படும் போது உலகையே அழிக்கத் துணிகிறான் என்பது அதர்வம் சிறுகதை வழியாக ஒரு விஷமாக இறங்கி வருகிறது. கதையைப் படிக்கும் வரை தற்கால அணுஆயுதங்கள் நினைவில் வந்து, வந்து போகின்றது. திரௌபதியின் பிறப்பையும், குணத்தையும் எழுதும் இடத்தில் வானையும், மண்ணையும் ஒரே வீச்சில் தொட்டு மனித குலம் முழுவதையும் உலுக்குவது போல் இருந்தது. அற்புதமான கதை!
நன்றி!
ஆர்.மாணிக்கவேல்
சவுதி அரேபியா
அன்புள்ள மாணிக்கவேல்
அதர்வம் ஒரு நிரந்தரமான மர்மத்தின் கதை. தல்ஸ்தொய் சொன்னார் அழகு என்பதும், நன்மை என்பதும் ஒன்றே என்று நினைப்பதே மனிதன் கொள்ளும் மாயைகளில் ஆகப் பெரியது என்று!
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்!
நான் சராசரி வார இதழ்களை மட்டும் படித்துகொண்டிருந்தேன். மெதுவாக எஸ்.ரா அறிமுகமானார். பின்பு ஒரு கேள்வி பதிலில் கமல் அவர்கள் உங்கள் நூலை பற்றி சொன்னார் (இன்றைய காந்தி). நானும் மெதுவாக உங்களுடைய ஆயிரங்கால் மண்டபம், பனிமனிதன், நிழல்வெளிக் கதைகள் மற்றும் கண்ணீரை பின்தொடர்தல் படித்தேன்.
உங்கள் எழுத்தின் மேல் நிறைய ஈடுபாடு வந்தது. தொடர்ந்து உங்களுடைய இணைய தளத்தை படிக்கிறேன். எனக்கு கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் போன்ற நூல்களைப் படித்திருக்கிறேன் ஆனால் கண்ணீரை பின் தொடர்தல் படித்த பொழுது நீங்கள் கல்கியின் வரலாற்று நூல்கள் அனைத்தும் ஐதிக முறைப் படி உள்ளது என்றும் இலக்கிய முறைப் படி இல்லை என்றும் சொல்லி இருந்தீர்கள். நான் ஒரு ஆரம்பகால வாசகன் எனக்கு புரியும்படி தயவு கூர்ந்து சொல்லுங்கள் – இலக்கியத்தின் வரையறை என்ன ?
(உங்களுடைய பார்வையில் நீங்கள் சொன்ன மீசான் கற்கள் படித்துகொண்டிருக்கிறேன்) என்னால்வேறு படுத்திப் பார்க்கத் தெரியவில்லை. வைக்கம் முகமது பஷீரின் இளம் பருவத்து தோழியும் படித்தேன்.
இது என்னுடைய முதல் கடிதம் ஆதலால் நிறைய உங்களிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் வார்த்தைகள் வரவில்லை, என்னுடைய கடிதத்தில் எதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்
அன்புடன்
மகேஷ்தேஜா
அன்புள்ள மகேஷ் தேஜா,
ஒரு இளம் வாசகனுக்கு தேவையான எல்லா பதில்களும், தகவல்களும், விவாதங்களும் அடங்கியது நான் எழுதிய ‘நவீன தமிழிலக்கிய அறிமுகம்’ கிழக்கு பிரசுரம்.
என் இணைய தளத்தில் பழைய கட்டுரைகளில் நிறைய விளக்கங்கள் உள்ளன.
ஜெ