பொன்னியின் செல்வன் பற்றி…
அன்புள்ள ஜெ,
பொன்னியின் செல்வன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத் தொடரை வாசித்தேன். இப்படத்தின் உடை, அலங்காரங்கள் எல்லாமே சிலரால் விமர்சனத்துக்குள்ளாயின. நீங்களே எடுத்துக் கொடுத்திருக்கும் படத்தில் திரிஷாவின் தலையலங்காரம் விசித்திரமானதாக இருந்தது. இந்த அலங்காரங்களை மும்பை தலையலங்கார நிபுணர்கள் செய்கிறார்கள் என்று சொன்னார்கள். இங்கே திரிஷாவின் தலையலங்காரத்தை பலர் கிண்டல் செய்தார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு ஆதண்டிக் என்று சொல்லமுடியுமா?
கார்த்திக் ராஜ்
அன்புள்ள கார்த்திக்,
பொன்னியின் செல்வன் பற்றி பேசவேண்டியவற்றை பேசிவிட்டேன். அது சினிமா பற்றிய பேச்சு என்பதற்காக அல்ல. இலக்கியம் சினிமாவாக ஆவது சார்ந்து ஓர் இலக்கியக் களத்தில் பேசவேண்டிய சில அதில் இருந்தன என்பதனால். மேற்கொண்டு பேசிக்கொண்டே செல்ல நான் விரும்பவில்லை. தமிழகத்தில் சினிமா பற்றிய சர்ச்சை என்றால் நீட்டி நீட்டி கொண்டுசெல்ல நம்மவர் துடிப்பார்கள்.
இதைப்பற்றி கேலியும் நக்கலுமாக சில கடிதங்கள் எனக்கு வந்தன. அவர்கள் சோழர்காலச் சிற்பங்களை மட்டுமல்ல, மணியம் வரைந்த பொன்னியின் செல்வன் ஓவியங்களைக் கூடப் பார்த்ததில்லை என தெரிந்தது. அவர்கள் எம்.ஜி.ஆர் சினிமாவின் ராஜாராணி உடைகளை சோழர்கால உடைகளாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
கல்கி பொன்னியின் செல்வன் எழுதிய காலகட்டத்தில் தமிழில் அச்சுத்தொழில் தொடக்கநிலையில் இருந்தது. தமிழக ஆலயங்களும், ஓவியங்களும் விரிவாக ஆராயப்படவில்லை. இருந்தாலும் ஓவியம் மணியம் அந்த நாவலுக்கான ஓவியங்களை ஆராய்ச்சி செய்துதான் வரைந்தார். அஜந்தா சுவரோவியங்களையும் தன் முன்னுதாரணமாகக் கொண்டார்.
மணியம் ஒரு முதல்பாதையை திறந்தவர். அஜந்தா சுவரோவியப் பாணியில் தமிழில் ஒரு கதைக்கு படம் வரையப்பட்டது வியப்புக்குரிய தொடக்கம். பின்னால் வந்த ஓவியர்கள் மணியம் வரைந்ததை அலங்காரமாக திரும்ப வரைந்தனர்.
இன்று ஏராளமான ஆய்வுகள் கிடைக்கின்றன. குறிப்பாக தாராசுரம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சோழர்கால ஓவியங்கள் ஏதும் கிடைப்பதில்லை. கோயில் அடித்தளத்தில் வரியாகச் செதுக்கப்பட்டுள்ள சிறிய சிற்பங்களே முதன்மையான நேரடிச் சான்று. அவற்றை ஆராய்ந்து, அவற்றை ஒட்டியே பொன்னியின் செல்வன் படத்தின் ஆடைகளும் ஆபரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மணியம் வரைந்த ஓவியங்களும் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
ஜெ