கடலின் எடை- கடலூர் சீனு

இளங்கோ கிருஷ்ணன் – தமிழ் விக்கி

ஆழ்கடல் குருட்டு மீன்
சுமந்தலைகிறது
மொத்தக் கடலின் பாரத்தையும்.

இளங்கோ கிருஷ்ணன்.

குமரகுருபரன் விழாவில் கவி இளங்கோ கிருஷ்ணன் திடீர் என என் முன் தோன்றி என் கரங்களைப் பற்றிக்கொண்டு என்னை திகைக்க வைத்தார். அவரிடம் என்னென்னவோ பேச நினைத்திருந்தேன். ஆனால் அது தருணம் அல்ல. அவரது -வியனுலகு வதியும் பெருமலர்- தொகுப்பு அளித்த கொந்தளிப்பு இன்னும் என்னை விட்டு நீங்க வில்லை. அதே கொந்தளிப்போடுதான் அவருடன் பேச இயலும். அது இனிய உரையாடலாக அமைய இயலாது. ஆகவே வெறுமனே புன்னகைத்தபடி தலையை தலையை ஆட்டியபடி சும்மா நின்றிருந்தேன்.

தமிழின் மிக தனித்துவமான பல கவிதைகள் அடங்கிய தொகுப்பு வியனுலகு வதியும் பெருமலர். என்னைக் கொந்தளிக்கச் செய்த, குருட்டு மீன், விஷ பட்டாம்பூச்சி போன்ற பல பல படிமங்களும் குறிப்பாக அரசியல் கவிதைகளும் கொண்டது.

தமிழின் அரசியல் கவிதைகள் மீதோ அத்தகு கவிதைகள் எழுதுவோர் மீதோ எனக்கு என்றுமே பெரிய மதிப்பு இருந்ததில்லை. (விதி விலக்கு இளங்கோ கிருஷ்ணன்  மட்டுமே) காரணம் தமிழில் எவருக்கு எல்லாம் கவிதைக் கலை என்பதன் அரிச்சுவடி கூட தெரியாதோ அவர்கள் கையில் மட்டுமே அவர்களின் சொந்த அரிப்பை சொறிந்து கொடுக்கும் குச்சியாக மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கிறது அரசியல் கவிதை.

இத்தொகுப்பில் எழுவது கவிஞனின் அவன் அகம் பொங்கும் நீதியில் இருந்து எழும் கவிதைகள். குறிப்பாக தூத்துக்குடி கவிதைகள். தூத்துக்குடியில் சுடப்பட்ட அனைவரும் பிறப்பித்து பிறப்பித்து மீண்டும் மீண்டும் கொல்லப்பட வேண்டிய கொடும் தேச விரோதிகள் என்றேதான் ஆகட்டுமே, ஆனால் அவர்கள் தண்டிக்கப்பட்ட விதம், ஜனநாயகத்தை நம்பி வாழும் ஒரு சாமானியன் முகத்தில் காரி உமிழும் வகையினதானது. விஷவாயுவை திறந்து விட்டு போப்பாலில் உயிர்களை காவு வாங்கிய வெண் தோல் வேந்தன் மீது தூசி கூட பட வில்லை, பாபர் கும்மட்டம் இடிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் என எவருமே இல்லை, முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைதானவர் இரட்டை ஆயுள் முடிந்துவந்து முதல்வரை கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கிறார். இதே தேசத்தில் இவர்கள் செய்த குற்றம் என்ன என்றே பொது மக்களுக்கு தெரியாது, அந்த பொது மக்கள் மத்தியில் வைத்து, பொது வெளியில் முன்னர் வெறி நாய்களை அடித்து கொல்லுவார்களே அப்படி கொல்லப் பட்டார்கள். (அப்படி சுட உத்தரவு அளித்தவர் யார் என்று இப்போதுவரை யாருக்கும் தெரியாது) இது நியாயமா என்று கேட்க ஓட்டுக்கு துட்டு வாங்கி, சாதிக்கு ஓட்டு போடும் சிவிலியன் எவருக்கும் இங்கே உரிமை இல்லை. ஜனநாயக விழுமியங்களை தத்தமது மனசாட்சியை வாய்க்கரிசி என்று போட்டு புதைத்து விட்டு புழுக்கள் போல வாழும் எவருக்கும் இங்கே கேள்வி கேட்கும் உரிமை இல்லை. இந்த வெற்றிடத்தில் இருந்து எழும் கவிஞனின் நீதியின்  பாற்பட்ட குரலே இளங்கோவினுடையது.

ஐந்து பகுதிகளாக அமைந்த இந்த தொகுப்பில் பசியின் கதை பகுதியும் மரணத்தின் பாடல்கள் பகுதியும் என்னை இப்போது நினைக்கும்போதும் தொந்தரவு செய்வது.  குறிப்பாக மரணத்தின் பாடல் பகுதியில் வரும் அன்னை இட்ட தீ கவிதையும் யம கதை கவிதையும்.

பசியின் கதை பகுதியில் கவிதை பேசும்  ஒவ்வொரு பசியையும் ஒவ்வொரு தனித் தழல் என்று கொண்டால், பகுதியை ஒட்டுமொத்தமாக பார்க்கையில் எழுவது உடலங்களை உண்டு பசியால் நின்றெறியும் ஒரு வடவைத் தீ.

இப்போது எழுதுகையில் கூட உணர்வுகள் கொந்தளிக்கிரது. காரணம் தொகுப்பின் பல கவிதைகள் அதன் உணர்வு நிலைகள் துல்லியமாக  (மரணம், பசி,இயற்கை போல) உடல், புறம், எனும் களத்தில் கட்டப்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவற்றுக்கு வெளியே அந்தரங்கமாக இந்த தொகுப்பின் இரண்டு கவிதைகள் என் நிகர் வாழ்வின் உடைவு தருணத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டவை என்பதும் பிறிதொரு காரணம்.

