முத்தப்பனும் பகவதியும் முப்பதாண்டுகளும்

காசர்கோடு தொலைபேசி நிலையத்திற்கு நான் பிறிதொரு முறை சென்றதில்லை. கே.எஸ்.அப்துல்லா அவர்களின் அந்தப் பழைய கட்டிடம் சிதிலமாகி அப்படியே நின்றிருக்கிறது. அதற்கப்பால் பிரம்மாண்டமாக எழுந்த புதிய தொலைபேசி நிலையம் மெல்ல மெல்ல ஆளோய்ந்து இன்று ஒரு சரித்திர சின்னம் போல அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.

பி.எஸ்.என்.எல்லிலிருந்து எனது தோழர்கள்  ஒட்டுமொத்தமாக கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேறினார்கள். விருப்ப ஓய்வு என்று அதற்குப்பெயர். ஆனால் அந்த விருப்பத்தை தெரிவிக்கவில்லை என்றால் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு இடமாற்றம் பெற்று அலையவேண்டியிருக்கும். முறையான மாத ஊதியம் கிடைக்காமலும் ஆகும். மும்மடங்கு நான்கு மடங்கு ஐந்து மடங்கு பணிச்சுமை கூட்டப்படும். ஆகவே அவர்கள் வெளியே வந்தனர். கேரளத்தில் இன்று அடுத்த தலைமுறைகள் விரைவாக ஏதேனும் வேலைக்கு சென்றுவிடுவதனால் அவர்கள் எவரும் பொருளியல் நெருக்கடியில் இல்லை என்பது ஓர் ஆறுதல்.

2019-ல் என் நண்பர்கள் ஒட்டுமொத்தமாக விருப்ப ஓய்வு கொடுத்தபோது  நிகழ்ந்த விழாவுக்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஒரு கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டது. தனியார் செல்பேசி சேவைகளையும் மக்களுக்கு வழங்கும் நோக்கம் கொண்ட ஒரு வணிக அமைப்பு அது. வணிக லாபத்தை விட ஓய்வு பெற்றவர்கள் மேலும் சில ஆண்டுகள் ஏதேனும் செய்யவேண்டும் ,ஒவ்வொரு நாளும் கிளம்பி  எங்காவது செல்லவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அதற்குள் கோவிட் தொற்று ஏற்பட்டது. கோவிட் காலம் முடிந்து மீண்டும் இப்போது அந்த கூட்டுறவு அமைப்பும் அதன் பணிகளும் ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன.

சென்ற ஏப்ரலில் கருணாகரனும் பாலசந்திரனும் என்னை அழைத்திருந்தார்கள். எனக்கு அறுபது ஆண்டு நிறைவு வருவதை நினைவூட்டி, அவர்களிலும் ஒன்பது பேர் அறுபது ஆண்டு நிறைவுபெறுவதை தெரிவித்தார்கள். நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம் என்றார்கள். நான் அப்போது அமெரிக்காவுக்கு செல்லும் திட்டத்தில் இருந்தேன். பொழுதில்லை என்று அவர்களிடம் சொன்னேன். எனில் சென்று வந்த உடனேயே கொண்டாட்டத்தை  வைத்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆகவே ஜுன் ஐந்தாம் தேதி அளித்தேன்.

ஜுன் 2ம் தேதிதான் நான் இந்தியா வந்து சேர்வதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக ஒருநாள் விமானம் தாமதமாகி தோஹாவில் ஒருநாள் விமானநிலையத்தின் விருந்தினர்களாகத் தங்கி 3ம் தேதிதான் வந்து சேர்ந்தேன். மே 4ம் தேதி மதியமே கிளம்பி திருவனந்தபுரம் போய், அங்கிருந்து காசர்கோடுக்குச் சென்றேன்.

