அன்புள்ள ஜெ,
இந்த அஜயன்பாலா பற்றி நீஙகள் ஒரு வரி வாய்தவறி சொல்லி பதிவானதுமே நினைத்தேன், வகையாக மாட்டிக்கொண்டார் என்று . ஏற்கனவே சாருவும் இப்படி ஒருவரைப்பற்றிச் சொல்லி மாட்டிக்கொண்டது உண்டு. நீங்கள் ‘தமிழர்களுக்கு சிந்திக்க கற்றுத்தந்த தாமஸ்’ என்ற கட்டுரையிலே அந்த பொய்ப்பிரச்சாரத்தைப்பற்றி எழுதியிருந்தீர்கள் அல்லவா? அந்த தெய்வநாயகம் என்பவர் உங்களுக்குச் சொன்ன பதிலும் அவர் கிறிஸ்தவர் அல்ல என்பதுதான்.தமிழ்நாட்டு கிறித்தவர்களில் முப்பதுசதம்பேராவது சட்டபூர்வமாக இந்துக்கள். அவர்கள்தான் அதிகமும் தீவிரமானவர்கள். இனிமேலாவது யோசித்து ஒன்றுக்கு நாலுதடவை முடிவெடுத்து பேசுங்கள்
சரவணன்
அன்புள்ள சரவணன்
இம்மாதிரி விஷயங்களை பின்னால் தொடர்ந்து செல்ல எனக்கு அவகாசம் இல்லை. என் மனப்பதிவுகளையே எப்போதும் எழுதுகிறேன். அதர்கு ஒரு மதிப்பு உண்டு என்ற நம்பிக்கையில். எழுத்தாளன் எழுதவேண்டியது அதையே
ஜெ
*
அன்புள்ள ஜெ,
ஒரே கேள்வி. சம்பந்தப்பட்ட கட்டுரை படித்ததனால் கேட்கிறேன். காந்தியவாதி என்று நீங்கள் உங்களை சொல்லிக்கொண்டே மதபேதங்களை பேசலாமா? அது மதவெறி அல்லவா? மேலும் இதை வாசிக்கக்கூடிய உங்கள் கிறித்தவ வாசகர்கள் என்ன நினைப்பார்கள்? உங்கள் தாக்குதல்கள் ஏன் இஸ்லாம் பக்கம் போவதில்லை?
K. ஜெபகுமார் ,சென்னை
அன்புள்ள வேம்பு,
கிறித்தவ மதமாற்ற அமைப்புகள் இந்தியா குறித்து செய்துள்ள அவதூறுப்பிரச்சாரம், அதற்காக அவை உருவாக்கும் ஒருங்கிணைந்த அமைப்பு ஆகியவற்றை பற்றி காந்தி , அம்பேத்கார் போன்றவர்கள் சொன்னவற்றின் கால்வாசி அளவுக்கு, பத்துசதவீதம் கடுமையாகக்கூட, நான் சொல்லிவிடவில்லை. அவர்கள் அதில் தெளிவாகவே இருந்தார்கள்.
பொதுவாக இந்த விஷயம் கண்ணெதிரே அப்பட்டமாக நடந்துகொண்டிருக்கிறது. நான் குமரிமாவட்டத்தில் இருப்பதனால் அனேகமாக தினமும் கிறித்தவ இதழ்களில், கூட்டங்களில் காந்தி மீது நம்பவே முடியாத அளவுக்கு மடத்தனமான அவதூறுகள் பிரச்சாரம் செய்யப்படுவதை காண்கிறேன். கிறித்தவ அமைப்புக்குள் இருந்து கொண்டு எவரும் அதற்கு ஒரு மாற்றுக்கருத்தைச் சொல்ல முடிவதில்லை. அவற்றைச் சுட்டிக்காட்டி ஆதாரபூர்வ மறுப்பைச் சொல்ல வரும் பிற எவரையும் அவர்கள் கிறித்தவ விரோதிகள், மதவெறியர்கள் என ஆள் வைத்து எளிதாக முத்திரை குத்திவிடுகிறார்கள். ஆகவே பெரும்பாலாலும் எவரும் வாய் திறப்பதில்லை.
