விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்

ரம்யா

அரவிந்த் சுவாமிநாதன்

அன்பு ஜெ,

அரவிந்த் ஸ்வாமிநாதன் அவர்களின் இரு தொகுப்பு புத்தகங்களை (யாவரும் பப்ளிஷர்ஸ்) தமிழ் விக்கி பதிவுகளுக்காக பரிந்துரைத்திருந்தீர்கள். மிக அருமையான புத்தகம் ஜெ. ஒன்று “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் பாகம் 1”, இரண்டாவது ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்: பெண்ணெழுத்து” 1892-1947  காலகட்டத்தில் எழுதிய எழுத்தாளர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் இந்த புத்தகங்களில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

**

தொகுப்பு நூல்கள் பல வகைகளில் வருகின்றன. சமீபத்தில் புத்தகத் திருவிழாவில் புதுமைப்பித்தனின் தொகுப்பு நூல் மலிவான விலையில் கிடைத்தது. அது தவிரவும் அ.மாதவையா, அசோகமித்திரன் என முக்கியமான எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன.  நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார்கள். இதேபோல தேவதச்சன், தேவதேவன் கவிதைத் தொகுப்புகளும் வந்திருந்தன. இப்படி எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகளின் தொகுப்புகளைத் தாண்டி அ.கா.பெருமாள் ஐயாவின் “தமிழறிஞர்கள்” போன்ற அறிஞர்களின் இலக்கிய வாழ்க்கையைப் பற்றிய தொகுப்புகள் உள்ளன. நாட்டுப்புறக்கலைகள் சார்ந்த தொகுப்புகள் வருகின்றன. தமிழ் விக்கி பதிவுகளுக்காக தேடும்போது புலவர் கா.கோவிந்தன் அவர்கள் சங்கப்பாடல்களை புலவர்கள் வாரியாக தொகுத்திருந்தார். புலவர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புடன் அவர் சங்கத்தொகை நூல்களில் அந்தப் புலவர் எழுதிய அனைத்துப் பாடல்களையும் தொகுத்திருந்தார். ஒரு புலவரின் வாயிலாக, வரலாற்றோடு இணைந்து அவர் எழுதிய சங்கப்பாடலை சிலாகிக்க ஏதுவாக அமைத்திருந்தார்.

கருப்பங்கிளர் சு.அ.ராமசாமிப்புலவர் “தமிழ்ப்புலவர் வரிசை” என்னும் பெயரில் 31 தொகுதிகளில் ஆயிரத்துக்கும் மேலான தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்துள்ளார். அதே போல தமிழகத்திலுள்ள சமண, பெளத்த தலங்களைப் பற்றிய தொகுப்புகளை ”தொண்டை நாட்டுச் சமணக் கோயில்கள்” போன்ற புத்தகங்கள் வழி ஏ.ஏகாம்பர நாதன் சாத்தியப்படுத்தியுள்ளார். ஈழத்து கூத்து கலைஞர்கள், கூத்துக்கலை பற்றிய தொகுப்புகளாக பேராசிரியர் மெளனகுரு ஐயாவின் “பழையதும் புதியதும்,” ”கூத்த யாத்திரை” புத்தகங்கள் ஒட்டுமொத்த கூத்துக் கலைஞர்கள், அண்ணாவியார்கள் பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கக்கூடியதாக இருந்தது. இப்படி தொகுப்பு நூல்கள் பலவகைகளில் வருகின்றன. சமீபத்தில் அழிசி ஸ்ரீநி “எழுத்து” இதழ்களை கிண்டிலில் குறிப்பிட்ட காலத்து வாசிப்பதற்கு இலவசமாக அளித்தார். இதழ்கள் வாயிலாக முன்னோடி  எழுத்தாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்தலின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த மாதிரியான தொகுப்புகள் வர வேண்டும்.

சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கியம், நவீன இலக்கியம் என தமிழ் இலக்கியத்தை பயில்வதற்கு எளிமையாக பல்வேறு காலகட்டங்களாக தமிழறிஞர்கள் பகுத்துள்ளனர். இன்று இந்த பின் நவீனத்துவ காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கும் நமக்கு (1892-1947) காலகட்டம் என்பது தொகுக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. உண்மையில் நவீன இலக்கிய காலகட்டத்தை ”விடுதலைக்கு முன்,” ”விடுதலைக்கு பின்” என்று பிரித்துக் கொள்வது மிகவும் சரியான பகுப்பென்றே கருதுகிறேன். சிந்தனைகள், பேசுபொருட்கள், எழுத்தாளர்கள், கதைக்களம் என பல மாறுதல்களை விடுதலைக்கு முன், பின் என்றே பிரிக்கலாம். ”பிறகு” நாவலில் பூமணி அவர்கள் அந்த கிராமத்திலுள்ளவர்களுக்கு சுதந்திரம் என்பது எந்த அளவிற்கு பொருட்டில்லாமல் இருக்கிறது என்பதை பகடியாக சொல்லியிருப்பார். கிராமங்களில் அவை பொருட்டில்லையானாலும் இலக்கியத்திற்கான பேசுபொருள் என்பதையும், எழுத்தாளர்கள் எல்லா மட்டத்திலிருந்தும் வருவதற்கும் விடுதலை அவசியமாயிருந்தது. அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் (1892-1947) காலகட்டத்தை எடுத்துக் கொண்டு தொகுப்பு நூல் செய்திருப்பது இவ்வகையில் சிறப்பான ஒன்று.

முதலில் அவர் ”விடுதலைக்கு முந்தைய தமிழ்ச்சிறுகதைகள் பாகம் 1” செய்யும்போது இருபத்திஐந்து எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதற்காக எண்ணற்ற இதழ்களை வாசித்திருக்கிறார். அதனைத் தொகுத்திருக்கிறார். அந்த இருபத்தி ஐந்தில் ஐந்து பெண் எழுத்தாளர்கள் இருந்தனர். பின்னரும் வெளியுலகில் பெரிதும் அறியப்படாத பல நல்ல பெண் எழுத்துக்களைப் பார்த்து ஊக்கமடைந்து தனியாக “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் – பெண்ணெழுத்து” என்ற புத்தகத்தை எழுதியதாகச் சொன்னார்.

இந்த புத்தகத்தின் உள்ளடக்கமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் முதல் பகுதியில் உள்ளன. இந்த சிறுகதைகளின் முகப்பில் அந்த சிறுகதை எந்த இதழில் வெளிவந்தது, வெளிவந்த ஆண்டு, இதழின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுகதை இதழில் வெளிவந்தது போல அதன் முகப்புப் பக்கம் கொடுத்திருப்பது நம்மை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது. இரண்டாவதாக “கதைகளின் கதை” பகுதி அமைந்துள்ளது. இதில் அந்தக் கதை வெளிவந்த இதழ் பற்றிய வரலாறு, எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் மிக நேர்த்தியாக தொகுக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர்களுடைய புகைப்படங்கள், இதழ்களின் முகப்புப் புகைப்படங்கள் மேலும் ஆழமான சித்திரத்தை அளிக்கிறது. புத்தகத்தை ஆரம்பிக்கும் போது வலையின் கண்ணியின் முனையில் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றினால் வாசித்து முடிக்கும் போது ஒரு கண்ணிவலையின் முந்நூற்றியருபது டிகிரி கோணத்தை வாசகனால் கண்டடைய முடியும். அங்கிருந்து அவன் மேலும் விரித்துச் செல்வதற்கான சாத்தியமுள்ளது.

எனக்கு வெண்முரசின் சொல்வளர்காடு நாவலில் வரும் வரிகள் நினைவிற்கு வந்தது “மானுடன் பெருவெளியின் துளி. அங்கு அவ்வாறு அமைந்தது இங்கு இவ்வாறு அமைகிறது. குடத்தில் அடங்கக்கூடியதே விண் என்பதனால் மட்டுமே அறிவு பயனுள்ளதாகிறது.” உண்மையில் அப்படியான மகத்தான துளியைத்தான் அரவிந்த் சுவாமிநாதன் அவர்கள் இந்த புத்தகத்தின் வழியாக வாசகனுக்கு எடுத்துக் காணித்திருக்கிறார். சிறுகதைகளுக்கான தன் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் போது “என் ரசனை, எனக்கு பிடித்த கதைகள் என்றில்லாமல் அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கக் கூடிய சிறுகதைகளையே நான் தேர்வு செய்தேன்” என்றார். சிறுகதைகள் அனைத்தையும் வாசித்து முடித்தபோது அதை உணர முடிந்தது.

