தமிழ்விக்கி – கமல்,வாஷிங்டன்.

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தமிழ் விக்கி தொடக்க விழா காணொளியை பதிவேற்றம் செய்துள்ளோம்.  நிகழ்விற்கு அப்புறம் விழாக்குழுவினருக்கு கிடைத்த பதிவில், விழாவில் கலந்துகொண்ட ஆளுமைகளின் உரையை, பின்னணியில் கேட்கும் மிகுந்த ஒலியால் சரியாக கேட்கமுடியாமல் இருந்தது.  ஒளிப்பதிவாளர் ஆனந்த் குமார்,  வயலில் நெற்பயிருடன் கலந்திருக்கும் களையை கையால் பறித்தெறிவதுபோல, மிக நுண்மையாக பார்த்து பார்த்து  தேவையில்லாத ஒலியை குறைத்து சரி செய்துள்ளார்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

தமிழ் விக்கி – பார்க்க

Tamil Wiki- பார்க்க

அன்புள்ள சௌந்தர்,

மகிழ்ச்சியான செய்தி. அமெரிக்கா விஷ்ணுபுரம் கிளை ஒரு லாபநோக்கமில்லாத பொது அறக்கட்டளையாக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் செய்தியும் மகிழ்வளிக்கிறது. இனி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் நண்பர்கள் அமெரிக்கா விஷ்ணுபுரம் கிளைக்கு நிதியளிக்கலாம். அவை கார்ப்பரேட் நிறுவனங்களால் ஈடுகட்டப்படும்.

எப்படியானாலும் நமக்கு குறைவாகவே நிதி வரும் என நான் அறிவேன். நம் நண்பர்கள்தான் எப்போதும்போல நிதி அளிப்பார்கள். ஆனால் அவர்களின் சுமை பெரிதும் குறையும். அத்துடன் இது ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகிவிட்டது. இனி நாம் வேறு எழுத்தாளர்களையும் நம் அமைப்பு சார்பில் அமெரிக்கா அழைக்கலாம். பதினைந்தாண்டுக்கு முன் அப்படி ஓர் அழைப்புக்காக இன்னொரு அமைப்பிடம் எனக்காக என் நண்பர்கள் கோரி, அவர்களால் அவமதிப்புக்குள்ளான நினைவு எழுகிறது.

நாம் நம் பாதையில், சிறிய அளவில், இலக்கிய இயக்கத்தை முன்னெடுப்போம். பூன் முகாம் இனி ஆண்டுதோறும் நிகழவேண்டும் என நினைக்கிறேன். இன்னும் செலவுகுறைவான இடம் இருந்தால்கூட கண்டுபிடிக்கலாம். நம் இலக்கு வசதி அல்ல, இலக்கியம் என்னும் கொண்டாட்டம் மட்டுமே. இலக்கிய அமைப்பு என்பது சில பத்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டும். ஒரு தலைமுறைக்குப் பின்னரே அதன் விளைவுகள் கண்ணுக்குத் தெரியும். நம் முன்னுதாரணம் எழுத்து சி.சு.செல்லப்பாதான்.

நேற்று (16-6-2022) அன்று கமல்ஹாசனை அவருடைய ராஜ்கமல் அலுவலகத்திற்குச் சென்று சந்தித்தேன். சில திரைப்படத் திட்டங்கள். விக்ரம் தயாரிப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் விஜய் டிவி நிர்வாகியுமான மகேந்திரனைச் சந்தித்தேன். விக்ரம் படத்தின் வெற்றிக்கு காரணமானவர்களில் மகேந்திரனும் ஒருவர். ஒன்றரை மணிநேரம் கமல்ஹாசனுடன் சினிமா, விக்கி என பலவற்றைப் பேசிக்கொண்டிருந்தோம்.

