கழாக்கால்

என்னுடைய திருக்குறள் சொற்பொழிவின்போது ஒரு நண்பர் கேட்டார். “…அதான் ஏகப்பட்ட உரை இருக்கே. மறுபடியும் எதுக்கு திருக்குறளைப்போய் உரை செய்யணும்?”

முதல் யோசனைக்கு அது ஒரு நல்ல கேள்விதான். திருக்குறளுக்கு உரையெழுதாத தமிழாசிரியர்கள் குறைவு. ஏதாவது ஓர் உரைநூலை எடுத்து பார்த்து எழுதவேண்டியதுதான். இத்தனை உரை எதற்கு என்றால் ஒரே பதில்தான். ஒரே உரை விற்பனையாவதற்குப் பதில் பல உரைகள் விற்றால் நிதிப்பங்கீடு நடக்கிறதே.

நான் சொன்னேன். “திருக்குறள் ஒரு நீதி நூல் இல்லை. அது ஒரு கவிதை நூல். கவிதையோட வாசிப்பு காலத்துக்குக் காலம் மாறும். புதுப்புது அர்த்தம் உண்டாகும். அதனாலே புதிய உரை வேண்டியிருக்கு”

அவர் சமாதானம் ஆகவில்லை. “அதெப்டீங்க ஆளுக்காள் மாத்திச் சொல்றது?” என்றார்

“இல்லீங்க. அதை நீதிநூல்னு எடுத்துகிட்டாக்கூட அது ரொம்ப பழைய நூல். அதிலே இருக்கிற பல விஷயங்களுக்கு முன்னாடி நமக்கு அர்த்தம் தெரியாது. இப்ப சரித்திரம், சமூகவியல், மதம்னு வெவ்வேறு துறைகளிலே உள்ள ஆராய்ச்சிகள் வந்துகிட்டிருக்கு. அதையெல்லாம் வைச்சு திருக்குறளை மேலதிகமாப் புரிஞ்சுகிடலாமே ?”

அதுவும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. “அதெப்டி, அத்தனை அறிஞர்கள் வாசிச்சு சொல்லியும் முழுசா உரை கிடைக்காம இருக்குமா?” என்றார்.

நான் ஒரு குறளை எடுத்து விளக்கினேன்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

என்ற குறளுக்கு பரிமேலழகர் “சான்றோர் அவையின்கண் பேதையாயினன் புகுதல் தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண் வைத்தாற்போலும்” என உரை அளிக்கிறார்.

அதையொட்டி மு.வரதராசனார் முதல்  மு.கருணாநிதி வரையிலான அனைத்து உரைகளுமே ‘கழுவாத காலை படுக்கையில் வைப்பதைப் போன்றது அறிவில்லாதவன் அறிஞர் அவையில் புகுந்து பேசமுற்படுவது’ என்றே பொருள் அளித்துள்ளனர்.

அதுவே அறிஞர் வழக்கம். ஒருவரை முன்னோடி அறிஞர் என ஏற்றுக்கொண்டார்களென்றால் அனைவரும் அவரையே திரும்பத்திரும்ப பின் தொடர்வார்கள். சான்றோர் அவையில் அறிவிலாதவன் பேசுவது அச்சான்றோரை அவமதிப்பது. அதற்கும் படுக்கையில் கழுவாத காலை வைப்பது எப்படி உவமையாகும்? சான்றோரை படுக்கை என்கிறாரா வள்ளுவர்? எந்த வகையில் பொருத்தமானது இந்த வாசிப்பு?

நான் நண்பரிடம் சொன்னேன். சமணர்களின் குகைப் பள்ளிகளில் நுழைவாயிலை ஒட்டி பல இடங்களில் கல்லால் ஆன குழிகள் இருக்கும். அங்கே நீர் வைக்கப்பட்டிருக்கும். கால்கழுவாமல் பள்ளிக்குள் புகுதல் விலக்கப்பட்டிருந்தது.

ஏனென்றால் சமண அறவோர் வெறுங்கற்தரையில் படுப்பவர்கள். கழுவாத காலுடன் நுழைதல் அவர்களின் மேனியை காலால் தொட்டு அழுக்கு படுத்துவதற்கு நிகர். பெரும்பழி சேர்ப்பது. சமணர்களின் காவல்தேவர்களால் அந்தக் குற்றம் தண்டிக்கப்படும்.

இந்த ஆசாரமே இஸ்லாமிய மரபிலும் ஒளு எனப்படும் கால்கை முகம் கழுவும் சடங்காக உள்ளது.கால்கழுவாமல் பள்ளியில் நுழைதல் என்பதை ஓர் இஸ்லாமியர் எப்படிப்பட்ட பழியாகக் கொள்வாரோ அப்படித்தான் சமணர்களும் எண்ணினர்.

பேதை அறிஞர் சபையில் நுழைவதென்பது அறிஞர்களை சிறுமைசெய்வது, தனக்கு பழியும் தண்டனையும் தேடிக்கொள்வது. வள்ளுவர் கூறுவது அதைத்தான்.

பரிமேலழகர் வைணவர். அவர் காலகட்டத்தில் சமணம் வழக்கொழிந்து விலகிவிட்டிருந்தது. சமண ஆசாரங்களை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் வந்தவர்கள் பரிமேலழகரை அவ்வண்ணமே பின்பற்றினர்.

ஏனென்றால் நம் பழந்தமிழ்ப்பாடல்களுக்கு உரையளித்தோரில் பெரும்பாலானவர்கள் தமிழறிஞர்கள். சொல்லும் இலக்கணமும் இலக்கியமரபும் அறிந்தவர்கள். ஆனால் சமூகவியலோ, வரலாறோ அறியாதவர்கள். தமிழ்ப்பண்பாட்டை ஒட்டுமொத்த இந்தியப் பண்பாடுடனும், வெவ்வேறு நாட்டார் மரபுகளுடனும் இணைத்துப் பார்க்க அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நான் பல உரைகளில் தேடிப் பார்த்ததுண்டு. கேரளத்தில் வேலன் வெறியாட்டு போல சங்ககாலத்துச் சடங்குகள் பல நடப்பதை, மேற்குமலைப் பழங்குடிகளிடம் சங்ககாலத்து வாழ்க்கைக்கூறுகளும் நம்பிக்கைகளும் நீடிப்பதை எவரேனும் அறிந்து இலக்கியத்தை அதனடிப்படையில் பொருள்கொண்டிருக்கிறார்களா என. அவர்களுக்கு சொற்களின் அகராதிப்பொருளே ஆதாரமாக இருப்பதையே கண்டேன்.

திருக்குறள் வெறும் ஒரு அறவுரைத் தொகுப்பு அல்ல. அது ஒரு பண்பாட்டு நூல். தமிழின் தொல்மரபின் இன்னும் அறியப்படாத பல நுண்செய்திகள் அதில் இருக்க வாய்ப்புண்டு. ஆகவே  மானுட அறிவுத்துறைகள் வளருந்தோறும் குறள் மீள மீள பொருள்கொள்ளப்படும்.

முந்தைய கட்டுரைஅணில்
அடுத்த கட்டுரைஉயிர்வெள்ளம்- கடலூர் சீனு