கடல்புரத்தில்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   சமீபத்தில் வண்ண நிலவன் எழுதிய ‘கடல்புரத்தில்’ நாவல் படித்தேன். வாசிக்க வாசிக்க, மனதிற்கு மிகுந்த நெருக்கமான படைப்போடு ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர நேர்ந்தது. மிகவும் எளிமையான மொழி, நுட்பமான விவரணை, எளிய காட்சியமைப்பு. முப்பது வருடங்களுக்கு முன் இருந்த ஒரு கடற்கரை கிராமத்தையும்,எளிய மீனவர்களையும், வாழ்கையை அவர்கள் எதிர்கொள்ளும் முறையையும்  நூறு பக்கங்களில் நுட்பமாகச் சொல்லிய விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளருக்கு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். பிலோமிக்குட்டி போன்ற ஒரு பெண்ணை வாழ்க்கையில் ஒரு முறையாவது கடந்து செல்ல முடியுமா என்று மனம் ஏங்குகிறது. மனிதர்கள் அன்பு என்ற மையச்  சரடால் மட்டுமே பின்னப் பட்டிருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லும் இன்னொரு படைப்பு.  நாவலை வாசித்து முடிக்கையில், என்னுடைய மூச்சிலும் உப்புக் காற்று படிந்திருப்பது போன்று உணர்ந்தேன்.என்னுடைய கேள்வி, வண்ண நிலவன் தான் எழுதிய முன்னுரையில் “அன்பு வழி” போன்ற நாவலைத் தானும் ஒருநாள் எழுதி விட  முடியும் என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்து எழுதிச் செல்வதாகச் சொல்கிறார்.  “அன்பு வழி” என்ற நாவலை எழுதியது யார்? தயவுகூர்ந்து  நேரமிருந்தால் இப்படைப்பு குறித்து விளக்கவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

மிக்க அன்புடன்,

கணேஷ்

அன்புள்ள கணேஷ்

பேர் லாகர் குயிஸ்ட் ஸ்வீடிஷ் மொழியில் எழுதிய பரபாஸ் என்ற நாவலே தமிழில் க நா சுப்ரமணியத்தால் அன்புவழி (கிழக்கில் கிடைக்கிறது) என்ற பேரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இது கிறிஸ்துவின் உயிருக்குத் பதிலாக தன் உயிரை பெற்ற பரபாஸ் என்ற திருடனின் எஞ்சிய வாழ்க்கையைச் சொல்லக்கூடிய நாவல்

ஜெ

முந்தைய கட்டுரைஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
அடுத்த கட்டுரைஅறம் – கதைகள் ஒருகடிதம்