அன்புள்ள ஜெ,
“திருவிழாவில் இணைந்துகொள்வதற்கு மிக உகந்த வழி என்பது முதலில் திருவிழாவிற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தைத் திரட்டிக்கொள்வதுதான்” – இது திரள் கட்டுரையில் திருவிழாக்களில் கரைந்து போவது பற்றி நீங்கள் கூறியது. உங்கள் அமெரிக்கப் பயணத்திட்டமும்,பூன் காவிய முகாமும் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவிழா மனநிலையில் இருந்த எனக்கு, மேற்சொன்ன வாக்கியமே முகாமிற்கு தயார்படுத்திக் கொள்ள உதவியது.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக உங்களைத் தொடர்ந்து வாசித்து வந்த போதும், சில கடிதங்கள், ஜூம் உரையாடல்கள் தாண்டி, உங்களை நேரில் சந்தித்தது இல்லை. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் சென்ற ஆண்டே இணைந்திருந்த போதும், கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் வசிக்கும் ஓரிருவரைத் தவிர, முகாமிற்கு வரும் வேறு எந்த நண்பர்களையும் நேரில் சந்தித்தது இல்லை. இந்தத் தயக்கங்களும், என் எளிய வாசிப்பு குறித்த சந்தேகங்களும் ஒரு புறம் இருந்தாலும், பெரும் ஆளுமைகளை நேரில் சென்று சந்திக்க நாம் எளிய மனிதர்களாய் இருப்பது தடையில்லை; ஆணவமின்றி நம்மை முன்வைத்தாலே போதும் என்ற உங்கள் அறிவுரையை நினைவில் கொண்டே, பூன் முகாமிற்கு விண்ணப்பித்தேன்.
அந்த ஓரிரு நாட்கள் தாமதத்திலேயே அனைத்து இடங்களும் பூர்த்தியாகி, காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்று விட்டேன். அடுத்த ஒரு வாரமும், தேர்வு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவன் போல் தினமும் ஆஸ்டின் சௌந்தர் அவர்களின் அறிவிப்புக்கு காத்திருந்தேன். நல்லவேளையாகக் கூடுதலாக ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டமையால், எனக்கும் முகாமிற்கு வர அனுமதி கிடைத்தது. அடுத்த சில நாட்களிலேயே முகாமிற்கு வரும் முன்னர் படித்து விட்டு வரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கவிதைகள் அடங்கிய “வீட்டுப் பாடங்கள்” பட்டியல், தலைமை ஆசிரியர் சௌந்தரின் கண்டிப்பான அறிவிப்புடன் வெளியானது :-).
அந்த விரிவான தயாரிப்பின் பயனை, பூனில் நடந்த ஒவ்வொரு அமர்விலும் உணர்ந்தேன்.
பூன் சந்திப்பின் திட்டமிட்ட அமர்வுகள் மே 13 & 14 – இரண்டு நாட்கள் தான் எனினும், முதல் நாள் இரவில் உங்களுடனும், அருண்மொழி நங்கை அவர்களுடனும் நடந்த அறிமுகப்படலத்தில் இருந்தே கவனிக்கவும் கற்று கொள்ளவும் தொடங்கி இருந்தேன். இதுவே நான் பங்கேற்கும் முதல் இலக்கியச் சந்திப்பு என்பதனாலும், என் தெளிவின்மையாலும் , பெரும்பாலும் அமைதியாகவே கவனித்து வந்தேன்.
அந்த நான்கு நாட்களில் எனக்கு கிடைத்தது என்ன என்று திட்டவட்டமாக வரையறுத்து கூறமுடியவில்லை. அதை எண்ணும் ஒவ்வொருமுறையும் முன்பு தோன்றாத ஒன்றை புதிதாய்க் கண்டடைகிறேன். கடைசி நாளன்று விமானநிலையத்திற்குச் செல்லும் வழியிலும், காத்திருக்கும்போதும் பாஸ்டன் பாலா அவர்கள் இந்த கேள்வியைக் கேட்கையில், இருமுறையும் வேறு வேறு பதில்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். ஆகவே நான் இந்த சந்திப்பில் கற்றுக்கொண்ட, இனி தொடர்ந்து செய்ய விழையும் சில அடிப்படை விஷயங்களை மட்டும் இங்கு பட்டியலிடுகிறேன்.
- வாசிப்பு, செயல் எதுவாயினும் தீவிரமான மனநிலை தேவை. ஒப்பேற்றுவதற்காக எதையும் செய்யக்கூடாது. தீவிரமான கவனிப்புக்குத் தடையாக இருப்பது மற்றும் தவிர்க்கப்பட வேண்டியது – Distrcaction Fallacy, Association Fallacy & Counter Fallacy.
- அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன.
- இலக்கியம் என்பதே மறதிக்கு எதிரான எதிர்ப்புச் செயல்பாடு தான்.
- பெற்றோராக நமது கடமை, நமது குழந்தைகளுக்கு ஆகச்சிறந்த தூண்டுகோலாக இருப்பதே. அதற்கு பொருளியல் சார்ந்த வெற்றி மட்டும் உதவாது.
- ஒரு தீவிர அறிவுச்செயல்பாட்டிற்கான கூடுகையில் ‘Party Talk’ எனப்படும் உலகியல் கவலைகள் தொடர்பான கேள்விகளை ஒரு போதும் கேட்கக்கூடாது. அது அங்கு இருக்கும் அனைவரது நேரத்தையும் வீணடிக்கும் செயல்.
இரு நாட்கள் அமர்வுகளில் கற்றுக்கொண்டதற்கு இணையாகவே, உங்களது தனி உரையாடல்களிலும், நண்பர்களுடான தனி உரையாடல்களிலும், நடைப்பயணங்களிலும் ஏதாவது கிடைத்து கொண்டே இருந்தது. கடைசி நாளன்று இரவு நீங்கள் சொன்ன பேய்க்கதைகளும், ஈரோடு கிருஷ்ணன் அவர்களின் சாகசங்களும் நேரம் சென்றதையே மறக்கச்செய்தன. வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் இடம்பெற்ற அவரது நண்பர்களும் உறவினர்களும் வரலாற்றுக் கதாப்பாத்திரமாக ஆகி விட்டதைப்போல, திரு.கிருஷ்ணன் அவர்களும் உங்கள் எழுத்தின் மூலம் வரலாற்றில் நிலைபெற்று விட்டார்.
சார்லட் விமான நிலையத்தில் இருந்து வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும், புனிதர் சிஜோவின் காரில் நிகழ்ந்த உரையாடல்கள் என்றும் இனிய நினைவாக நீடித்து இருக்கும்.
சொல்வனம் குறித்த தனது அனுபவங்களை பாஸ்டன் பாலாவும், தான் மொழிபெயர்த்த நாவல் பற்றிய அனுபவங்களை ஹூஸ்டன் சிவாவும் அந்த பயணத்தின் போது பகிர்ந்துகொண்டனர்.
முகாம் அறிவிப்பில் தொடங்கி கடைசி நாளன்று அனைவரும் பத்திரமாக வீடு திரும்பியதை உறுதிப்படுத்தும் வாட்ஸப் செய்தி வரை ஒவ்வொன்றையும் கச்சிதமாகத் திட்டமிட்டு, வெற்றிகரமாக நடத்திக்காட்டிய சௌந்தர், ராஜன், விவேக், முத்து மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்பும் அசாத்தியமானது. இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி.
வாழ்வில் ஒரு உச்ச கணத்தை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என் பணிவான வணக்கங்களும், நன்றியும்.
-சாரதி