வான்மலரும் மண்மலரும் -கடிதம்

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை

வான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை வாசித்தேன். வழங்கும் பெரும்கொடையின் வழியாக என்னை தொட்டுக்கொண்டே அழைத்து நெடுமலை நோக்கி பயணிக்கின்றீர்கள். நடைபாதை வழியோரம் விழிநீந்தும் பூங்குளங்கள். உங்கள் தொடுதல் உடன் பயணிப்பதில் அந்த நெடுமலை குனிந்து தொடுமலையாகி நடையளவு துாரத்தில் இருப்பதில் மகிழ்கின்றேன். இது உங்கள் மாயக்கரம் தீண்டலில் மனதில் எழுதப்படும் பொன்வண்ண ஓவியம்.

நடைமுறையில் மண்ணுளி பாம்பென நெளியும் சங்கப்பாடல் உரைகளில். ஒரு ராஜநாகம் எழுந்து கவிவான்நிலா வதனத்தில் ஓரு மாணிக்கப்பொட்டு வைக்கும் கவி நடை உரை தந்து உள்ளத்தை விரிய வைக்கின்றீர்கள்.

/தேனைக் கொண்டுவந்து சேர்க்கும் தேனீக்களுக்கு தேனில் மூழ்கி தவம் செய்யும் உரிமை இல்லை. அவற்றுக்கு கூட்டுக்குள் வேறு தேனீக்கள் உண்டு/-எத்தனை அர்த்தம் பொதிந்த உவமை. இரண்டுமே தேனீக்கள்தான். அவற்றின் உள்ளமும் உணர்வும் ஒன்றல்ல. கவிஞனும் காதலனும் மனிதர்கள்தான். கவிஞன் கவிதைத்தேனை அள்ளிவந்து சேர்த்துவிடுகின்றான். வாழும் முப்பது நாளுக்குள் நாளுக்கு ஐந்துசொட்டென நுாற்றைம்பது சொட்டுகள் சேர்த்துவிடவேண்டும் என்ற ஆற்றலுடன் பறக்கிறான். காதலனுக்கு சொட்டுக்களின் எண்ணிக்கை தேவை இல்லை. கடலளவு இருந்தாலும் அவனுக்கு அது துளி. துளி அளவு இருந்தாலும் அவனுக்கு அது கடல். காதலன் சுவையில் மூழ்கி அதன் வசீகரத்தில் மூழ்கி தியானத்தில் மலர்கிறான். கவிஞன் விதையை காடென எழச்செய்து செல்கின்றான். காதலன் காட்டின் மலர்மணத்தில் தேன்சுவையில் ஆழ்ந்து காட்டின் உச்சியில் ஒரு மலரில் மையம் கொண்டு ரீங்கரிக்கிறான்.

அடர்ந்து வளர்ந்து மண்ணை நிறைக்கும் பசலைகொடியும். ஒங்கிவளர்ந்து வானைமறைக்கும் அசோகம் தளிரும். ஒரு வண்ண வாசமாலையில் முரணாக இணைந்து வாசபிணைப்பாக இருக்கமுடியும் என்பதை குறிப்பால். காதலன் காதலை ஏற்றுக்கொள் என்று தோழி அறிவுருத்துவதாக அமைந்த கவிதை.

//எள்ளுச்செடியுடன் கலந்த உளுத்தஞ் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படந்த பசலைக்கொடியின் தழையையும்
அங்கே
தலை ஒங்கி நின்றிருக்கும் அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க
இல்லையேல்
வாடிவிடும் தோழி//

இந்த கவிதையில் “இல்லையேல் வாடிவிடும்“ என்ற சொற்களை நீக்கிவிட்டாலும் இது நல்ல கவிதைதானே.

தோழி!
எள்ளுச்செடியுடன் கலந்த உளுத்தஞ் செடியின் பின்னல்போல
மலைச்சாரலில் படந்த பசலைக்கொடியின் தழையையும்
அங்கே
தலை ஓங்கி நின்றிருக்கும் அசோகமரத்தின் தளிர்களையும்
முரண்படத் தொடுத்த இந்த மாலையைக் கொள்க.

