மொழி,கம்பன் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஒரு வேண்டுகோள். இணையத்தில் சமீபகாலமாக கம்பராமாயணம்
பற்றி படித்து, அதை நல்ல விளக்க உரையுடன் படிக்கவேண்டும் என தோன்றியது. சமீபத்தில் ‘நன்று நம் கொற்றம்’ வரிகளை படித்துவிட்டு ஆவல் அதிகமாகிவிட்டது. தற்போது கிடைக்கும், நல்ல உரையுடன் கூடிய கம்பராமாயண பதிப்பு எது என்று கூறுங்களேன் (நேரம் கிடைக்கும் போது).

சுஜாதா பற்றிய நீண்ட பின்னூட்டச் சண்டையில் என் பங்கும் உள்ளது என்ற
குற்ற உணர்வில், சமீபத்தில் சிறுகதைகள் உட்பட எதற்கும் பின்னூட்டமிடவில்லை :-)

– கணேசன்

அன்புள்ள கணேசன்

கம்பராமாயணத்தை வாசிக்க இன்று மிகச்சிறந்த நூல் என்பது கோவை கம்பன் அறநிலை வெளியிட்டான கம்பராமாயண பதிப்புதான். அதில் அ. அ. மணவாளன் அவர்களால் கிட்டத்தட்ட எல்லா உரைகளுமே தொகுக்கப்பட்டுள்ளன

கருத்திருமன் அவர்கள் தேர்வுசெய்யப்பட்ட முக்கியமான கம்பன்பாடல்களைக் கொண்டு கம்பனை தொகுத்தளித்த கம்பராமாயணம் உதவியானது

கம்பராமாயணத்தை ரசிக்க ஒரு தொடக்கத்துக்காக

1. கம்பன் கண்ட பெண்கள் – சாண்டில்யன்

2. தம்பியர் இருவர் அ ச ஞானசம்பந்தன்

3.ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அ ச ஞானசம்பந்தன்

3. கமபனும் மில்டனும் ஒரு ஒப்பாய்வு : எஸ்.ராமகிருஷ்ணன்

நூல்களை வாசிக்கலாம்

ஜெ

அய்யா,

சுவையான உரையாடல் கண்டேன்;மகிழ்ந்தேன்

என் எண்ணமும் பகிர்ந்துளேன்.

அதளெறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
ஓடி உய்தல் கூடுமன்
ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே
–ஓரேருழவர் 193 பு

தோலை விரிய வீசினால் மேடு பள்ளம் இரா; ஒளிதல் இயலாது
வெண் என்றது, மானின் நிறத்து மண்ணிருப்பினும் அசையாது
தரையொடு தரையாயப் படுத்துஎத்தலும் கூடும்;அதுவும் இன்று
என்றவாறு.
‘துரத்தும்’, ‘விரட்டும்’ (ஒருபுறம் இயற்சீர் வெண்டளை மறுபுறம் நேரொன்றாசிரியுமும் தப்பா)
என்னாது ‘ஆட்டும்’ என்றது அடடா! ( ஆடு என்பது வெற்றியுமாம்)

மற்றும் வேடனும் மானும் எதிரிகள்;எதிரிகள் இருந்தால் (போராடித்)தப்பித்து உய்யலாம்!
நண்பரிடத்திருந்து, அவரது தடை, தளையிலிருந்து தப்பிப்பது எங்ஙனம்? எனும் முரண்நகை
எத்தனை நுண்ணியது .நான் “தட்குமா காலே!” என்று வியப்பு, நகைப்புக்குறியிட்டிருப்பேன்

விரிந்து பரந்த வெளியில் வேடன்
துரத்தும் மானும் தப்ப லாகும்
உறவும் நட்பும் உளவேல்
துறவு வாழ்வு கிடைத் தலரிதே!
-பல்லேருழவர் ! 15/04/11

நன்றியுடன்,
தி.இரத்தினவேலு

அன்புள்ள ஜே.மோ,

கீழே உள்ள இணைப்பு காட்சியை பார்க்கவும். இந்த நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைகிறேன்.

http://www.youtube.com/watch?v=௬ள்ப௧௬ப௫ஆபொ

இதில் வரும் அந்த இளைஞன் எதோ தமிழில் பேசினால் தன் கௌரவம் குறைந்து விடும் என்பது போல் ‘ tamil ல பேசினா வாய் roll ஆகுது ‘ என்றெல்லாம் கூறுவதை பார்க்கையில் நம் செம்மொழி இன்னும் சிறிது நாளில் வெறும் ஞாபகம் ஆகமட்டுமே இருந்து விடுமோ என்னும் அச்சத்தில் இருக்கும் அனைவரின் சார்பாக இதனை எழுதுகிறேன். ஒருவர் ஆங்கிலம் பயில வேண்டும் என்றால் தமிழை கொன்றால் தான் முடியும் என்று எதும் சட்டம் இருக்கிறதா என்ன. ஆங்கிலத்திலும் தமிழிலும் நன்றாக எழுதும்/வாசிக்கும் நண்பர்களை கொண்டவன் நான். முதலில் நிறைய வாசிக்காவிட்டாலும் கடந்த சில மாதங்களாக பல நல்ல விஷயங்களை தவறாமல் வாசித்து வருகிறேன்.

அதில் வரும் அந்த சிறுவன் முதல் பகுதிகளில், ‘எனக்கு டமில் பேச வராது’ என்று கூறுவதை பாருங்கள். அவர் மட்டும் அல்ல. தமிழ் நாட்டில் பலர் தங்களுக்கு தமிழ் தெரியாது என்பதை ஒரு பெருமையாக சொல்கிறார்கள். கேட்டால் I love English என்றும் பீத்திகொள்கிறார்கள். அப்படி என்ன பெருமையோ.. தன் தாய்மொழி தெரியாது இருந்து அந்நிய மொழியை அவனால் நேசிக்கவே முடியாது என்பது என் கருத்து. தன் மொழியோடு அந்த அந்நிய மொழியை ஒப்பீடு செய்து பார்த்தால் கண்டிப்பாக தாய் மொழியே மேலோங்கி நிற்கும். தமிழின் பெருமையை பரப்புகிறேன் என்ற பெயரில் தன் அந்தஸ்தை கூட்டி கொள்ள அலையும் இந்த அரசாங்கமும் ஒன்றும் செய்யாது என்றாகி விட்டது (செம்மொழி மாநாடு நடந்ததோடு சரி.).

இவர்களை திருத்த வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல.. ஏன் என்றால் அவர்கள் தெரிந்தே தவறு செய்பவர்கள். தமிழின் பெருமை தெரியாது ஆங்கிலத்தை கொண்டாடுபவர்கள். ஆங்கிலம் தான் தங்கள் வாழ்வினை மேம்படுத்தும் என்ற எண்ணத்தில் திளைக்கும் மூடர்கள். இந்த கோப்பினை பார்த்ததும் யாரிடமாவது முறையிட வேண்டும் என்று தோணியது. தமிழை அறிந்தோர் எல்லாரும் அதன் பெருமைகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஒரு மொழி, ஆடம்பரத்தை காட்டி அழைக்கும் அந்நிய மொழியினால் அழிய கூடாது. அழியாது. நாம் விட மாட்டோம்.

பெருமையுடன்,
தமிழன்

முந்தைய கட்டுரைஅஜயன் பாலா
அடுத்த கட்டுரைகாந்தி,மதம்-கடிதம்