இரண்டின்மை, கடிதம்

சமூக ஏற்பும் நானும்

அன்புள்ள ஜெ

மனிதர்கள் தேடுவது மகிழ்ச்சியை அல்ல, ஆணவ நிறைவை.

-ஜெ

நாம் இங்கிருந்து பெற்று கொள்வது ஏதுமில்லை. அளிப்பதற்காக செயலாற்றுகிறோம். அதனூடாக நிறைவடைகிறோம்.

-ஜெ

எத்தனை அகங்காரமான சொற்கள் இவை! பார்த்தீர்களா!

இரண்டு மேற்கோள்களும் உங்களிடமிருந்து பெற்றவையே. என்ன அதே சொற்களில் இல்லை. முன்பின் கொஞ்சம் நானாக போட்டுவிட்டேன். கொஞ்சம் நினைவு பிரச்சினை. மேலே உள்ள இரண்டையும் படிக்கையில் உங்களில் ஒரு புன்னகையை அதற்கடுத்த என் பின்னூட்டத்தை படிக்கையில் சின்னஞ்சிறு சீற்றம் ஒன்றையும் அடைந்திருப்பீர்கள் என்றால் அது என் வெற்றியாகும். வேறென்ன தந்தையரை ஆசிரியர்களை சீண்ட முயற்சி செய்யாத நல்ல மாணவர்கள் இந்த உலகில் உண்டா என்ன :)

பெரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரு குணம் உண்டு. ஒரு சிந்தனையில் இருந்து அடுத்த சிந்தனைக்கு மலைகளுக்கிடையில் தாவி செல்வதை போன்று செல்வது. நடுப்பட்ட பள்ளத்தாக்குகளை மாணவர்கள் இட்டு நிரப்பி கொள்ள வேண்டும். தன் மாணவன் மேலான தன்னம்பிக்கையில் இருந்து எழுவது. அல்லது அப்படிப்பட்டவன் மட்டுமே தனக்கு மாணவனாக இருக்க முடியும் என்ற தன்னுணர்விலிருந்து எழுவது. இந்த அம்சத்திற்கு நீங்களும் விலக்கானவர் அல்ல.

இன்று காலையிலிருந்து சில சிந்தனைகள் மண்டையை நிரப்பி உள்ளன. அவற்றை உங்களுக்கு எழுதி வரையறுத்தும் முன்னோக்கி செல்லவுமே எழுதுகிறேன். இரண்டாவது மேற்கோளை எடுத்து கொள்ளலாம். இதை சமீபமாக தமிழ் விக்கி பணிகள் குறித்து பேசுகையில் அதிகமாக பயன்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் வாசிக்கையில் பெரும் மன எழுச்சியை தரக்கூடிய சொற்கள். அதிகம் தமிழ் விக்கிக்கு பங்களிப்பாற்றாத எனக்கும் அப்படி ஊக்கம் தருவது எதனால் என்று பார்த்தால் வேறொன்றும் அல்ல, ஆணவம் தான். ஒவ்வொருவனும் இந்த உலகில் தன்னை அளித்து செல்லும் உத்தமனாக கற்பனை செய்து கொள்வது இயல்பானதே. பொது திரளுக்கு இப்படி பிய்த்தெடுக்கப்பட்ட உங்கள் மேற்கோளுடன் சென்றால் அமோக வரவேற்பை பெறும்.

ஆனால் இது முழுமை கொள்வது நீங்கள் உருவாக்கும் ஒட்டுமொத்த சொற்களனுக்குள் நின்று பார்க்கையில் மட்டுமே. எப்போதும் இந்த இரண்டாவது மேற்கோள் வரிகளை சொல்லுவதற்கு முன்னர், செயலாற்றுவது நம்மை வெளிப்படுத்தி கொள்வதற்காக. எந்த செயலில் முழுமையாக வெளிப்படுகிறீர்களோ அதுவே உங்களுக்கானது, அதை ஆற்றுக. அதுவே மனிதனுக்கு கிடைக்கும் இன்பம். செயலாற்றுவதன் ஊடாக தன்னிலை கரைந்து தூய உணர்வாக எஞ்சும் நிலை. இந்த பொருளை குறிப்புணர்த்திய பிறகே ஒவ்வொருமுறையும் அந்த அளிப்பது குறித்த வரிகள் வரும்.

இரண்டிற்கும் நடுவில் உள்ள பள்ளத்தாக்கு வெளி ஒரு முரணாக முதல் பார்வைக்கு தோன்றுகிறது. ஆனால் அது அப்படியல்ல என்ற தெளிவை சென்றடைந்த விதத்தை கூறவே எழுதுவது. ஒவ்வொரு செயலிலும் தன்னை நிறுவி கொள்ளும் அகங்காரம் கலந்தே உள்ளது. அது ஓர் அடிப்படையான உயிர் இச்சை. அகங்காரம் புற உலகத்தை நோக்கி பாய்ந்து பெருகுவதை உலகியல் என்கிறோம். அங்கே ஒருவன் செய்வன எல்லாம் பிறிதை நோக்கி உன்னை காட்டிலும் மேன்மையானவன், உனக்கு சளைத்தவனல்ல என்று சொல்வது. அது வெற்றிகரமாக நிகழ்ந்தேறுவதை மகிழ்வு என்கிறான். உண்மையில் மகிழ்ச்சிக்கு அத்தனை சிரமப்பட வேண்டும் என்று தோன்றவில்லை. ஒரு பூ மலர்வதை கண்டும் நாளை நிறைவு கொள்ள வைக்க முடியும் என்பதே அனுபவமாக உள்ளது.

