காற்று வருடும் யானைச்செவிகள்

 

என் வீட்டுக்கு நேர்ப்பின்னால் உள்ள காலியிடத்தில் எப்போதும் சேறு இருக்கும், ஏனென்றால் அருகே கால்வாய் நீர் ஓடும் ஓடை உள்ளது. சேற்றுப்பரப்பு எங்கிருந்தாலும் குமரிமாவட்டத்தில் வளர்வது காட்டுசேம்பு என நாங்கள் அழைக்கும் ஒரு செடி. சேப்பங்கிழங்கு விளையும் செடியின் காட்டுவகை. நான் இளமையில் வாழ்ந்த திருவரம்பைச் சுற்றி எங்கும் இந்தச் செடிதான்.

நாட்டுசேம்புக்கும் காட்டுசேம்புக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நாட்டுசேம்பு பச்சைநிறமான, பளபளப்பான பெரிய இலை கொண்டது. தண்டு வழவழவென்றிருக்கும். வாழைத்தோட்டங்களில் ஊடுபயிராக வளர்ப்பார்கள். சேம்புக்கு வெயில் ஆகாது. எப்போதும் சில்லென்று குளிர்ந்திருக்கும். கண்ணை மூடிக்கொண்டு தொட்டால் பாம்பைத் தீண்டிய திகைப்பை அடைய முடியும்.

காட்டுசேம்பு அவ்வளவு உயரமாக வளராது. பச்சைப்பரப்பில் செம்புள்ளிகள் நிறைந்த இலை. யானைச்செவிபோலவே அமைப்பு, அதேபோல செம்புள்ளிகள். யானைமுகத்து செம்புள்ளிகளுக்கு ஆனைப்பூ என்று பெயருண்டு. பூத்த யானை! யானை மலர்வதுபோல காட்டில் மழைநனையும் பாறைகளும் மலர்கின்றன. அதேபோல செம்புள்ளிப்பரப்புகள் கொண்டு. பாறைப்பரப்பின் அந்த சிவப்பு மலர்வட்டங்கள் ஒவ்வொன்றும் நுண்தாவரங்களாலான ஒரு காடு என்கிறார் டேவிட் அட்டன்பரோ.

இளமையில் சேம்பிலை எங்களுக்கு குடை. ஓயாமல் மழைபெய்யும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும். ஆகஸ்டில் கொஞ்சம் மழை குறையும் செப்டெம்பரில் மீண்டும் மழை. அதன்பின் ஜனவரி வரை மழைதான். பிப்ரவரி, மார்ச்சில் கொஞ்சம் இடைவெளி. ஏப்ரலில் கோடை மழை. மழை எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி.

பெரியவர்களுக்கு கரிய துணியாலான சீலைக்குடை. வயல்வேலை செய்பவர்களுக்கு தலையில் தொப்பி போல சூடிக்கொள்ளும் ஓலைக்குடை. எங்களுக்கு இரண்டுமில்லை. பள்ளிக்குப் போகும் வழியில் வயல்களுண்டு. மழை தொடங்கியதும் ஓடிப்போய் ஆளுக்கொரு சேம்பிலையை காம்புடன் பிடுங்கிக்கொள்வோம். குடையளவுக்கே பெரியது அந்த இலை. மழைநீரை உடனடியாக வழியச் செய்துவிடும்.  மழைக்கேற்ப திருப்பித்திருப்பி பிடித்தால் ஒரு சொட்டு நனையாமல் சென்றுவிடமுடியும்.

சேம்பங்குடை என்று அந்த இலையைச் சொல்வோம். எங்கள் பள்ளிக்கூடங்களில் நீண்ட வராந்தாக்களில் மாணவர்கள் கொண்டுவந்த சேம்பக்குடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். சேம்பக்குடையின் உடைந்த தண்டில் இருந்து சொட்டும் நீர் கொஞ்சம் அரிப்பை அளிக்கும். வகுப்பில் அமர்ந்து சொறிந்துகொள்வோம்.

காட்டுசேம்பின் இலைகளை எடுத்து காதுகள் போல கட்டிக்கொண்டு யானைகளாகி உறுமி விளையாடுவது எங்கள் இளமைப்பருவத்து வேடிக்கைகளில் ஒன்று. சேம்பிலையின் அசைவு யானைச்செவிபோலவே இருக்கும். அதனாலேயே அதற்கு ஆனைச்செவி என்றும் பெயருண்டு.