கமல் உற்சாகமாக இருக்கிறார். விக்ரம் படத்தின் வெற்றி அலுவலகம் முழுக்க தெரிகிறது. அதுவும் எப்படிப்பட்ட வெற்றி!. உண்மையில் கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர் போன்றவற்றை விடவும் பெரிய வெற்றி. விக்ரம் முற்றிலும் போட்டியே இல்லாமல் இந்தியா முழுக்க ஓடிக்கொண்டிருப்பதும் இந்தப் பெருவெற்றிக்கு ஒரு காரணம் என்றாலும்கூட இது படம் எடுத்தவர்களையே திகைக்க வைக்கும் வெற்றிதான். மகிழ்ச்சி இயல்பானது. பேட்டிகள், சந்திப்புகள் என பரபரப்பாக இருக்கிறார் கமல்.

ஆனால், பலமாதங்களுக்கு முன் பஞ்சாயத்துராஜ் தேர்தல்களில் எதிர்பாராத தோல்விக்கு பின்னரும் இதே உற்சாகத்துடன்தான் இருந்தார். நான் இருபதாண்டுகளில் அவரை உற்சாகமாக மட்டுமே பார்த்திருக்கிறேன். அவருடன் என்னை ஆழமாக இணைப்பது மூளைக்குள் எப்போதுமே சுரந்துகொண்டிருக்கும் செரட்டோனின் தான். என்னைப்போலவே அவருக்கும் கடந்தகாலமும் நிகழ்காலமும் முக்கியமே அல்ல. அடைந்த வெற்றிகள் பொருட்டே அல்ல. அவருடன் பேசிக்கொண்டிருந்தால் அவர் இப்போதுதான் பெருங்கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழையும் இளைஞன் போலத் தோன்றுவார்.

கமல்ஹாசனுடன் நான் எப்போதுமே என் கனவுகளையும், திட்டங்களையும் பற்றித்தான் சொல்லியிருக்கிறேன். இப்போது நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. நான் வேறு எவருடனும் பகிராத பெரிய கனவுகள், வெண்முரசு உட்பட, அனைத்தையும் அவரிடம்தான் முதலில் பேசியிருக்கிறேன்.

அவருடன் பேசும்போது நாம் நம் பெருங்கனவுகளுக்காக, மாபெரும் திட்டங்களுக்காகக் கூச்சப்படவேண்டிய தேவை இல்லை. அவர் அதைவிடப் பெரிய திட்டங்கள் சிலவற்றை நம்மிடம் சொல்வார். இப்போதுகூட ஒரு பெரிய கனவு பற்றி அவரிடம் சொன்னேன். முதல்முறையாக இன்னொருவரிடம் சொல்கிறேன். ஆம், விக்கிக்கு அடுத்ததாகச் செய்யவேண்டிய திட்டம். உடனே உற்சாகம் அடைந்து பேசிக்கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டார். இன்னொருவரிடம் நான் அக்கனவை, திட்டத்தைச் சொல்ல இன்னும் நீண்டநாளாகும்.

உண்மையில் நான் இளைஞர்களிடம் அல்லவா பெருங்கனவுகளைப் பற்றிப் பேசவேண்டும்? அவர்கள் அல்லவா நம்பிக்கையும் கனவும் கொண்டவர்கள்? ஆனால் கமல் அளவுக்கு அத்தனை தளராநம்பிக்கையும் கனவுகளும் கொண்ட இளைஞர்களை நான் பார்ப்பதில்லை. அந்த நம்பிக்கையும் உற்சாகமும் ஒருவகை பிறவிக்குணம், ஒருவகை மூளைநரம்பு அமைப்பு என இப்போது தோன்றுகிறது. (செரட்டோனின் மிகை கொண்டவர்கள் பசி மிக்கவர்கள், நிரந்தரக் காதலர்கள் என்கிறது மருத்துவம். சரிதான்.)

கமல்ஹாசனிடம் பேசும்போது சொன்னேன். பெருந்திட்டங்களை எண்ணியதுமே மிகமிகச் செலவு குறைவாகச் செய்வது எப்படி என்றே நான் அடுத்தபடியாக யோசிப்பேன். பணமே இல்லாமல் செய்யமுடிந்தால் இன்னும் நல்லது. உண்மையில் பெரிய பணமில்லாமல் செய்யும் செயல்களே வெற்றிகரமாக நிகழ்கின்றன. செயலை விட பணநிர்வாகம் சிக்கலானது. அதற்கு நாம் எங்கோ ஏதோ விலையும் கொடுக்கவேண்டியிருக்கும். தமிழ்விக்கி இதுவரை அனேகமாக டொமெய்ன் பதிவு தவிர ஒரு பைசா செலவில்லாமல் நிகழும் முயற்சிதான்.

