ஆண்டி சுப்ரமணியம் கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பல்லாண்டுக்கால உழைப்பால் A Theatre Encyclopedia என்னும் தலைப்பில் அவர் சேகரித்த கலைக்களஞ்சியம் 60,000 உட்தலைப்புகள் கொண்டது. கையெழுத்துப் பிரதியிலிருந்த அந்த நூலைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் அதைத் தவறவிட்டது; பிரதி கிடைக்கவே இல்லை. அதன் பிறகும் ஆண்டி இன்னும் ஆண்டு முயற்சி செய்தால் மறுபடியும் அதைத் தொகுத்து விடலாம் என்றாராம். அப்போது அவருக்கு வயது 80.
இன்றுவரை அந்தப்பேரிழப்பை தமிழ்ச்சூழல் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு பொதுச்சூழலுக்கும் கல்வித்துறைக்கும் அறிவியக்கத்துக்குமான வேறுபாடென்ன என்பதைச் சுட்டும் நிகழ்வு இது. இன்று நம் தமிழ் விக்கி முயற்சிகளை எதிர்கொள்பவர்களின் மனநிலையும் இதுவே.
ஆண்டி சுப்ரமணியம் போன்ற ஒருவர் ஒரு நல்ல கலைக்களஞ்சியம் பதிவுசெய்யவில்லை என்றால் மறைந்தே போயிருப்பார். அவருடைய ஒரு புகைப்படம் கூட கிடைப்பதில்லை.