சமீபத்தில் ஹாருகி முரகாமியின் தினசரி அட்டவணையைப் பின்பற்றி அதன் படியே நடக்க முயற்சித்து ஒரு பெண் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்ததை யூ-ட்யூப்பில் பார்த்தேன். முரகாமியின் தினசரி என்பது அதிகாலை 4 மணிக்கு எழுவது, 10 கி.மீ ஓடுதல் அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு நீச்சல் பயிற்சி, 4-5 மணிநேரம் எழுதுதல், படித்தல், இசை கேட்பது, மிகச்சரியாக 9 மணிக்கு உறங்க செல்வது. இத்தனை கடுமையாக ஒரு தினசரி அட்டவணையை எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டியதுள்ளதா…
இதனை யோசிக்கும் போது எனக்கு எனக்கு உங்கள் ஞாபகம் தான் வந்தது. உங்களது பணி குறித்து அனைவருமே அறிவோம். எந்த வேலைக்கு இடையிலும் உங்கள் பணி தொய்வுற்றதே இல்லை. இப்போதைக்கு கூட தமிழ் விக்கிக்கு நீங்கள் அளித்து வரும் பங்களிப்பு குறித்து கேள்விப்படும் போது வியப்பே மேலிடுகிறது. உங்கள் நாளை எப்படி திட்டமிட்டுக் கொள்கிறீர்கள் என்பதே நான் கேட்க விரும்புகிற கேள்வி.
குறள் பிரபாகரன்
அன்புள்ள பிரபாகரன்,
அப்படி ஓர் அட்டவணையைப் போட்டு வாழவேண்டியதில்லை. படைப்பூக்கத்துடன் செயல்படும் எவருக்கும் அப்படி அட்டவணைப்படி வாழ்வது கடினம். அட்டவணையில் ஒரு சலிப்பூட்டும் அம்சம் உள்ளது. இன்று என்ன செய்யப்போகிறோம் என முன்னரே நமக்கு தெரியாமல் இருக்கையில் ஒரு கொண்டாட்டம் வாழ்க்கையில் உள்ளது.
ஆனால் விரும்பிச் செய்வதை விடாப்பிடியாக தொடர்வது என்பது அவசியம். அதற்கேற்ப செயல்களை வகுத்துக் கொண்டாகவேண்டும். அதற்கு செய்யக்கூடாதவற்றைச் செய்யலாகாது.
உதாரணமாக, நான் நேரவிரயம் செய்யும் எதையும் செய்வதில்லை. சமூகவலைத்தளங்கள், தொலைக்காட்சி இரண்டையும் தவிர்த்துவிடுகிறேன். விழித்திருக்கும் நேரம் முழுக்க தீவிரமாக வேலைசெய்தாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருக்கிறேன். நாம் செய்யக்கூடுவது அதைத்தான்.
இந்த அமெரிக்கப் பயணத்தில் மொத்தம் 6800 கிலோமீட்டர் தொலைவை 13 நாட்களில் கடந்தோம். ஒருநாளில் ஐந்து அல்லது ஆறுமணிநேரம் மட்டுமே தூக்கம். ஆனால் ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது விக்கி தமிழ் பணியைச் செய்தாகவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக்கொண்டேன். செய்ய முடிந்தது.
ஒவ்வொரு நாளும் என் உள்ளத்துக்கு உகந்த பணியை செய்யும் ஊக்கத்துடன் கண்விழிக்கவேண்டும் என்பதை நான் நெறியாகக் கொண்டிருக்கிறேன். சோம்பலால் எதையும் ஒத்திப்போடலாகாது.
எதையும் அரைகுறையாக விட்டுவிடலாகாது என்பதை அடுத்த நெறியாகக் கொண்டிருக்கிறேன். முடிந்தவரை எடுத்த காரியத்தை முடித்தாகவேண்டும் என எனக்கே ஆணையிட்டுக் கொள்கிறேன்.
எதிர்மறைச் செயல்பாடுகளில் ஆற்றலை வீணடிக்கலாகாது என்பது என்னுடைய மூன்றாவது தன்னெறி. நான் எவருக்கும் எதிராக எதையும் செய்வதில்லை. எவர் செயலிலும் தலையிடுவதில்லை. எவர் செயலையும் திருத்தவோ மாற்றவோ முயல்வதில்லை. எனக்குரியதென நான் தெரிவுசெய்துகொண்ட செயலை முழுவீச்சுடன் செய்வதே என் வேலை.
அதில் பிறர் தடைசெய்தால் அத்தடையை கடப்பது மட்டுமே நான் செய்வது. ஒருபோதும் தடை செய்தவர்களை எதிரிகளாக எண்ணுவதில்லை. அவர்களுடன் நட்புகொள்ள முடிந்தால் அதையே செய்வேன். எவரும் எனக்கு எதிரி அல்ல. நான் தவிர்ப்பவர்கள் உண்டு. அவர்களுக்காக நான் நேரமும் உள்ளமும் செலவிட முடியாதென்பதே காரணம். எதிரி என்றால் அவருக்காக நேரமும் உழைப்பும் அளிக்கவேண்டும். அவ்வண்ணம் எவருக்கும் அரை மணிநேரம்கூட அளிப்பதில்லை. எதிரிகள் எனக்கு கட்டுப்படியாகாது என்பதே என் அனுபவம்.
விவாதங்களில் ஈடுபடுவதுண்டு. அது நானே தெரிவு செய்யும் விவாதம். என்னை எவரும் விவாதத்திற்கு இழுக்க அனுமதிப்பதில்லை. நான் ஒரு விவாதத்தில் சொல்லவேண்டியவற்றைச் சொல்லிவிட்டதும் முழுமையாக பின்வாங்கிவிடுவேன். பொருட்படுத்தத் தக்கவற்றை மட்டுமே படிப்பேன். அல்லவற்றை ஒரு வரிக்குமேல் படிக்கவே மாட்டேன்.
இந்நெறிகள் எனக்களிக்கும் சுதந்திரம், எனக்களிக்கும் நேரம் அத்தனை அற்புதமானது. என் தொடர்செயல்பாட்டின் ரகசியம் என்ன என்றால் இதுதான். நேர்நிலையாக இருப்பது. பெரும் திட்டங்களுடன் இருப்பது. நம்பிக்கையை கைவிடாமலிருப்பது. நான் ஆற்றவேண்டியதை ஆற்றியதும் அப்படியே விலகி அடுத்ததற்குச் செல்வது. பிறர் பற்றிக் கவலையே கொள்ளாமலிருப்பது.
ஜெ