இந்த ஆவணப்படத்தைப் பார்க்கையில் வாஷிங்டன் நிகழ்ச்சி மிகமிக பின்னால் எங்கோ நிகழ்ந்ததுபோலத் தோன்றுகிறது. அப்போது நிகழ்ந்த சூழ்ச்சிகள், தடைகள், நாம் அவற்றை வென்று நிகழ்ச்சியை நடத்தியது எல்லாம் கனவுபோல தோன்றுகிறது. நண்பர்களின் முகங்களில் இருக்கும் உற்சாகமும் நெகிழ்ச்சியும். என் குரலில் இருக்கும் உணர்ச்சிகரம்…

நான் அனேகமாக முதல்முறையாக மேடையில் உணர்ச்சிவசப்படுகிறேன். அதுவும் சி.சு.செல்லப்பா முதலிய முன்னோடிகளைப் பற்றிச் சொல்லும்போது. அமெரிக்காவில் ஒரு மேடையில் அவர்கள் பெயர் முதல்முறையாகச் சொல்லப்படுகிறது!

இன்று, அன்று கசப்பைக் கக்கியவர்களில் பலருக்கு நாம் உத்தேசிப்பது என்ன என்று தெரிந்திருக்கும். தமிழின் சாதனையாளர்களுக்குக்கூட மேலோட்டமான செய்திகள் அடங்கிய வெறும் ஒரு பத்திதான் மொத்த இணையவெளியிலும் வாசிப்பதற்காகக் கிடைத்தது. இன்று நாம் ஒவ்வொருவருக்கும் மிகமிக விரிவான பதிவுகளை உருவாக்கியிருக்கிறோம். விக்கி பக்கங்களைப் பார்க்கும் அறிவியக்க ஆர்வமுடையவர் எவருக்கும் நாம் உத்தேசிப்பதென்ன என்று தெரியும்.

ஆர்வமுள்ள ஒருவர் மு.வரதராசனார் பற்றிய ஒரு பதிவை மட்டும் எடுத்துப் பார்த்தாலே போதும். அந்த பதிவு, மேலும் அதிலுள்ள சுட்டிகள் வழியாக ஒரு முனைவர் பட்ட ஆய்வையே செய்ய முடியும். அப்பதிவு இன்னும்கூட விரிவாக்கப்படும், அறிஞர்களால் திருத்தப்படும். வளர்ந்து செம்மையாகிக் கொண்டே இருக்கும். அதுவே இணையக் கலைக்களஞ்சியம் என்பது.

நாம் எண்ணியது இதுதான். எதற்கும் போட்டி அல்ல, எதற்கும் எதிராகவும் அல்ல. நம் வழி அறிவியக்கத்தின் வழி. அது நூறாண்டுகளாக இங்கே நிகழ்ந்து வரும் ஒரு தொடர்ச்செயல்பாடு. முன்னோடிகளின் வழியொற்றி அறிஞர் துணைகொண்டு, இளைஞர்களைத் திரட்டி இதைச் செய்கிறோம். காலம் நம்மை அடையாளப்படுத்தும்.

மீண்டும் இந்த ஆவணப்படத்தைப் பார்க்கிறேன். நித்யாவிடம் சொல்லிக் கொள்கிறேன். ‘ஆம் குரு, இதோ எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறேன்.’

ஜெ

அமெரிக்கா விஷ்ணுபுரம் வட்டம் நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் [email protected].  தொலைபேசி எண் – 1-512-484-9369.

அமெரிக்கா விஷ்ணுபுரம் வட்டம்

தமிழ் விக்கி இணையதளம்

முந்தைய கட்டுரைஜெகசிற்பியன், நகுபோலியன்
அடுத்த கட்டுரைகரசூர் பத்மபாரதி நூல்கள் -கடிதம்