பூன்முகாம், கவிதை -கடிதம்

பொன்வெளியில் மேய்ந்தலைதல்

அன்புள்ள ஜெ,

பூன் சந்திப்பு பற்றி நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு கண்டேன், கவிதை அமர்வு மற்றும் பல சந்தர்ப்பங்களில் கேட்கப்பட்ட கேள்விகளின் தரம் பற்றி கடுமையான கண்டிப்புகள் அறிவுரைகள் இருக்கும் என எதிர்பார்த்திருந்தேன். நான் கேட்ட கேள்விகள் முறைமை தவறியதோ என்ற பதைபதைப்பு இருந்து கொண்டே தான் இருந்தது, பதைபதைப்பு பின்னர் வந்தது, அமர்வில் கேள்விகளை கேட்கும் போது பெரும்பாலானவர்களை போலவே நானும் சன்னத நிலையில் தான் இருந்தேன்.

நீங்கள் தளத்தில் எழுதிய குறிப்பு யாருடைய உளமும் புண்படலாகாது என்ற எச்சரிக்கையுடன் எழுதப்பட்டது போல தோன்றியது, என்னால் இதை பற்றி மேலதிகமாக என்னால் எழுத முடியவில்லை, ஏதாவது பேசி மேலும் முறைமைகள் தவறுவதை தவிர்க்கவே விரும்புகிறேன்.

அனால் அமெரிக்காவில் இந்த சந்திப்புகள் மேலும் நிகழ வேண்டும், நீங்கள் வருடம் தோறும் இங்கு வந்து வகுப்புகள் நிகழ்த்த வேண்டும் என்பது எல்லோருடைய ஆவல், இங்கே seattle நகரில் வாசகர் வட்டத்துடன் தொடர்புகளை இப்போது தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன், வருங்காலத்தில் அமெரிக்காவின் மேற்கு கரையிலும் இத்தகைய நிகழ்வுகள் நிகழ வேண்டும் என்பது என் விருப்பம்.

இன்று வந்த “பொன்வெளியில் மேய்ந்தலைதல்”, அமர்வுக்கு அடுத்த நாளே வந்த “உள்ளூறுவது” ஆகிய கட்டுரைகள் கவிதை உலகுக்குள் நுழைய மிக உதவியாக உள்ளன.

கவிதை அமர்வுக்கு பின் எனக்கு நிறைய கேள்விகள் இருந்தன, வேறு சிலருக்கும் அப்படியே என்று தனி உரையாடல்களில் இருந்து தெரிந்து கொண்டேன்; இந்தக் கட்டுரைகள் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிப்பதில்லை ஆனால் அதை விட சிறப்பான கற்பித்தலை உங்கள்  கவிதை ரசனை முறை நோக்கி எங்களை நகர்த்துவதன் மூலம் நிகழ்த்துகிறது.

“கண்ணாடியின் சட்டத்துக்குள் வர அதைவிட்டு விலகிச் செல்ல வேண்டும், நாய் தான் கவ்விய பொருளை எடுத்துக் கொண்டு ஓடுவதுபோல கவிதையை வாசித்ததுமே அதில் இருந்து கிளம்பிவிடவேண்டும், விரிந்து விரிந்து சென்று மையம் காண்பது”  இவையெல்லாம் மூடியிருக்கும் கதவை திறந்து தர வல்ல சாவிகளாக அமைகின்றன.

அன்புடன்

ஷங்கர் பிரதாப்

முந்தைய கட்டுரைவான்மலரும் மண்மலரும் மயங்கும் மாலை
அடுத்த கட்டுரைடல்லாஸ், டெக்ஸாஸ் வாசகர் சந்திப்பு – கடிதம்