காதலனுக்கும் காதலிக்கும் அவ்வளவுதானே தேவை. எள்ளுச்செடி கொஞ்சம் வான்நோக்கி வளரும். பின்பு கிளைத்து தழைத்து மலர்ந்து காய்க்கும் வெடிக்கும். உளுந்துச்செடி முளைக்கும் வான்பற்றி நினைக்காமல் கிளைக்கும் தழைக்கும் மலரும் காய்க்கும் வெடிக்கும். எள்ளுச்செடி அளவுக்கு வளர்ந்தால்போதும். எள்ளுச்செடி அளவுக்கு வாசமும் வண்ணமும் உடைய வாழ்க்கை மலர்ந்தால்போதும். உளுந்து செடி அளவுக்கு படர்ந்தால். வளர்ந்தால். வண்ணம் கொண்டால்போதும். இந்த புவியை நிறைந்துக்கொண்டு நிறைந்த வாழ்க்கை வாழ்ந்துவிடலாம். அந்த பசலைக்கொடிமாலையில் அசோகம் தளிர்வந்து சேரத்தான் வேண்டுமா? அந்த முரண் நிகழத்தான் வேண்டுமா?

பெண்ணைப் பெற்றவர்களுக்கு அந்த முரண் நிகழவேண்டாம் என்ற தவிப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது. காலம் என்ன செய்கிறது. ஒரே அலையில் தான் மேட்டையும் பள்ளத்தையும் வைத்து அலையவிடுகிறது. எனக்கு தெரிந்த எழுத்தாள காதலர்களில் காதலர்கள் வானுக்கு வானுக்கு வளர்கிறவர்கள். காதலிகள் மண்ணில் மண்ணில் என உழைத்து உழைத்து படர்கிறவர்கள். எந்த தோழி இந்த முரணை ஏற்றுக்கொள் என்று அவர்கள் இடம் சொன்னாள். நெஞ்சம் என்னும் தோழியா?

இந்த முரண் நிகழும் என்று பெண்ணுக்கு தெரிவதே இல்லை. அறியா தெய்வம் ஒன்று அந்த முரணை நிகழ்த்தி நீங்கி நின்று வேடிக்கைப்பார்க்கிறது. நிகழ்ந்தது தெரியாமல் நிகழப்போவது அறியாமல் தன்னில் ஏறிய இனிப்பறியாமல் பெண் இனித்து நிற்கிறாள். அந்த இனிப்பை அறிந்து முரணில் நின்று சுவைக்கும் ஆற்றல் காதலனும் வந்துவிடுகிறான்.இந்த மாய முரண் நிகழும் தருணத்தில், பெற்றவர் காதலி காதலன் மும்முனை மையத்தில் நிற்கும் தோழியின் நிலை என்ன?

/முரண்படத் தொடுத்த
இந்த மாலையைக் கொள்க
இல்லையேல்
வாடிவிடும் தோழி/ அவள் ஏன் உள்ளம் வெம்பி வெடிக்கிறாள்.

அன்பு ஜெ. உங்களுடன் உயரத்திற்கு சென்று உங்கள் கண்களால் பார்க்கும்போதுதான் தோழியின் உள்ளம் புரிகிறது. தோழியின் உள்ளம் எள்ளு நெற்றுப்போல. உளுந்தம் நெற்றுப்போல வெடிக்கும் ஓசை கேட்கிறது. அந்த கொடியும் தழையும் தளிரும் வாடிவிடக்கூடாது என்ற ஏக்கம் வெடியோசை கேட்கிறது. கபிலர் அந்த தோழியாக நிற்கிறார். அது முரண் காதல்தான். அது வாடாமல் வாசம்பெற வேண்டும் என்று தோழியாக நிற்கின்றார்.

தொடுத்தமாலை கொள்ளாவிட்டால் மட்டும் வாடபோவதில்லை. கொண்டாலும் வாடிப்போய்விடும் என்பது தோழிக்கு தெரியாதா? பயன்படாமல் அழிவது அகாலமரணம் பயன்பட்டு அழிவது ஜீவமுக்தி. வாழ்தலின் பயன் பயன்பட்டு ஜீவமுக்தி அடைதல். தலைவனுடன் தலைவி கொண்ட முரண்பட்ட காதல்வாழ்வில் முரணில் நுழைந்து முன்னேறி பயன்படு. பயன்பெறு என்கிறாள் தோழி.