என்னைப்பொறுத்தவரை என் கருத்தைச் சொல்ல எந்நிலையிலும் தயங்கக்கூடாது என எனக்கே ஆணையிட்டிருப்பவன். எந்த முத்திரை, எப்படிப்பட்ட வசை, அவதூறு வந்தாலும் பாதகமில்லை. இனிமேல் புதிதாக எவரும் ஏதும் சொல்வதற்கில்லை, சொன்னதைத்தானே திரும்பச் சொல்லப்போகிறார்கள் என்ற எண்ணமும் இப்போது உருவாகியிருக்கிறது. இந்த அவதூறுகளையும் முத்திரைகளையும் தாண்டி எவருக்கேனும் என் எழுத்துக்கள் ஆர்வமூட்டினால் அவர்கள் போதும் , என் வாசகர்களாக.
நான் எந்த அமைப்பையும் ஏற்காமல் எல்லாவற்றின் மேலும் என் விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இன்றைய காந்தி நூலுக்குப் பின் காந்திய அமைப்புகளை அறிமுகம் செய்துகொண்ட போது அவையும் எனக்கு கசப்பையே உருவாக்கின. இது என் பிரச்சினையாகவும் இருக்கலாம். என் வாசகர்களில் ஒரு பெரும்சாரார் ஏதாவது அமைப்பை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள். ஆசார இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், திராவிட இயக்கத்தினர், இடதுசாரிகள்….. அவர்கள் அந்த பிடிப்பை தாண்டிவந்து யோசிக்கவேண்டும் என நினைக்கிறேன். யோசிக்காவிட்டல் இழப்பு எனக்கில்லை.
புண்படுவது என்பது எப்போதும் உண்டு. ‘ஆன்மீகம் போலி ஆன்மீகம்’ எழுதியபோது நித்யானந்தரின் சீடர்களான வாசகர்கள் புண்பட்டிருக்கிறார்கள். சத்ய சாயிபாபா பக்தர்கள் சாபங்கள் அனுப்பியிருக்கிறார்கள். இன்று என்னைப்பற்றி இணையத்தில் வரும் வசைகளில் ஒருபகுதி நான் காஞ்சி மடம் பற்றியும் சந்திரசேகர சரஸ்வதி பற்றியும் எழுதிய கருத்துக்களால் உருவானது. அதையெல்லாம் எண்ணினால் ஒருபோதும் எழுத்தாளன் எழுதமுடியாது. கருத்தே சொல்லாமலிருக்கும் யுவன் சந்திரசேகர், எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளை வாசித்து புண்படுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
கடைசியாக, இத்தகைய விமர்சனங்களை நான் கிறித்தவம் மேல்தான் வைப்பேன். என் கிறித்தவ நண்பர்களிடம் நேரில் இதைவிட கடுமையாக பேசுவேன். இரண்டு காரணங்கள் . ஒன்று நான் ஏசுவை என் ஞானகுருவாக ஏற்றுக்கொண்டவன். அது என் குரு எனக்களித்த வழிகாட்டல். என் தியானங்களில் அவர் என்றுமுண்டு. ஆகவே ஒருவகையில் மானசீகமாக நானும் கிறிஸ்தவனே. இரண்டு, நான் கிறிஸ்தவர்களை நம்புகிறேன். அவர்களிடம் விவாதிக்க முடியும் என நினைக்கிறேன். பலநூற்றாண்டுக்கால உள்விமர்சனங்கள் மூலம் வளர்ந்த ஒரு மரபு அவர்களுக்குண்டு. அவர்கள் அனைவரும் மதமாற்ற அரசியலில் இருப்பவர்களும் அல்ல.
இஸ்லாமிய வழிமுறைகள் சார்ந்து விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் அதை விவாதத்தில் எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அந்த மதத்தில் அதற்கு இடமில்லை. அவர்கள் அதை மதத்தாக்குதலாக மட்டுமே காண்கிறார்கள். என் அனுபவங்களும் கசப்பானவை. அவர்களுக்கு அது உணர்ச்சிகரமான பிரச்சினை, சிநிதிப்பதற்கானது அல்ல. ஆகவெ பேசி பயனில்லை. எவரையும் புண்படுத்துவதில் எனக்கு ஆர்வமில்லை.இதை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
இஸ்லாம் பற்றி அந்த நம்பிக்கை காந்திக்கும் இருக்கவில்லை என்பது காந்தியின் எழுத்துக்களில் தெரிகிறது. இஸ்லாம் பற்றி அம்பேத்கார் முன்வைத்த அதே கடுமையான கருத்துக்கள்தான் காந்திக்கும் இருந்திருக்கும். காந்தி அவற்றைச் சொன்னதில்லை.
ஜெ