சியமந்தகம்
சியமந்தகம் தளத்தை படித்தேன். படித்துக்கொண்டே இருக்கிறேன் என்று சொல்லவேண்டும். எவ்வளவு கோணங்கள். என்னென்ன அணுகுமுறைகள். அத்துடன் அனைத்துக் கட்டுரைகளிலும் தெரியும் உங்கள் மீதான பெரும் பற்று. பல கட்டுரைகள் கண்கலங்கவும் நெகிழவும் வைத்தன.
இணையத்தில் உங்களைப் பற்றி வரும் வசைகள், உங்கள் மேல் தாக்குதல் நடந்தபோது சிலர் கொண்டாடியது ஆகியவற்றைப் பார்த்தவர்கள் தமிழ் இலக்கிய உலகத்தில் உங்கள் மேல் பெரும் கோபம் இருக்கிறது என்று எண்ணிவிடுவார்கள். எழுதப்பட்ட எல்லா வசைகளையும் தொகுத்து ஒரு புத்தகம்கூட வந்தது என நினைக்கிறேன்.
ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அலட்சியமான மௌனம் வழியாக அந்த வசைகளுக்கு எதிர்வினையாற்றியது என்றே இந்த தளத்தில் வரும் கட்டுரைகள் காட்டுகின்றன. நான் நாற்பதாண்டுகளாக தமிழ் நவீன இலக்கியத்தை கவனிப்பவன் (தமிழில் எழுதும் வழக்கம் விட்டுப்போய்விட்டது. பழைய கணையாழியில் சில கதைகள் எழுதியிருக்கிறேன்) இன்றுவரை தமிழில் எந்த எழுத்தாளருக்கும் இத்தகைய ஒட்டுமொத்தமான ஏற்பும் மதிப்பும் கிடைத்ததே இல்லை. ஜெயகாந்தன், கி.ராஜநாராராயணன், சுந்தர ராமசாமி ஆகியவர்களின் அறுபதுகள் எல்லாம் எப்படி கடந்து சென்றன என நான் கண்டிருக்கிறேன்.
இந்த ஏற்பு எனக்கு காட்டுவது என்னவென்றால் நேர்நிலையான செயல் ஒரு சின்ன வட்டத்தில் கசப்பையும் கோபத்தையும் உருவாக்குகிறது. ஆனால் அவர்கள் எந்த வகையிலும் முக்கியமானவர்கள் அல்ல. பெரும்பாலும் சல்லித்தனமானவர்கள். உண்மையாகவே இலக்கியத்திலும் அறிவுத்துறையிலும் செயல்படுபவர்களுக்கு படைப்பின் முக்கியத்துவம் என்ன என்று தெரியும். அவர்கள் சண்டைபோட வருவதில்லை. ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசுவார்கள்
சங்கர் நாராயணன்