காசர்கோடு என்று சொல்லக்கூடாது. காசர்கோடுக்கு முன்னரே பையனூர் அருகே செறுவத்தூர். பாலசந்திரனும் கருணாகரனும் அவர்களின் மகன்களும் நண்பர்களும் ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார்கள். பாலசந்திரனின் இல்லத்தில் தங்கினேன். கேரளத்தில் நண்பர்கள் அனைவருமே ஏறத்தாழ 2005-ல் வீடு கட்டியிருக்கிறார்கள். எல்லா வீடுகளுமே நன்கு திட்டமிடப்பட்ட அழகான வீடுகள். நகரப் பகுதியில் இருக்கும் இடுங்கல் இல்லாமல், கிராமத்தில் உள்பகுதிகளில், தோட்டங்களுக்கு நடுவே போதிய இடம் எடுத்து கட்டப்பட்ட வீடுகள்.  சுற்றிலும் பூந்தோட்டங்கள்.

குறிப்பாக பாலசந்திரனின் வீட்டின் வலது பக்கம் மிகப்பெரிய வயல்வெளி திறக்கிறது. அவனுடைய வீட்டு சன்னல் வழியாக எடுக்கும் புகைப்படத்தை உலகின் தலைசிறந்த இயற்கைக்காட்சிகளில் ஒன்று என்று எங்கும் சொல்லமுடியும். பசுமை நிறைந்து ததும்பிக் கிடக்கும் வயல்வெளி. அருகில் ஒரு நீர் நிறைந்த குளம். அதன் அருகே சிறு வேளாண்மைக்குடில் சலனமின்றி பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வெயில்  விழும்போது ஒளிரும் பசுமை என்பது நம்முள் ஒரு இனிய மோனநிலையை அளிக்கிறது. வாழ்தல் ஒவ்வொரு கணமும் இனிதாக துளித்துளியாக நம்முள் இறங்குகிறது.

ஆனால் இது காலை பத்து மணி வரைதான். அதன்பின் வயல்வெளியின் நீர்ப்பரப்பிலிருந்து எழும் நீராவி வந்து நனைந்து மூச்சுத்திணறத் தொடங்குகிறது. உடல்  எரிகிறது, வியர்த்து வழிகிறது. மின்விசிறிக்கு அடியில் மட்டுமே அமர்ந்திருக்க முடியும். அந்த வெக்கை ஏறி ஏறி வந்து, மதியத்துக்குப் பிறகு மழை பெய்யுமோ என்ற மயக்கத்தை உருவாக்குகிறது. சில தருணங்களில் ஒரு சிறிய மழை வெறியுடன் அடித்து ஓய்கிறது. மீண்டும் நீராவி செறிவு தாகம் கோழிகளைப்போல வாய் திறந்து அமர்ந்திருக்கவேண்டும்.

பரஸ்ஸினி கடவு

அந்தியில் பசுமையின் மணம் கொண்ட நீராவிக்காற்று. இன்னும் சற்று அப்பால் ஏரியிலிருந்து வரும் பாசி மணம் கொண்ட காற்று. மெல்ல மெல்ல வெக்கை அடங்கி காற்றில் குளிர் ஏறுகிறது. ஏழு மணிக்கு நன்றாகவே குளிரத்தொடங்கியது. அதற்குள் கதவுகளை எல்லாம் நன்றாக மூடவேண்டும். இங்கே கொசுவலையில்லாத சாளரங்களைப்போல ஆபத்து எதுவுமில்லை. நீரும் வெயிலும் பசுமையும் அழகு  மட்டுமல்ல அவை பிரம்மாண்டமான உயிர் வெளிகளும் கூட. பல்லாயிரக்கணக்கான பூச்சிகள். பலநூறு வகை உயிர்கள். வெளிச்சம் கண்ட இடம் நோக்கி அவை பெருகி படையெடுத்து வருகின்றன.

