சொல்வளர்காடு நாவலில் ”ஐதரேயம்” காட்டில் மகிதையின் வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றது. ”இப்புடவி பெரும் சுழற்சியால் மட்டுமே உருவாகி வரமுடியும்” என்ற வரிகள் எத்துனை மெய்மையானது.
சுழன்று கொண்டிருப்பதாக நான் கற்றவை யாவும் நினைவில் ஓடியது. புவியே சுற்றிக் கொண்டிருக்கிறது தான். அதன் கூறுகளான அழுத்தம் மிகப்பெரிய அழுத்த பெல்டுகளாக புவியைச் சுற்றி ஹேட்லி செல்லாக, போலார் செல்லாக என சிறு சிறு பெல்டுகளாக சுழன்று கொண்டிருக்கிறது. வெப்பம் சலனமடைந்து வெப்ப பெல்டுகளாக சுழல்கிறது. நீர் சுழற்சியாகிறது. காற்று சுழற்சியாகிறது. ஒட்டுமொத்த சமுத்திரமும் பல சமுத்திர கரெண்ட்டுகளாக சுழல்கிறது. அதிலுள்ள ஒரு கூறான உவர்தன்மை சுழன்று சுழன்று ஒரு சம நிலைத்த்னமையை அடைந்திருக்கிறது.
நாளும் புவி சுழன்று இன்னொரு நாளாகிறது. நிலவு தேய்ந்தும் வளர்ந்தும் ஒரு சுழற்சிக்குள் இருக்கிறது. சூரிய குடும்பத்திலுள்ள யாவும் சுழல்கிறது. சூரிய குடும்பமே சுழல்கிறது. அண்டங்களும், பேரண்டங்களும் யாவும் சுழல்கிறது. இந்த சுழற்சியே ஒரு நிலைத்தன்மையை அளிக்கிறது.
அணுக்கருவைச் சுற்றியும் சுழற்சி நிகழ்கிறது. துகள்களும் தூசிகளும் சுழற்சியிலுள்ளது. உயிரியலில் படித்த சுழற்சிகளும் நினைவில் முட்டியது. கார்பன் சுழற்சி, ஆக்சிஜன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சி என யாவும் சுழற்சியில் தான் இருக்கிறது. மலேரியா நோய் பற்றி படிக்கும் போது கூட ராஸ் சுழற்சி என்ற கோட்பாட்டைத்தான் சொல்கிறார்கள். நோய்களும் சுழற்சி எனும் பிடிக்குள் தான் உள்ளன. இப்படி இயற்பியல், வேதியியல், உயிரியியல், புவியியல் என அனைத்து அறிவியல் கோட்பாட்டின் வழியும் சுழற்சியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். வரலாற்றிலும் கூட “History Repeats itself” என்ற வரி வந்து முன் நின்றது.
நான் கூட சுழன்று கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன் ஜெ. இன்று அனைவருமே தங்கள் வாழ்வின் குறிக்கோளாக “மகிழ்ச்சி” என்பதைச் சொல்வதில் பெருமையடைகிறார்கள். போட்டித்தேர்வின் நேர்காணலில் இந்த பதில் மிகவும் பிரபலாமனது. உலகமே “ஹேப்பினஸ் இண்டெக்ஸ்” நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. ஒவ்வொரு நாளையும் மகிழ்வாக நிறைப்பதைப் பற்றி இன்று பலரும் பேசுகிறார்கள். நானும் கூட இது நாள் வரை அதையே சிந்தித்து வந்தேன். இன்று இந்த சுழற்சியின் வழி அவற்றை ஓட்டிப் பார்த்தேன் ஜெ. மகிழ்வும், துக்கமும் கூட சுழற்சியில் தானே இருக்க முடியும். அதை உணர்பவர்கள் மிகையுணர்ச்சிகள் அடைய மாட்டார்கள் தானே. அதீத துக்கமோ, அதீத மகிழ்வோ அடையமாட்டார்கள் அல்லவா? அத்தகைய சம நிலையை முகத்தில் வைத்திருப்பவர்களை கற்பனை செய்து கொண்டேன். எனக்கு வெண்முரசின் இளைய யாதவனின் முகமும், புத்தரின் முகமும் நினைவில் எழுந்தது. சுழற்சியை அறிந்ததன் புன்னகையை/மென்னகையைக் கொண்டவன் இளைய யாதவன். சுழியத்தின் மையத்தில் புத்தர். இவர்கள் இருவருமே அதை அறிந்தவர்கள். அறிந்து கொண்டவர்களால் தான் பற்றறுக்க முடியும் என்று நினைக்கிறேன் ஜெ.
உறவும்-பிரிவும், பிறப்பும்-இறப்புமென யாவும் சுழல்கிறது. நான் அறியாத ஏதோ ஒன்றும் சுழன்றுகொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன்.
