வில்லியம் மில்லர், அரவிந்தன் கண்ணையன் கடிதம்

வில்லியம் மில்லர்
வில்லியம் மில்லர்ந்

வில்லியம் மில்லர் 

அன்புள்ள ஜெ,

நலமாக ஊர் திரும்பிவிட்டீர்கள் போலிருக்கிறது. உங்களையும் அருண்மொழியையும், நண்பர் பழனி ஜோதியையும் சந்திக்க முடிந்ததில் பெரு மகிழ்ச்சி. பழனியும் அவர் மனைவியும் அளித்த விருந்தோம்பல் அபாரம்.

நாம் சந்தித்த போது வில்லியம் மில்லர் குறித்தும் என் கட்டுரை குறித்தும் கொஞ்சம் பேசினோம். அது முதல் வில்லியம் மில்லர் பற்றிய விக்கி வெளியாகும் நாளை எதிர்ப்பார்த்தேன். தமிழில் இன்று வில்லியம் மில்லர் குறித்து ஒரு பொது வாசகனுக்கு இப்படி ஒரு சித்திரம் இது வரை கிடைத்ததில்லை. ஆரம்பித்து ஒரு மாதத்திற்குள்ளாக வெளிவந்திருக்கும் கட்டுரைகள் மிக சுவாரசியமானவை, தொகுப்பும் வேறு தளங்களை விட நேர்த்தியாக இருக்கிறது. உங்களுக்கும் விக்கி குழுவினருக்கும் வாழ்த்துகள்.

வில்லியம் மில்லர் குறித்து நான் ஏதோ மதக் காழ்ப்பில் எழுதிவிட்டதாக எண்ணிய வாசகருக்கு நல்லதொரு பதிலை அளித்திருக்கிறீர்கள். (வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும் )

ஒரேயொரு கமெண்ட். வாசகர் மதக் காழ்ப்பு பற்றி குறிப்பிட்டதால் என்னை நீங்கள் கிறிஸ்தவர் என்று சுட்டிக் காட்டியதோடு, “தீவிரமான சீர்திருத்தக் கிறிஸ்தவர்” என்று சொல்லி இருக்கிறீர்கள், எந்த அர்த்தத்தில் என்று புரியவில்லை. இவ்விடத்தில் பொது வாசகருக்கு பொது வெளியில் என் அடையாளம் கருதி நான் சொல்லிக் கொள்ளக் கூடியது என் பெற்றோர் இந்து-கிறிஸ்தவ குடும்பம் தான். அது என் தாத்தா-பாட்டிக்கும் கூட பொருந்தும். அரசு சான்றிதழில் கிறிஸ்தவர் என்று தந்தை வழியில் இருந்தாலும் எந்த ஒரு வழியிலும் தீர்க்கமாக செல்லவில்லை. கிறிஸ்தவனாக மட்டுமே அறியப்படுவது ஒரு வகையில் இன்னொரு மரபை நான் மறுதலிப்பதாகும். அப்படிச் செய்ய விரும்பவில்லை. இறை நம்பிக்கையோ, மத வழிபாடோ இன்று என் வாழ்வில் இல்லை என்றே சொல்லலாம். சீர்திருத்த கிறிஸ்தவர் என்று என்னை நான் நினைக்கவில்லை அதற்கான தகுதியுமில்லை. ஒரு வேளை நீங்கள் அதனை புரோட்டெஸ்டெண்ட் என்ற அர்த்தத்தில் சொல்லியிருந்தால் சரி.

இப்போது மில்லர் பற்றி. காலனி ஆட்சிக் காலம், சுதந்திர போராட்டக் காலம் பற்றிய வரலாறுகள் எனக்கு சாதி, மத பாகுபாடின்றி மிகுந்த ஆர்வமூட்டுபவை, அவைக் குறித்து வாசித்தும், விவாதித்தும், எழுதியும் இருக்கிறேன். கடந்த வருடம் ரூபா விஸ்வநாத்தின் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த போது தலித் வரலாறு என்னை மிகவும் ஈர்த்தது. ஸ்டாலின் ராஜாங்கம், ஜெ. பாலசுரமணியன் எழுத்துகள் அதற்கு மேலும் உரமூட்டின. தலித் வரலாறு, காலனி ஆட்சிக் காலம் என்று பேசினால் கிறிஸ்தவ வரலாறு பேசாமல் இருக்க முடியாது. மத மாற்றங்கள் குறித்து இன்று இருக்கும் பல புரிதல்கள் பிழையானவை என்று வரலாற்றின் வாசிப்பின் மூலம் தான் தெளிந்தேன். இந்திய திருச்சபை என்பதே தலித் திருச்சபை என்று சொல்லலாம், அப்படியிருக்க அவ்விரண்டு வரலாறும் ஒன்றுடன் ஒன்று இயைந்து அநேக ஆச்சர்யங்கள் கொண்டது.