இயற்கையுடன் வாழ்வதென்பது அத்தனை எளிதல்ல. அது இயற்கையுடன் அதன் கடுமையையும் சீண்டலையும் தாங்கி வாழும் பழக்கம் கொண்டவர்களுக்கே இயல்பானது. மற்றவர்களுக்கு புகைப்படத்தில் தான் இயற்கை இனிதாக இருக்கும்.

பாலசந்திரனின் வீட்டில் பகலிலேயே  என்னை தூக்கம்  தள்ளியது. என்னுடல் அமெரிக்க காலத்தில் இருந்தது. ஆனால் நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். ரவீந்திரன் கொடகரா, எம். ஏ. மோகனன், பவித்ரன் என… ஒவ்வொருவருடனும் உரையாடி, சிரித்து, நினைவுகளைப் பகிர்ந்து தூக்கத்தை வென்றேன்.

மாலை ஐந்து மணிக்கு நிகழ்வு. அதற்கு முன் மதிய உணவு கருணாகரனின் இல்லத்தில். கருணாகரனின் மனைவி ஆசிரியை. மிக விரிவாக சமைத்திருந்தார். கேரள பாணி மீன் உணவு, சிக்கன் பொரியல். கூடவே கேரள பாணி பிரதமன், பலாக்காய் அவியல், அன்னாசிப்பழ புளிசேரி, வெள்ளரிக்காய் போட்டுவைத்த எரிசேரி என அற்புதமான உணவு.

ஆனால் விந்தையான கலவை. மலபாரில்கூட பாயசத்துடன் கூடிய உணவில் மீன் சேர்ப்பதில்லை. நான் சிரித்தபடி கேட்டபோது “ஒருவருக்கு பிடித்தமான அனைத்தையும் தேடிச் சமைத்துவிட்டேன். ஏனென்றால் அவர் ஒருவேளை மட்டுமே என் வீட்டில் சாப்பிடுகிறார்” என்றார் கருணாகரனின் மனைவி.  அனைத்தையும் வளைத்துக்கட்டி உண்ட பின்னர் வாழ்க்கை ஒரு மயக்க நிலையை எய்தியது. கருணாகரன் எதிரே அமர்ந்து திரைச்சீலை ஓவியம் போல அலையடித்துக் கொண்டிருந்தார்.

வேறு வழியின்றி ஒரு இருபது நிமிடம் தூங்கிவிட்டு வருகிறேன் என்று அவன் வீட்டு மாடியில் சென்று படுக்கையில் படுத்து தூங்கினேன். அங்கிருந்து வீட்டுக்கு வந்து ஆடைமாற்றிக்கொண்டேன். வேட்டி, சிவகுருநாதன் அளித்த தவிட்டு நிற சட்டை. சிவகுருநாதன் சட்டைகள் ஒரு தனி கௌரவத்தை வழங்குவதை இதற்குள் கவனித்திருக்கிறேன். முதன்மை நிகழ்வுகளில் நாம் அணிவதற்குரியவை அவை.

முதன்மை நிகழ்வுகளில் இரண்டுவகையான சட்டைகளைத்தான் அணிய முடியும். ஒன்று மிக உயர்ந்த விலை கொண்ட பிராண்டட் சட்டைகள்.  பத்து பதினைந்தாயிரம் ரூபாய் இல்லாமல் அவற்றை நாம் வாங்க முடியாது. கொள்கை அடிப்படையில் அவற்றிற்கு நான் முற்றிலும் எதிரானவன். அல்லது  சிவகுருநாதனின் நூற்பு அமைப்பு உருவாக்குவது போன்ற கைத்தறி நெசவு, இயற்கை வண்ண ஆடைகள். அவை எளிமையான  நிமிர்வு ஒன்றை நமக்கு அளிக்கின்றன. அவற்றை பார்ப்பவர்கள் ஆடையையன்றி கூடவே ஒரு கொள்கையையும் பார்ப்பதனால்  நமது கவுரவம் ஒருபடி கூடுகிறதே அன்றி குறைவதில்லை. புகைப்படத்தில் அவை மிக தெளிவான தனித்தன்மையைக் காட்டுகின்றன.

