ஒரு முறை நான் சென்னையில் ஒரு விடுதியில் இருந்தேன். என்னுடன் பல நண்பர்கள் இருந்தனர். நான் தங்கும் விடுதிகள் ஒருவகை இலக்கியச் சந்திப்புகளாக ஆகிவிடுபவை. நட்சத்திர விடுதிகளில் விருந்தினர்களை அனுமதிப்பதில் நிபந்தனைகள் உண்டு, நான் அவற்றில் வீடு போல நாட்கணக்கில் தங்குபவன் என்பதனால் கேட்க மாட்டார்கள்.
ஏதோ ஒன்றுக்காக அஜிதனை அழைத்தேன். “எங்கடா இருக்கே?” என்றேன்.
அவன் ஆந்திராவில் ஏதோ சிற்றூரில் இருந்து ஏதோ பழைய கோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான்.
பேசி முடித்து உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு நண்பர் கேட்டார். “ஏன் சார், பையன் எந்த ஊர்லே இருக்கான்னு கேட்டுட்டு ஃபோன் பேச்சை ஆரம்பிக்கிறீங்க? அவன் எங்க இருப்பான்னு தெரியாதா?” அவர் எங்கள் கும்பலுக்கு புதியவர். இன்னொரு நண்பருடன் வந்தவர்.
“எப்டி தெரியும்? அவன் எங்க வேணுமானாலும் இருப்பான்”
“போறதுக்கு முந்தி சொல்லிக்கிடறதில்லியா?”
“இல்லியே”
“நீங்க கேக்க மாட்டீங்களா?”
“இல்ல, ஏன்?”
அவர் எனக்கு பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும், இல்லையேல் எப்படி அவர்கள் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது என்று விரிவாக விளக்கினார்.
நான் கேட்டேன். “எல்லாத்தையும் கேட்டு, சரியா ஆலோசனை சொன்னா மட்டும் கெட்டுப்போக வாய்ப்பில்லியா?”
அவர் “அப்டி இல்லை…” என இழுத்தார்.
நான் சொன்னேன். ”நம்மாலே நம்மோட அடுத்த தலைமுறையை கட்டுப்படுத்த முடியாது. வழிநடத்தவும் முடியாது. அவங்களோட உலகம் என்னதுன்னே நமக்கு தெரியாது. அவங்களோட சிக்கல்கள் என்ன, அவங்களோட சவால்கள் என்ன, ஒண்ணுமே புரியாது. நம்ம உலகத்திலே, நம்ம வாழ்க்கையிலே இருந்து நாம கத்துக்கிட்டதை வைச்சு அவங்களோட வாழ்க்கையை நாம தீர்மானிக்க முடியாது”
நண்பர் கொஞ்சம் சீற்றம் கொண்டார். “என்னோட பையனுங்க ரெண்டுபேருக்கும் எல்லாமே நான்தான் சொல்லிக்குடுக்கறேன். நான் சொன்னபடியே செஞ்சு இப்ப நல்லா இருக்காங்க… ”
“பெரும்பாலும் அப்டித்தான் இருப்பாங்க சார். அதைத்தான் ஸ்டேண்டேர்ட் ஆவரேஜ்னு சொல்றோம்… அவங்க உண்மையிலே நாம சொல்ற பாதையிலே போகலை. எல்லாரும் போகிற பாதையிலே அப்டியே போறாங்க. நாம அவங்களுக்குச் சொல்றதும் எல்லாரும் போகிற பாதையிலே போகத்தான் என்கிறதனாலே அது நமக்கு சரியா இருக்கு. அப்டி இருந்தா உண்மையிலே ரொம்ப நல்லது. ஆனா சிலபேரு அவங்களோட வழிய அவங்களே தேடிக்குவாங்க. அவங்களுக்கான நோக்கமும் வழியும் வேறயா இருக்கும். அப்ப நாம ஒண்ணும் சொல்ல முடியாது”
“ஆனா ரிஸ்க் இருக்குல்ல?”
“ஆமா, ஆனா விலகி நடக்கிறவங்க ரிஸ்க் எடுக்கத்தான் வேணும். அது அவனோட ரிஸ்க். நானும் அதே ரிஸ்க் எடுத்தவன்தான்”
“அவன் ஜெயிச்சா பெருமைப்பட்டுக்கலாம்… தோத்துட்டா…”
“தோத்துட்டா அவன் தோல்வி அது. நான் ஏன் அதுக்கு பொறுப்பேத்துக்கிடணும்? நான் செய்யவேண்டியதைச் சரியாச் செஞ்சா நான் எதுக்கு கவலைப்படணும்?”
