குடி- கடிதங்கள்

அன்பின் ஜெ

குடியை பற்றி மிக சிறப்பான கட்டுரை.நலம் தொகுப்பில் இது தொடர்பாக மற்றொரு சிறப்பான கட்டுரை வாசித்தது நினைவுக்கு வருகிறது .இங்கு தினமும் குடியால் வாழ்வை இழக்கும் ஒருவரை ஏனும் நான் சந்திக்கிறேன் .குடி இழிவானது என்று அனேக மனிதர்களுக்கு புரிந்தும் இருக்கிறது ஆகினும் அவர்களால் அதிலிருந்து வெளிவர இயலவில்லை .இதை வைத்தே நிச்சயம் இது வெறும் பழக்கம் சார்ந்தது மட்டும் அல்ல என்று புரிந்துகொள்ளலாம் .
டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டு 14,000 கோடி எட்டியுள்ளதாம் .தமிழகத்தில் தனி நபர் வரி மூலம் கிட்டும் வருமானம்  சுமார் ஒன்பதாயிரம் கோடிகளே.(ஏதோ ஒரு புள்ளிவிபரம் சொல்வது )
பெரும் தனக்காரர்கள் வரி கட்டுவதை காட்டிலும் அன்றாடம் கூலி வாங்கி சம்பாதிக்கும் ஏழை எளியவர்கள் அரசாங்கத்திற்கு டாஸ்மாக் மூலம் அதிக வரியை செலுத்துகின்றனர் என்பதே நிதரிசனம் .

குடியின் உக்கிரத்தை சிறு வயதில் பக்கத்திலிருந்து அனுபவித்து உள்ளேன் .எனது தந்தையின் உயிரை காவு வாங்கியது .இன்றுவரை எனக்கு குடிபோதையில் இருப்பவரை கண்டால் ஒரு பயமும் நடுக்கமும் நீங்கவில்லை .போரும் ,சமூக அநீதிகள் மூலம் நிகழும் உயிரிழப்புகளை காட்டிலும் குடியினால் ஏற்படும் இழப்பு பன்மடங்கு அதிகமானது .இத்தனை இருந்தும் இது ஒரு பெரும் மரபாக இன்று திணிக்கபடுகிறது.குடி பழக்கம் இருக்கும் நபரை கேட்டால் -பெரும்பாலும் மதுவை புதிதாக ஒருவருக்கு அறிமுகபடுத்துபவர் -பெரும் குடிகாரராக இருக்க மாட்டார் ,சமூக தளத்தில் தன்னை விட மரியாதையாக இருப்பார் ஒரு social drinker ஆக இருப்பார் .ஆனால் குடியில் சிக்குபவனோ வெகு விரைவில் அதன் ஆழத்தில் தன்னை தொலைத்து விடுகிறான் .இதற்கு அரசாங்கமும் துணை நிற்பது வெட்ககேடாக இருக்கிறது .

 

சுனில் கிருஷ்ணன்

 


அன்புள்ள ஜெமோ,
தங்களின் “நமக்குள் இருக்கும் பேய்” பார்க்கும்போது நமக்குள் பல பேய்கள் இருக்கின்றன எனத்தோன்றியது. அதில் ஒன்றான கோபப்பேய் பற்றி…
எனது தந்தையின் கோபம் எங்கள் குடும்பத்தில் “டெரர்”தான். ஆனால் அவரது சகோதரரின் முக்கியமாக அவரது தந்தையாரின் (என் தாத்தா) கோபங்களுடன் ஒப்பிடும்போது அப்பா பரம “சாது”!
அப்பாவின் கோபம் கொஞ்சமாவது என்னுள் இருக்கிறது – மனைவியோ, பையனோ “சமாதான” காலங்களில் நினைவுபடுத்தும்போது ஆச்சரியப்பட்டிருக்கிறேன் – அப்பா கோபத்தை வெறுத்தும், என்னையறியாமல் அந்தப்பேய் Aliens பட Alien மாதிரி உள்ளே இருக்கிறது, அவ்வப்போது தலைக்காட்டுகிறது. கொஞ்ச பங்காவது என் குழந்தைகளிடமும் இருக்கும்?)
தங்கள் தந்தை, தமையனார் அவர்களின் கோபங்களைப்பற்றி உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். முதலில் நாஞ்சில் மண்ணே இப்படித்தானோ என்று தோன்றியது (அப்பா,தாத்தா எல்லாம் நாகராஜ கோவில் கீழ ரத வீதி “பொறுமைசாலி”கள்!.)
அப்புறம் எல்லைகளை விரித்தால் யாரும் எந்த மாவட்டக்கார்களும் (கொங்கு, நெல்லை…மதுரை…எப்பா!) மாநில, நாட்டு காரர்களும் சளைத்தவர்களல்ல…
உங்களிடம் ஆச்சரியப்படும் பல விஷயங்களில் ஒன்று – எப்படி இந்த பேயை சாமாளிக்கிறீர்கள்…தந்தை, தமையனாரின் “பாதிப்பு” கொஞ்சம்கூடவா இல்லை? இப்போது “கனிந்திருந்தாலும்” அட்லீஸ்ட் முன்னால்…?
எவ்வளவு எரிச்சலூட்டக்கூடிய, சலிப்பெற்றக்கூடிய இணைய வசைகள் (இவர்களிடம் எனக்கு எரிச்சலை விட ஆச்சரியம்தான்! எப்படிங்க இவ்வளவு நேரம் கிடைக்கிறது இவர்களுக்கெல்லாம், உட்கார்ந்து சலிக்காமல் டைப் செய்கிறார்கள்!)
பழைய பதிவுகளில் உங்கள் கோபத்தைப்பற்றி சொன்னமாதிரி நியாபகம் இல்லை (“தேர்வு” பதிவில் சிறுவன் அஜீதனின் மதிப்பெண் பட்டியலைப்பார்த்து கோபப்பட்டதாக நினைவு…தவறாக இருக்கலாம்).
இந்த கடிதத்தில் நீங்கள் கோபப்படுமாறு நான் எதுவும் எழுதினமாதிரி தோன்றவில்லை, இருந்தால் மன்னிக்கவும்!!! (நேரில் பார்த்து பேசினால்தான் சிங்கம் புலி படிமானம் போகும் என்று நினைக்கிறேன்!)
Essex சிவா
அன்புள்ள ஜெ
தங்கள் ‘நமக்குள் இருக்கும் பேய்’ கட்டுரை (உரை) பிரமாதம் என்று ஏற்கனவே தங்களுக்கு எழுதியிருக்கிறேன்
கட்டுரையில் ஒரு சிறு திருத்தம் டெட்ரா ஹைட்ரோ ஐஸோ க்யுனலோன் THIQ என்று அழைக்கப் படுகிறது.(TIQ அல்ல). மருத்துவத் துறையில்  தற்சமயம் THIQ வின் செல்வாக்கு  குறைந்துள்ளது.எண்பதுகளில் THIQ hypothesis புகழ் பெற்றிருந்தது.இப்போது டோபமின் காலம்.எனினும் THIQ மறுபிறவி எடுக்கலாம்.
நன்றி
அன்புடன்
ராமானுஜம்
முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்றைய காந்தி-கடிதம்