டைலர் ரிச்சர்ட் – ஓர் இனிய சந்திப்பு

தமிழ் விக்கி

இந்த அமெரிக்கப் பயணம் எல்லா வகையிலும் ஒரு வெற்றி என்றே சொல்லவேண்டும். திட்டமிட்டபடி தமிழ் விக்கி வெளியீட்டு விழா காழ்ப்பு கொண்ட சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தடைகளைக் கடந்து நினைத்ததை விடச் சிறப்பாக நடைபெற்றது.பெருமதிப்புக்குரிய நான்கு அறிஞர்கள் கலந்துகொண்டார்கள். தமிழ் விக்கி-விழா

அதன்பின் பூன் முகாம். ஐம்பது பங்கேற்பாளர்கள் அமெரிக்கா முழுதிலும் இருந்து வந்து கலந்துகொண்டு இரண்டுநாட்கள் இலக்கியம் பற்றி தீவிரமாக உரையாடி, நட்புகொண்டாடி பிரிந்தோம். அமெரிக்காவில் இது ஒரு புதிய தொடக்கம். பூன் சந்திப்பு

தொடர்ந்து அமெரிக்காவில் டாலஸ், ஃபால்ஸம், இர்வைன், வால்னட் கிரீக் ஆகிய இடங்களில் வாசகர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது. ஏற்கனவே அமெரிக்க விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் அமைப்புடன் தொடர்புள்ள நண்பர்களை கொண்டு இச்சந்திப்புகளை நடத்த எண்ணியிருந்தோம். (விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் அமெரிக்கா- தான் பதிவு செய்யப்பட்ட சட்டபூர்வ அமைப்பு)

ஆனால் அனைத்திலும் உச்சம் என நான் எண்ணுவது அமெரிக்காவிலிருந்து நான் கிளம்பும்போது, மே 31 அன்று நடந்த ஒரு சந்திப்பு. வாஷிங்டனில் தமிழ் விக்கி வெளியீட்டு விழாவுக்கு வருவதாக இருந்த நான்கு விருந்தினர்கள் ஒரேயடியாக வரமுடியாது என அறிவித்தனர். அது எங்கள் திட்டங்களை ஒரு நான்கு மணிநேரம் சற்று குழம்பச் செய்தது. முன்னிலும் சிறப்பாக விழாவை முடித்தோம். 

அவர்களில் இருவர் மதிப்பு மிக்க தமிழாய்வாளர்கள்.ஜோனதன் ரிப்ளி, டைலர் ரிச்சர்ட் ஆகியோர் அவ்வண்ணம் வரமறுத்தது உண்மையில் என்னை வருந்தச் செய்தது. அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.இரு அமெரிக்கக் கல்வியாளர்களுக்கு எழுதிய கடிதம்

அதில் நான் சுட்டிக்காட்டியிருந்தது முதன்மையாக ஒன்றுதான்.அமெரிக்கக் கல்விப்புலம் சார்ந்த ஓர் ஆய்வாளருக்கு ஒரு பண்பாட்டில் படைப்பிலக்கியவாதியின் இடம் என்ன என்று தெரிந்திருக்கும். அந்தப் புரிதல் பொதுவாக தமிழக் கல்விச்சூழலில் எதிர்பார்க்கக்கூடியது அல்ல. அக்காரணத்தால்தான் இங்கே தமிழ் விக்கி போன்ற முயற்சிகள் தேவையாகின்றன. அமெரிக்கக் கல்வியாளர்கள் என்னைப் பற்றி தெரிந்துகொண்டு அந்த முடிவை எடுத்திருக்கவேண்டும் என எழுதினேன்.

டைலர் ரிச்சர்ட் அக்கடிதம் கண்டதும் தொடர்பு கொண்டார். சில பிழையான புரிதல்களின் அடிப்படையில் வரமறுத்ததாக தெரிவித்தார். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தைப் பார்த்ததாகவும், மிகமிகச் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் கூறினார். (ஏற்கனவே மார்த்தா செல்பி தமிழ் விக்கி கலைக்களஞ்சியம் மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொல்லியிருந்தார்.) என்னை சந்திக்க விரும்பினார். அவரை நியூ ஜெர்ஸியில் பழனி ஜோதியின் இல்லத்திற்கு விருந்துக்கு அழைத்தேன்.

டைலர் ரிச்சர்ட் ஹார்வார்டுக்கு அவருடைய பட்டமளிப்பு நிகழ்வுக்காகச் சென்றிருந்தார். நான் முந்தையநாள் சாயங்காலம்தான்  சான்ஃப்ரான்ஸிஸ்கோவில் இருந்து வந்து இறங்கியிருந்தேன். நாங்கள் நியூஜெர்ஸியில் தங்கும் கடைசி நாள் அது என்பதனால் டைலர் ரிச்சர்ட் ஹார்வார்டில் இருந்து நேரடியாகவே விமானத்தில் வந்திறங்கினார். பழனி ஜோதி சென்று அவரை கூட்டிவந்தார்.