அவருக்கு நான் சொல்வது புரிபடவில்லை. மேலும் நெடுநேரம் பிள்ளைகளின் வாழ்க்கையை ‘ரிஸ்க்’ இல்லாமலாக்கி, அவர்களை சமூகத்தின் முன்னிலைக்குக் கொண்டுவருவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். நல்ல பள்ளியில், நல்ல கல்லூரியில் படிக்க வைப்பது. அதன் பின் நல்ல வேலைக்கு செல்லவைப்பது. நல்ல பெண்ணைப்பார்த்து கட்டிவைப்பது. அதன்பின் அவர்களின் குடும்பவாழ்க்கையில் ஒரு கண் வைத்திருப்பது.
“அப்டி எல்லாம் சரியா இருந்தா நல்லது சார். நீங்க லக்கி மேன்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
உண்மையில் என்னிடம் பேசும் என் நண்பர்களில் கணிசமானவர்கள் தங்கள் பிள்ளைகள், பெண்களின் ‘தனி வழி’ பற்றித்தான் பதற்றமும் பயமுமாகச் சொல்வார்கள். “என்ன ஆகப்போறாங்கன்னே தெரியல்ல சார். என்ன பண்றதுன்னே தெரியல்லை”.
நான் என்னுடைய சொந்த பதற்றத்தையும் பயத்தையும் சொன்னால் அவர்கள் கொஞ்சம் ஆறுதலடைவார்கள்.
என் அப்பா அவருடைய கிராமத்தில் இருந்து மதுரை வரை வேலைக்குப்போன முதல் ஆள். அது அன்று ஒரு பெரிய மீறல். என் தலைமுறையில் சரமாரியாக வெளிநாடு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இன்று உலகமே ஒரு கிராமம் ஆகிவிட்டது. நான் இளமையில் ஸ்பான் இதழில் பார்த்து வாய்பிளந்த உலகநிலப்பரப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு நானே சென்றுவந்துவிட்டேன்.
இன்றைய தலைமுறையின் வாய்ப்புகள் உலகளாவியவை. சவால்களும் உலகளாவியவை. என் தலைமுறையில் ‘வேலை கிடைத்து கல்யாணம் ஆகி செட்டில் ஆவது’ வாழ்க்கையின் பெரிய சவால். அதை அடைந்தவன் வாழ்க்கையில் வென்றவன்.
இப்போதுகூட என் தலைமுறை அப்பாக்கள் ரயிலில் பேசிக்கொள்ளும்போது “மூத்த பையன் அமெரிக்காவிலே செட்டில் ஆய்ட்டான் சார். இன்னொரு பையன் மும்பையிலே செட்டில் ஆய்ட்டான்” என மனநிறைவுடன் சொல்வதைக் கேட்கிறேன்.
ஆனால் இளைஞர்களில் கணிசமான ஒரு சிறுபான்மையினர் அப்படி ஒரு வேலை, ஒரு குடும்பம் என ‘செட்டில்’ ஆவதை வாழ்க்கையின் நிறைவாக நினைப்பதில்லை. அது ஒரு தோல்வி என நினைக்கிறார்கள். தங்களுக்குரிய தனிப்பட்ட சாதனை வேண்டும் என நினைக்கிறார்கள். தங்களுக்குரிய தனி மகிழ்ச்சிகளை நாடுகிறார்கள்.
என் தலைமுறையில் ‘பிரச்சினைகள் இல்லாமல்’ வாழ்வது சிறந்த வாழ்வென கொள்ளப்பட்டது. ’நிம்மதியான லைஃப்’ என்று சொல்லிக்கொள்வோம். ஆகவே அரசுவேலை மிக விரும்பப்பட்டது. உட்கார்ந்தால் அப்படியே ஓய்வு பெறவேண்டியதுதான். நான் உட்கார்ந்தேன், ஆனால் தவித்துக்கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் விடுபட்டுவிட்டேன்.
இன்றைக்கு அந்த வாழ்க்கையை தொடக்கத்திலேயே ‘போர்’ என தூக்கி வீசிவிடுகிறார்கள். அரசுவேலைகளில் இருந்து இளைஞர்கள் சர்வசாதாரணமாக ராஜினாமா செய்கிறார்கள். வெற்றிகரமான வேலையில் இருந்து ‘சேலஞ்சே இல்ல’ என்று சொல்லி உதறிச் செய்கிறார்கள்.