மறுபக்கம் கலைகளில் ஈடுபவர்களுக்கு அகங்காரமே இல்லையா என்றால், நுட்பமாக உள்ளது. எல்லா கலைகளும் பூரணமடைவது நுட்பங்களாய் நுண்மையாய் விரிந்து முழுமையை எட்டுவதிலேயே. எனவே கலைக்குள் வரும் அகம் நோக்கி குவியும் அகங்காரமும் நுட்பமானதாய் உருமாற்றமடைகிறது. அது ரகசியமாக கிசுகிசுத்து கொள்கிறது, பார்த்தீர்களா, உலகப் பதர்களே, நான் அடையும் இந்த நுண்ணிய இன்பத்தை அறிவிர்களா? கைக்கெட்டும் தூரத்தில் தேனை வைத்து கொண்டு அலையும் மூடர்களே என்று. உலகியலில் வெற்றிக்கு பின்னான வெறுமை குழியில் விழ எத்தனை வாய்ப்புள்ளதோ அதே அளவுக்கு மறைக்கப்பட்ட அந்தகாரத்திற்குள் விழ கலையிலும் வழி உள்ளது. உங்களுடைய இரண்டாவது மேற்கோள் வரிகளை மட்டும் எடுத்து கொள்பவன் இப்படியாவது உறுதி.

அப்படியெனில் கவனிக்கப்பட வேண்டியது அந்த வரிகளுக்கு முன்னர் சொல்லப்படும் செயல் குறித்தவையே. என்னளவில் ஆற்றி உணர்ந்த சிறு விஷயம், எதில் முழுமையாக வெளிப்படுகிறோமோ அச்செயலை ஆற்றும் ஒரு கணத்தில் நானும் செயலும் என்ற இருமை மறைந்து செயல் மட்டுமே எஞ்சும் நிலை நடக்கிறது. மிகச்சில வினாடிகள் எனினும் அதுவே பூரணம். அந்த பூரணத்தை மகிழ்வை நோக்கி செல்லுங்கள் என்பதே உங்கள் சொற்கள். அதை நான் கலை வழி அடைந்தேன், இங்கு முன்வைக்கிறேன் என்று சொல்கிறீர்கள்.

அதே சமயம் இந்த இரண்டாவது மேற்கோள் வரிகளை எதன் பொருட்டு சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட செயல்களை ஆற்றுகையில் நம்மை தடைப்படுத்தும் புற காரணிகளில் இருந்து தற்காத்து கொள்வதற்காக. ஏனெனில் நாம் அடையும் அந்த அரிதான கணங்கள் எப்போதும் நீடிப்பவை அல்ல. மேலும் அகங்காரத்தை தகுந்த முறையில் கருவியாக்கியே அதை சென்றடைகிறோம். அதே போல் அகங்காரத்தை கருவியாக்கி கொள்கையில் அதை போல பாதுகாப்பு தரக்கூடியது எதுவுமல்ல. ஓர் ஆழ்ந்த அர்த்தத்தில் அகங்காரம் என்பது இங்கு அனைத்தையும் ஆற்றும் இச்சையின் வடிவே. அதாவது தேவைப்படும் நேரங்களில் கவசமாக உலக தடைகளில் இருந்து பாதுகாத்து கொள்ள பயன்படுத்தி கொள்ளுங்கள். செயலாற்றுகையில் கவசத்தை கழற்றி வீசிவிட்டு தீவிரமாக ஈடுப்பட்டு இரண்டின்மையை அடைய முயலுங்கள் என்பதே உங்கள் செய்தி. அதாவது அத்வைதத்தை நவீன வாழ்க்கையில் செயல்படுத்தியும் சொல்லியும் வருகிறீர்கள். இதற்கு பின் நிகழ வேண்டிய செயலின்மை குறித்து எதையும் சொல்ல தகுதியில்லாதவன் நான். என் அனுபவத்தில் இல்லாமலாகும் சில கணங்களை செயலில் கண்டவன். செயலின்மை என்பதை உணர இன்னும் பயணம் உள்ளது. இப்போதைக்கு அது செயலாற்றி முடித்த பின் வரும் ஒரு அமைதி என்பதற்கப்பால் எதுவும் தெரியவில்லை.

அன்புடன்

சக்திவேல்

முந்தைய கட்டுரைடைலர் ரிச்சர்ட் – ஓர் இனிய சந்திப்பு
அடுத்த கட்டுரைமு.வ- ஒரு கடிதம்