ஒரு பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே எந்த தயக்கமும் இல்லாமல் நூற்பு ஆடையைத்தான் நான் சிபாரிசு செய்வேன். நான் கலந்துகொள்ளும் உயர்வட்ட நிகழ்வுகளிலும் சரி, சிறப்பு நிகழ்ச்சிகளிலும் சரி, வேறு எந்த சட்டையை அணிந்தாலும் அதன் விலை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு குறைவென்றாலும் ஒரு அன்றாட மலிவுத்தோற்றத்தை அளிப்பதாக ஆகிவிடும்.

நண்பர் ரவீந்திரன் கொடகரா எங்கள் பி.எஸ்.என்.எல் தொலைபேசி சங்கத்தின் பொறுப்பிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பிலும் இருந்தவர். அவருடைய தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ் பெற்ற தியாகிகளில் ஒருவர். நண்பர்  வி.பி.பாலசந்திரனின் தந்தை வி.பி.சிந்தனைப்போல அவரும் அப்பகுதியில் சிலைகள், நூலகங்கள் வழியாக நினைவு கூரப்படுபவர். ரவீந்திரன் கொடகரா முன்னரே உருவாக்கிய ஓர் அமைப்பு கதளீவனம். ஒரு கூட்டுறவு நிறுவனம். கேரளத்தில் இடதுசாரிகளின் கூட்டுறவு நிறுவனங்கள் பெரும்பாலும் மிக வெற்றிகரமானவை. நிர்வாகிகள் யோக்கியமாக இருந்தால் கூட்டுறவு போல மிகச்சிறந்த தொழில்முறை வேறில்லை.

செறுவத்தூரில் அமைந்திருக்கும் இந்த அமைப்பு அங்கிருந்த ஒரு பழைய நம்பூதிரி ஒருவரின் இல்லத்தை வாங்கி புதிதாகக் கட்டி எழுப்பப்பட்டது. ஆயுர்வேத மருத்துவம் யோகப்பயிற்சி மற்றும் கலைப்பயிற்சிகளை வழங்கக்கூடியது. பத்து ஏக்கர் நிலத்தில் வேளாண்மையும் செய்கிறார்கள். வெளிநாட்டில் இருந்தெல்லாம் பயணிகள் வந்து தங்கி ஆயுர்வேத சிகிச்சைகள் எடுத்து செல்கிறார்கள். அங்கு இருந்த பொது அரங்கில்தான் நிகழ்ச்சி.

எனது நண்பர்கள் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள். நினைவில் இருந்து முகங்கள் உருப்பெருகி வந்துகொண்டிருந்தன. நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்தித்த நாராயண நம்பீசன் “டேய் நீ இன்னும் நகங்கடிக்கிற பழக்கத்தை விடலையா? என்னிக்குடா மனுஷனாகப்போற?” என்று கேட்டான். சிலர் உடல்நலம் குன்றியவர்களாகத் தெரிந்தார்கள், சிலர் முன்னிலும் இளையவர்களாகவும். தளர்ந்த தோற்றம் கொண்டவர்கள் அனைவருமே மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது தற்செயல் அல்ல.

விழாவில் என்னுடன் அறுபது ஆகும் நண்பர்கள் அனைவருக்கும் நான் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தேன். அவர்கள் எனக்கு பொன்னாடை போர்த்தி ஒரு சால்வையை அணிவித்தார்கள். ஒரு பெரிய நிலக்காட்சி ஓவியம் எனக்கு பரிசாக அளிக்கப்பட்டது அதை வரைந்த ஓவியரே வந்து வழங்கினார். நான் உரையாற்றினேன்.