சொல்வளர்காடு நாவலின் இன்னொரு வரியும் நினைவிற்கு வந்தது “இப்பருவெளிப்பெருக்கு ஒரு நெசவு. ஊடுசரடென செல்வது அறிபொருள். பாவுசரடென ஓடுவது பிரக்ஞை. பிரக்ஞை உறையாத ஒரு பருமணலைக்கூட இங்கு நீங்கள் தொட்டெடுக்க முடியாதென்றறிக!” இந்த புத்தகத்தின் வழி அவர் காட்டும் இந்த சிறு நெசவுத்துணியின் ஊடுபாவின் வழி ஒட்டுமொத்த விடுதலைக்கு முந்தைய சிறுகதைகளின் போக்கை தொட்டு விரித்தெடுக்கலாம் என்று தோன்றுகிறது.

இன்று இணைய காலகட்டத்தில் இதழ் ஆரம்பிப்பது பொருட்செலவு அதிகமல்லாத, ஆனால் உழைப்பை மட்டுமே கேட்கக் கூடிய ஒன்றாக உள்ள காலம். மின்னிதழ்களின் பெருக்கம் மற்றும் தொடர் செயல்பாடுகளால் சிறுகதைகளின் பெருக்கம் நிகழ்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் இதற்கிணையாகவே விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் அத்தகைய வீச்சான எழுத்து நிகழ்ந்திருக்கிறது. நவீனத்தமிழ் இலக்கியத்தில் முதல் சிறுகதை எது என்ற கேள்விக்கு பல பதில்கள் உள்ளன. பெரும்பான்மையானோர் 1915-இல் விவேகபோதினியில் வா.வே.சு.ஐயர் எழுதிய “குளத்தங்கரை அரசமரம்” தான் தமிழின் முதல் சிறுகதை என்பர்.

ஆனால் சிறுகதைக்கான மேற்கத்திய மற்றும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடிய இலக்கணமாக “ஒரே அமர்வில் வாசித்து முடிக்கக் கூடியது; முதல் வரியிலேயே கதை ஆரம்பித்தல்; கதை முழுவதுமாக ஒரு பொருள், ஒரு மனநிலை பற்றியதாகவும், ஒட்டுமொத்தமாக ஒரு ஒருமை கூடிவருவதும்” ஆகியவை கூறப்படுகிறது. அந்த வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் வேதசகாயம்பிள்ளை ஆகியோர் அ.மாதவையாவின் “கண்ணன் பெருந்தூது” சிறுகதையே தமிழின் முதல் சிறுகதை என்பர்.

எழுதப்பட்டதன் அடிப்படையில் கூட 1892இல் திருமணம் செல்வகேச முதலியார், பாரதி, அம்மணி அம்மாள் ஆகியோர் முன் வரிசையில் உள்ளனர்.  1892-லிருந்து “விவேகசிந்தாமணி” இதழில் மாதந்தோறும் சிறுகதைகள் வந்து கொண்டிருந்தன.

இன்றைக்கு மேற்கத்திய சிறுகதைகளுக்கான இலக்கணத்தை நாம் ஒத்துக் கொண்டாலும் கூட க.நா.சு அவர்கள் சொல்வது போல நம் மரபை ஆராய்ந்து அதன் சாராம்சங்களையும் கருத்தில் கொண்டு புதியதொரு விமர்சன முறையை கண்டடையும் சாத்தியத்தை நாம் கைக்கொள்ள வேண்டும். இன்று எழுதப்படும் சிறுகதைகள் பலவும் இந்த இலக்கணங்களை கேள்விக்குள்ளாக்குகின்றன. அந்த வகையில் சிறுகதையின் ஆரம்பப் புள்ளியிலிருந்து நவீன இலக்கியத்தை பகுத்துக் கொண்டு அவற்றை மதிப்பிடக்கூடிய 1947 வரையான ஒரு சித்திரத்தை அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகங்கள் அளிக்கிறது.

