இர்வைன் சந்திப்பு -காளிராஜ்

அன்புள்ள ஆசானுக்கு,

இந்த சந்திப்பு என் வாழ்வின் மகத்தான தருணங்களில் ஒன்று. 2005- முதன்முதலில் பெரியார் பற்றிய ஒரு கட்டுரை உங்கள் தளத்திற்கு என்னை கொண்டுவந்தது. நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்ததன் கோபத்தில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். உடனடியாக பதில் வந்தது. என் வயதை குறிப்பிட்டு நிதானமாக வாசித்து, அது குறித்து சிந்திக்கவும் கூறியிருந்தீர்கள்.

பதினெட்டு வருடங்கள் தொடர்ந்து உங்கள் தளத்தில் பெரும்பாலான  கட்டுரைகளும் வாசித்திருக்கிறேன். உங்கள் தளத்தை வாசிப்பது என் அன்றாடத்தில் ஒன்றானது. ஒவ்வொரு  முறை இந்தியா வரும்போது உங்களை பார்க்கவேண்டும் என்ற உணர்வும், தயக்கமும் மாறி மாறி வந்து தயக்கமே வென்று வந்தது. இர்வின் சந்திப்பு என்ற ஸ்ரீராமின் செய்தி பார்த்தவுடனே அவரை தொடர்பு கொண்டு வருவதாக சொல்லிவிட்டேன். வாசித்திருக்கிறீர்களா என்ற கேள்வியும் எவையெல்லாம் என்ற கேள்வியும் ஸ்ரீராமிடம் இருந்து வந்ததுமே இது ஒரு சாதாரண சந்திப்பாக இருக்காது என்று தோன்றியது. ஸ்ரீராமிடம் வாசித்த அனைத்தையும் கூறினேன்.  என்னை விட நிறைய வாசிப்பவர்கள் வருவார்களோ என்ற தயக்கம் மறுபடியும் சூழ்ந்தது. விடக்கூடாது என்று காணும் அனைவரிடமும் ஆசானை காண செல்வதாக கூறிவிட்டேன். மீண்டும் மீண்டும். அது என்னை சந்திப்புக்கு செல்ல அழுத்தம் கொடுக்கும் என்று நம்பினேன்.

அது உண்மையில் உதவியது. “எப்பொழுது பார்க்க போகிறீர்கள்?” என்று என் அலுவலகத்திலும் கேட்க ஆரம்பித்தார்கள். கடைசியில்  உங்களை பார்த்தே விட்டேன் ஆசானே. 18 வருடங்கள், எழுத்து மூலமாக மட்டுமே உணர்ந்த ஆளுமை. உங்கள் பேச்சை கவனித்து கொண்டே இருந்தேன். கண்களை  ஒரு கணமும் உங்களை விட்டு விலக்கவில்லை. உண்மைதானா? என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். இரண்டு மணிநேரம் ஒரு நொடியும் கவனம் சிதறாமல் இருந்தது அநேகமாக என் வாழ்வில் முதல் முறை. நீங்களே கூறியது போல முதல் பாதி கிட்டத்தட்ட ஆன்மீக உரை போல மாறிவிட்டது. இலங்கை இலக்கிய/கவிதை தரவரிசை பற்றிய கேள்வி இலக்கியத்தை நோக்கி நோக்கி கவனத்தை செலுத்தியது.

கூட்டம் முடிந்ததும் நான் முதன் முதலில் வாங்கிய உங்கள் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு விடைபெறுவது தான் திட்டம். ஆனால் உங்கள் உரையாடலை பார்த்து கொண்டே இருந்தபோது இதற்கும் உங்களின் காணொளி பார்ப்பதற்கும் வித்யாசம் இல்லையோ என்று தோன்றிய கணம் உங்களிடம் கண்டிப்பாக பேசவேண்டும் என்று எனக்கும் முடிவு செய்ட்து கொண்டேன். குறிப்பாக ஸ்ரீராம் இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது என்றதும் மிக ஏமாற்றமாக உணர்ந்தேன். இவ்வளவுதானா?” என்று மனதினுள்  அரற்ற ஆரம்பித்தேன். ஒரு உந்துதலில் உங்களிடம் வந்து பேசிவிட்டேன்.ஒரு ஆளுமையை, வாசித்து வாசித்து சிந்தனையை சிறக்க வைத்த ஒரு பேராளுமையை அருகில் நின்று பேசும் வரம்! வார்த்தை வரவே இல்லை  இப்பொழுது யோசித்து பார்த்தால் “என்னை நிறைய பாதித்து இருக்கிறீர்கள்” என்ற ஒன்றை மட்டுமே வேறு வேறு வகையினில் உங்களிடம் சொல்லி இருக்கிறேன். அந்த நொடி நீளுமா…? முடிந்து விடுமா? அவ்வளவுதானா? என்ற மனம் கூப்பாடு போட்டு கொண்டு இருந்தது.