இப்படித்தான்

நான்கு நீரிழிவு மாத்திரைகளால் ஆனது
அவனின் ஒரு நாள்

ஆரஞ்சு வண்ண மாத்திரையைப் பிரிக்கும்போது சூரியன் சடவு முறிக்கும்

மஞ்சளைப் பார்த்ததும்
உச்சிக்குப் போய்விடும்

சிவப்பில் கொஞ்சம்
ஆசுவாசம் போல் ஒன்றிருக்கும்

கருநீல வண்ண மாத்திரையை
ஒரு நாள் பிரிக்கும்போது கட்டிலுக்கடியில் உருண்டோடிவிட்டது

இப்படித்தான்
இருண்டது ஒரு மரணம்.

அன்றைய இரவுக்கான மாத்திரை கைநழுவிய போதுதான் அப்பா மாத்திரைகளைக் கொண்டு இந்த உயிரைப் பொத்தி வைக்கும் இழிநிலை வந்ததை எண்ணி வருந்தினார். ஒரு சொல்லும் உரைக்காத மௌனம் பூண்டார். மாத்திரை மருந்துகளை கைவிட்டார். போய்ச் சேர்ந்தார்.

அப்பாவின் காதல் மனைவி. என் அம்மா தன் காதலனோடு போய்சேர ஒரு மனமும், தங்கள் காதலின் விளை கனியான பிள்ளைகளை விட்டு போக முடியாததொரு மனமும் என சித்தம் பேதலித்தார்.

அவர்  உள நோய் சிகிச்சைக்கான அறைக்கு வெளியே நான் இவ்வாறுதான் காத்திருந்தேன். இக்கவிதை வழியே இப்போது அறிகிறேன் அந்த அறைக்குள்ளே அம்மாவும் இப்படித்தான் காத்துக்கொண்டிருந்திருப்பார்.

அம்மா வந்துவிடு

கொட்டித் தீர்க்கிறது பேய் மழை
எங்கும் மென்னிருள் விரைவில் அடரக்கூடும்
நடுவழியில் அந்தகாரத்தில் நின்றுகொண்டிருக்கிறேன்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே இடியிறங்கிய மரம் பற்றி எரிகிறது.
இந்தப் பாழடைந்த மண்டபமோ காற்றில் கூகூவெனக் கதறுகிறது.
நெடுவழித் தனியனுக்கு யாருமில்லை.
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது.
அம்மா வந்துவிடு.

தொகுப்பின் முழுமையும் ஆழ் பிரதியாக நிறைவது  கவி மனம் இறைஞ்சும் கருணைக்கான ஏக்கம். புத்தனால் ஏசுவால் மட்டுமே அளிக்க இயன்ற கருணை. வியனுலகு வதியும் பெருமலர் என்றான கருணை. தொகுப்பின் பிற கவிதைகள் குறித்து, அதன் மொழியழகு தத்துவ நோக்கு இவை குறித்தெல்லாம் விரிவாக என்றேனும் எழுத வேண்டும். பார்க்கலாம்.

தொகுப்பின் சில கவிதைகள்.

இப்படித்தான்

கைப்பிடி மண்ணில்
சிறு விதையைப் புதைத்தேன்

இரண்டே நாளில் துளிர்த்தது
இப்போது அது ஒரு பூமி இப்படித்தான் ஓர் உலகைப் படைக்க வேண்டும்

கைப்பிடி இதயத்தில் ஒரு தீச்சொல்லை விதைத்தேன்
அன்பின் வனத்தையே எரித்தது
இப்போது அது ஒரு பாழ்வெளி

இப்படித்தான் ஓர் உலகை அழிக்க வேண்டும்.

***

பசியின் கதை

முன்பே சொன்னது போல்
பசியின் கதை ஒரு கதை அல்ல
ஒரு நெருப்புத் துண்டு
ஒரு மலை உச்சி
கைகள் பிணைக்கப்பட்ட ஒரு மனிதன்
ஒரு கழுகு
என்றொரு கதை
ஓர் இளம் பிச்சி
ஓர் அரசகுமாரன்
ஓர் அட்சயப்பாத்திரம்
என்றொரு கதை
ஒரு நூலகம்
ஒரு தாடிக்காரன்
சில புரட்சிகள்
பல்லாயிரம் படுகொலைகள்
என்றொரு கதை
ஓர் அன்ன சாலை
ஓர் அணையா நெருப்பு ஒரு முக்காடிட்ட துறவி
ஒரு ஜோதியில் ஐக்கியமான கதை
முன்பே சொன்னது போல் பசியின் கதை
ஒரு கதை அல்ல
முன்பே சொன்னது போல்
அது ஒன்றுக்கு மேலுமல்ல.

***

யம கதை

யமன் சொன்னது:
வெறிகொண்ட ஆண் மந்தி
பலாக் காய்களைப் பிய்த்தெறிகிறது.

சடசடவென குளத்தில் இறங்கி நீர்ப் பாம்புகளைப் பிடித்து படார் படாரெனத் தரையில் அறைந்து கொல்கிறது

மரக்கிளைகளை முறித்து புலிக்குறளைகள் மீது வீசுகிறது
மண் வாரித் தூற்றி அரற்றுகிறது
அதோ
அங்கு ஒரு குட்டிக் குரங்கு
நீலம் பாரித்து
வாய்ப்பிளந்து மரித்திருக்கிறது
நசிகேத!

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகரசூர் பத்மபாரதி – கடிதமும் பதிலும்