வில்லியம் மில்லரும் அரவிந்தன் கண்ணையனும்

வில்லியம் மில்லர்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் இணைய இதழிலும் அதன் வழியாக நான் வாசிக்க நேர்ந்த தமிழ் விக்கி கலைக்களஞ்சியத்திலும் தமிழ்ச் சிந்தனையிலே ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவரான வில்லியம் மில்லர் அவர்களைப்பற்றி எழுதப்பட்டிருந்தது. வில்லியம் மில்லர் ஆழ்ந்த சிந்தனாவாதி. அவர் அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருந்தார். தமிழகத்திலே கல்வி வளரவேண்டும், சாதிவேறுபாடு ஒழியவேண்டும் என்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணம் செய்த மேதாவி அவர். அவரைப் பற்றி ஒரு நல்ல பதிவை தமிழ் கலைக்களஞ்சியத்திலே சேர்ந்தமைக்கு நன்றி.

ஆனால் அந்தக் கலைக்களஞ்சியப் பதிவிலே அவர் தமிழ்நாட்டிலே செய்த கல்விச்சேவைகளை கொச்சைப்படுத்தும் ஒரு பதிவு இருந்தது. அதை எழுதியவர் அரவிந்தன் கண்ணையன் என்பவர். மில்லர் அவர்கள் தலித் மக்களுக்கு எதிரானவராக இருந்தார் என அதிலே சொல்லப்பட்டிருந்தது. முழுக்கமுழுக்க மதக்காழ்ப்புடன் எழுதப்பட்ட ஒரு பதிவு அது. வில்லியம் மில்லர் பற்றிய அந்தப்பதிவிலே அந்தக்குறிப்பு தேவையற்றது என்பது என் எண்ணம். அது நல்ல நோக்கத்தைக் காட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

ஞான. செல்வராஜ்

அன்புள்ள ஞான செல்வராஜ்

அந்தப்பதிவு வில்லியம் மில்லர் பற்றி இன்று கிடைக்கும் எல்லா தரவுகளையும் ஒட்டுமொத்தமாக திரட்டி அளிக்கிறது. வில்லியம் மில்லரை தமிழ் நவீனச்சிந்தனையின் முன்னோடியாகவே முன்வைக்கிறது. தமிழில் அவரைப்பற்றி எழுதப்பட்ட முதல் கலைக்களஞ்சியப் பதிவு அது என்பதை நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். அப்பதிவிலேயே வில்லியம் மில்லர் தலித் இயக்க முன்னோடிகளான எம்.சி.ராஜா, மதுரைப்பிள்ளை போன்றவர்களுக்கு முன்னுதாரணமான ஆசிரியராக அமைந்து ஊக்குவித்தார் என்றும் உள்ளது.

அரவிந்தன் கண்ணையன் எழுதிய பதிவு அவருடைய சொந்தக்கருத்து அல்ல. அவர் அண்மைக்காலத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில நூல்களை ஆதாரமாகக் கொண்டு அதைச் சொல்கிறார். அந்தக் கட்டுரை வில்லியம் மில்லர் பற்றிய ஒரு விரிவான குற்றச்சாட்டை முன்வைக்கையில் அப்படி ஒரு குற்றச்சாட்டு உள்ளது என்ற அளவிலேயே அக்குறிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரையின் மூலநூல்களாக அரவிந்தன் கண்ணையன் குறிப்பிடும் நூல்களையே உங்கள் தரப்பினர் ஆதாரபூர்வமாக மறுக்கவேண்டும். மறுத்து எழுதப்பட்டால் சுட்டி கொடுக்கிறோம்.

அரவிந்தன் கண்ணையன் இந்து அல்ல. அவர் வில்லியம் மில்லரின் அதே மதப்பிரிவைச் சேர்ந்தவர். தீவிரமான சீர்திருத்தக் கிறிஸ்தவர்.

ஜெ

முந்தைய கட்டுரைபொன்னியின் செல்வன் பற்றி…
அடுத்த கட்டுரைகூடுதல் என்பது களிப்பு