தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ர.சு.நல்லபெருமாள் 20-4-2011அன்று மறைந்தார். அவருக்கு வயது 81. திருநெல்வேலியில் வாழ்ந்து வந்தார்.
காந்திய இயக்கம் தமிழில் இரு குறிப்பிட்ட வகையான எழுத்தாளர்களை உருவாக்கியது. ந.பிச்சமூர்த்தி முதல் சி.சு.செல்லப்பா வரையிலான எழுத்தாளர்கள் காந்திய இயக்கத்தின் இலட்சியவாதத்தை ஆதாரமாகக் கொண்டவர்கள். அந்த இலட்சியவாதத்தின் மூலம் சமூகத்தை அறிய முயன்றவர்கள்
இன்னொரு வரிசை உண்டு, காந்திய அரசியல்கோட்பாடுகளைக்கொண்டு வாழ்க்கையை ஆராயும் அறிவார்ந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள். அவர்களில் பலர் பின்னர் காந்தியத்தையும் அதன் தாக்கங்களையும்கூட அந்தக் கோணத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். கு.ராஜவேலு, ஜெகசிற்பியன் போல. அந்த வரிசையில் ஒருவர் ர.சு.நல்லபெருமாள் [ரவணசமுத்திரம் சுப்பையாபிள்ளை நல்லபெருமாள்]
நல்லபெருமாள் இலக்கியம் என்பது கருத்துப்பிரச்சாரத்திற்கும் உணர்ச்சிவசப்படாத புறவயமான ஆய்வுக்கும் உரிய ஒரு மொழிக்களம் என நினைத்தவர். பெரும்பாலான படைப்புகளை தர்க்கத்தன்மையுடன் புறவயமான அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார். எதையும் கொந்தளிப்புடன் அணுகும் ஒரு சமூகத்தில் அவ்வகையான அணுகுமுறை பல புதிய வாசல்களை திறக்கக்கூடியதாக அமைந்தது
அவரது முதன்மையான படைப்பு கல்லுக்குள் ஈரம் என்ற நாவல். போராட்டங்கள், மாயமான்கள், மயக்கங்கள், மருக்கொழுந்து, மங்கை, திருடர்கள், நம்பிக்கைகள, எண்ணங்கள் மாறலாம் போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். இந்திய மெய்ஞானம் [இந்திய சிந்தனை மரபு] பற்றியும் சைவம்[ பிரம்மரகசியம்] பற்றியும் நூல்களை எழுதியிருக்கிறார். அவரது பாரதம் வளர்ந்த கதை குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வு.
திருநெல்வேலியில் அவர் வழக்கறிஞராக பணியாற்றிவந்தார். ஓரிருமுறை தி.க.சியை பார்க்கச்சென்றபோது அவரை சந்திக்கும்படி தி.க.சி சொல்லியிருக்கிறார், சந்திக்க முடியவில்லை. அவரது எழுத்துக்கள் என் முதிரா இளமையில் நிதானமான பார்வைகொண்ட புதிய வாசிப்பை அளித்தன. பின் அவற்றில் இருந்து நான் விலகி வந்துவிட்டிருந்தேன்
அவரது மகள்கள் சிவஞானம், அலர்மேல்மங்கை இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள்.
ர.சுநல்லபெருமாளுக்கு அஞ்சலி