தொல்காப்பியத்திலேயே சிறுகதையின் இலக்கணம் இருப்பதாகத் தெரிகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் சிறுகதைகள் என்று பகுத்து விடக்கூடிய கதைகள் உள்ளன. ஆனால் இன்றைக்கு நம் கைகளில் புத்தகங்களாக, அச்சு நூல்களாக தவழக்கூடிய வாய்ப்பு 1812இல் எல்லீசு அவர்கள் காலகட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது . எல்லீசு ஏற்படுத்திய “The college of saint George” என்ற அமைப்பின் வழியாக 1822இல் வீரமாமுனிவர் “பரமார்த்த குரு கதை” என்ற நூலைத் தொகுத்தார். பின்னர் வாய்மொழியாக வழங்கி வந்த பல கதைகளை நம் அறிஞர்களும், தமிழ் மேல்பற்றுள்ள வெளி நாட்டவரும் தொகுக்க ஆரம்பித்தனர். அந்தத்தொகுப்புகளில் தன் புனைக்கதைகளையும் எழுத ஆரம்பித்தனர். 1892க்குப் பிறகு வந்த பத்திரிக்கைகள், இதழ்கள் வழியாக எழுத்து வளர ஆரம்பித்தது. முதலில் தீவிர எழுத்து, வெகுஜன எழுத்து என்ற பாகுபாடுகள் அற்று ஆரம்பித்த பயணம் மெல்ல பாகுபாடு ஆரம்பித்த விடயம் இதழ்களின் எழுச்சி வழியாக புலப்படுகிறது. “விவேகசிந்தாமணி,” “திராவிட மத்தியக் காலக் கதைகள்” என துவங்கிய இதழ்கள் 1915 களில் தீவிர இலக்கிய இதழ்களான “சக்ரவர்த்தினி,” “மணிக்கொடி,” “கலாமோகினி” போன்றவையாக உருவெடுத்தன.  தீவிர இதழ்களுக்கு மாற்றாக “ஆனந்தபோதினி” ஆரம்பிக்கப்படும்போது வெகுஜன எழுத்து, விஷயங்களின் ஆதிக்கம் சிறுபத்திரிக்கை, இதழ்களில் ஆரம்பிக்கிறது. ஆனந்தபோதினியின் வெற்றியைப் பார்த்து ஊக்கம் கொண்டு “ஆனந்த விகடன்,” “ஆநந்தகுணபோதினி” ஆகிய இதழ்கள் வெகுஜன இதழ்களாக 1925களில் துவங்குகின்றன. இதில் புதிய எழுத்தாளர்களான பலர் அறிமுகமானாலும், தீவிர எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் போன்றவர்கள் இந்த வெகுஜனப்பத்திரிக்கைகளில் எழுதவில்லை என்ற போக்கும் கவனிக்கத்தக்கது.

சக்ரவர்த்தினி இதழ் 1905இல் ஆரம்பிக்கப்படும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. பாரதி ஒரு வருடம் அதற்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். அங்கிருந்து தான் அசலாம்பிகை, அலர்மேல் மங்கை, கஜாம்பிகை, ராஜலஷ்மி அம்மாள் போன்ற எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். இந்தப் பெயர்கள் யாவும் எனக்கு புதியவை. இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் தெரிந்து கொள்ள அரவிந்த் சுவாமிநாதனின் புத்தகம் உதவுகிறது. அந்த காலகட்டத்தில் அதன் தேவை இருந்திருக்கிறது என்பது புலப்படுகிறது. “மணிக்கொடி இதழ்” மணிக்கொடி எழுத்தாளர்கள் (கு.ப.ரா, ந.பா, புதுமைப்பித்தன், மெளனி, சிட்டி, சி.சு.செல்லப்பா), மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் (லா.ச.ரா, சங்கு, க.நா.சு, எம்.வி.வி) என ஒரு நிரையை ஆரம்பித்து வைத்தது. அ.மாதவையா நடத்திய பஞ்சாமிர்தம் இதழில் அவர் தன் குடுமபத்தினர், நண்பர்கள் என அனைவரையும் எழுத ஊக்குவித்தார். அங்ஙனம் உருவான மா.கிருஷ்ணன், வி.விசாலாட்சி அம்மாள், மா.லஷ்மி அம்மாள் போன்றோர் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளை எழுதியுள்ளனர். மா.கிருஷ்ணன் எழுதிய சூழலியல் சார்ந்த புத்தகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