என்னை வாழ்த்தி உரையாற்றுவதற்கு வருவதாக இருந்த சி.வி.பாலகிருஷ்ணன் அன்று வரமுடியவில்லை. அவர் அமைச்சர் பங்கு கொள்ளும் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நிகழ்ச்சி தாமதமாக அங்கே சிக்கிக்கொண்டார். அது உலகச்சுற்றுச்சூழல் நாள் என்பதனால் எல்லா இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருந்தது. மறுநாள் காலை பாலசந்திரனின் இல்லத்துக்கு சி.வி.பாலகிருஷ்ணன் வந்து நெடுநேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.

உலகச்சுற்றுச்சூழல் நாளை ஒட்டி கதளீவனத்தில் நான் ஒரு இலஞ்சி மரம் கன்றை நட்டேன். என்னுடைய உரையில் காசர்கோடுக்கும் எனக்குமான உறவைச் சொன்னேன். காசர் கோடு தொலைபேசி நிலையத்திற்கு ஒருபோதும் திரும்பிப்போகாத நான் மீண்டும் மீண்டும் காசர்கோடின் நண்பர்களை நோக்கி வந்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்நண்பர்களால் ஆனது அத்தொலைபேசி நிலையம்.

என் வாழ்க்கையின் மிகக் கொந்தளிப்பான நாட்களில் என்னுடன் இருந்த நண்பர்கள். விழாவில் கருணாகரனின் அன்னையை நினைவு கூர்ந்து பேசினேன். நான் காசர்கோடில் தனிமையை உணர்வது ஓணம் போன்ற நாட்களில் மொத்த விடுதியும் ஊருக்குச் சென்றுவிடும். தன்னந்தனிமையில் நான் எஞ்சுவேன். அதற்கு ஆயிரம் சாக்குகள் சொன்னாலும் கூட என்னுடைய தனிமையை உணர்ந்த கருணாகரன் என்னை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று அவன் வீட்டில் தங்கவைத்தான்.

அன்று அவனுடைய அன்னையின் கையால் உணவுண்டேன். நீண்ட இடைவேளைக்குப்பிறகு ஒரு அன்னையின் கையால் உணவுண்டபோது மிகுந்த அகக்கொந்தளிப்பை அடைந்தேன். என்னுடைய அம்மாவும் அப்பாவும் தற்கொலை செய்துகொண்ட செய்தியை நான் காசர்கோடில் ஒரு நண்பரிடமும் சொன்னதில்லை. மிக நெருக்கமாக இருந்த கருணாகரனிடமும் பாலசந்திரனிடமும் கூட. ஏனெனில் அவர்களுடன் உள்ள உறவை ஒரு இலக்கிய கொண்டாட்டமாக களியாட்டாக மாற்றி வைத்திருந்தேன். அதில் துயரம் ஊடாட நான் விரும்பவில்லை. எந்த வகையான பரிதாபத்தையும் நான் எதிர்பார்க்கவுமில்லை.

ஆனால் கருணாகரனுடைய அம்மா என்னிடம் “உனக்கு ஏதோ துயர் இருக்கிறது,  என்ன அது மகனே?” என்று கேட்டார். நான் அவரிடம் என் அம்மா அப்பா இறந்து போனதைச் சொன்னேன். “அஞ்சாதே உனக்கு தெய்வம் துணையிருக்கும்” என்று சொன்னார். மறுநாள் என்னை பரஸ்ஸினிக் கடவு முத்தப்பன் ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு கள்ளும் வேகவைத்த பயறும் பிரசாதமாகக் கிடைத்தது. கள்ளைப் பார்த்து நான் தயங்கினேன். அம்மா என்னிடம் புன்னகைத்தபடி “குடி, முத்தப்பன் பிரசாதம். பழி ஒன்றுமில்லை” என்றார். மது அருந்தலாகாது என்ற என் அப்பாவின் கட்டளையை அன்னையின் ஆணையால் மீறினேன். ஆனால் அன்று முதல்முறையாக என் உள்ளத்தில் அனைத்துக்கட்டுகளும் விலகி ஒரு எளிதான நிலையை உணர்ந்தேன். அந்த மேடையிலேயே கருணாகரன் அன்னையை நினைவுகூர்ந்தது உள்ளத்தில் பெரிய நிறைவை உருவாக்குவதாக அமைந்தது.