பின்பொருமுறை நண்பர்களுடன் காட்டில் சென்றபோது நாட்டுசேம்பின் அளவுக்கே பெரிய காட்டுசேம்பின் இலைகளை கண்டேன். நான்கடி அகலமானவை. செம்பூ படர்ந்தவை. காற்றில் அவை அசைவது யானைச்செவி என்றே தோன்றியது. காட்டுசேம்பின் கிழங்கை காட்டு பன்றி மட்டுமே உண்ணும் என்றான் என்னை காட்டுக்குள் அழைத்துச்சென்ற அடப்பன் நெல்சன்.

அன்று காட்டில் சிறுநீர் கழிக்கச் சென்றபோது சற்று அப்பால் சேம்பிலையின் அசைவை கவனித்தேன். சிறுநீர் கழித்து முடித்தபின்னரே அது காட்டுயானை என தெரிந்தது. உடல் விதிர்க்க ஓடிவந்து ’ஆனை, சேம்பிலை’ என குழறினேன்.

“சேம்பிலையை கண்டு பதறிபோயிட்டான்…” என்று அடப்பன் சொன்னான்.

“பயந்தவனுக்கு சேம்பிலை ஆனையில்லா?” என்றான் கொச்சன் ராஜு.

நான் அவர்களுக்கு பின்னால் சென்று அமர்ந்தேன். உண்மையிலேயே அது யானையா இல்லை யானைச்சேம்பா? யானை அப்படியே சென்றுவிட்டது. அல்லது மீண்டும் காட்டுசேம்பாக ஆகிவிட்டது.

அன்றிரவு மரத்தின்மேல் கட்டப்பட்ட ஏறுமாடத்தில் கமுகுப்பாளையாலான படுக்கையில் நான் படுத்திருந்தேன். காற்று குளிர்ந்த நீரை அள்ளி அள்ளி வீசுவதுபோல அடித்தது. ஏறுமாடத்தின் மூங்கில்கள் சேம்புத்தண்டுபோல அல்லது பாம்பின் உடல்போல குளிர்ந்திருந்தன. கீழிருந்த கணப்பில் இருந்து வந்த புகை என்னைச் சூழ்ந்திருந்தது. அந்த வெம்மை ஓர் அணைப்பு போலிருந்தது.

பேச்சிப்பாறைக் காட்டின் கடுங்குளிரில் யானைச்சேம்பின் இலைகள் அசைந்துகொண்டிருப்பதை நான் கனவில் என கண்டேன். அவற்றின் நடுவே யானை குளிருக்கு உடம்பை இறுக்கியபடி நின்றிருந்தது. காலமற்றது, கரும்பாறைகளைப்போல.

காந்தள் வேலி ஓங்குமலை நன்னாட்டுச்
செல்வல் என்பவோ கல்வரை மார்பர்?
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇ
இத்தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே

(குறுந்தொகை 76. கிள்ளிமங்கலங் கிழார்)

காந்தள் மலர் விரிந்த வேலிகள்கொண்ட
ஓங்கு மலை நன்னாட்டுக்கு செல்வேன் என்கிறாரா
கல்லென்ற நெஞ்சம் கொண்டவர்?
மலைச்சேம்பின் அசையும் வளைந்த இலைகளை
பெருங்களிறின் செவி என மெல்லத்தழுவி
குளிர்ந்த வாடைக்காற்று அடிக்கும்
கடும்பனி நிறைந்த மலைப்பாதையில்
நடுங்கித் துயருற எண்ணுகிறாரா?

கிள்ளிமங்கலம் கேரளத்தில் பரவலாக இருக்கும் பெயர்களில் ஒன்று. திரிச்சூர் அருகே உள்ள கிள்ளிமங்கலம் புகழ்பெற்ற சைவத்தலம். கிள்ளிமங்கலத்து கிழார் ஒரு சேரநாட்டவர் என எண்ணிக்கொள்ள எனக்குப் பிடித்திருக்கிறது. காந்தள் மலர்ந்த வேலிகள் கொண்ட மலைநாட்டை அவர் பாடியதில் வியப்பில்லை.

ஓங்குமலைகளின் இடைவெளிகள் வழியாக பீரிடும் கடுங்குளிர் காற்று தடவிச்செல்லும் காட்டுசேம்பின் இலைகளை நினைத்துக் கொள்கிறேன். அந்தக் காற்று அத்தனை சேம்பிலைகளையும் மதவேழச் செவிகளாக்கும் பேராற்றல் கொண்டது.

முந்தைய கட்டுரைஉன்மத்தத்திற்கும் பேரரறிவுக்குமிடையே- அழகுநிலா
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்