அ.கி.பரந்தாமனாரின் பெரும் பங்களிப்பு என்பது அவர் நல்ல தமிழ் எழுதக் கற்றுத்தந்தார் என்பது என எண்ணியிருந்தேன். உண்மை, அவருடைய ‘நல்லதமிழ் எழுதவேண்டுமா?’ ஒரு அரிய வழிகாட்டு நூல். ஆனால் அது தமிழ் இலக்கியத்தில் ஓர் அழிவை உருவாக்கிய நூல் என அண்மையில் தோன்றத் தொடங்கியது. இலக்கியவாதிகள் எனச் சொல்லிக்கொள்பவர்கள் அந்நூலை அளவுகோலாக்கி கவிதைமொழியை, புனைவுமொழியை அளக்கவும் தரப்படுத்தவும் விமர்சிக்கவும் தொடங்கினர்.
தரப்படுத்தப்பட்ட மொழி பொதுத்தொடர்புக்கு உரியது. அந்த மொழியில் செய்திக்கட்டுரைகள், துண்டுப்பிரசுரங்கள் எழுதப்படலாம். அந்த மொழியில் இருந்து எந்த அளவுக்கு முன்னகர்ந்திருக்கிறது என்பதே கவிதைமொழிக்கும் புனைவுமொழிக்கும் அளவுகோல். மொழியிலக்கணத்தை மீறியே இலக்கியம் அதை எய்துகிறது. இலக்கியம் என்பது மொழி தன்னை கலைத்து அடுக்கிக்கொள்ளும் முறை. பறவை சிறகுகளை கலைத்து நீவிக்கொள்வதுபோல