விழாவுக்குப்பின் ரசாக் கரிவள்ளூர் நிகழ்த்திய கசல் இசை நிகழ்ச்சி நடந்தது. ஒரு கசல் பாடல், பாபுராஜ் இசையமைத்த கசல் பாணியிலான திரைப்பாடலின் கசல் வடிவம் என மாறி மாறி பாடினார். பாபுராஜ் ஒரு கசல் பாடகராக மும்பையில் அலைந்தவர். திரையில் அவர் போட்ட அத்தனை பாடல்களுமே கசல் பாணியிலானவை தான். அந்தப்பாடல்களை ஆர்.கே சேகர் பின்னணி இசை கொடுத்து ஒழுங்கு படுத்தியிருப்பார்.

ஆர்கே சேகரின் பின்னணி இசை அதை மேலை இசையுடன் பொருத்துவது போலிருக்கும். ஆனால் அந்தப்பகுதிகளை நீக்கிவிட்டு பாபுராஜின் பாடல்களை மட்டுமே பாடும்போது அது தூய கசலாகிறது. அன்று காலையிலிருந்தே வெவ்வேறு பாபுராஜ் பாடல்களை நினைவு கூர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘கடலே நீலக்கடலே’ ‘பாதிராவாயில்ல’ போன்ற பாடல்கள். அன்று மாலை அவற்றையே ரசாக் கரிவள்ளூர் பாடியபோது பாபுராஜ் இறக்கவில்லை என்ற நிறைவை அடைந்தேன். தலைமுறை தலைமுறைகளாக அவர் வாழ்கிறார்.

ரஸாக் கரிவெள்ளூர்(கோட் போட்டிருப்பவர்) நீலச்சட்டை எம்.ஏ.மோகனன்

அரங்கிலிருந்த கணிசமானவர்கள் அடுத்த தலைமுறையினர். அவர்களும் அந்தப்பாடலில் ஊன்றி அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது. ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வு இசையுடன் முடியும்போது கிடைக்கும் நிறைவு எளிதல்ல. கரிவெள்ளூர்  ரசாக் எம்.ஏ.மோகனனுடன் சேர்ந்து படித்தவரும் கூட அவரைத்தழுவி அவரிடம் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

ரசாக் தொழில்முறை பாடகர். பள்ளிக்கல்விக்கு மேல் பாடலையே தன்னுடைய வாழ்க்கையாக எடுத்துக்கொண்டார். எம்.ஏ.மோகனன் சொன்னான், “அன்று அவனிடம் நான் வேலைக்கு போகும்படி சொன்னேன். உறுதியாக மறுத்துவிட்டான். இன்று அவனுக்கு புகழும் பணமும் வருகிறது. நான் வேலை பார்த்து ஓய்வு பெற்று ஓய்வு பெற்றவன் என்ற அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.” தன் கலையை உறுதியாக தொடர்பவரை கலை கைவிடுவதில்லை என்று நினைத்துக்கொண்டேன்

மறுநாள் பாலசந்திரனின் குடும்பத்துடன் கருணாகரன் ரவீந்திரனின் கொடகரா குடும்பமும் இணைந்து ஒரு பெரிய வேனில் அப்பகுதியைச் சுற்றி வந்தோம். மாடாயிக்காவுக்கு சென்றோம். அங்கிருந்து பரஸ்ஸினிக் கடவு. மலபார் பொதுவாக பெரிய தேவாலயங்கள் இல்லை. இப்பகுதி பெரும்பாலும் நாட்டார் வழிபாட்டுக்குள்ளேயே நெடுங்காலமாக இருந்துவந்தது. பையனூரில் உள்ள முருகன் ஆலயம் சற்றுப் பெரியது. மற்றபடி மலபாரின் புகழ் பெற்ற தெய்வங்கள் எல்லாமே தொல்குடி தெய்வங்கள்தான்.