கிறிஸ்தவக் கல்வி நிலையங்களால் பெரிதும் பயனடைந்தது இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள். முன்பு தலித் இறையியல் பற்றி எழுதிய போது கிறிஸ்தவக் கல்லூரியில் பிராமணர்களுக்கு தனி தங்கும் விடுதி இருந்ததென குறிப்பிட்டிருந்தேன். ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர், அவர் கிறிஸ்தவர்,வரலாறு சார்ந்தும் எழுதுபவர், அதற்கு ஆதாரமில்லை என்றார். ஆதாரம் இருந்ததால் தான் எழுதினேன் ஆனால் அந்த எழுத்தாளர் போன்ற ஒருவராலேயே அதனை நம்ப முடியவில்லை. மத மாற்றம் குறித்து இருக்கும் மிகப் பெரிய பிழையானப் புரிதல் மிஷனரிகள் தலித்துகளை நாடினார்கள் என்பது. நடந்ததென்னவோ தலைகீழானது. இந்த சிக்கலான வரலாற்றில் கிறிஸ்தவக் கல்வி நிலையங்களுக்கு பெரும் பங்குண்டு. இதனாலெல்லாம் தான் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் வரலாறு முக்கியமானதாகிறது. கிறிஸ்தவக் கல்லூரிக்கு போட்டியாக ஆரம்பித்த பச்சயப்பன் கல்லூரியிலும் தலித்துகள் ஒதுக்கப்பட்டனர். இவ்விரண்டு பிரதான கல்லூரிகளின் இச்செய்கை அப்போது கல்விப் பெற்று அரசு வேலைகளில் அமர்ந்த இந்தியர்களிடையே தலித்துகள் மிகச் சொற்பமாக இருக்கும் சூழலை உருவாக்கியது. அதன் தாக்கம் இன்றும் சரியாக கணிக்கப்படவில்லை.

வில்லியம் மில்லர் போன்ற ஒரு ஆளுமையின் மனச்சாய்வு ஒரு இனத்தையே பாதிக்கும் போது நாம் அதனை எப்படி கடந்து போக முடியும்? நான் எழுதிய எல்லாமே அடிப்படை ஆதாரங்களோடு தான். ஒவ்வொரு தரப்பையும் சரி பார்த்தே எழுதினேன். மேலும் தயாநந்தன் தன் கட்டுரையில் மில்லருக்கும் தலித்துகளுக்கும் இருந்த தொடர்பை தலித்தியப் பார்வையில் இருந்து தான் எழுதுகிறார். அத்துடந் நான் நிறுத்தியிருந்தால் மில்லரை என்னமோ தலித் விரோதி போல் கட்டமைத்திருக்கலாம். ஆனால் அதையும் தாண்டிச் சென்று ரவி வைத்தீஸ் நூலை வைத்து மில்லர் சைவ மரபுக்கு ஆற்றியப் பணியையும் சேர்த்தே எழுதினேன். அதற்கு காரணம், கிறிஸ்தவக் கல்லூரி அவர்களே சொல்லிக் கொண்டதைப் போலல்லாமல் இன்று பொதுவாக நாம் சொல்லும் இந்து மதத்தை நிந்தனை செய்வதை மட்டுமே செய்யவில்லை என்று எடுத்துக் காட்ட.

எழுதுவது உ.வே.சா.வோ, பாரதியோ, மில்லரோ நான் பொதுவாக கூடிய வரை பலத் தரப்பட்ட கோணங்களையும் தொகுத்து தரவுகள் எங்கு இட்டுச் செல்லுமோ அங்கு செல்வதே வழக்கம். மேலும் தரவுகளின் பட்டியலையும் வெளிப்படையாகவே சொல்லி விடுவேன். யார் வேண்டுமானாலும் சரி பார்த்து என் முடிவுகளை ஏற்கவோ மறுக்கவோ செய்யலாம். உங்கள் பதிலில் நீங்கள் மிகச் சரியாக, “அந்தக் கட்டுரையின் மூலநூல்களாக அரவிந்தன் கண்ணையன் குறிப்பிடும் நூல்களையே உங்கள் தரப்பினர் ஆதாரபூர்வமாக மறுக்கவேண்டும்” என்று சொல்லி இருக்கிறீர்கள்.

தலித் கல்வி, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள் குறித்து எழும் விவாதங்களில் மில்லரின் விக்கி இனி இன்றியமையாத பேசுப் பொருளாக இருக்கும். என் கட்டுரையை இணைத்ததற்காக சொல்லவில்லை. அதனை இணைக்காமல் ரூபா, தயானந்தனை குறிப்பிட்டே எழுதியிருந்தாலும் பொருந்தும். ஆனால் அந்த சுட்டல்கள் இல்லாமல் இருந்திருந்தால் அந்த விக்கி முழுமைப் பெற்றிருக்காது, நிச்சயம் தலித் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும்.

மிக்க நன்றி,

அரவிந்தன்

***

அன்புள்ள அரவிந்தன்

வந்து சேர்ந்துவிட்டேன். அற்புதமான ஒரு மாதம். நினைவில் என்றும் நீடிக்கும் அரிய நிகழ்வுகளுடன். உங்களை சந்தித்ததும் நிறைவூட்டியது.

சிலசமயம் நாம் நடுநிலைமையுடனும் புறவயத்தன்மையுடனும் இருந்தால் மட்டும் போதாது, அதை வெளிப்படுத்தவும் நிறுவவும் வேண்டும். தமிழ்ச்சூழலில் அனைவரும் மதம் சார்ந்து  கொஞ்சம் உணர்வுமிகை நிலையிலேயே இருக்கிறார்கள்.

சரி, தீவிர என்னும் சொல்லை விலக்கிக் கொள்கிறேன். தமிழில் புரட்டஸ்டண்ட் என்பதற்கு புழக்கத்தில் உள்ள சொல் சீர்திருத்த கிறிஸ்தவம். அது நிலைபெற்று விட்ட சொல். சரியானதா என்பது இனி கேள்வியே அல்ல. கலைச்சொற்கள் அப்படித்தான் உருவாகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைவெள்ளையானையும் ஒடுக்குமுறையும்
அடுத்த கட்டுரைஅணில்