இந்தத் தலைமுறை பலரும் அறிந்திராத, படித்திராத சிறுகதைகளை இந்தத் தொகுப்பு நமக்கு அளிக்கிறது கடந்து போன நூற்றாண்டின் (19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) எழுத்துக்களை ஓட்டிப் பார்க்கவும், அந்த காலகட்டத்து மக்களின் வாழ்க்கைமுறை, நம்பிக்கை, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், சமூகப்பின்னணி ஆகியவற்றை அறியவும் இந்த சிறுகதைகள் உதவுகின்றன. எழுத்தாளர்கள், அவர்களின் எழுத்துக்கள் “ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு” என்று சொல்லப்படுவதுண்டு. அங்ஙனம் இந்த தொகுப்புகளின் வழியாக ஒரு காலகட்டத்தை நம்மால் குறுக்குசால் ஓட்டி காண முடிகிறது.

இந்த காலகட்டத்தின் பெண் எழுத்தாளர்களில் பெரும்பாலும் படித்த, செல்வ செழிப்புள்ள, உயர்குடிப்பெண்களே எழுத வந்துள்ளனர். மிகச்சிலரே எழுதுவதை தொழிலாகக் கொண்டு வருமானம் ஈட்டியுள்ளனர். ஒரு பெண் எழுத்தாளர் தன் வறுமையில் ரயில்வே ஸ்டேஷனின் அமர்ந்து எழுதி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தியிருக்கிறார் என்ற செய்தி அறியும்போது பிரமிப்பாய் இருந்தது. பெண்களுக்கு எழுத்து வருமானம் ஈட்டும் தொழிலாகவும் இருந்துள்ளது.

சிறுகதைகளை எடுத்துக் கொண்டால் திருமணம் செல்வகேசவ முதலியாரின் இரண்டு சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒன்று அவர் 1892இல் “விவேகசிந்தாமணி” இதழில் எழுதிய “ஆயுள்வேத பாஸ்கரன்,” அவர் 1921இல் ”அபிநவக் கதைகள்” இதழில் எழுதிய ”ஸூப்பையர்.” ஆயுள்வேத பாஸ்கரன் ராஜகிரகத்தை கதைக்களமாகக் கொண்டு பிம்பிசாரரின் மூன்றாவது மகனான “ஜீவகன்” தான் தேர்ந்தெடுத்த தொழிலான ஆயுள்வேதத்தில் எங்ஙனம் “ஆயுள்வேத பாஸ்கரன்” பட்டம் பெறுகிறான் என்பதைப்பற்றிய கதையாக உள்ளது. ”ஸூப்பையர்” கதை 1886இல் சென்னையின் சிங்காரத்தோட்டம் (people’s park) என்று சொல்லக்கூடிய மூர் மார்க்கெட்டில் நிகழ்ந்த கோரமான தீ விபத்தை கதைக்கருவாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. “கொச்சை” பிழைக்கும் கதையும் உணர்வுப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தின் சென்னை பற்றிய ஒரு விரிவான சித்திரம் இந்தக் கதைகளின் வழி புலப்படுகிறது.

”பரம்பரை ஆண்டியோ… பஞ்சத்திற்கு ஆண்டியோ” என்ற சிறுகதையின் தலைப்பே சிரிப்பை வரவழைக்கக்கூடியது. ஒரு மெல்லிய நகைச்சுவைக் கதையாக எஸ்.எம்.நடேச சாஸ்திரி இதை எழுதியுள்ளார்.