தன் வாலைத்தானே உண்ணும் பாம்பு நினைவிற்கு வந்தது ஜெ. அப்படியானால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நீட்டிக் கொண்டு முன் செல்லவில்லை. சுழன்று கொண்டே இருக்கிறது. சுழற்சி நம்மை மரணத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. மீண்டும் பிறப்பதைப் பற்றி நான் இதுவரை எந்த முடிவுகளுக்கும் வரவில்லை. ஆனால் இன்று இந்த பிறப்பும் ஒரு சுழற்சி தானோ என்று சிந்திக்கிறேன். ஆனால் கர்மத்தின் பால் உள்ளவர்கள் முந்தைய சுழற்சியை விட நேர்த்தியாக ஏதோ செய்யத்துடிக்கும் சுழற்சியில் சுழன்று கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது ஜெ.
என் வாழ்க்கைப் பயணத்தில் மிகக் குறைவான மனிதர்களையே என்னை பாதிக்க அனுமதித்திருக்கிறேன். சில உறவுகள் நம்மை மீறி நிகழ்கின்றன. ஏதோ சுழற்சியில் அவர்களை நாம் கண்டடைகிறோம். விலகுகிறோம், விலக மறுக்கிறோம், பற்றிக் கொள்கிறோம். மிகுந்த மகிழ்ச்சியோ, துக்கத்தையோ அளிக்கும் மனிதர்கள் அல்லது நான் முக்கியமாகக் கருதும் மனிதர்களை கூர்ந்து நோக்குந்தோறும் நான் உணர்வது இது முன்னெப்போதோ நிகழ்ந்தது என்பதைத்தான். அத்தருணத்திற்காக அந்த சுழற்சியில் நான் காத்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். மிகத்துல்லியமாக சில விடயங்களை நான் முன்பே கண்டது போல நிகழ்வது போன்ற பிரமை உண்டு.
கடலில் ஒரு துளி நீர் கலக்கும் போது அது முந்தைய கணத்திலிருந்த கடல் என்றல்லாது மாற்றமடைகிறது என்று சொல்லியிருப்பீர்கள். நான் என்பது கூட முந்தைய நொடியிலிருந்த நானல்ல என்று சொல்லியிருப்பீர்கள். அந்த கருத்தை இக்கருத்து முழுமையாக நிராகரிக்கக் கூடுவது. இவை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. புதிய நான் என ஏதுமில்லை. ஏதோ ஒரு காலத்தில் ஏற்கனவே நிகழ்ந்தது தான் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் முந்தைய சுழற்சியை விட நேர்த்தியோ, சொதப்பலோ எனில் அதுவும் மாற்றம் தான். ஆக அறுதியாக நிராகரிக்கவும் முடியவில்லை.
”சுழற்சியினால் உருவான எதுவும் சுழற்சியால் அழியுமாறும் ஆகும்.” என்ற மகிதையின் வரிகள் என்னை ஒரு கணம் அசைத்துவிட்டது. ஆம் அனைத்தும் உருவானது போல அழியும். மகிழ்ச்சியோ, துக்கமோ, புகழோ, ஆக்கமோ, பிறப்போ ஆவது போல அழியும். அழிந்து தீர்வதுபோல பிறக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் செய்யக்கூடுவது அந்த கணத்தில் வாழ்வது மட்டுமே.
”முடிவிலாத அசைவு எதுவும் சுழற்சியே. எங்கும் செல்லாது தன்னைத்தான் நிகழ்த்திக் கொண்டிருக்கும் செலவு அது.” இந்த வரிகளில் என்னைச் சுற்றி நான் அசைந்து கொண்டிருப்பதாக நினைத்த யாவையும் நிறுத்திக் கொண்டேன். யாவும் முடிவிலா அசைவு கொண்டவை எனில் எதுவும் எங்கும் செல்லவில்லை தானே. யாவும் சுழல்கிறது. நானும் சுழல்கிறேன். எங்கும் எதிலும் சுழற்சி நிகழ்கிறது. “நான்” உள்ளும் புறமும் என சுழற்சியில் தான் இருக்கிறது. யாவும் சமநிலையை நோக்கியே நகர்கிறது.
புவியைப் போலவே சுழற்சி வேகம் கொண்ட கோள் நகராதது போலத் தெரிகிறது. அதிவேக சுழற்சி கொண்டது இல்லாதது போல தெரிகிறது என்ற ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை நினைத்துக் கொண்டேன். நகராதிருக்கும் கோள்களை அறிந்த விடயங்கள் என வைத்துக் கொண்டால் அதிவேகமாக சுழன்று இல்லாமலிருப்பது போல மயக்கும் கோள்களை அறியமுடியாமை என்று கொள்ளலாம். எந்தப் பரிமாணமும் நேரியலாக (Linear) இருக்காதோ என்றே தோன்றுகிறது ஜெ. காலம் உட்பட அனைத்துப் பரிமாணமும் சுழல்வதாக கற்பனை செய்து பார்த்தேன். அது மேலும் பல சிந்தனைகளை இட்டுச் சென்றது.