கணிப்பொறித்துறையில் மேலாளராக இருக்கும் என் நண்பர் சொன்னார், இளைஞர்கள் வேலையை விட்டுப்போவது மிகச்சாதாரணமாக இருக்கிறது. இரண்டு ஆண்டு வாழவேண்டிய ஊதியத்தை ஈட்டிவிட்டால் இரண்டு ஆண்டுகள் புதியதாக எதையாவது செய்யலாம் என நினைக்கிறார்கள். கிளம்பி தாய்லாந்து வழியாக சிங்கப்பூர் சென்று இப்போது இந்தோனேசியாவில் இருக்கிறார் என் வாசகரான ஓர் இளைஞர். லடாக்கில் பௌத்த மடாலயத்தில் ஒன்பது மாதமாக இருந்துகொண்டிருக்கிறார் இன்னொருவர்.
எனக்கு தெரிந்த இளம் நண்பர் ஸ்டாலின் பாலுச்சாமி என்பவர் கணிப்பொறி வேலையை விட்டுவிட்டு கருப்பட்டி கடலைமிட்டாய் செய்யும் தொழிலை தொடங்கினார். அவருடைய அண்ணா வினோத் பாலுச்சாமி வேலையைவிட்டு ஊர் ஊராகச் சென்று புகைப்படம் எடுக்கிறார். இன்னொரு இளம்நண்பர் சிவகுருநாதன் வேலையை உதறிவிட்டு கைத்தறி நெசவு தொழிலை ஆரம்பித்து நூற்பு என்னும் பிராண்ட் தொடங்கினார். மதுமஞ்சரி என்னும் இளம்பெண் கிராமக்கிணறுகளை தூர்வாரி புதுப்பிக்கும் இயக்கம் ஒன்றை தொடங்கினார். அப்படி நூறு இளைஞர்களை என்னால் சுட்டிக்காட்டமுடியும்.
இவர்களை என் தலைமுறை அப்பாக்கள் திகைப்புடன் பார்க்கிறார்கள். “அதான் உக்காந்தாச்சே, அப்டியே செட்டில் ஆகவேண்டியதுதானே?” என்கிறார்கள். “சிலராலே அப்டி செட்டில் ஆகமுடியாது” என்பதே அதற்குப் பதில். ’செட்டில்’ ஆகமுடிபவர்கள் ’செட்டில்’ ஆகட்டும். அவர்களே பெரும்பான்மை. பெருவழியே பெரும்பாலானவர்களுக்கு உகந்தது. பொதுச்சமூகப் பார்வையில் அவர்களே ‘நார்மல்’ ஆனவர்கள். அவர்களே ‘வெற்றி’ அடைந்தவர்கள்.
ஆனால் ’செட்டில்’ ஆகமுடியாதவர்களிடம் தந்தையரான நாம் அவர்களைச் சுட்டிக்காட்டி பெரும்பான்மையினர் போல நீயும் இருப்பதற்கென்ன என்று கேட்கக்கூடாது. நாம் வாழும் காலம் கொஞ்சம் பழையது.
சென்ற தலைமுறையிலும் இதேபோல தேடலும், சாதனைவேட்கையும் கொண்டவர்கள் இருந்தனர். ஆனால் அவர்களிடம் துணிவு இருக்கவில்லை. அதற்கான பொருளியல் சூழலே அன்று இல்லை. கடுமையான வேலையில்லா திண்டாட்டம் அன்றிருந்தது. அதில் போராடி முண்டியடித்து ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டவர்கள் நாம். அந்த பயம் நமக்குள் என்றும் உண்டு.
பட்டினி கிடந்தவர்களுக்கு சாப்பாடு பற்றி ஒரு பதற்றம் எப்போதுமிருக்கும். உணவு தீர்ந்துவிடும், கிடைக்காமலாகிவிடும் என அகம் பரிதவிக்கும். எத்தனை பணம் வந்து, எவ்வளவு பெரியவரானாலும். அது நம் உளநிலை. இன்றைய தலைமுறை இளமையிலேயே வேண்டியதை பெற்று வளர்கிறது. ஒவ்வொரு வழியிலும் பல வாய்ப்புகளுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறது. அவர்களிடம் அந்தப் பதற்றம் இருப்பதில்லை. நாம் நம் பதற்றத்தை அவர்களுக்கு ஊட்டினால் அவர்களுக்கு அது சென்று சேர்வதில்லை.
