கடைசியில்
நதியைக் குற்றஞ்சாட்டும் எந்தப் பேச்சும்
எனக்குப் பிடிப்பதில்லை
மூழ்கி அமிழ வரும் ஒருவரை
அது முழுதும் ஏற்றுக்கொள்கிறவரையில்
பிளந்து கடக்க வருபவரை அனுமதிக்கிறவரையில்
காண வருபவருக்குக் கொடுப்பதற்காக
சிறுமீன்களின் கண்ணாடிக்குடுவையை
அது பாதுகாத்து வைத்திருக்கிறது.
முத்துகளில்லை
பவழங்களில்லை
அதீத உறுமல்களோ
அலையதிர்வுகளோ இல்லை
இப்படி விச்ராந்தியாகத் தொடங்கினால்
இந்த நதி ஒரு யோகியாகவே
மாறிவிடப் போகிறதென்று நினைத்தேன்.
ஆனால்
கழிமுகத்தை அடைந்ததும்
என்ன நடக்கிறதென்றுதான்
எனக்குப் புரியவில்லை
கடலோடு கூட்டு சேர்ந்ததும்
அது தன் சொந்தப் பெயரிழக்கிறது
நீண்ட பயணத்தின் ஞானமனைத்தையும்
மடிமைக்குச் சமர்ப்பிக்கிறது
பாய்ச்சலை,
பாறை மேல் குதித்தேறிய பின்பு வரும்
வெடிச்சிரிப்பை அக்கணமே மறந்துவிடுகிறது.
இந்தப் பயணம்
என்றென்றைக்குமாய்த் தேங்கிக் கிடக்கத்தானா
என்றெண்ணும்போது
கணவன் வீடு போகும்
புதுப்பெண்ணின் நினைவு வருகிறது.
ஆனால்
நதியிடம் இந்த விஷயத்தைச் சொல்லிப் பாருங்கள்
அதற்குப் புரியப் போவதில்லை
ஏனென்று கேட்காதீர்கள்
அது அப்படித்தான்.
***
குறைந்து குறைந்து
காணும் முன்பு
எத்தனை பெரியவராய் இருந்தோம்
பரஸ்பரம் நாம்!
கண்டுகழித்ததும் சிறிதானோம்
பேசத் தொடங்கியபோது அற்பமானோம்
இனி ஒன்றாக நடக்கத் தொடங்கினால்
குறைந்து குறைந்து
இருக்கிறோம் என்றே
சொல்ல முடியாத அளவுக்கு
முழுதுமாய்த் தீர்ந்துவிடுவோமோ
நாம் ஒருவருக்கு ஒருவர்?
கடவுள் காணக் கிடைக்காதது
சாலவும் நன்றல்லவா?
***
தேடல்
நீ எங்கே என்று கேட்டதும்
நாலாதிசைகளிலும் விரல்நீட்டி
என்னைச் சுற்றலில் விட்டது
மரம்
உன்னைத் தேடுகிறேன் என்றறிந்ததும்
எப்போதும் முன்னால் நடக்கும் நட்சத்திரங்கள்
வெகுவாகப் பின்னால் போய்விட்டன
வழிகாட்ட வேண்டிய சுமை நீங்கி.
காற்று வளையமாய்ச் சுழற்றியது.
கடைசியில் கதறியபடி
கடற்கரை சென்றேன்
உதடு திறக்கும் முன்பே
நீ எங்கே என்று
ஆயிரம் நாக்குகள் ஒருசேர நீட்டி
திரும்பக் கேட்கிறது கடல்.
***
சொல்
சொல்
இரண்டுபேர் காதலிக்கத் தொடங்கும்போது
அவர்களை மட்டுமாக்கி
சுற்றியுள்ள உலகம்
சட்டென்று எங்கே
போய்த் தொலைகிறது?
***
வேனில் மரங்கள்
மழைக்காலக் காடு
ஒரு பப்ளிக் ஸ்கூல் அசம்ப்ளியை
நினைவூட்டும்
அங்கு சீருடையணிந்த மரங்கள்
கீழ்படிதலுக்கு வெகுமதி பெறுகின்றன
வேனிற்காடு
கிராமத்து சாதா இஸ்கூல் போல
அங்கு மரங்கள்
சீருடை இல்லாததால்
பல மங்கிய நிறங்களில் தத்தம்
சொந்த உடையில்
பொடிமண்ணில் விளையாடி ஆர்ப்பரித்து
வரிசையாய் வந்து நின்று
கீழ்படியாமைக்கு அடி வாங்குகின்றன.
மழைக்கால மரத்திற்கு
சவால்கள் ஏதுமில்லை
வேனிலுக்கு அப்படியல்ல
அது எல்லாவற்றையும் முதலில் இருந்து
தொடங்க வேண்டும்.
நீருக்கு அலைய வேண்டும்
எரிந்துபோகாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்
ஒவ்வொரு வேளைக்கும்
அது பிழைத்திருக்க வேண்டும்.
மழைக்காலக்
காட்டினைவிட எனக்குப் பிடித்தது
உயர்த்திய முஷ்டியைப் போல் நிற்கும்
வீரதீர வேனில் மரங்களைத்தான்.
***
கேள்
கல்லிடம் கேள்
எவ்வளவு காத்திருந்து
ரத்தினமாகியதென்று
நீர்த்துளியிடம் விசாரி
எத்தனை காலக் காத்திருப்பு
முத்தாவதற்கென்று
உதடுகள் இருந்திருந்தால்
அவை சொல்லியிருக்கும்
‘அன்புடன் ஒரு கை தொடுவதற்கு
எடுத்துக்கொள்ளும் நேரம்’ என்று.
***
- தமிழாக்கம் சுஜா