ச.து.சு.யோகியார்- மர்மயோகி

கலைக்களஞ்சியப் பணியில் ஈடுபட்டு, வாசிக்கும்தோறும் திகைப்பூட்டும் விஷயங்கள் பல கண்ணுக்குப் படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்ப்பொதுச் சமூகத்துக்கு நூல்கள், அறிவார்ந்த உழைப்பு ஆகியவற்றின்மேல் இருக்கும் அலட்சியமும் அறியாமையும். பல முக்கியமான நூல்களை பொதுமக்கள் மட்டுமல்ல அறிஞர்கள்கூட அலட்சியமாக தூக்கிப்போட்டு அழியவிட்டிருக்கிறார்கள். தேவையில்லா பொருள் என எரித்திருக்கிறார்கள்.

ஆண்டி சுப்ரமணியம் தொகுத்த நாடகக் கலைக்களஞ்சியத்தை சென்னை பல்கலைக்கழகம் தூக்கி கோப்புகளுடன் போட்டு அழியவிட்டது. அந்நூலுக்கு நகல் இல்லை. ஆகவே எப்போதைக்குமாக தொலைந்துவிட்டது. எண்பது அகவையில் அவர் இருபதாண்டுக்கால உழைப்பில் தொகுத்த  60,000 உட்தலைப்புகள் கொண்ட கலைக்களஞ்சியம் தொலைந்துவிட்டது என சென்னை பல்கலைக் கழகம் எளிதாகச் சொல்லிவிட்டது. ஆனால் மனம்தளராமல் அவர் இரண்டு ஆண்டுகளில் நினைவில் இருந்து மீண்டும் எழுத முடியும் என்றார். அதற்குள் மறைந்தார்.

அதே கதைதான் ச.து.சு.யோகியாருக்கும். ஈரோட்டில் அவர் தொல்தமிழ் நாடக இலக்கண நூலான கூத்தநூலை கண்டெடுத்தார். அச்சுவடிகளை வாசித்து மிக விரிவாக உரை எழுதினார். அதை தட்டச்சு செய்ய கொடுத்தார். தட்டச்சு செய்பவரின் மனைவி மொத்த நூலையும் தூக்கி அடுப்பில் வைத்து எரித்துவிட்டார். நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த யோகியாரிடம் அச்செய்தி சொல்லப்பட்டது. அவர் மனம் தளராமல் உடனே மீண்டும் எழுத ஆரம்பித்தார்.

யோகியார் அந்த உரையை எழுதி முடிக்கவில்லை. 1968ல் அவருடைய மரணத்துக்குப்பின் அவர் எழுதியவற்றின் முதல் பகுதி வெளிவந்தது. 198ல் அடுத்த பகுதி வெளிவந்தது. ஒன்பது இயல்களில் நான்கு மறைந்தே போயிற்று.

ச.து.சு யோகியாரின் வாழ்க்கை ஒரு மர்மக்கதைபோல வாசிக்கத் தக்கது. மாயாஜால ஈடுபாடு கொண்டவர். சித்தரியல் ஆய்வாளர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். நவீன இலக்கியவாதிகளின் நண்பர். குறிப்பாக புதுமைப்பித்தனுக்கு மிக அணுக்கமானவர்

ச.து.சு. யோகியார்
ச.து.சு. யோகியார் – தமிழ் விக்கி

ச.து.சு.யோகியார்

முந்தைய கட்டுரைஆனந்த் குமார் – கடிதம்
அடுத்த கட்டுரைவீரான்குட்டி கவிதைகள்-2