கோதுமை ஏற்றுமதிக்குத் தடை- கடிதம்
அன்புள்ள ஜெ,
“கோதுமை ஏற்றுமதிக்குத் தடை” – இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த “உழைப்பினால் கிடைக்கும் தானியங்களை, உலக தேவையைப் பயன்படுத்தி” நமக்கு ஏற்றபடி ஏன் விலை நிர்ணயம் செய்ய கூடாது என்ற கேள்வி எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது. இந்த கேள்வியை கடிதத்தின் இணைப்போடு எங்கள் நண்பர்கள் குழுவில் பகிர்ந்து கொண்டேன். அப்பகிர்வு அதனடிப்பைடையலான விவாதம் ஒன்றை உருவாக்கி, ஒரு நல்ல புரிதலுக்கும் என்னை தொகுத்து கொள்ளவும் உதவியது. அவ்விவாதத்தின் சாரமாக நான் கருதுவதை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
விவசாயமும் அதன் சார்ந்த தொழில்களும் இங்கே சிறு மற்றும் குறு விவசாயிகளாலேயே பெரும்பாலும் செய்யப்படுவது. அதன் உற்பத்தி தொழில்மயமாக்கப்படாதது. இதனால் அதன் உற்பத்தியையோ அல்லது வர்த்தகத்தையோ கட்டு படுத்துவது எளிதல்ல. அதாவது இன்று எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC ) உற்பத்தியை எளிதாக குறைக்கவோ கூட்டவோ முடியம். உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மீதான இந்த கட்டுப்பாடே விலை நிர்ணயத்தின் ஆதாரம். ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்களை விற்க தடை விதிப்பது எளிதல்ல – பல விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க கூடும். இதற்காக அரசே அத்தனை விளைபொருட்களையும் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும். அம்மாதிரியான அமைப்பு இந்தியாவில் ஏற்கனேவே இருந்தாலும், அவை ஊழல் நிறைந்தவையாகவே செயல்படுகின்றன.
மேலும் விளைபொருள்களை சேமித்தலும் அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதும் மிகவும் செலவேறியது .
இதையனைத்தையும் செய்தாலும் எண்ணெய் வணிகம் போன்றோ, இயந்திரமாக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை போன்றோ அல்லது உயர் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை போலவோ விலை நிர்ணயம் செய்வது சாத்தியமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.
கோகோவை அதிக அளவில் பயிரிட்டு ஏற்றுமதி செய்யும் கானா நாட்டின் விவசாயியால் அதிலிருந்து உருவாக்கப்படும் சாக்லட்டை வாங்க முடியாது. தான் வாங்க முடியாது என்பதால், அக்கம்பனிகளுக்கு தன் விளை பொருட்களை விற்க மாட்டேன் என்றும் சொல்ல முடியாது. சொன்னால் அவ்விவசாயி தன வாழ்வாதரத்தை இழக்க வேண்டும். இந்நிலைமை ஒன்றும் சர்வதேச சதியால் உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல, மாறாக பொருளாதாரத்தின் அடிப்படைகள் மட்டுமே இதனை தீர்மானிக்கிறது.
விவசாயத்தில் எண்ணெய் வணிகம் போன்று எளிதாக உற்பத்தியை கட்டுப்படுத்துவது மற்றும் சேமித்து வைப்பது இயலாதது. விவசாயத்திற்கு இயந்திரமாக்கப்பட்ட உற்பத்திக்கு தேவையான பணித்திறன் தேவை இல்லை – அதனால் இந்தியாவில் உற்பத்தியாகும் பொருளை , நாம் அதிக விலை நிர்ணயம் செய்யும் போது , மற்றொரு நாட்டில் உற்பத்தி செய்வது என்பது எளிதே. உயர் தொழில்நுட்பம் போன்று இதில் அறிவுசார் சொத்து (Intelectual property) என்பது, ஒரு சில புவிசார் குறியீடுகளை தாண்டி, ஒன்றும் இல்லை.
இதனாலேயே வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் விவசாய ஏற்றுமதியை பெரிதும் சார்ந்திருப்பதில்லை. ஒரு நாடு தேங்காயை ஏற்றுமதி செய்து உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பெட்டிகளையும் , கைப்பேசிகளை இறக்குமதி செய்வது வர்த்தக சமநிலையின்மையையே உருவாக்கும்.
இதனாலேயே ஸ்ரீதர் வேம்பு போன்ற வல்லுநர்கள் இந்திய பொருளாதாரம் தொழில் நுட்பம் சார்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இன்றைய சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதர சூழ்நிலையில் உயர் தொழில் நுட்பம் சார்ந்த சந்தையில் விலை நிர்ணயம் செய்வததே (price fixing) கடினம் என்பதே சீனாவின் 5ஜி அனுபவம்.
இந்தியாவின் உணவு பாதுகாப்பு என்பதை தாண்டி நாம் உணவு உற்பத்தி செய்ய வேண்டுமா? இந்திய பொருளாதாரம் விவசாயம் சார்ந்தே இருந்தால் நம் தேச மக்களின் வாழ்க்கை தரம் உயருமா என்பவை முக்கியமான கேள்விகள். இதற்கு பதில் அரசியல் சரி நிலைகளையும் நம் உணர்ச்சிகளின் எல்லைகளையும் தாண்டியதாகவே இருக்க வேண்டும்.
அன்புடன்
பாலாஜி என்.வி, பெங்களூர்