அமெரிக்காவில் பெரும்பாலும் எல்லா கூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளில் பொன்னியின்செல்வன் திரைப்படம் சார்ந்தவை உண்டு. நான் திரைவிவாதம் புரிய விரும்ப மாட்டேன் என்பதனால் பலர் அமைதியாக இருந்து சந்திப்புக்கு பின் கேட்பார்கள்.
பெரும்பாலானவர்கள் கேட்கும் கேள்வி, இது பொன்னியின் செல்வன் நேரடியாகவே அந்நாவலின் கதையும் களமும் கொண்டதா, அல்லது ராவணன் போல அக்கருவை மட்டும் எடுத்தாள்வதா?
அந்நாவலின் நேரடியான திரைவடிவம்தான். அதே சோழர்காலக் களம், அதே கதாபாத்திரங்கள், அதே கதையோட்டம். அதே நாவல்தான்.
பெரும்பாலானவர்களின் அடுத்த கேள்வி, படம் எப்படி வந்திருக்கிறது?
நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை. நவீன திரைப்படமாக்கலை அறிந்தவர்களுக்கு அது ஏன் என தெரியும். இப்போது படம் பல துண்டுகளாக இருக்கிறது. ஒருபக்கம் வரைகலை வேலை செய்யப்படுகிறது. இன்னொரு பக்கம் காட்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இப்போது சினிமா இயக்குநரின் கற்பனையிலேயே இருக்கிறது. அதை வேறு எவரும் இப்போது திரைப்படமாகப் பார்க்க முடியாது.
ஆனால் துளிக்காட்சிகளாக படத்தை பார்த்தவர்கள் ஒரு கலகலப்பான, பிரம்மாண்டமான காட்சிவெளிகொண்ட படமாக உள்ளது என்றார்கள்.
வழக்கமான வரலாற்றுப்படங்களில் இருக்கும் இரண்டு அம்சங்கள் பொன்னியின் செல்வனில் இல்லை. ஏனென்றால் மூலக்கதையிலேயே அவை இல்லை. ஆகவேதான் அந்நாவல் இன்றும் ஒரு ’பாப்புலர் கிளாஸிக்’ ஆக நீடிக்கிறது.
ஒன்று, அதில் எதிர்மறை பண்புகள் இல்லை. வரலாற்று நாவல்களிலும் சினிமாக்களிலும் வரும் பெரும் சதிகாரர்கள், கொலைகாரர்கள், தீயவர்கள் இல்லை. அதன் ’வில்லன்’ என்றால் பெரிய பழுவேட்டரையர். ஆனால் அவர் மிக நல்லவர். பாண்டிய ஆபத்துதவிகள் கூட கடமையுணர்வும் நாட்டுப்பற்றும் கொண்டவர்கள்தான்.
இரண்டு, அதில் போர்வெறியும் அதன் விளைவான உச்சகட்ட வன்முறையும் இல்லை. வீரம், தியாகம் என்னும் பெயர்களில் வரலாற்றுப்படங்கள் வன்முறையை காட்சி வடிவில் நிறைக்கின்றன. அந்த அம்சம் இப்படத்தில் இல்லை.
ஆகவே குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவருக்குமான படம் பொன்னியின் செல்வன்.