அந்த தோழியின் இதயம் எந்த மலரால் செய்யப்பட்டது. இதை செய் என்று தூண்டுவதன் மூலம் அவள் வாழ்வு என்னாகும்? அவள் ஏன் தன்னையே அதற்கு பலியிடுகிறாள். கபிலர் ஏன் அந்த தோழியாக நின்று அந்த கவிதையை செய்கிறார்?

இந்த கவிதையில் காதலன் மனம் இல்லை. காதலியின் மனமும் இல்லை. அவர்கள் முன் நிற்கும் முரண் மட்டும் இருக்கிறது. அந்த முரணின் கனம் ஏறி தோழியின் உள்ளத்தை மட்டும்தான் அழுத்துகின்றது. அந்த அழுத்தத்தில் வெளிப்படும் கவிதை. மலரினும் மெல்லிய காதல். முரணோ வான்தொட வளர்ந்த மலைக்கனம் கொண்டது. தோழிக்கு வலிக்கிறது. தோழியின் வலியைத்தான் முரணின் வழியாக கவிஞர் நமக்குள் இறக்குகிறார்.

அந்த காதல் முரண்காதல் என்று காதலியைவிடவும் காதலனைவிடவும் நன்றாக அறிந்தவள் உய்த்து உணர்ந்தவள் தோழிதானே. அது முரண் என்று சொல்லி விளக்க முழு தகுதி உடையவள் அவள்தானே. அவள் ஏன் அந்த முரணை ஏற்க சொல்கிறாள்?. அங்குதான் கவிதையின் அழகும் அற்புதமும் ஒளிர்கிறது. முரணை ஏற்று வாழ்தல்தான் உயர்வாழ்வா? உயிர்வாழ்வா? அதில்தான் வாழ்தலின் சுவை கனி உள்ளதா? அந்த முரணை அஞ்சி வாழ்தல் சுளையிருப்ப தோல்சுவைத்தல் போன்றதா? முரணுக்கு அப்பால்தான் வாழ்தலின் பொன்னுலக பொக்கிஷம் இருக்கிறது. கவிஞன் மானிடர்களை தொடவைப்பது அந்த பொன்னுலகத்தைதான்.

அருண்மொழி அக்காவிற்கு நீங்கள் எழுதிய கடிதம் வழியாக இந்த கவிதை உணர்ந்து உரைக்கின்றீர்கள் அற்புத உணர்வு.

வெண்முரசு இந்திரநீலம் அமிதையாக நின்ற ஜெயமோகன் கண்கள் வழியாக இந்த கவிதையை பார்க்கிறேன். தோழியாக நின்ற கபிலரும், அமிதையாக நின்ற ஜெயமோகனும் உருகி ஓன்று இணையும் பொன் தருணம் இந்த கவிதை.

இந்த கவிதையை நன்றாக உள்வாங்க வேண்டும் என்றால் கண்ணன் மீது காதல் கொள்ளும் ருக்மிணி செவிலி தாய் அமிதை மனம் போகும் உயரத்திற்கு இந்த கவிதை போகின்றது.

அனலே உருவமாய் அம்பலத்தில் ஆடுகிறான் ஆடல்வல்லான். மலரே வடிவமாய் கண்மலர் விரிய நோக்கி நெகிழ்கிறாள் சிற்றம்பலசுந்தரி சிவகாமி. அனலே வடிவாய் ஆடுபவனுக்கு முன்னே கைதீபம் தாங்கி தனலென எரியும் பாவையென நிற்பது எதன் பொருட்டு?.

முரண்களில் இருப்பவர்களை தெய்வம் படைப்பதுபோலவே. முரண்களில் இருப்பவர்களை நோக்கி அருகில் இருந்து எரியவேண்டியவர்களையும் தெய்வம் படைக்கிறது.

விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணிக்கு வரதாவில் நீந்தி அன்னம் விளைவித்து அன்னம் உண்டு அன்னமாகி இருப்பவன் மணவாளனாக அமைந்தால்போதும். வெண்முரசியில் ருக்மிணியின் அண்ணன் ருக்மி சிசுபாலனை மணமகனாக ஆக்கவிழைகிறான். வரதாவை ஐந்துமுறைக்குமேல் நீந்தி ஆற்றல் காட்டுகின்றான் சிசுபாலன். ருக்மிணியின் தந்தை அண்ணன் அனைவரும் அவன் கால்களுக்கு கீழே சென்று அடைக்கலம் தேடுகிறார்கள் . அவனை ருக்மிணி தாய் உள்ளத்துடன் இனியன் என்கிறாள். கதை ஆசிரியர் ஜெயமோகன் “பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்கிறார். அதற்கும் அப்பால் என்று அறியா ஒருவனுக்காக ருக்மிணி காத்திருக்கிறாள். கரைதல் அறியாமல் தன்னில் கரைகிறாள்.

“பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்கிறார். இந்த இடத்தை நான் தாண்டி சென்றுவிட்டேன். அன்பு மகன் அமுதீசன் கூப்பிட்டு, இந்த மொத்த அத்தியாயத்தையும் வேறு யாரவது எழுதினாலும் இந்த“பெருவிழைவு ஒன்றாலேயே அவள் கண்படும் பேறு பெற்றவன்.“ என்ற வரியை எழுத ஜெயமோகன்தான் வரவேண்டும் என்றான். அதனால்தான் அந்த அத்தியாயத்தில் அந்த வரி முத்தாக அமைந்தது என்றான். அந்த வரியில் லயித்து ருக்மிணி கண்ணன் மீது கொள்ளும் காதலை வாசித்தேன். அமிதையின் உள்ளம்தான் என்னை உருக்கியது. கபிலரின் இந்த கவிதையில் வாழும் தோழிதான் அமிதையா?

ஜெயமோகனின் அமிதை கண்ணீருடன் கைகளைக் கூப்பியபடி “எப்பழியையும் ஏற்க நான் சித்தமாக இருக்கிறேன் அரசி. என் கன்னியின் நெஞ்சை உரைக்கவே இங்கு வந்தேன். என் சொற்களை இங்கு வைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றாள்.

ருக்மி ‘சேதிநாட்டு அரசர் அவள் கொழுநன் அல்ல என்று எண்ணச் செய்தது உன் சொல் என சமையப்பெண்ணாக அங்கிருந்த சேடியும் உளவு சொன்னாள். ஆயினும் இந்நகரின் தொல்குடிகளின் கொடி வழி வந்தவள் என்று உன்னை அறிவேன். உன் சித்தம் இவ்வரியணைக்கும் இதில் அமர்ந்த எனக்கும் கட்டுப்பட்டது. என் ஆணை இது“ என்றான்.

“ஆம் இளவரசே. முற்றிலும் இதற்குரியவள் நான். இச்சொற்களையே இளவரசியின் காதுகளில் விழச்செய்வேன்” என்று சொல்லி தலைவணங்கி அமிதை மீண்டாள். ‘என்ன செய்வேன் மூதன்னையரே? இம்மண்ணுக்கு நீங்கள் அளித்த அனைத்தும் உப்பென்றும் உயிரென்றுமாகி நிறைந்துள்ளன. நானோ உங்கள் சொல் சென்று தொட்டு மீளும் சிற்றுயிர். தானே நகரும் உரிமையற்றது நிழல். ஆயினும் என் உள்ளம் எப்படிச் சுழன்றாலும் அங்கேயே சென்றமர்கிறது. இவள் அவனுக்குரியவள். எங்கோ கடல் விளிம்பில் பெருநகர் ஒன்றில் கதையோ என சொல்லில் ஊறி குழல்விழித்த பீலியுடன் அமர்ந்திருக்கும் அவனே இவளுக்குரியவன். இவையனைத்தும் மானுடர் அறியும் நெறிகள். அது விண் வகுத்த வழி.’

அன்புடன்

ராமராஜன் மாணிக்கவேல்

***

முந்தைய கட்டுரைகடுத்தா சாமியின் வருகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் -பெயரின் பிழை