”மெல்லிய தொடுகையை அதுவே பெருக்கிக்கொள்கிறது. ஏனென்றால் அது உருவெடுக்க விழைகிறது” என்ற மகிதையின் வரிகள் மேலும் திறந்தது. ஆனந்த் ஸ்ரீநி மாமா விழைவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது, “ஆணும் பெண்ணும் உறவு கொள்வது, உறவுச்சிக்கல் என்று சொல்வது என யாவுமே உயிரின் விழைவு என்பதற்குள் அடைக்கலாம். காதலோ காமமோ எந்தப் பெயரை வைத்துக் கொண்டாலும் ஒரு உயிர் தன் இணையைக் கண்டதும் உணர்வது இன்னொரு உயிரை உருவாக்கும் விழைவைத்தான். உன் காம விழைவென்பது உன் கருப்பையின் விழைவு மட்டுமே என்று நித்யா சொல்வார்” என்றார். அறிவியல் ரீதியாக ஹார்மோன்கள், தூண்டல்கள் எனக் கொண்டாலும் அந்த விழைவின் போது தூண்டப்படுவது கருப்பையின் விழைவு தான் என்பதை உணர்கிறேன். சந்ததியை உருவாக்கிய பின்னும் பிற இணை மேல் வரும் விழைவென்பது தன்னை மேலும் பெருக்கிக் கொள்ளும் வேட்கையே. அது இயலாது, தேவையில்லை என்று முடிவெடுத்துவிட்டால் அந்த விழைவின் சிக்கல்களிலிருந்து விடுபடலாம் என்று நினைக்கிறேன்
”சுழற்சியே பொருள்களின் இயல்பான அசைவு. இப்புவியில் இருக்கும் அனைத்து அசைவுகளும் ஏதேனும் சுழற்சியின் பகுதிகளே. இதோ விழிநோக்கும் அனைத்துக் கிளைகளும் சுழன்றுகொண்டிருக்கிறன. காற்றிலேறும் அத்தனை தூசிப்பருக்களும் சுழல்கின்றன. இங்கு கலமென குடமென வட்டை என கும்பா என நிறைந்திருக்கும் அத்தனை பொருட்களும் அந்த சுழற்சியின் வடிவங்கள்தான்.”
ஆம் அனைத்தும் சுழல்கின்றன. மேலும் எண்ணங்களைச் இது சார்ந்து சுழற்றிக் கொண்டிருக்கிறேன் ஜெ. யாவும் சுழற்சி தானா ஜெ? முடிவிலா இந்த சுழற்சியின் பாதையில் தான் யாவரும் சந்தித்துக் கொள்கிறோமா? கண நேரமும் ஒவ்வொன்றும் அசைந்து கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்கிறேன்.
இங்கிருந்து மகிதையின் தாசன் அடைந்த “பிரக்ஞையே பிரம்மம்.” என்பது எத்துனை மெய்யான அடைதல். ஆனால் இங்கிருந்தும் பல கேள்விகளும், சிந்தனைகளும் எழுந்து வந்தன ஜெ.
”அறியமுடிவதையே அறிவெனக் கொள்கிறோம் என்னும் பெருஞ்சிறையிலிருந்து எப்போதேனும் விடுதலை கொள்ளுமா மானுடம்?” இந்த வரிகளை இறுதியில் நிறைத்துக் கொள்கிறேன். அறிந்து கொண்ட சுழற்சியைப் பற்றி பிரமிக்கும் அதே நேரம் அறியமுடியாமையின் சுழற்சியை கண்டும் திகைக்கிறேன்.
இதை ”ஐதரேயம்” சார்ந்த சிந்தனை எனக் கொண்டால் இதை நான் ஏற்கிறேன் என்று தான் கொள்ள வேண்டும். ஆனால் சுழற்சியாக இல்லாமல் இருக்கும் விடயமாக ஏன் இருக்கக்கூடாது என்றும் சிந்தித்தேன். அது ஏன் ஒரு பரவளையமாக (parabola)/சைன் அலையாக இருக்கக் கூடாது. பெருவெடிப்பொன்று நிகழ்ந்து அதன் உச்சமடைந்து பழைய நிலைக்குத் திரும்பும் ஒன்று பழைய நிலையாக அல்லாமல் அதன் அருகமைந்த ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது என்று சிந்திக்கிறேன் ஜெ. முழுமுற்றாக ஒரு சுழற்சி நிகழ்ந்துவிட முடியாது என்றும் தோன்றியது. ஏனெனில் சுழற்சி பற்றிய ஞான மயக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
ஐதரேய சிந்தனையை தொகுத்துக் கொள்ள முற்பட்டேன் ஜெ. சொல்வளர்க்காட்டின் ஒவ்வொரு சிந்தனையையும் தொகுத்துக் கொள்ள முற்படுகிறேன். இந்தப் புரிதல், கேள்விகள் சரிதானா என்பதையும் சொல்ல வேண்டும் ஜெ.
பிரேமையுடன்
ரம்யா.