டைலர் ரிச்சர்ட் நான் எண்ணியதை விட இளமையான தோற்றத்துடன் இருந்தார். டாலஸ் பகுதியில் இளமையைக் கழித்தவர். ஹார்வார்டில் பட்டமேற்படிப்பு முடித்து கொலம்பியா பல்கலையில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஹார்வார்டில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை சமர்ப்பித்திருக்கிறார். ( பாணபட்டர் எழுதிய காவியமான காதம்பரி பற்றி).

அவருடன் தமிழிலக்கியம், சம்ஸ்கிருத இலக்கியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். டைலர் ரிச்சர்ட் கவிதைகள் எழுதுபவர். சம்ஸ்கிருதத்தின் புஷ்கல காலகட்டம் எனப்படும் காதம்பரியின் காலம் அணிகளால் ஆனது. இலைதெரியாமல் மலர்பூத்த செடிகளாக காவியங்கள் மாறிய காலம் அது. அங்கிருந்து நவீனக் கவிதைக்கு வருவதன் சிக்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்து சங்க இலக்கியம், நவீன இலக்கியம் என நான்கு மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தோம்.

டைலர் ரிச்சர்ட் என்னுடைய கதைகளை வாசித்திருந்தார். படுகை, பெரியம்மாவின் சொற்கள் கதைகளைப்பற்றிச் சொன்னார். அவற்றின் வழியாக என்னை அணுகியறிந்திருந்தார்.தமிழகத்தில் மிகமிகக்குறைவானவர்களே என் கதைகளை படிக்கிறார்கள், அதிகம்போனால் ஐம்பதாயிரம்பேர் கொண்ட ஒரு வட்டத்திற்குள்தான் நவீன இலக்கியம் எழுதி வாசிக்கப்படுகிறது என்று அவருக்கு விளக்கினேன். அதற்குவெளியே இருப்பவர்கள் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள் என்றேன்.

(உண்மையிலேயே இந்த நிகழ்ச்சியை பல்வேறு சூழ்ச்சிகள் வழியாக சிதைக்க முயன்றவர்கள், சிதைத்துவிட்டதாக இணையத்தில் கொண்டாடியவர்கள் எவர் மேலும் எந்த வருத்தமும் இல்லை. இன்று தமிழ்ச் சூழலில் இருக்கும் ஒரு நிலை இது. அவர்களுக்கு இலக்கியம் என்றால் என்ன, இலக்கியவாதி என்றால் யார், அவன் பங்களிப்பு என்ன என்பது முற்றிலும் தெரியாது. எந்த நூல்களையும் வாசிப்பவர்களும் அல்ல. எந்த நூலைப்பற்றியும் எதையும் எழுதியவர்களோ பேசியவர்களோ அல்ல. அரசியல் சார்ந்த எளிய காழ்ப்புகளை கொண்டு இலக்கியவாதியை அணுகுகிறார்கள்.ஒரு முறை ஓர் இலக்கிய அனுபவத்தை அடைந்தாலே அகன்றுவிடும் ஒருவகை கண்மூடித்தனம்தான் அது. அவ்வண்ணம் மாறிவந்த பலர் இன்று என் வாசகர்கள்)

இச்சந்திப்பு எனக்கு உண்மையில் மிக ஆச்சரியமானது. முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்யும் ஒருவர் எத்தனை விரிவாக சம்ஸ்கிருதம், தமிழ் என்னும் இரு மொழிகளை ஆராய்ந்திருக்கிறார். இரண்டுமே அவருக்கு முற்றிலும் அன்னிய மொழிகள். சென்ற தலைமுறை அறிஞர்களுக்குப்பின் சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய தொல்மொழிகளில் ஒன்றை கூடுதலாக அறிந்த தமிழகத்துத் தமிழறிஞர்கள் நானறிய எவருமே இல்லை.

இந்தியாவின் எந்தப் பகுதியைப் பற்றியும் முழுமையான பார்வையை அடைய பன்மொழி அறிவு மிகமிக இன்றியமையாதது. வட இந்தியாவின்  அறிஞர்கள் தமிழ் உட்பட தென்னக மொழிகளைப் பற்றி எந்த அறிதலும் இல்லாமல், தென்னகமொழிகள் எல்லாமே சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தவை என்றெல்லாம் கற்பனையில் வாழ்வதை கண்டிருக்கிறேன். ஒரு டெல்லி பேராசிரியர் மலையாளம் சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸம் என என்னிடம் வாதிட்டார், அவருக்கு மலையாளத்தில் பத்து வார்த்தைகூட தெரியாது.

பழனி ஜோதியின் மனைவி மகேஸ்வரி அற்புதமான தமிழுணவு சமைத்திருந்தார். டைலர் ரிச்சர்ட் தென்னிந்திய உணவின் ரசிகர். தென்னிந்திய உணவுக்காகவே இந்தியவியல் மேல் ஆர்வம் கொண்டதாகச் சொன்னார்.

நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அறம் தொகுதியை அவருக்குப் பரிசாக அளித்தேன். டைலர் ரிச்சர்டின் எதிர்கால ஆய்வுகளிலும் என் எதிர்கால பணிகளிலும் இணைந்துகொள்வோம் என்னும் உறுதியுடன் பிரிந்தோம்.

தமிழ் விக்கி தொடக்கவுரை

முந்தைய கட்டுரைநாஞ்சில் பி.டி.சாமி
அடுத்த கட்டுரைஇரண்டின்மை, கடிதம்