சியமந்தகம்-கடிதங்கள்

சியமந்தகம் இணையதளம்

அன்புள்ள ஜெ.

சியமந்தகம் இணையப்பக்கத்தில் உங்களைப் பற்றிய கட்டுரைகள் ஒவ்வொன்றும் அற்புதமாக வந்துகொண்டிருக்கின்றன. இத்தனை பார்வைகள், இத்தனை ஆசிரியர்கள் என்பது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. என்னைப்போன்ற பலருக்கு உள்ள குறை என்பது நீங்கள் உங்கள் சக எழுத்தாளர் உட்பட அனைவர் பற்றியும் ஏராளமாக எழுதியிருக்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர்  என ஒவ்வொருவரைப் பற்றியும் பல ஆய்வுக்கட்டுரைகள். ஆனால் உங்களைப் பற்றி பிறர் எழுதியவை மிகக்குறைவு என்னும் நினைப்பு இருந்தது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்து எழுதித் தீர்ப்பதுபோலிருக்கிறது இந்தக் கட்டுரைத் தொகுப்பு.

சியமந்தகம் இதழில் அண்மையில் வந்த கட்டுரைகளில் போகன் சங்கர், சிவானந்தம் நீலகண்டன் இருவருடைய கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. உங்கள் எழுத்துக்களைக் கூர்ந்து வாசித்து அவற்றிலிருந்து தங்களுக்கான பார்வையை உருவாக்கிக் கொண்டவர்களால் எழுதப்பட்டவை அவை.

ஆர்.எம். ராகவேந்திரன்

***

அன்புள்ள ஜெ

சியமந்தகம் இணையதளத்தில் மலையாள இதழாசிரியர்கள் உங்களைப் பற்றி எழுதிய கட்டுரைகள் இரண்டும் அருமையானவை. கல்பற்றா நாராயணன், பி.ராமன் இருவரும் அத்தனை பிரியமும் மதிப்புமாக எழுதியிருக்கிறார்கள்.

செல்வக்குமார்

முந்தைய கட்டுரைநித்யாவின் இறுதிநாட்கள்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், கடிதங்கள்