பாரதி “சுதேசமித்ரனில்” 1919இல் எழுதிய “காந்தாமணி” என் மனதிற்கு அணுக்கமான கதை. முதலில் காந்தாமணி என்ற பெண்ணின் பெயரே ரம்மியமாயிருந்தது. காலைக் காட்சிகளை பாரதி விவரிக்கும் விதம், தனக்கு விருப்பான ஷெல்லியைப் பற்றிய மேற்கோள், சூரியன் உதிப்பதை “பாலசூர்யன்” என்று சொல்லும் விதமென அந்தக்கால நடைக்கு சற்றே மாறுபட்ட தொனி இதில் தெரிகிறது. காந்தாமணி, பாட்டி, காந்தாமணியின் அப்பாவான பார்த்தசாரதி ஐயங்கார், அங்கு குளித்துக் கொண்டிருக்கும் பார்த்தசாரதி, கதைசொல்லி என ஐந்து கதாப்பாத்திரங்களும் கதைக்களமாக கிணற்றடியும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரதி இங்கு நிகழும் ஒவ்வொரு உணர்வுகளையும் மிக நுணுக்கமாகக் கடத்துகிறார். “never mind… I don’t care a dam about a சாஸ்திரம்” என அக்காலத்தில் உயர்குடி வர்க்கத்தினரிடம் புழக்கத்திலிருந்த தங்லிஷில் ஒரு வரி வருகிறது. தன் தந்தை ஆண்குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்ற செய்தியை காந்தாமணி பாட்டியிடம் சொல்கிறாள். அந்தப்பெண் பணக்காரப்பெண்ணாக, அழகாக இருந்தும் ஏன் இரண்டாம் திருமணம் என்ற பாட்டியின் கேள்விக்கு அவள் கொஞ்சம் ஐரோப்பியத்தன்மையோடு படித்த திமிரோடு இருப்பதாகவும், வயதுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டபடியாலுமென பதில் கூறுகிறாள் காந்தாமணி. வயதடையும் முன்னரே பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது தெரியவருகிறது. சில சமயம் வயதடைந்ததை மறைத்தெல்லாம் கூட திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். காந்தாமணிக்கு ஐம்பத்திஐந்து வயதானவரை திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். பாட்டி விதவையாக இருக்கிறாள். இறுதியில் காந்தாமணி தான் காதலித்த பையனுடன் ஓடிப்போவதும், மொட்டையடித்து விதவைக் கோலத்திலிருந்த பாட்டி அந்த கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த தன் பாலியக் காதலனுடன் ரங்கூனுக்கு ஓடிபோவதுமென கதை முடிகிறது. வெறுமே நிகழ்ச்சிகளை மட்டுமே சொல்லியிருக்கிறார். மீறலான கதை. இங்கிருந்து நாம் என்ன வேண்டுமானாலும் எப்படியானாலும் எடுத்து பொருள் கொள்ளும் சிறுகதை.

1924இல் பாலபாரதி இதழில் “ராஜகோபாலன் கடிதங்கள்” சிறுகதையை வா.வே.சு. ஐயர் எழுதியுள்ளார். வெறுமே தன் நண்பனுக்கு தான் கண்ட ஒரு எளிய மகிழ்வான பண்பான குடும்பத்தைப் பற்றி எழுதிய கடிதமாகவும், புல்லாங்குழல் வாசிக்கும் சுடலைமுத்து பற்றியும் இந்த சிறுகதை எழுதப்பட்டுள்ளது. வடிவ முயற்சியாக முக்கியமான சிறுகதை என புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்ட சிறுகதை. இந்த சிறுகதையை வாசிக்கும் போது எழுத்தாளர் வைரவன் சமீபத்தில் “அந்திமந்தாரை” என்ற சிறுகதையை கடிதம் என்ற வடிவச் சோதனைக்கு உட்படுத்தியதாகச் சொல்லி அனுப்பி வைத்தது ஞாபகம் வந்தது. அவருக்கு “ராஜகோபாலன் கடிதங்கள்” சிறுகதையை அனுப்பி வைத்த போது 1924லேயே இந்த வடிவச் சோதனைகள் ஆரம்பித்ததை எண்ணி பிரமித்தார். ஆனால் அவரின் சிறுகதை நேர்த்தியை, அழகியலை ஒப்பிடும்போது 1924இல் எழுதிய இந்தக் கதையிலிருந்து ஒப்பிட வேண்டும் என்று தோன்றியது. இப்படியாக ஒப்பீட்டு ஆய்விற்கும் இந்த சிறுகதைகள் பயன்படும்.