ஓர் அணைப்பு ஆசானே! என் அத்தனை தயக்கமும், வார்த்தையின்மையும்… உங்களுக்கு எப்படி தெரிந்ததோ?. என் ஆழ்மனம் கேட்டது அந்த ஒரு கணத்தைதான் போல ஆசானே. இது போதும். ஏமாற்றம் மாறி ஒரு முழு நிறைவு! வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது  நான் எழுதிய ஒரு கடிதம் குறித்து அங்கேயே நண்பர்களுக்கு ஒரு அறிமுகமும் கொடுத்தீர்கள். அதன் பிறகு நண்பர்களிடமான தயக்கமும் ,மறைந்தது. நண்பர்களின் அறிமுகம் ஒரு சிறந்த விஷயம். கிரியை முதல் முறையாக பார்த்தேன். இரவு வீட்டிற்கு அழைத்து அதிகாலை வரை பேசிக்கொண்டு இருந்தோம். ஆசானின் வாசகர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் பல அம்சங்களை கண்டு கொண்டோம். மறுநாள் காலையில் ஸ்ரீராம் வீட்டில் மஹேந்திரன், ஸ்ரீராமிடம் அதை உறுதி செய்து கொண்டோம். எல்லோரும் ஒரே வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தானே? :) கிரி விஷ்ணுபுரம் வாசித்ததாக (அதுவும் முதல் இலக்கிய நாவலே அவருக்கு அதுதான்) கூறி பொறாமை தீயை பற்றவைத்தார். மகேந்திரன் நீலத்தை இரண்டு முறை வாசித்து முடித்ததாக கூறி அந்த  தீயை வளர்த்தார். விசு உங்களின் உரையாடலை அவரின் மனைவி குறிப்பெடுத்து அனுப்பியதை காட்டினார். சட்டென்று ஏலியன்கள் மத்தியில் மாட்டி கொண்டதாக ஒரு உணர்வு. ஆனால் அந்த ஏலியன்களில் ஒருவராக மாற எனக்குள் உறுதி செய்து கொண்டேன். நீண்ட காலம் தொடர போகும் நட்பு வட்டம் இது! ஸ்ரீராமுக்கும் அவர் மனைவிக்கும் மேலும் மேலும் நன்றி (குறிப்பாக அந்த வடைக்கு… :). ஸ்ரீராம் என்னிடம் இருந்து மேலும் தொல்லைகளை எதிர்பார்க்கலாம் (வாசிப்பு குறித்துதான்! வடை இரண்டாம் பட்சம்தான்! :).

அருண்மொழி அக்காவிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினேன். “இந்த தோசை கல்லை புக்செல்ப் -ல் வைத்து யார்” கட்டுரையை பற்றி கேட்டு கொண்டிருந்தேன்.  ஒருசில கட்டுரைகளை குறிப்பிட்டு என்னை வாசிக்க சொன்னார்கள். கண்டிப்பாக வாசித்து விட்டு அக்காவிற்கு ஒரு கடிதம் எழுதவேண்டும். நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது பொதுவாக உணர்ந்த விஷயம். உங்கள் பேச்சுக்கும் எழுத்துக்கும் இடையே வித்யாசம் இல்லாத உணர்வு. உங்கள் எழுத்தை படிக்கும் பொது நீங்க பின்னால் இருந்து பேசிக்கொண்டே இருப்பது போல் உணர்வது அதில் ஒரு பொது அம்சம். இனி எனக்கு பின்னால் அல்ல முன்னால் இருந்து பேசுவது போலவே கற்பனை செய்ய முடியும். சிக்கென பிடித்தேன் என்பது போல உணர்வு!

உங்கள் நேரத்திற்கும், அன்புக்கும் நன்றி ஆசானே! உங்கள் ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும்.

காளிராஜ்

முந்தைய கட்டுரைதமிழ்ச்சொற்கள், உச்சரிப்பு
அடுத்த கட்டுரைபெருங்கனவின் தொடக்கம்