அத்துடன் சென்ற தலைமுறையில் பெரும்பாலானவர்களிடம் குடும்பப்பொறுப்பும் இருந்தது. அப்பா அம்மாக்களை கவனிக்கவேண்டும். தம்பிகளை கரையேற்றவேண்டும். தங்கைகளை கட்டிக்கொடுக்கவேண்டும். என் மாமனார் , அருண்மொழியின் அப்பா சற்குணம் பிள்ளை அவர்களின் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கிறேன். அசாதாரணமான அறிவுத்திறனும் வாசிப்பும் கொண்டவர். ஆனால் அவர் தன் நான்கு தங்கைகளையும் மனைவியின் மூன்று தங்கைகளையும் கட்டிக்கொடுத்தார். கடன்களை அடைத்ததும் கிழவனாகிவிட்டார்.அவ்வளவுதான் அன்றைய வாழ்க்கை.
இன்றைய தலைமுறையில் அந்தச் சுமைகளே இல்லை. இன்று முதியவர்கள் தாங்களே தங்களை சார்ந்து வாழ்கிறார்கள். எவருக்கும் பெரிதாக எதுவும் செய்யவேண்டியதில்லை. ஆகவே இளைஞர்கள் அவர்களின் கனவுகளை துரத்த முடிகிறது.
ஆகவே பதற்றம் வேண்டாம் என நானே எனக்குச் சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களிடமும் சொல்கிறேன்.ஆனால் நாம் செய்வதற்கு ஒன்று உள்ளது. எந்நிலையிலும் நம் மகன்களிடமும் மகள்களிடமும் நம்முடைய உரையாடல் அறுந்துவிடலாகாது. அவர்கள் எதையும் நம்மிடம் சொல்லும் சூழல் இருக்கவேண்டும்.
அதற்கு முதல் தடை என்பது ஓயாத அறிவுரைகளாலும் கண்டனங்களாலும் நாம் அவர்களுக்கு சலிப்பூட்டுபவர்களாக ஆகாமலிருப்பது. இளைஞர்களின் உலகம் நம்பிக்கையும், கனவுகளும் கொண்டது. தந்தையரின் உலகம் முற்றிலும் வேறு. நம் பதற்றங்களையும் கவலைகளையும் அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தால் அவர்கள் நம்மை தவிர்க்காமல் இருக்கவே முடியாது. யோசித்துப் பாருங்கள் நம்மிடம் எவராவது பார்க்கும்போதெல்லாம் ஆலோசனைகளும் அறிவுரைகளும் சொன்னால் நாம் என்ன செய்வோம்?
விடுதியில் என்னிடம் பேசிய நண்பர் சொன்னார். “அவன் எங்க இருக்கான்னு தெரியாம இருக்கீங்க சார்… தப்பா போய்ட்டான்னா?”
“தப்பா நிஜம்மாவே போனா நாம அதை தெரிஞ்சுக்கிடவே முடியாது… நாம அவங்க உலகத்திலே இல்ல” என்று நான் சொன்னேன். “ஆனா என் மகனைப் பற்றி எனக்கு தெரியும். இருபத்தெட்டு வருசமா அவனை பாத்திட்டிருக்கேன். அவன் என்ன சிந்திப்பான்னே எனக்கு தெரியும்… அவன் தப்பான பழக்கங்களுக்கும் போகமாட்டான். ஆடம்பரங்களுக்குள்ளையும் போகமாட்டான்… அவனோட தேடல், அலைக்கழிதல் எல்லாமே வேற.”
“நெறைய பேசுவீங்களோ?”
“பேசிட்டே இருப்பேன்”
“அப்ப அறிவுரை சொல்ல மாட்டீங்களா?”
“உண்மையச் சொன்னா நான் அவன்கிட்டதான் அப்பப்ப பல விஷயங்களுக்கு அறிவுரை கேட்டுக்கிடறது. இப்ப உள்ள உலகம் என்னை விட அவனுக்கு நல்லா தெரியும்”
“அப்ப என்ன பேசுவீங்க?”
“அவன் விரிவா தத்துவம் படிச்சவன். பௌத்த தத்துவம், ஷோப்பனோவர்னு பேசுவேன். இலக்கியம் பேசுவேன்…”
நண்பர் அதிருப்தியுடன் தலையசைத்தார்.