அரங்கசாமி ஐயங்கார் எழுதிய ”கோபாலன் விஷயம்” அறிவியல் புனைவு சிறுகதை எனலாம். எஸ்.ஜி. ராமானுஜலு நாயுடு எழுதிய “இயந்திர தெய்வம்” சிறுகதை மின்சார சக்தியில் இயங்கும் ரயிலை தெய்வமாக கற்பனை செய்து கொள்ளும் காண்டாவிற்கு அதன் அறிவியலை எடுத்துரைக்கும் சிறுகதையாக உள்ளது. ஜேம்ஸ் தான் இறந்தது போல நடிப்பதும், பேயாக மாறி வந்து அவனுக்கு பாடம் புகட்டுவது போல நடிப்பதுமான அமானுஷ்யக்கதையாக ஆரம்பித்து பகுத்தறிவுத்தன்மையோடு முடிகிறது. உண்மையில் எங்கள் ஊரில் முதல் முதலில் ரயில் வந்தபோது அதனை நோக்கி கையெடுத்து கும்பிட்டு பொங்கல் பூசை செய்ததாக தாத்தா கூறுவார். 1920களில் இன்னும் ரயிலை தெய்வமாகப் பார்க்கும் அந்தத் தன்மையைக் கடிவதாக சிறுகதை அமைந்துள்ளது.

புதுமைப்பித்தனின் “நினைவுப்பாதை” சிறுகதை இதில் உள்ளது. தன் மனைவி வைரவன்பிள்ளை இறந்து பின் வரும் சடங்கு நிகழ்ச்சியாக கதை விரிகிறது. இறுதியில் வைரவன் பிள்ளைக்கு முன் அவரின் பிள்ளையும், பின்னே அவரின் பேரனும் செல்ல, சங்கு முழங்குவதாக சிறுகதை முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள். இறுதியில் முழங்கும் சங்கு சிறுகதையை மேலும் விரிக்கிறது. ந. பிச்சமூர்த்தியின் காஞ்சாமடம் சிறுகதை, ரா.ஸ்ரீ தேசிகனின் “மழை இருட்டு”, குபாரா வின் “பெண்மனம்” க.நா.சு வின் “இரண்டாவது கல்யாணம்” போன்றவை படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைகள். கு.அழகிரிசாமியின் “பித்தளை வளையல்” மாப்பசான் எழுதிய The necklace சிறுகதையை நினைவு படுத்தக்கூடியது.

இங்ஙனம் மிகச்சாதாரணமாக வரலாற்றுக் கதைகளில் ஆரம்பித்து, பல வகையான வடிவச் சோதனைகளைச் செய்து இன்றும் சிலாகிக்கக்கூடிய பல முக்கியமான சிறுகதைகள் உருவான காலகட்டமாக இதைப் பார்க்கலாம்.

இந்த புத்தகத்தில் ஐந்து பெண் எழுத்தாளர்களின் கதைகள் உள்ளன.பெண்களின் கதைக்களம் என்னவாக இருக்கிறது என்று ஆராய இவை பயன்படும். இந்த ஐந்து கதைகளில் என்னை முதன்மையாக ஈர்த்தது “அம்மணி அம்மாள்” அவர்களின் “பசுக்களின் மாநாடு” சிறுகதை. சீமைப்பசுவுக்கும், மெலிந்த இடையர் மாடுகளுக்குமான உரையாடலாக கதை உள்ளது. அரசியல் பகடிகள், அந்த காலகட்டத்தைய சிந்தனையின் பகடிகள் நிறைந்த கதை. இன்றும் கூட பொருத்தமுடையது. எழுத்தாளர் குகப்ரியை எழுதிய ”குஞ்சு”, கி. சாவித்ரி அம்மாள் எழுதிய “பழைய ஞாபகங்கள்”, கி. சரஸ்வதி அம்மாள் எழுதிய “தெய்வத்திற்குமேல்” சிறுகதை ஆகியவை காதல் கதைகளாக, ஆண்-பெண் உறவு பற்றிய கதைகளாக உள்ளன. வி. பாலாம்பாள் எழுதிய “மண்பானை” சிறுகதை தாய்-மகன் பாசத்தை சொல்லும் கதையாக உள்ளது. வி. விசாலாட்சி அம்மாளின் “மூன்றில் எது” குணமடைதலில் இருக்கும் ஒரு மர்மத்தை கேள்வியாக முன் வைக்கக் கூடியது. “That is it”, “out of the mouths of babes and sucklings” போன்ற ஆங்கிலப்பயன்பாடுகள் கதைகளில் உள்ளன. இந்தக்கதை ஆங்கில மொழிபெயர்ப்பும் கண்டுள்ளது.