முதன்மை தெய்வம் பரஸ்ஸினிக்கடவு முத்தப்பன். முத்தப்பன் என்றால் தாத்தா. ஒரு வேட்டைக்காரர். அவர் 1700-களின் இறுதியில் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. இன்று அவர் மலபாரின் மிகப்புகழ்பெற்ற காவல் தெய்வமாக திகழ்கிறார்.

மாடாயி காவிலம்மா என்று அழைக்கப்படும் பகவதி ஆலயம் மாடாயி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் மிகச்சிறிய கோயிலாக இருந்தது. பிடாரர்கள் என்று குறிப்பிடும் குறிப்பிட்ட குடியினர் மட்டுமே அங்கு பூசை செய்கிறார்கள். கர்நாடகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அங்கு வருகிறார்கள். இப்போது எடுத்துக் கட்டி கட்டி பெரிய ஆலயமாக ஆக்கியிருக்கிறார்கள். ஆயினும் மலபாரின் பகவதி ஆலயங்களில் விந்தையானதொரு கலாச்சார சூழல் நிலவுகிறது. உள்ளூர் முகங்களையும் கர்நாடக முகங்களையும் பார்க்க முடியும்.

பெரிய கான்கிரீட் கட்டிடத்துக்குள் பொட்டலம் கட்டிவைத்தது போல் பழைய ஆலயத்தின் சிறிய மரக்கட்டிடம் அமைந்திருந்தது. அதற்குள் பகவதி மாடாயி காவில் பகவதி. சற்று பெரிய உருவம். கடுசர்க்கரை என்னும் பொருளால் அமைக்கப்பட்டது. திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் ஆலயத்தின் பெருமாள் உருவமும் கடுசர்க்கரையால் அமைக்கப்பட்டதுதான். சுண்ணாம்புடன் வெவ்வேறு பொருட்கள் கலந்து உருவாக்கப்படுவது அது. மாடாயிக்காவில் கேரளத்தின் புகழ் பெற்ற ஏழுகன்னியர் அல்லது ஏழு மாதாக்கள் சிலைகள் உள்ளன இரண்டுமே வழிபடப்படுகின்றன.

அங்கிருந்து பரஸ்ஸினிக்கடவு. பரஸ்ஸினிக்கடவு முத்தப்பன் ஆலயம் வளபட்டினம் ஆற்றின் கரையில் அமைந்த ஒரு கட்டிடமாக இருந்தது. மேலிருந்து படிகளில் இறங்கி அதை நோக்கி செல்லவேண்டும் என்பது என்னுடைய நினைவு. ஆனால் இப்போது கார் ஆலயம் வரை சென்று நிற்கும். ஏராளமான விடுதிகள், உணவகங்கள், கடைகள். வளபட்டினம் ஆற்றங்கரை முழுக்க கல் பதித்த பெரிய நடைபாதை. தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தாலும் கூட பழைய நாட்டார் தன்மை, தனிமை அகன்றுவிட்டிருந்தது.

ஒருநாள் அந்நிலத்தில் சுற்றி வந்தபோது ஒரு வாழ்க்கையை வாழ்ந்த நிறைவை அடைந்தேன். முப்பதாண்டுகள் பின் சென்று இளைஞனாக இருந்தேன். மாலையில் நண்பர்களிடம் விடை பெற்று ரயிலேறினேன். இந்த மண்ணுக்கு மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கப் போகிறேன்.

முந்தைய கட்டுரைஇராயகோபுரம், மதுரை
அடுத்த கட்டுரைபூன் முகாம் முழுநிகழ்வு- ஜெகதீஷ்குமார்