ஆர்.சண்முகசுந்தரம், தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
நான் ஆர்.சண்முகசுந்தரம் பற்றி முனைவர் பட்டத்துக்கு ஆய்வுசெய்யும் நோக்கத்துடன் இருக்கிறேன். தமிழ் விக்கியில் ஆர்.சண்முகசுந்தரம் பற்றிய பக்கத்தை பார்த்தேன். அதிலுள்ள செய்திகள், அதிலிருந்து விரியும் சுட்டிகள் ஆகியவை முழுமையாக ஒரு சித்திரத்தை அளித்தன. படித்து முடிக்கமுடியாமல் சுட்டிகள் வழியாக நீண்டுகொண்டே சென்றது. கல்வித்துறை ஆய்வுகளுக்கு தமிழ் விக்கி ஒரு பெரிய செல்வம். ஆர்.சண்முகசுந்தரம் பற்றி ஆய்வுசெய்தவர்களின் பட்டியல்கூட பதிவில் உள்ளது.
ஒரு நல்ல கல்வித்துறை ஆவணமாகவே விக்கி பதிவுகள் உள்ளன. பெரும்பாலான பதிவுகளை ஒரு கதைபோல வாசிக்க முடிகிறது. கட்டுரைகள் அனைத்திலும் தெளிவான திட்டமும், கட்டமைப்பும் உள்ளது. ஆகவே வேண்டிய தகவல்களை எளிதாக எடுக்க முடிகிறது. இந்தக் கட்டுரைகளின் பகுப்புகள் மிகமிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன
முனைவர் அ.கா.பெருமாள் போன்று தேர்ந்த ஆய்வாளர் ஒருவரின் மேற்பார்வையில் தமிழ் விக்கி வருகிறது என்பது அதன் நம்பத்தன்மைக்குச் சான்று. ஒரு கல்வித்துறை ஆய்வில் தமிழ்விக்கியை தாராளமாக சுட்டி கொடுக்கலாமென நினைக்கிறேன்.
ஆய்வாளனாக என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
செல்வராசன் தங்கவேல்