இந்த ஆண்டு எனக்கு அறுபது வயது நிறைவு. அதையொட்டி என் மகன் அஜிதன் ஒரு நாவலை எழுதியிருக்கிறான். மைத்ரி என்னும் அந்நாவலை விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அஜிதன் புனைவு என ஒரு வரிகூட முன்னர் எழுதியதில்லை. தமிழில் அனேகமாக எதுவுமே எழுதியதில்லை. அந்நாவல் பற்றி எழுதிய ஒருவர் ஏற்கனவே ஏராளமாக அவன் எழுதி பயின்று, மிகச்சிறந்ததை வெளியிட்டிருக்கிறான் என்று கூறியிருந்தார். உண்மை அது அல்ல.
அந்நாவலில் அஜிதன் அடைந்த உயரங்கள் உள்ளன. கவித்துவமும் தத்துவதரிசனமும் இயல்பாக ஒன்றாகி வெளிப்படும் படைப்பு அது. உண்மை, அனைவருக்குமான படைப்பு அல்ல. எளிமையான வாழ்க்கைச்சிக்கல், உறவுச்சிக்கல்களை வாசிப்பவர்களுக்கு அதில் ஒன்றும் இல்லை. வழக்கமான சிற்றிதழிலக்கியமும் அல்ல. மெய்த்தேடல், பயணம் என ஒரு மாற்று உலகில் நாட்டம் கொண்டு, அதை ஏற்கனவே கொஞ்சம் அறிந்தவர்களுக்குரிய நாவல்.
அதை நான் படித்துக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு திகைப்பை அடைந்தேன். சந்தேகமே இல்லாமல் அது ஒரு பெரிய இலக்கியவாதி எழுதிய படைப்பு. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. நுண்ணிய கவித்துவம் வழியாகவே உச்சமடைவது.
அந்த நாவலாசிரியனை அதற்கு முன் எனக்கு சற்றும் தெரியாது. கைகளில் உரசும் மென்காற்றை பூனையின் மீசையின் தொடுகை என்பவனை. மலைச்சரிவில் பொழியும் வெயிலை வெறும் சொற்களால் நிகழ்த்திக்காட்ட முடிபவனை. ஒரு பெரும் அகஉச்சத்தை அடைந்தவனை உடனே வந்து கவ்வுவது எதிர்நிலையாக அமையும் களைப்புதான் என உணர்ந்து அதைச் சொல்லக்கூடியவனை. ஒளியைச் சொன்னதுமே நிழலைச் சொல்லவேண்டும் என உணர்ந்த செவ்வியல் எழுத்தாளனை. நான் அவனை என் மடியில் வளர்ந்த சின்னப்பையன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எந்த அப்பாதான் பையனை அவனுடைய முழு வடிவுடன் பார்க்க முடியும்?
அஜிதன் ’செட்டில்’ ஆகியிருந்தால் நான் ஒருமாதிரி நிம்மதி அடைந்திருப்பேன். விடுதலை என உணர்ந்திருப்பேன். நான்குபேரிடம் ‘ஆமா சார் ,பையன் செட்டில் ஆய்ட்டான்’ என்று மகிழ்ச்சியாகச் சொல்லியிருப்பேன். எனது தலைமுறையின் மனநிலை அது. ஆனால் உள்ளூர அவன்மேல் மதிப்பு இல்லாதவனும் ஆகியிருப்பேன். ’செட்டில்’ ஆன எவர்மேலும் எனக்கு எந்த மதிப்பும் இல்லை. தன் வாழ்க்கையில் தேடல் அற்ற எவரிடமும் எனக்கு ஒரு ஹாய், ஹலோவுக்கு அப்பால் உரையாட ஒன்றுமில்லை.
நாவலை வாசிக்க வாசிக்க அந்த ஆசிரியன் மேல் பெருமதிப்பு கொண்டேன். மிகமிகமிகச் சில ஆசிரியர்களே அந்த மதிப்பை என்னுள் உருவாக்கியவர்கள். நான் அறியாத எதையோ என்னிடம் சொன்னவர்கள். என் படைப்பாணவத்தை என்னை வாசகனாக மாற்றி அமரவைத்தவர்கள்.
இந்த இடம்நோக்கி வருவதற்காகத்தான் அத்தனை அலைந்திருக்கிறானா? அந்த வழிகளை நான் எப்படி அமைத்துக் கொடுத்திருக்க முடியும்?
ஆனந்தவிகடன் 30-6-2022