தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் ஆங்கிலம்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் தமிழ்
தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியத்துக்கு கமல்ஹாசனின் வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. நான் அவருடன் தொடர்புடையவனாக ஆகி கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. இதுவரை எல்லா பெருங்கனவுகளையும் அவரிடம்தான் முதலில் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். வெண்முரசு உட்பட. எல்லாவற்றுக்கும் ஊக்கமூட்டும் நண்பராக உடனிருந்திருக்கிறார். இப்போதும். அவருக்கு நன்றி சொல்வது எனக்கு நானே நன்றி சொல்வதுபோல. எல்லாவற்றிலும் அவரும் உடனிருக்கிறார்.
கமல் வாழ்த்துச் செய்தி
தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பாக ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘தமிழ் விக்கி’ இணையக்கலைக் களஞ்சியம் மிக முக்கியமான முன்னெடுப்பு. மூத்த படைப்பாளிகளும் தலைசிறந்த கல்வித்துறை ஆய்வாளர்களும் இதன் ஆசிரியர் குழுவில் இருப்பது தனிச்சிறப்பு.
தமிழ்ப் பண்பாட்டிற்குப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், இதழாளர்கள் பற்றிய பிழைகளற்ற தகவல் களஞ்சியமாக இது திகழ்கிறது. வெறும் தகவல்களின் குவியலாக இல்லாமல், புகைப்படங்கள், ஆதாரங்கள், மேலதிகமாக வாசித்து அறிந்துகொள்ளத் தேவையான உரலிகள் (இணையத் தொடுப்புகள்) என செறிவாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
நாம் மறந்துவிட்ட, நாமறியாத ஆனால், நமது பண்பாட்டிற்குப் பலவகைகளில் பங்களித்த பல்வேறு ஆளுமைகளைப் பற்றி சுவாரஸ்யமான தகவல்களுடன் ஏராளமான கட்டுரைகள் தமிழ் விக்கியில் தொகுக்கப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில், அமைப்பு பலத்துடன் நிகழ வேண்டிய காரியத்தை ஜெயமோகனும் அவர்களது நண்பர்களும் ‘இது எம் கடமை’ எனும் தளராத தன்முனைப்புடன் நிறைவேற்றி இருக்கிறார்கள்.
நேர்த்தியான வளம் மிக்க மொழி நடை “தமிழ் விக்கியின்” சிறப்பம்சம். பள்ளி மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இதை உருவாக்கியவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை.
கடந்த 7-5-2022 அன்று வாஷிங்டனில், தமிழக நாட்டுப்புறவியலை ஆய்வு செய்த பிரெண்டா பெக், திருக்குறளை மொழிபெயர்த்த தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா, பேராசிரியர் வெங்கடரமணன் மற்றும் அமெரிக்க நூலகத்தலைவர் சங் லியு ஆகியோர் முன்னிலையில் தமிழ் விக்கி தமிழ் மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
எனது நண்பரின் சாதனையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தவும், பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று நினைவூட்டவும் இன்று மீண்டும் ஒருமுறை தமிழ் விக்கியை அறிமுகப்படுத்துகிறேன். இத்தகைய இணையக் கலைக்களஞ்சியத்தின் வரலாற்றுத் தேவையையும், பண்பாட்டுத் தேவையையும் உணர்ந்து இதைப் பயன்படுத்துங்கள். பங்களிப்பாற்றுங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்
கமல்ஹாசன்