தங்கள் படைப்புகளை பிரசூரிப்பதற்கு தடை ஏற்படும்போது புதிய இதழ் தொடங்குதல், புதிய பதிப்பகம் வாங்குதல் போன்ற அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடிய சுதந்திரமும், செல்வ செழிப்பும் பெண் எழுத்தாளர்களிடம் இருந்துள்ளது. பெரும்பாலும் படித்த பெண்களே எழுத்தாளர்களாக இருந்துள்ளார்கள். சிலர் தங்கள் பெயருக்கு முன் “பண்டிதை” என்ற அடைமொழியோடு தான் சிறுகதைகளை பிரசூரித்திருக்கிறார்கள். சக்ரவர்த்தினி, மங்கை, கலைமகள் போன்ற இதழ்களின் ஊக்கம் பெண்களுக்கு இருந்துள்ளது. தீவிர எழுத்தாளர்களும் சிறந்த பெண் எழுத்துக்களை கண்டடைந்து ஊக்கப்படுத்தியுள்ளார்கள். “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள்: பெண்ணெழுத்து” பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்.

இந்த புத்தகத்திலுள்ள அனைத்து எழுத்தாளர்களுக்கும் தமிழ் விக்கியில் பதிவுகள் உள்ளன. இதழ்கள் பெரும்பான்மைக்கும் பதிவுகள் போடப்பட்டுள்ளன. விடுபட்ட தகவல்கள் பலவும் இந்த புத்தகத்திலிருந்து சேர்க்கப்பட்டுள்ளன. இலக்கிய இடம் பகுதிக்காக மிகப்பெரிய அளவில் இந்தப் புத்தகத்திலுள்ள “கதைகளின் கதை” பகுதி பெரிதும் உதவியது. புகைப்படங்களின் சேகரங்களுக்காக அரவிந்த் சுவாமி நாதனின் மெனக்கெடல்கள் பாராட்டப்படத்தக்கது. கிடைத்த ஒவ்வொரு தகவல்களையும் அவர் பிரித்து, கோர்த்து, அடுக்கி வைத்த விதத்தை கற்பனையிலேயே பிரமிக்க முடிந்தது. நற்றுணை கலந்துரையாடல் நிகழ்வில் அதை அவர் விவரிக்கும்போது மேலும் அதன் வேலைப்பளு புரிந்தது. சிறுகதைகளுடன் அந்தந்த தகவல்களையும் இணைத்து மிகப்பெரிய சித்திரத்தை வாசகர்கள் பின்னிக்கொள்ள முடியும். எழுத்தாளர்கள், விமர்சகர்கள், வாசகர்கள், கல்வித்துறை ஆய்வாளார்கள் என யாவர் கைகளிலும் இருக்க வேண்டிய புத்தகம்.

இந்த இரு  புத்தகங்களும் பொருளாதார ரீதியாக விற்குமா என்று பொருட்படுத்தாமல் அதை பதிப்பித்து ஊக்கப்படுத்திய யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவகரிகாலன் அவர்களுக்கு நன்றி. “விடுதலைக்கு முந்தைய இதழ்கள்” பற்றிய தொகுப்பு பணியில் இருக்கும் அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

**

இந்த நூலைப் பரிந்துரைத்தமைக்காக மிக்க நன்றி ஜெ. மிகவும் அறிதலாக இருந்தது.

பிரேமையுடன்

ரம்யா.

முந்தைய கட்டுரைநிறைந்து நுரைத்த ஒரு நாள்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன் – கடிதம்